எனக்கு எப்போதும் வாசிக்கநேரும் ஒரு பிரதி மனதுக்கு நெருக்கமாக அமைந்தால் அதைப்படைத்தவருடன் என் வாசிப்பு அனுபவத்தை பகிர்ந்துகொள்வதென்பது வழக்கம்.
ரவியின் குமிழியும் போரிலக்கியங்கள் என்கிற வகைக்குள் வரக்கூடியது. குமிழி மேலான எனது சில குறிப்புகள், அவரது அடுத்த படைப்பை இன்னும் சிறப்பானதாக அமைக்க ஒருவேளை உதவலாம் எனக்கருதுவதால் அவற்றை இங்கே பகிர்கின்றேன்.
குமிழிக்கு நெருக்கமாக என்னை இழுத்த சங்கதிகள் சதா, எந்திரன், ஜோன்போன்ற எளிமையான பாத்திரங்களும் ஜோனின் பல்கலைக்கழகக் கனவுகளும் அது சிலபுள்ளிகளால் சிந்தியபாலாகத் தட்டுப்பட்டுப்போன வாழ்வின் கசப்பு அனுபவங்களுந்தான். ரவிக்கு Architecture ஆவது கிடைத்தது, எனக்கு Medizine கனவிருக்க General Science அதுவும் Evening Course தான் கிடைத்தது. அதற்கும் First form மட்டுந்தான் அனுப்பினார்கள் நான் புலம்பெயர்ந்த பின்னால் அதுவும் கிடைத்திருக்குமென்று உறுதியாகச் சொல்லமுடியாது.. அவருக்கு அப்பா இறந்துபோனார், எனக்கும் அப்பா பாரிசவாதம் வந்து படுக்கையில் வீழ்ந்துவிட்டார். வீழ்ச்சி எதுவாயினும் எம் குடும்பத்தில் ஏற்பட்டதாக்கங்கள் ஒரே விதமானவை. பிள்ளை படித்துமுடித்துத் தூங்கப்போகும்வரை தானும் சுவருடன் சாய்ந்திருந்து தூங்கிவிழும் அம்மாக்கள் எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. மனதை நெகிழச்செய்த இடங்கள் அவை.
ரவி கல்விபயின்ற கல்லூரியை வேண்டுமென்றே படைப்புள் மறைத்துவிட்டது போலத்தெரிகின்றது………. அதற்கும் ஏதும் காரணங்களும் இருக்கலாம்.
*
புதினத்தில் குறைபாடுகள் என்று சொன்னால் அவை மிகச்சொற்பமானவை.
எல்லோருக்கும் தெரிந்திருக்கக்கூடிய சில எளிமையான வார்த்தைகளுக்கே ஆங்கில வரிவடிவிலும், தமிழிலும் அர்த்தம் எழுதியுள்ளீர்கள். உம் 134:> வெளிவாசல் (Gate)
220:> வாடகைக்கார் (ரக்சி)
ஆனால் நிறைய இடங்களில் வரும் ‘சிக்கிரி போட்’ என்ற சொல்லுக்கும் அப்படியே அரும்பதம் தந்திருந்தால் மேற்படி வார்த்தையை அர்த்தம் பண்ணிக்கொள்ள வாசகனுக்கு ஏதுவாக இருந்திருக்கும் . அது Security board ஆக இருக்கலாம் என்பது என் ஊகம்.
இன்னும் இந்தியர்கள்தான் Crawling ஐ கிறாவ்லிங் என்று பலுக்குவார்கள். நீங்கள் பொதுவழக்கில் குறோவ்லிங் என்றே தந்திருக்கலாம்.
இரண்டொரு இடங்களில் வாக்கியங்கள் பொருளமைதி நலிந்து / அல்லது பொருள் மயக்கமேற்படுத்தும்படியாக இருந்தன.
219:> அவனது வாழ்வாதாரம் அப்படியே ஓடிக்கொண்டிருந்தது.
161:> இங்கே மாலையில் இந்தப்பாயைச் சுவருக்குச் செங்குத்தாக விரித்தபடி இருக்கவேண்டும் என்றொரு வாக்கியம் வருகிறது. சாதாரணமாகத் பாயைத் தரையில் விரித்தாலே அது சுவருக்குச் செங்குத்தான விரிப்புத்தானே? ஒருவேளை அதை வேறுவிதமாக எழுத முனைந்து பின் அந்த விவரணம் பூரணமாகாமல் விடுபட்டுப்போச்சா, தெரியவில்லை, இருக்கட்டும்.
*
முக்கியமான இன்னொன்று இப்போதெல்லாம் எவருக்கும் ஒரு வாக்கியத்தின் எழுவாயோ / செயப்படுபொருளோ பன்மையிலிருந்தால் அவ்வாக்கியத்தின் பயனிலையும் பன்மையிலிருக்க வேண்டுமென்கிற மொழியின் அடிபடைவிதியே மறந்துவிட்டது, அல்லது எப்படியோ கிடந்து தொலையட்டுமென்றோ விட்டுவிடுகின்றனர். இப்பிரதியிலும் பன்மையில் எழுதப்பட்ட வாக்கியங்களின் செவ்விகிதம் பன்மை விகுதியையோ வினைமுற்றுக்களையோ (பயனிலை) கொண்டிருக்கவில்லை
இரண்டொரு எடுத்துக்காட்டல்கள்:>
150:> கேள்விகள் மூட்டமாக அவனுக்குள் பரவியது(ன).
161:> வெடிப்புகள் சீமெந்தினால் நிரப்பப்பட்டது(ன).
161:> உடபுறச்சுவர்கள் வெள்ளை அடிக்கப்பட்டது(ன).
180:> வேலைகளும் முடிந்திருந்தது(ன)
இவ்வகையிலான வழுக்கள் பக்கத்துக்கு இரண்டாவது இருக்குமென்றால் புதினம் முழுவதும் எத்தனை வழுக்கள் என்று யாரும் பருமட்டாகக் கணிக்கலாம்.
சமீபத்தில் வெளிவந்த ஒரு நாவலிலும் அவ்வாறான வழுக்கள் மலிந்திருக்கக்கண்டு அதன் ஆசிரியரிடம் ஒரு தொலைபேசி உரையாடலில் அதுபற்றிக் குறிப்பிட்டபோது அவரோ “ அண்ணை இப்போ எல்லாரும் அப்படித்தான் எழுதிறாங்கள்……… அதொரு பெரிய விஷயமாக எனக்குத்தெரியேல்லை” என்று முடித்தார்.
எப்படிக் கவிதையில் வழுக்களை ஒருவரியேயாயினும் அனுமதிக்க முடியாதோ, நாவலிலும் அப்படித்தான். ஒரு நாவலை வாசிக்கும் வாசகன் அது நிறைவுறும் வரையில் அதனுடனேயே அதன் ஒவ்வொரு வரியையும் ரசித்தபடியே வாழ்வான், இங்கே ஏராளம் சந்திப்பிழைகளும் கவனிக்கப்படாமல் விடப்பட்டுள்ளன. எ+டு 170:> பூனைக்குட்டி மூளையை(ப்) பிராண்டிக்கொண்டிருந்தது. / வேறுசொல்லி(ப்) புன்னகைத்தார். 185:> பின்னர் அவனை(க்)காணவில்லை.
இலக்கண வழுஅமைதியுடனான வாசகங்கள் அதைத்தெரிந்தவனுக்கு வாசிப்பில் எரிச்சலூட்டும். நாவல்போன்ற பிரதிகள் செம்மை நோக்கப்படுவது மிகமிக அவசியம். துர்நேர்கை என்னவென்றால் இப்போது செம்மை நோக்குபவர்களுக்கே அடிப்படையிலான இலக்கணப் பொதுவிதிகள் தெரிவதில்லை. எஸ்.ராமகிருஷ்ணன், பாலகுமாரன் கோணங்கி போன்றவர்களின் நாவலிலேயே இவ்வழுக்கள் மலிந்துகிடக்கின்றன. கொசுறுத்தகவலாக:> (நான் படித்தவரையில்) சமகால நம்மவர்களில் தமிழ்நதி, தமிழ்க்கவி, தேவகாந்தன், இரவி அருணாசலம் போன்றோர் இதில் விழிப்பாக இருக்கிறார்கள்.
*
மற்றும் தொலைத்தொடர்புப்பிரிவுப் போரளிகளின் அனுபவங்கள்பற்றிச் சொல்லும்போது Morse Signal கள் அனுப்பும் வேகம் பற்றிச் சற்றே மிகையாகச் சொல்லப்பட்டிருக்கிறது. காரணம்: ஒரு ஆங்கில வார்த்தையில் / Group பில் சராசரி 5 Characters எனக்கொண்டால் ஒருவரது சராசரி Send & Receive செய்யும் வேகம் 20 தான். மிகத்திறமை சாலிகள் 30 வரையில் செய்வார்கள். ஆனால் 181:> நிமிடத்துக்கு 60 அல்லது 70 என்பதெல்லாம் சாத்தியமில்லை. 60 என்றாலே பாருங்கள் ஒரு நிமிடத்தில் 60 x 5 => 300 Characters. அதாவது செக்கனுக்கு 5 Characters என்றாகும். CW Keys எனப்படும் Paddle Electronic Keys இனால் மட்டுமே அவ்வேகத்தில் அனுப்பலாம், ஆனாலும் ஒருவர் அச்சமிக்ஞைகளை வேண்டுமானால் கிரகித்துக்கொள்ளலாம், ஆனால் அவற்றை எழுதிமுடிப்பது அசாத்தியமே!.
172:> ரவியே உழைத்து உருப்பெருப்பித்த இலங்கை வரைபட மாதிரியைப்பார்த்த பெரிசின் (உமா மகேஸ்வரன்) எதிர்வினை வியப்பாயிருந்தது. பெரிசும் சில ஆண்டுகள் நிலஅளவைத் திணைக்களத்தின் (நரேன்பிட்டிய) கதிரைகளைத்தேய்த்த ஒருவர்தான். ஆகையால் இலங்கை வரைபடம் எங்கே கிடைக்கும், எவ்வகையான வரைபடத்தில் என்ன விபரங்கள் (காடு, வயல் குளம்) இருக்கும், என்பதும் வேறெவரைவிடவும் அவருக்குத் தெளிவாகத் தெரிந்திருக்க வேண்டும்.
B முகாமை மேற்பார்வையிட மத்தியகுழுவிலிருவந்த வாசு என்பவரிடம் சிலபோராளிகள் தங்களுக்கு வேண்டிய அளவில் உள்ளாடைகள் (பென்டர்கள்) இல்லாததுபற்றி முறையிடவும் அவரோ “ தமிழனுக்குக் கோவணந்தானே முதலான உள்ளாடை……. இருக்கிறதை வைச்சுச்சமாளியுங்கள்” என்று மதியுரைத்துப் போகின்றார். அந்த வாசுவானவர் இங்கே பெர்லினில் சிலகாலம் வாழ்ந்துவிட்டு 83 வாக்கில் தளத்துக்குத் திரும்பி புளொட்டில் இணைந்து இயங்கியவரும், பின்னர் மட்டக்களப்பில் வைத்து புலிகளின் கண்ணிவெடியில் கொல்லப்பட்ட தோழராகவும் இருக்கவேண்டும் என்பது என் ஊகம்.
ஒரு ஆரம்பநிலை வாசகனுக்குக்கூட நாவலினுள் இறங்க இறங்க ரகுதான் ஜோன் என்பது புரிந்துபோய்விடும், அப்படியிருக்க ஆசிரியரே அதை அவிழ்த்துவிட்டிருக்க வேண்டியதில்லை என்பதுவும் என் எண்ணம்.
இயக்கத்தின் பயிற்சி முகாம்களில் அவற்றின் கெடுபிடிகள், தண்டனைகள், துன்புறுத்தல்கள் தாங்கமுடியாமல் மதன் எனும் அப்பாவிப் போராளி பயிற்சிமுகாமைவிட்டு ஓடிவிடும் முயற்சியில் நள்ளிரவில் அயலூரின் கடையொன்றினுள் போய்த் தஞ்சம் புகுகின்றான். அவன் எதிநோக்கும் உயிராபத்தை அறியாத அக்கடைக்காரரோ மீண்டும் அவனைப்பிடித்து பயிற்சி முகாமில் ஒப்படைத்திவிட இயக்கத்தினரால் அவன் சவுக்குக்காட்டினுள் துன்புறுத்தப்பட்டுக் கொல்லப்படுகிறான்.
ரவி மேலிடத்தின் சம்மதத்துடன் தளத்துக்குப் (இலங்கை) போய்விட்டு பின்னால் வெளிநாட்டுக்குப் போய்விடும் யுக்திடன் மும்பாய்க்கு வந்து நின்ற காலத்தில் செல்வா எனும் இயக்கத்துக்கு நிதியுதவிகள் வழங்கும் புரந்தரன் இவருக்கும் தங்குவதற்கு இருப்பிடம்கொடுத்து உதவமுன்வருகிறான். அப்போது செல்வாவுக்கு சென்னையிலிருந்து தொலைபேசி வருகிறது “ நானும் படைத்துறைச் செயலரும் மும்பாய் வருகிறோம்……. உவங்களை ஒளிக்கச்சொல்லு ” ‘இவங்கள் யார் எந்நேரம் எப்படி மாறுவாங்கள்’ என்று புரியாமல் ரவியும் குழம்புகிறார். இவ்விடத்தில் ரவி தான் சுவிஸர்லாந்து வந்தடைந்த காலங்களையும் பதிவுசெய்திருக்கலாம்.
ரவியைப் போன்ற ஆயிரக்கணக்கிலான தமிழ் இளைஞர்கள் தமது கல்வி, எதிர்காலம் அத்தனையையும் துச்சமெனத்துறந்து இயக்கங்களையும் போராளிகளென்று சொல்லிக்கொண்டவர்களையும் தம்மை விடுவித்துய்விக்க வந்த ஆபத்துபாந்தவர்களாக, ஆதர்ஸங்களாக நம்பிக்கொண்டு ஒரு சுதந்திர ஈழத்தின் கனவுகளோடு அவர்களைப் பின்தொடர்ந்து சென்றார்கள். அவர்களது கூடாரத்துள் ஒரு போராளியாகப் புகுந்தபின்னர்தான் அவர்கள் எல்லோரும் மீட்பர்களோ இரக்ஷகர்களோவல்ல , அவர்களுள்ளும் எல்லா படிநிரைகளிலும் சகபோராளிகளைப் போதிய ஆதாரங்களின்றிச் சந்தேகப்படுபவர்களும், காட்டிக்கொடுப்பவர்களும், துன்புறுத்த / கொலைசெய்யத் தயாராகவிருக்கும் மிலேச்சர்களும், சாதியமேலாண்மையும், ஆயுதமோகமும், அதிகார வாஞ்சையுங்கொண்ட நாதாரிகள் என்பதனையும், அவர்கள் நடப்பினை அறியாமிலிருக்கும் / அறியாததுபோல் பாவனையிலிருக்கும் மிடிமைத்தலைமையின்கீழ் இயங்கும் சுயபுத்தியற்ற பாஸிசவாதிகள் என்பதையும் ரவி உணர்ந்துகொள்கிறார். B முகாமில் அருகிலிருந்தும் மதன்போன்ற போராளிகள் புலியுளவாளிகளென்ற சந்தேகத்தின்பேரில் கொல்லப்படுவதைத் தடுக்கமுடியாமலுள்ளது, இலங்கை இராணுவத்துடன் மோதுவதை விடவும் சகபோராளி மூப்பன்களுடன் மோதுவதும், இயக்கத்தைவிட்டு ஓடிவிடுவதும் ஆபத்தானவை என்பதுவும் அவருக்குப்புரிகின்றது.
குடும்பத்துக்காக உழைக்கவேண்டிய காலத்தை இயக்கத்துக்கு உழைத்து விரயம் செய்தாயிற்று. மீண்டும் வரமுடியாத காலத்தைத் தொலைத்ததை காலந்தாழ்த்தியே புரிந்து கொண்டதையும், தன் நம்பிக்கைகளை இழந்ததையும், தன்வாழ்வியல் சோக அனுபவங்களையும், இருத்தல் மீதான மானுஷவிருப்பையும் உயர்வுநவிற்சியின்றிக் குமிழியில் எளிமையான மொழியில் ரவி பதிவு செய்துள்ளார்.
சாகச அல்லது பிரமைக்குவிப்பு மனோபாவமின்றி நாவலை இயல்பாக நகர்த்தி, நிறைத்த விதத்துக்கும் மேலும் ஒரு சபாஷ்!
ரவியின் எழுத்தாளுமை விரயமாகக்கூடாது. நீண்ட விடுமுறைகளின்றித் தொடர்ந்து எழுதுங்கள் தோழர்!
–பொ.கருணாகரமூர்த்தி
நூல் : குமிழி
பிரிவு: நாவல்
ஆசிரியர் : ரவி
வெளியீடு : விடியல் பதிப்பகம்
வெளியான ஆண்டு : அக்டோபர் 2020
விலை: ₹ 190