பேரன்பிற்கு சொந்தக்காரரான பன்முக எழுத்தாளர் கோ.லீலா அவர்களின் முதல் படைப்புக் குழந்தையின் பெயர் “மறைநீர்”.

என்னுரையின் தொடக்கமாகவும், முதல் தலைப்பாகவும் “நீர் இன்றி அமையாது உலகு” என்றிருப்பதிலேயே இந்நூலின் நோக்கம் விளங்கிவிடுகிறது. கண்ணெதிரே நம் வீட்டின் குழாயில் சொட்டும் நீரிலிருந்து கண்ணுக்கு புலப்படாத நாம் நுகரும் அனைத்திலும் உள்ள மறைநீர் வரை, அனைத்து நீரையும் முறையான வழியில் கையாண்டு, முடிந்தமட்டும் அல்ல *கண்டிப்பாக* வீணாக்காமலும் சேமித்தும் வைத்தே ஆக வேண்டும் என்ற கண்டிபுடன் கூடிய எச்சரிக்கையாய் ஒலிக்கிறது இந்த குழந்தையின் குரல்.

முடிவுரையும் சேர்த்து 16 தலைப்புகளை உள்ளடக்கிய இந்நூல் முதல் 3 தலைப்புகளில் நீர், நீரின் தன்மை, நீரின் சுவை, நீர் மாசுபடுதல், நீரின் வடிவங்கள், அதன் மறுசுழற்ச்சி காலங்கள், காலநிலை மாற்றங்கள், நீருடனான அதன் தொடர்புகள் என ஒரு சிறிய சுருக்கத்திற்கு பிறகே நான்காவது தலைப்பாய் மறைநீரை அறிமுகம் செய்கிறது.

ஒரு பொருளில் மறைந்திருக்கும் நீர் தான் மறைநீர். என்னது பொருளில் நீர் மறைந்திருக்கிறதா என்ற கேள்வி தோன்றினால், ஆம் அதை தெரிந்துகொள்ள மறைநீர் குழந்தையை கையிலெடுத்து விளையாடுங்கள். விளையாடி முடித்தவுடன் உங்களை மின்சாரம் தாக்கியது போலொரு உணர்வாய் விடை கிடைக்கும்.

“நீர்தடம்” என்பது புதிய வார்த்தையாக இருந்தாலும் அதைப் பற்றி புரிந்து கொள்ளும் அளவிற்கு விளக்கப்பட்டிருக்கிறது.

மழைக்காடுகள் பற்றிய விளக்கத்தையும் பாரிஸ் ஒப்பந்தம் பற்றிய முன்னுரையையும் சற்று விரிவாகவே அடுதடுத்த தலைப்புகளில் படைத்திருக்கிறார் படைப்பாளி.

அடுத்த தலைப்பாக “மூன்றாம் உலகப் போரின் முதல் யுத்தம்”. மூன்றாவதாக ஒரு உலகப் போர் நடந்தால் அது தண்ணீருக்காக என பல அறிஞர்கள் எச்சரித்ததை செய்தியாக மட்டுமே பார்த்திருந்தாலும், அப்போர் ஏற்கனவே பொலிவியாவில் தொடங்கிவிட்டதையும், தன் சம்பளத்தை மூன்றில் ஒரு பங்கை தண்ணீருக்காக செலவழித்தார்கள் என்ற அதிர்ச்சி செய்தியை தந்து “வா விழித்துக்கொள்வோம்” என்று தட்டி எழுப்புகிறது இந்தக் குழந்தை.

நீர்நிலைகளுக்கு அதன் இருப்பிடத்தை பொருத்தும் செயல்பாடுகளை பொருத்தும் 48 பெயர்களை கொண்டு அழைக்கப்பட்டதை கொடுத்து இன்னும் வேறு பெயர்கள் இருக்குமோ எனத் தேடத் தூண்டுகிறார் குழந்தையின் தாய். ஆச்சரியபடுமளவிலும் பெருமைபடுமளவிலும் நம் முன்னோர்களின் நீர் மேலாண்மைத் திறன் இருந்தாலும், இதையெல்லாம் எங்கே தொலைத்து இத்துனை சிறுமைபட்டுக் கொண்டிருக்கிறோம் என கனக்கவைக்கிறது.

மழைநீர் கடலில் கலப்பது வீணில்லை, அன்றாட மனித செயல்களால் தான் தண்ணீர் வீணாகிறது என்பதை பதிய வைக்கிறது அடுத்தடுத்த தலைப்பு.

“மியாவாக்கி காடுகள்” என்ற புதியவகை காடுகளை அறிமுகம் செய்து அதில் சற்று உலாவச் செய்கிறார் ஆசிரியர்.

“தொல்லை தரும் தீர்வுகள்” என்றொரு பட்டியலை இடுகிறார். சில தொல்லைகளை நம்மால் தவிர்க்கவியலாமல் போனாலும் பலவற்றை முற்றிலுமாக தவிர்க்க முடியும் என்பதைதான் “சின்ன சின்ன தீர்வுகளாகவும்”, “கொள்கை வகை தீர்வுகளாகவும்” கொடுத்திருக்கிறார்.

பெரியவர்கள் மட்டுமல்லாமல் மாணவர்களும் இளைய தலைமுறையினரும் புரிந்துகொள்ளும் வகையில் எளிய நடையிலும், உரையாடல் தொணியிலும் செய்திருப்பது மிகச் சிறப்பு.

ஒவ்வொரு தலைப்பின் கீழும் அதை பற்றிய கருத்துரு மட்டுமல்லாமல் ஆங்காங்கே இலக்கியம் சார்ந்த செய்திகளும், பற்பல பொதுஅறிவு துணுக்குகளும் பொதிந்திருப்பது அதைப்பற்றி மேலும் தெரிந்துகொள்ள திறவு கோளாக அமைகிறது.

மூன்றாம் உலக நாடுகளின் பொருளாதார நெருக்கடிகளை பயன்படுத்தி, முதலாம் உலக நாடுகள் தங்களின் நீர்நிலைகளை எவ்வாறு பாதுகாத்துக் கொள்கின்றன என்ற அரசியலையும் அலசுகிறது மறைநீர்.

அறிவியல், இலக்கியம், பொது அறிவு, விழிப்புணர்வு, எச்சரிக்கை ஒலி, என பலமுகங்களையும் ஒரு குழந்தையுள் அடக்கியுள்ளார் ஆசிரியர்.

“அரியவாம் சொல்லிய வண்ணம் செயல்” என்ற வள்ளுவரின் வாக்கை மாற்ற அனைவரும் ஒன்றிணைவோம் மறைநீர் குழந்தையின் கைகளை பிடித்து !!

ஆசிரியர் குறிப்பில் பொழுதுபோக்கு என்ற தலைப்பில் “இயற்கையை கவனித்தல்” என்பதே ஆசிரியரை அறிய போதுமான தகவல்.

நல்லதோர் படைப்பை அருளிய ஆசிரியர் அவர்களுக்கு நன்றிகளும் பாராட்டுகளும் !


கஸ்தூரி

 

நூல் தகவல்:

நூல் : மறை நீர்

பிரிவு:  கட்டுரைகள் | சூழலியல்

ஆசிரியர் : கோ.லீலா

          வெளியீடு : படைப்பு பதிப்பகம்

வெளியான ஆண்டு :   2019

விலை: ₹ 150

 

இந்நூல் குறித்த மற்றொரு பதிவு: 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *