நூல் விமர்சனம்புனைவு

கிழவனும் கடலும் – விமர்சனம்


டொம் ஹாங்க்ஸ் (Tom Hanks) நடித்த படங்களில் எனக்கு பிடித்தது Cast away  2000-ம் ஆண்டில் ராபர்ட் ஜெமிகிஸ் தயாரிப்பில் வெளிவந்த ஒரு சிறப்பான படம். இப்படத்திற்கு காது தேவை இல்லை.கண் மட்டும் இருந்தால் போதுமானது. இப்படத்திற்கும் 1953-ல் எர்னெஸ்ட் ஹெமிங்வே எழுதிய கிழவனும் கடலும் என்ற புதினத்திற்கும் மிகுந்த ஒற்றுமை உண்டு.

இந்த திரைப்படம் மற்றும் புத்தகத்தின் கதையும் களமும் முற்றிலும் வேறுபட்டது தான். ஆனால் இவையிரண்டும் கனகச்சிதமாக ஒரு புள்ளியில் ஒன்றுபடுகிறது.

1954-ல் இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற இந்நூல் அதற்கான தகுதியுடையது. இந்த நாவல் The old Man and the Sea என்ற பெயரில் திரைப்படமாகவும் வெளிவந்துள்ளது.

அதிர்ஷ்டமே இல்லாத ஒரு கியூபாவின் வயதான மீனவன் சான்டியாகோ தனது ஒரே நண்பனான  சிறுவன் மனோலின் இல்லாமல் தனியாக வளைகுடா நீரோடைக்குள் நீண்ட தூரம் போய் புளோரிடா நீரிணையின் வடக்கு கியூபாவில் மீன் பிடிக்க தனது சிறு படகு கொண்டு கடலில் மீன் பிடிக்க செல்கிறார். பிழைப்பிற்கான அந்த பயணம் சாகசத்தின் உச்சத்திற்கு அவரை அழைத்துச் செல்கிறது. அது அவரை வாழ்வின் இறுதி எல்லை வரை பந்தாடி திருப்புகிறது.

கடல் அலைகள் போன்றதல்ல கிழவரின் மனம் அது சமநிலை வாய்ந்தது. அந்த சமநிலை அசாதரணமான சூழ்நிலைகளை கூட படு லவகமாக கையாளும் திறன் கொண்டது.

அன்று அதிர்ஷ்டம் மிதமிஞ்சியதாக இருக்கிறது. அவரது தூண்டிலில் மிகப் பெரிய மீன் சிக்கி விடுகிறது. அது அவருக்கு ஆனந்தத்தோடு அதிர்ச்சியையும் சேர்த்து தரும் நிகழ்வாய் அமைந்து விடுகிறது .அந்த மீன் மிகப் பெரியது . சுமார் 500 புவுண்ட் எடை இருக்கும் . நீளம் படகை விட இரண்டடி  கூடுதலாகவே  இருக்கும் .அதை அதன் போக்கில் விட்டு சோர்வடையச் செய்து வீழ்த்த வேண்டும்.தூண்டில் கயிறை தளர்த்தி அதன் பின்னாலே படகு மீனின் இழுவையில் செல்லும் படி செயல்படுகிறார். படகும் மீனும் நீரோட்டத்தின் வழியே அதிவேகமாக செல்கின்றன.

துரதிர்ஷ்டவசமாக அந்த மீன் மூன்று நாட்களில் வெகு தூரம் அவரை அழைத்து வந்து விட்டது. கிழவருக்கு உடல் படுத்துகிறது. தனது இருப்பை வலியின் மூலம்  பலமாக நினைவுப்படுத்துகிறது. சரியான உணவில்லை. அவ்வப்போது கடலில் கிடைக்கும் சிறுமீன்களை பச்சையாக மென்று தின்று  உயிர்வாழ்கிறார். தன் மனதை சமநிலையில் வைத்துக் கொள்ள பல யுக்திகளை கையாள்கிறார். மறுத்து உணர்ச்சியற்றுப் போன கையோடு பேசுகிறார். பழைய நினைவுகளை அசை போடுகிறார். அவர் நண்பனான அந்த சிறுவனை அழைத்து வந்திருக்கலாம்,  உதவியாக இருந்திருப்பான் .ஆனால் இப்போது இருப்பது கடலும் நானும் தான் என்கிற நிதர்சனத்தை உணருகிறார். தூண்டில் முள்ளில் சிக்கி படகை இழுத்துச் செல்லும்  மீனை தனது சகோதரனாய் பாவித்துக் கொள்கிறார். அதன் தேவைகள் குறித்து அகத்தில் தனது தேவைகள் மேலேழும் போதெல்லாம் கவலை கொள்கிறார்.

அடிக்கடி வலுவிழுக்கும் தன் உடலையும் சோர்ந்து போகும் மனதையும் அவர் உற்சாகுப்படுத்தும் விதம் வித்தியாசமனது. அந்த நம்பிக்கை வீர்யம் மிகுந்தது.  இறுதியில் அந்த  ராட்சத மீனை வீழ்த்தி விடுகிறார் .அதை தனியொரு மனிதனாய் போராடி படகோடு இறுகக்கட்டி விட்டார். ஆனால் இனிமேல் தான் சோதனை துவங்குகிறது. கரையை அடைவது அவ்வளவு எளிதானதாக இருக்கப்போவதில்லை.  இப்போது இரத்த வாடைக்கு அகல வாய் திறந்து கூரான பற்களோடு  நிறைய சுறா மீன்கள் அவர் படகை நோக்கி வந்து கொண்டிருக்கின்றன.

ஆம்..! நீங்கள் அவசியம் அவர் அந்த பயணத்தை எப்படி எவ்வகையில் நிறைவு செய்தார் என்பதை வாசித்து பாருங்கள்.

இந்த கதை வெறும் வாக்கியத்தின் கலவைகள்  மூலம்  உண்மையான சுவாரஸ்யமான  காட்சியமைப்பை வாசகன்  மனதில் கட்டமைக்கிறது.

ஒவ்வொரு நகர்வும் அதி அற்புதமான காட்சியமைப்பை பிரமாண்டமாய் அறுபடாமல் தொடரச் செய்கிறது.

படகில் தனித்திருக்கும் போது அந்த தீவிரப்  போராட்டத்தில் கூட கிழவர் தன்  மனதில்  நிகழும் அகநிலை விவாதத்தில்  சிக்கிக் கொள்ளாமல் தனித்து நிற்கிறார். அதற்கு  பதில் தருகிறார்.

“மீனைப் பற்றி நினைத்தான். அதற்கு சாப்பிட ஒன்றுமே இல்லையே என்று கவலைப்பட்டான். தான் அதை கொல்ல வேண்டியிருக்கிறதே என்பதற்கு இப்போது அதற்காகக் கவலை கொள்வதற்கும் சம்பந்தமே இல்லை என்று எண்ணிக்கொண்டான்.”

இப்படி கதை முழுவதும் சிக்கனமான உரையாடல்கள். ஆனால்  கடல் போல் விரிவடையும் நமது கற்பனைகள்.  விரிவடையும் களம் கொண்ட கதையை ஒரு குறு நாவலாக கச்சிதமாக படைத்திருப்பது தான் இதன் வெற்றி. எர்னெஸ்ட் ஹெமிங்வே அமெரிக்க இல்லினாய் மாகாணத்தில் பிறந்தார். ஒரு செய்தி நிருபராக இரண்டாம் உலகப் போர் முனைகளில் செய்திகள் சேகரித்த ஒரு சாகசக்காரர். 1954-ல் இந்நாவலுக்காக நோபல் பரிசைப் பெற்றார். இந்நாவலைப் போலவே For Whom the Bell Tolls, A Farewell to Arms, The sun Also Rise போன்றவைகளும் திரைப்படமாக்கப்பட்டுள்ளன.

காலச்சுவடு பதிப்பகத்தின்  வெற்றிகரமான மொழி பெயர்ப்பபு நூலான இதன் தமிழாக்கம் எம்.எஸ் என்கிற எம்.சிவசுப்பிரமணியம்  [கி.பி. 1929 – 2017] என்பவரால் செய்யப்பட்டது.  சுந்தர ராமசாமியின் நெருங்கிய நண்பரான இவர் கன்னியாகுமரி மாவட்டத்தை சார்ந்தவர். நிறைய உலக இலக்கியங்களை தமிழ் மொழியில்  சிறப்பாக மொழி பெயர்த்தவர்.

எம்.எஸ்

இந்நாவலில் வரும் மீன்களின் பெயர்களையும்  தமிழாக்கம் செய்துள்ளது கடல் காற்றில் கலந்து வரும்  உப்பு சுவை  போல் கதையோடு இயல்பான நெருக்கத்தை ஏற்படுத்துகிறது.

 • கடமா (Squid),
 • சொரி (Jelly Fish),
 • இரால் (Shrimp),
 • பெருந்தலை ஆமை (Loggerhead),
 • மத்தி(Sardine),
 • ஈட்டி மீன் (Marlin),
 • ஓங்கில் (Dolphin),
 • சிறிய ஓங்கில் (Purpoise),
 • சூரை (Tuna),
 • திருக்கை மீன்(Portuguese man-of-war),
 • தட்டை மூக்கன் (Broad bill)

மீனவனின் வாழ்வு நிலையற்றதாக இருக்கலாம். ஆனால் அவர்களுக்கு இருக்கும் மன உறுதி  வியப்பானது. 

மஞ்சுநாத்

நூல் தகவல்:

நூல் : கிழவனும் கடலும்

பிரிவு :  நாவல் | மொழிபெயர்ப்பு

ஆசிரியர்: எர்னெஸ்ட் ஹெமிங்வே (Ernest Hemingway)

தமிழில் :  எம்.எஸ்

பதிப்பகம் :  காலச்சுவடு

பக்கங்கள்: 104

வெளியான ஆண்டு :  செப்டம்பர் 2003

விலை :  ₹ 125

அமெசானில் நூலைப் பெற:

 

எழுதியவர்:


Advertisement

தீபிகா நடராஜனின் “ புத்தனிலிருந்து சித்தார்த்தனுக்கு திரும்புதல்” கவிதைத் தொகுப்பு.

சிந்தன் புக்ஸ் வெளியீடு | விலை : ₹ 100

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *