ஆசிரியர் குறித்து : ஏதிலி எனும் நாவல் வாயிலாக பரவலாக அறிமுகமான அ.சி.விஜிதரன் பவானிசாகர் அகதிகள் முகாமில் வசிக்கும் ஈழத்தமிழர். இவர் தற்சமயம் அரசியல் அறிவியல் துறையில் முனைவர் பட்ட ஆய்வினை மேற்கொண்டு வருகிறார். எட்வர்தோ காலியானோவின் “தினங்களின் குழந்தைகள்” ஜாக் லண்டனின் “இரும்புக் குதிகால்” ஆகிய நூல்களை தமிழாக்கம் செய்துள்ளார். “தாமஸ் சங்கரா வாழ்வும் சிந்தனையும்” தமிழாக்கத்திற்கு வாசிகசாலை விருது பெற்றுள்ளார். குருதி வழியும் பாடல் இவரது முதல் கவிதைத் தொகுப்பு.
முன்னுரை:
“கவிதை விசயம் பற்றி எழுதுவதென்றால் மிகவும் கடினமான காரியம். அதிலும் விமர்சன ரீதியில் எழுதுவது அதனினும் கடினம்” என்கிறார் தொ.மு.சி. அன்று முதல் இன்று வரை இது தொட்டுத் தொடரும் பந்தமாகிவிட்டது. எழுத்தாளன் இறந்துவிட்டான் என்பது போல் விமர்சனம் இறந்துவிட்டது என அவ்வப்போது குரல்கள் எழுவது வாடிக்கையாகிவிட்டது. உண்மையில் விமர்சனக் கலையை விமர்சகன் மட்டும் கொன்றுபோடவில்லை. இதற்குத் துணை போன படைப்பாளன், பதிப்பாளன், முதுகு சொறியும் இதழ்கள் மற்றும் விருதுகளை வாரி வாரி வழங்கும் அமைப்பாளர்கள் என அனைவரையும் நோக்கியும் உங்கள் சுட்டு விரல்கள் நீள வேண்டும். ஆனால் நீட்டுவதே இல்லை. இத்தகைய மாபெரும் துயரத்தில் இருந்துதான் சமகாலத்தில் நாம் மதிப்புரையின் பெயரால் விமர்சனம் எழுத வேண்டியிருக்கிறது.
“கலையின் பெயரால் நடைபெறும் எதுவும் பயன்படக் கூடும்” (தொ.மு.சி). எந்தவொரு பிரதியும் ஏதோ ஒன்றின் அனுபவம் பொறியிலிருந்து, அதன் வாழ்வின் பேசாத பக்கங்களை பேச விளைவதாகவும், அதன் வாயிலாக ஒரு தீர்வை எட்டமாட்டோமோ என்ற அங்கலாய்ப்பிலும் பொதுவெளியில் வைக்கப்படும் சொற்களின் கோர்வையாக மட்டும் நாம் கருதிவிடக் கூடாது. ஒரு மக்கட்கூட்டத்தின் துயரார்ந்த வாழ்வை, இதுவரை யாரும் பேசாத தங்களின் வலிகளை, அம்மக்கள் மீது நிகழ்த்தப்படுகின்ற அமைதியான வன்முறையை, அரசியல் சதிராட்டத்தை கலை இலக்கியத்தின் வாயிலாக பேசிப்பார்க்க எத்தனிக்கிறது. அதுவே அப்பிரதியின் கவனத்தினைக் கோரும் ஒரு வழியாகவும் இருக்கிறது. அ.சி.விஜிதரனின் “குருதி வழியும் பாடல்” இத்தளத்தில் தன்னை நிலைநிறுத்தி இருக்கிறது.
தமிழ் இலக்கியத்தின் புதிய மொழி :
தமிழ் இலக்கியம் ஈழ விடுதலைப் போருக்கு பின்பு தமிழ்நாட்டு இலக்கியம், ஈழ இலக்கியம், புலம்பெயர் இலக்கியம் (மேற்குலக நாடுகளில்) என மூன்றாக கிளைவிரித்து தம்மை செப்பனிட்டுக் கொண்டன. அதேவேளையில் தமிழகத்தின் முகாம்களுக்குள் அடைபட்டுக் கிடந்த ஈழத்தவரிலிருந்து எழுகின்ற படைப்பாக்கம் புலம்பெயர் இலக்கியத்தின் போக்கில் இரண்டாக பிரிக்கப்பட்டு பார்க்கப்பட வேண்டிய கடப்பாட்டினை தமிழ் இலக்கிய வெளியில் உறுதி செய்கின்றன. ஒரு மொழி பேசுகின்ற இரு தமிழர்களின் நேர் எதிர்த் தன்மைகளை வாழ்வியலைப் பேசும் விசித்திரமான காலம் இது. அப்படியானதொரு துர்ப்பாக்கிய சூழல்.
“இதுவரை காலமும்
நிரந்தரமாக்கப்பட்ட சகதிக்குள் கிடந்து
வெளியே எடுத்து வரப்பட்ட
ஒரு சிறிய கல்லைப் போன்று
நான்
என்னைக் கண்டெடுத்துள்ளேன்”
. (சிவரமணி)
எனும் இக்கவிதைக்குச் சான்றாக தங்களின் அகதி முகாம் வாழ்விலிருந்து தங்களைக் கண்டெடுத்து வருகிறார்கள் சிலர். எனக்குத் தெரிந்த வரையில் கால் நூற்றாண்டுக்கு மேலான மிகவும் மோசமான அகதி வாழ்விலிருந்து தங்களுக்கான மொழிவழி தங்களின் துயரங்களைப் பேச முற்பட்ட சு.சிவா, பத்திநாதன், ஈழபாரதி, சுதர்சன், சுகன்யா ஞானசூரி போன்றவர்களின் வரிசையில் அ.சி.விஜிதரன் மற்றவர்களிலிருந்து மாறுபட்டு அகதி வாழ்வின் அத்தனை பாடுகளையும் அப்பட்டமாக தோலுரித்துக் காட்டியுள்ளார். இரத்தமும் சதையுமாக பாடல்களில் கவுச்சி வாசம் அப்புகிறது. தமிழ் இலக்கியத்தின் புதிய மொழியாக தமிழகம் வாழ் ஈழ அகதிகள் இலக்கியம் புதிய பாதையைத் துவக்கி வைக்கிறது.
“அடுப்புக்கு பக்கத்தில்
அம்மா
அடுத்து தம்பி
அப்பா
பக்கத்தில் நான்
எனக்கு கொஞ்சம் தள்ளி
புதிதாய் மணமான
என் அண்ணனும்
அண்ணியும்
பத்துக்கு பத்து வீட்டுக்குள்”
– சு. சிவா (மரணம் தோல்வியல்ல)
1999-2000 காலகட்டத்தில் முகாம்களுக்குள்ளும் சில வெளி நட்பு வட்டத்திற்குள்ளும் பரபரப்பாக பேசப்பட்டு அகதி முகாம் வாழ்வை பேசத் துவங்கிய கவிதை இது. முகாமில் உள்ள ஒரு வீட்டின் நிலைப்பாட்டைச் சொல்லிய இக்கவிதை போலவே ஒரு முகாமின் துயரப்பாட்டை அ.சி.விஜிதரனின் குருதி வழியும் பாடல் தொகுப்பில் காம்ரா எனும் அத்தியாயத்தின் பத்தாவது பாடல்
“ஆக நெருக்கத்தில் வீடுகள்
அழுகும் ஆண்கள், பெண்கள், குழந்தைகள்
அருகே குப்பை மேடு
அதில் கோழிகள் பன்றிகள் நாய்கள்
முதல் இரு வரிகளுக்கும்
அடுத்த வரிகளுக்கும்
சம்பந்தம் எதுவும் இல்லை
ஈழத்தமிழர் முகாம்”
என தமிழகத்தில் உள்ள முகாம் வாழ்வியலை படம்பிடித்துக் காட்டுகின்றன. கால மாற்றங்கள் நிகழ்ந்தவண்ணம் இருக்கும் சூழலில் இன்னமும் முகாம் வாழ்வின் அவலம் மாறாமல் தொடர்வது ஆச்சரியமான ஒன்றுதான்.
தமிழினியும் யாழினியும் வெறும் பெயர்கள் அல்ல:
யாழினி ஓர் அவலம்…
யாழ்ப்பாணம் தெரிவதைப்போல் உங்களுக்கு
யாழினிகளைத் தெரிவதேயில்லை”
– சுகன்யா ஞானசூரி (நாடிலி)
எனும் கவிதையில் யுத்த வாதைகளைச் சுமந்தலையும் சிறுமியின் உளப்பாட்டை பேசும் கவிதை இது என்றால் ஒன்றுமே அறியாத மழலையான தமிழினியின் துயரமோ வேறானது.
“நீ போனதுகூடத் தெரியாமல்
இட்லியை விளையாடிக் கொண்டே
என்னைப் பார்த்துச் சிரித்துச் சாப்பிட்ட
மகள் தமிழினியையும்”
என்ற பாடலில் முகாம் சூழலில் தந்தையின் மறைவை உணர்ந்துகொள்ள இயலாத குழந்தையின் இயல்பில் அக்குடும்பத்தின் துயரத்தின் ரேகைகள் படர்ந்திருப்பதைக் காணலாம்.
ஒரு தமிழ்ப் படத்தில் நாயகி நாயகனைப் பார்த்து உனக்கு தேன்மொழியோ கனிமொழியோதான் கிடைப்பா போடா என்பார். இது வெறும் சொல் அல்ல வெறும் பெயர் அல்ல. இது அச்சமூகத்தின் இனத்தின் குறியீட்டுப் பெயர்கள். மேட்டிமைத் தனம் கொண்டோரின் சீழ்ப்பிடித்த கீழான பார்வையே அந்த நாயகின் கெக்கலிப்பு. ஏளனப்படுத்தும் ஒரு சொல் அவர்களுக்கு. இங்கு யாழினியும் தமிழினியும் அப்படியான ஒரு குறியீடாகவே காண்கிறேன். போர் எனும் துயரத்தின் துரத்தலில் அகதிச் சீழ் பீடித்து வாட்டும் வாதைகளாக இவர்கள் முன்நிற்கிறார்கள். தமிழ்ப்பிள்ளைகளாய்ப் பிறந்ததின் கொடும்சாபம்.
பிரதியின் உடல் எழுத்து :
ஒரு பிரதி பெண்ணால் எழுதப்படும் போது பெண் எழுத்தாகவும், ஆணால் எழுதப்படும்போது ஆண் எழுத்தாகவும் அடையாளப்படுவது இயல்பு. ஆனால் குருதி வழியும் பாடல் அத்தியாயம் ஒரு ஆணால் எழுதப்பட்ட பெண் எழுத்தாக உள்ளது அல்லது பெண் மொழியில் உள்ளது. இது ஏன்? பெண் மொழிக்கு ஏற்பட்டிருக்கும் கிராக்கியா? பிரதி விரைவாக வாசிப்பவர் உள்ளத்தைக் சென்றடையும் எனும் எதிர்பார்ப்பா? எனும் கேள்விகள் எழுவது தவிர்க்க இயலாத ஒன்று. ஆனால் இங்கு நாம் உற்று நோக்க வேண்டிய விசயம் அகதிச் சமூகத்திலிருந்து ஒரு பெண் எழுத வராத சூழலில் ஆண் தன்னை பெண்நிலைப்படுத்தி எழுதுகிறான். ஒரு ஆணுக்குள் பெண்ணும் பெண்ணுக்குள் ஆணும் என அர்த்தநாரிப் பண்பு இயல்பாக எழும். அதுவே இங்கும் நிகழ்ந்துள்ளதாக நாம் எண்ணலாம். பெண் உடல் மீதான ஆண் மையச் சுரண்டல்களையும், வன்முறைகளையும், பாலியல் வல்லுறவுகளையும் குரூர மொழிதலாக்கி பிரதி குருதியில் நனைக்கிறது.
கவிதையின் ஆளுமை :
“தமிழன் என்பவனின் ஒற்றைப் பரிமாணம் மறுதலிக்கப்பட்டு அவனது பன்முகத்தன்மை ஏற்றுக்கொள்ளப் பட்டுவிட்ட இக்கால கட்டத்தில் அவனது கவிதையினுள்ளும் இத்தகைய ஆளுமை வந்து அமைகிறது. – இந்திரன் (கவிதையின் அரசியல்)
காம்ரா, அப்பா, கொரோனா, முடிவற்றவை, குருதி வழியும் பாடல், நாடிலிகள், அன்புள்ள ரதிக்கு, நீலப் பெருவெளி, நண்பன் ரமேஷ், மழைக்கால இரவு, பசி, மாவீரர் நாள் என்ற பன்னிரண்டு அத்தியாயங்களும் அவற்றிற்கான உபதலைப்புகளும் என தொகுப்பு ஒரு புதிய பரிமாணத்தை வெளிப்படுத்துகிறது. ஒவ்வொரு உப தலைப்பும் ஒட்டுமொத்த கவிதைகளையும் ஒற்றை வரியில் பேசிவிடுகிறது. அன்புள்ள ரதிக்கு ஒரு சிறப்பு முகாமில் அடைபட்டிருப்பவனின் பெரும் வாதைகளைப் பேசுகிறது.
“இரவுகளில் கூடடையும் குருவிகளின்
குஞ்சுகள் கொஞ்சும் சத்தம்
என்னவோ செய்கிறது
பிள்ளைகள் என்னை
மறந்திடாமல் பார்த்துக்கொள்
ரதி”.
என்ற வரிகள் உலகத்தின் எங்கோ ஒரு நிலத்தில் நிகழ்ந்தது அல்ல. தமிழ் எனும் ஒரே மொழி பேசுகின்ற, தமிழர் எனும் ஒரே இனம் வாழ்கின்ற தமிழகத்தின் சிறப்பு முகாம்களுக்குள் அன்றாடம் நிகழ்ந்து கொண்டிருக்கும் காட்சிகளின் படிமங்கள் இவை. அதேபோல் நீலப் பெருவெளி பேசும் கவிதைகள் தமிழகத்திலிருந்து ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு ஆபத்தான பயணங்களை மேற்கொண்டு தப்பித்தவர்களையும், பாதியிலேயே ஆழ்கடலில் மாண்டு போனவர்களையும் குறித்தான பாடல்கள். ஏன் இப்படியான ஆபத்தான பயணத்திற்கு துணிகிறாராகள் என்ற கேள்விகள் ஏன் இன்னும் உங்களிடமிருந்து எழாமல் உள்ளது என்பது வியப்பாக உள்ளது. மரணமுற்ற நண்பன் ரமேஷிடம் மன்னிப்பு கோரும் தன்னிலைக் கவிதைகளும் உள்ளன. கவிதையின் பன்முகத் தன்மைகளை இத்தொகுப்பில் ஏமாற்றமின்றி வாசிக்கலாம்.
முடிவுரை:
“அன்று இந்தியாவில்
தொடங்கிய பயணம்
இன்று இந்தியா வந்தும்
முடியவில்லை.”
எனும் இக்கவிதை ஒரு வரலாற்று நிகழ்வை மீள்வாசிப்பு அல்லது மீள்பார்வை செய்யக் கோருகிறது. அது பல்வேறு தலைமைகளின் கைச்சாத்துகளில் பரதேசிகளாக்கப்பட்ட துயர வாழ்வினைப் பாடுகிறது. பஞ்சத்தினால் கொத்தடிமைகளாக கொண்டு செல்லப்பட்ட சனம் அங்கும் போர்ச்சூழலின் அழுத்தத்தால் புலம்பெயர்ந்து தன் சொந்த நாட்டிலேயே அகதியாக வாழும் துயரார்ந்த வாழ்வினை அழுத்தமாகச் சொல்கிறது. அரசு இவர்கள் மீது இன்னும் பாராமுகமாக இருப்பதன் ரகசியம்தான் என்னவோ? உடல் உழைப்புகளாலும், நுகர்பொருட்களின் மறைமுக வரி கட்டுதலினாலும் தங்களின் பங்களிப்புகளை வழங்கிவரும் இச்சமூகத்தின் இரத்தமும் சதையுமான வாழ்வியலைப் பேசும் குருதி வழியும் பாடல் நல்லதொரு தீர்வினை வழங்கி இத்துயரார்ந்த வாழ்விற்கு முடிவுரை எழுதட்டும்.
துணை நின்றவை:
1. இலக்கிய விமர்சனம்- தொ.மு.சி.ரகுநாதன்
2. கவிதையின் அரசியல்- இந்திரன்
3. முபீன் சாதிகா கட்டுரைகள்- காவ்யா பதிப்பகம்
4. மரணம் தோல்வியல்ல – சு.சிவா
5. நாடிலி – சுகன்யா ஞானசூரி
6. செல்வி – சிவரமணி கவிதைகள் – தாமரைச்செல்வி பதிப்பகம்.
நூல் : குருதி வழியும் பாடல்
வகை : கவிதைகள்
ஆசிரியர் : அ. சி. விஜிதரன்
வெளியீடு : சிந்தன் புக்ஸ்
ஆண்டு : முதல் பதிப்பு: பிப்ரவரி 2022
பக்கங்கள் : 202
விலை: ₹ 200
கவிஞர் சுகன்யா ஞானசூரி. இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்து தமிழகத்தில் வசிக்கிறார், தனியார் ஆய்வகத்தில் நுண்ணுயிரியல் துறையில் தொழில்நுட்ப வல்லுநராக பணிபுரிபவர். இவரின் அலைகளின் மீதலைதல் மற்றும் நாடிலி கவிதைத் தொகுப்புகள் வெளியாகி இருக்கின்றன.