இணையதளத்தில் தான் பழக்கமானான் தம்பி “காதலாரா”. ஆனால் இதய தளத்தில் அமர்ந்து விட்டான்.
அற்புதங்கள் என்ன செய்யும். இப்படிப்பட்ட மனிதர்களை கொண்டு வந்து நம்மிடம் சேர்க்கும். கவிதை எழுதுவதற்கு கற்பனை சார்ந்த அனுபவ அறிவு போதும். கவிதை புத்தகம் போடுவதற்கு காலம் வேண்டும். கனிந்திருக்கிறது கவிதைகள்.
கிட்டத்தட்ட கடந்த ஐந்து ஆண்டுகளாக எழுதிய கவிதைகளில் நட்சத்திரம் எண்ணுவது போல….அள்ளி இரைந்த வானத்தில்… கருந்துளை கண்டால் போல…. காதலாராவின் இந்த ” கெணத்து வெயிலு” கவிதை நூல். தலைப்பே safer zone தவத்தை உடைக்கிறது. இலக்கணத்தை விட இக்கணம்தான் கவிதைக்குத் தேவை. அது எக்கணத்திலும் கண்டெடுக்கலாம் காதலாராவின் வரிகளில். ஓர் இருண்மை பூசிய நிலவொளி காதலாராவின் சொற்களில் அலைந்து கொண்டே இருக்கிறது. கண்டெடுத்தவன் கூறுகிறேன்.
இந்தக் கவிதை நூலில் இரண்டு பிரிவுகள்.
ஒன்று “கொம்பு முளைச்ச கொரங்கு” –
இன்னொன்று “எட்டாம் கிரக எதிரொலி”
கதவு சாத்தியும் திறந்து கொள்ளும் மனதுக்குள் காதலாராவின் தலைப்பே காத்தாடி சுத்த வைக்கிறது. காற்று நுழையாத இடத்திலும் மரணம் உண்டு. காதல் நுழையாத இடத்திலும் மரணம் உண்டு. ரெண்டின் சாட்சியாக காதலாரா இருக்கிறான். கிட்டத்தட்ட 80 கவிதைகள். 80ம்.. அவன் வாழ்வில் இருந்து எடுத்து வந்த வெயிலும் குயிலும் தான்.
கவிதைகள் சமூகம் சார்ந்தும்……காதல் சார்ந்தும் சீரான இடைவெளியில் பயணிக்கின்றன. காதலாராவின் பல கவிதைகளில் சொற்கள் வழக்க நடை பூசி இருந்தாலும்……சொல்கையில் வழக்கு நடை பூசி இருக்கிறது. அது தான் அந்த கவிதைகளை நடப்பதிலிருந்து பறக்கச் செய்கிறது. எப்படி பேசுவோமோ அப்படி எழுதி இருக்கிறான். எப்படி எழுதி இருக்கிறதோ அப்படியே படித்துக் கொள்ள வேண்டும்.
காதலாராதலைமுறை கவிஞர்களில் வழக்கு மொழி கவிதைகள் மிக சிலரே எழுதுகிறார்கள் என்று நினைக்கிறேன். அதில் காதலாராவின் இடம் பேனாவுல ‘ஒழக்க புடிச்சு கவிதைய தனிச்சு குத்துது…’
“நினைப்போட நிப்பவை” என்றொரு கவிதை. வீட்டில் ஒரு மூத்தவளை பத்தி தான் கவிதை. அதுல ஒரு பத்தி.
"உடும்பு சிரிப்பு காத்தோட கலக்க
அடுப்பும் நெருப்பும்
சோத்தோட மணக்கும்"
படக்குனு எனக்கு என் பாட்டி நினைப்பு வந்துருச்சு.
கிராமத்து பாட்டி…..கிராமத்து அம்மா……கிராமத்து அக்கான்னு எல்லா கிராமத்துக்காரிக்குள்ளும் ஒரு சொல்லொணா காடும் ஒரு சொல்லு
பட்ட மரமும் எப்பவும் யாருக்கும் தெரியாம தவிச்சுகிட்டே இருக்கும். சுமைதாங்கியின் சொரூபம் அப்படி. அதை உணர முடிந்தது.
“மஞ்ஜா… சோகய….. ஊனாங்கொடி…..குளுத்தி……கயினி…….சிமிர்…..” இப்படி நிறைய சொற்கள்…. நவீன வாசிகளுக்கு புதிதாக இருக்கும். அவை பழையவை என்பது தான் காதலாராவின் கவிதைகள் மீட்டெடுக்கும் சொல் ராகங்கள். புதியவர்கள் வரலாம். பழையவைகள் கை விடப்படக் கூடாது.
"பாறாங்கல்லு பக்கத்துல
ஊராங்கண்ணு தின்ன தின்ன
ஒளிஞ்சு நின்னு கட்டிக்கிட்ட
நேரா சொல்ல வெக்கப்பட்டு
எங்கப்பன்கிட்ட சொல்லி விட்ட"
ராகமா பாடினா இளையராஜா பாட்டு வந்துரும். படமா பார்த்தா பாரதிராஜா காட்சி வந்துரும். படிக்கும் போதே காதோரம் ஊர் காத்து கிசுகிசுக்கும். படிச்சு முடிச்சப்பறம் படக்குனு மனசுக்குள்ள ரெண்டு துளி கண்ணீர் பிசுபிசுக்கும்.
"கரு நெறங்காட்டி சாதி பிரிச்சு
கழுத்தை வெட்டி என்னை எரிச்சாலும் உன் புள்ள சாக மாட்டான்னு
உங்கப்பகிட்டன் சொல்லிப்புட்டேன்"
காதலின் தீர்க்கத்தை வேறெப்படி சொல்ல. காதலுக்கு முன்னால் சாதியெல்லாம் ஒரு மயிரும் இல்லை. வரி சொல்லுதே. வரி வரியாய் தமிழ் அள்ளுதே.
காதலின் தீபம் கிராமத்து குறுக்கு சந்தில்…..நிலவொளியில் கொட்டும். அவனும் அவளும் ஓராள் நடக்கும் சந்தில் எதிர் எதிர் நிற்க படக்கென திறக்கும் பொது ஜன்னலில்… காதலாராவின் கவிதை ஒலிக்கும். அப்படித்தான் கற்பனை விரிகிறது.
எல்லா உறவும் கவிதையில் வருகிறது. எல்லா உண்மையும் கவிதையாக வருகிறது.
“அம்மா…..அண்ணி…..அத்தை…..சித்தி…..மாமன் பொண்ணு தேனு…….இப்படி எல்லாருக்கும் ஒரு நாளாவது….தான் சமைச்சு தந்து…..அவங்க எல்லாரும் திண்ணையில உக்காந்து வளையல் குலுங்க சிரிப்பதை மனம் குளிர காண வேண்டும்” என்ற காதலாராவின் கவிதையை கவிதை என்று கூட நான் சுருக்க விரும்பவில்லை. அது காலத்தின் சாட்சி. உறவுகளுக்கு ஒரு மனிதன் தரும் மரியாதை. காலமெல்லாம் தனக்கு ஆக்கி கொட்டிய மனுசிகளுக்கு ஒரு நாளாவது திரும்ப செய்ய வேண்டும் என்ற பரிதவிப்பு. அதில் ஒரு மென்சோகம் இருப்பதை உறவுகளற்றவர்கள் புரிந்து கொள்வார்கள். அதில் ஒரு மென்கீதம் இருப்பதை உறவிருந்தும் அற்றவர்கள் புரிந்து கொள்வார்கள்.
“பெத்தவ பெத்தவ”னு ஒரு கவிதை.
இங்கிருந்து தான் இந்த நூலுக்கு தலைப்பு வந்திருக்கும் என்று நினைக்கிறேன். வயசான அம்மாவோட தனித்த முதுமையின் வலி. அது இந்த வாழ்வின் இயல்பிலிருந்து தப்பித்துக் கொள்ள தற்கொலை செய்ய சாலைக்கு நடுவே செல்கிறது. அதற்கு முன் கரையான் அரித்த கட்டில் பற்றியும்… உடைந்த கையை கொண்டு தூக்கிட்டு தன்னை கொல்ல முடியாமை பற்றியும்…. குளிக்க வைக்க வாரம் ஒருமுறை மகள் வர வேண்டும் என்பது பற்றியும்….. அப்படியே ஒரு கடைக்கோடி கிராமத்தின் தனித்த முதுமனுசியை கொண்டு வந்து காட்டி ஓவென ஒப்பாரி வைக்கும் காதலாராவை நான் நடுக்கத்தோடு காண்கிறேன். அவன் கண்ட அந்த பெத்தவளின் நடுக்கம் அவனையும் தாண்டி என்னைத் தொற்றிக் கொள்கிறது.
“எரியாத விறவு” என்ற கவிதையில்.. கடைசி பத்தி இப்படி முடியும்…
"வூட்டுல விறவில்லனா வூட்டையே விறவாக்குற வூட்ட எரிச்சு முடிச்சா எந்த வவுறு பசிக்கும்"
இதற்குள் ஒரு காட்சி பரிமாணம் இருக்கிறதல்லவா… அங்கே ஒரு கூன் கிழவி அடுப்பூதிக் கொண்டிருக்கும் ஓவியத்தை நான் காண்கிறேன். பசிக்கும்……..குடிசைக்கும்….. விறவுக்கும்….. வெயிலுக்கும் இடையே அல்லாடும் சொற்களில்…. ஒரு காணாந்தேசத்து வாழ்வியலை காண்கிறேன். அங்கே ஒரு நேர சோற்றுக்கு சாவும் வயிறு பற்றி எரிந்து கொண்டே இருப்பதை செத்து போவது மூலம்… நிறுத்திக் கொள்வதான இயலாமையை காதலாராவின் மொழி வயிறெரிந்து சொல்கிறது.
காதலாராவின் கவிதைகளில் வாழ்வியலின் ஒரு விததுன்ப நடுக்கம் இருந்து கொண்டேயிருக்கிறது. அது தீரவே முடியாத சோகத்தை சுமந்தபடி விறகு தூக்கி செல்லும் நடுமதிய முதுகு வியர்வையாய் யாருமறியாமல் ஒழுகிக் கொண்டே இருக்கிறது.
கருவறுக்கும் சாதி…..கழுத்தறுக்கும் சாமி…… என்று கிடைக்கும் இடத்தில் எல்லாம் மூடர்களை எட்டி உதைக்கும் காதலாராவின் கவிதைகள்…. சத்தமிட்டு குரல் அதிர படிக்க வேண்டிய கால சாட்சிகள். காற்றின் மொழிக்கு கதவு தாலாட்டும் ஒற்றை உள் வெளிக்கு ஒவ்வொரு முறையும் தவிக்கிறோம். வேறு வழி இல்லை. வேர் தான் வரியில்.
தங்கை பற்றி ஒரு கவிதையில்….
“பானை நீரில் வளர்க்க ஏரி மீனை எடுக்கிறாள்” என்றொரு வரி. அப்படியே நின்று தானாக புன்னகைத்து.. ஹாஹ்… சொல்லிக் கொண்டேன். தங்கையின் குறும்பு பற்றி விரியும் கவிதையில்… அண்ணனின் அன்பும் அங்கே நிறைகிறது.
எல்லாமே தினமும் புழங்கும் பொருட்கள் தான். காதலாராவின் கவிதைகளில் எல்லாமே தினமும் புழங்கும் சொற்கள் தான். வரமொளகாய கவிதைக்குள் கொட்டி இனிப்பாக்கும் வல்லமை வாய்த்திருக்கிறது. வடகத்தை கூரையில் வைத்து காகம் ரசிக்க தெரிந்திருக்கிறது. ஏரியை மீட்டெடுக்க கருவேல மரங்களின் வேரென காத்திருக்கும் காதலாராவுக்குள் ஒரு கறுத்த கிராமம் எப்போதும் கவிழ்ந்தே இருக்கிறது. அதை கோழி மூடும் பஞ்சாரம் போல தன் இதயத்துள் போட்டு மூடி வைத்திருக்கிறான். ஈரம் கசியும் அற்புதம் தொடர்கிறது.
ஒரு கவிதையில் “வவுறு கத்துனா கவித கவித கருகுது” னு ஒரு வரி.
ஆமா…… வயிறு காய்ந்த போது கவிதை என்ன செய்யும். கவிதை காய்ந்த போது வயிறு தான் என்ன செய்யும். கர கரன்னு கண்ணீர் விட வைக்கும். அன்பும் ஆதரவும்….. கிடைக்காத ஒரு தூரத்து மனுஷனின் வலி நிறைந்த நினைவுகள் என்று கூட சொல்லாம். காதலின் பொருட்டு தனித்து வந்தவளின் அழுகையில் காலத்துக்குமான சங்கடம் சங்கில் ஊற்றப்படுகிறது. ஒரு தனித்த தாயின் புலம்பலில் சாவு வயிற்றுக்குள் இருக்கும் கருவோடு பேசுகிறது. சாவை மிஞ்சிய போராட்டம் தான் இந்த வாழ்வென்று கவிதை முடிகையில்…. நாம் வாழ்வை வேறு கோணத்தில் தொடர்கிறோம்.
ஒரு கவிதையில்….” எட்டு மூட்ட பூச்சி…. அவன் காலு கைய கடிச்சும் முழிக்கல”னு ஒரு வரி. மூட்டைப்பூச்சியெல்லாம் நகர வாசிகளுக்கு அத்தனை பழக்கமிருக்காது. அது கொத்து கொத்தாய் ரத்தம் உரியும் சிற்றுயிர். அதன் உடலே ஒரு வயிறு தான். அதன் வயிற்றுக்குள் கத்தை கத்தையாய் கிராமத்து தனித்த வீட்டின் கதை இருக்கிறது.
கடைசியா அத்தன அக்கிரமம் பண்ணுற புருஷனையும் எழுப்பி “இந்தா மனுசா ஒரு வா சோத்தை தின்னுட்டு படுன்னு” சொல்ற பொஞ்சாதி மனசு. பொசுக்குன்னு கண்ணு கலங்கி மறுக்கா படிக்கிறேன்.
“வறண்ட வயிறு” என்றொரு கவிதையில்… ஒரு பத்தி வயிற்றை சுரண்டும் சத்தத்தோடு கத்துகிறது.
"சாணி கொட்டுன எடத்த
சோறு போட்ட நெலத்த
கூறு போட்டு விக்கிறதுக்கு
கொஞ்சங்கூட தெம்புயில்ல"
வயிறு அரை சான் தான். அதுக்கு தான இந்த மொத உலகமும் சுத்துது. சோறு போட்ட நிலத்தை விக்கிறதெல்லாம் தாராளமய.. உலகமயமாக்கல்…..அப்பிடி இப்பிடினு என்னவேணாலும் சொல்லிக்கலாம். ஆனா அதுக்கு பேர் உழுதுண்டு வாழ்வோரின் வயிற்றில் அடிப்பது.
“நம்ம பசங்க” கவிதையில்.. பழைய நண்பர்கள் பட்டியலில் நகைச்சுவை நளினம். போனில் சிரிக்கும் “செல்வா பேபி” சிரிப்பு நாட்டியம். திரும்ப நிரம்ப படிக்க வைக்கும் வாழ்வியல் கவிதை.
"நெஞ்சில் நித்தம் நான் சிரித்து
கற்பில் நகர்ந்து நாமும் நடமாட
சென்னை பக்கம் வாங்கடா
உங்க அன்பை கொஞ்சம் தாங்கடா...."
நண்பர்கள் இல்லாமல் வாழ்வின் நுட்பம் ஏது. நட்புக்கு இல்லாத கவிதை பக்கம் ஏது.
‘அப்பனும் மவனும்’ பேசிக் கொள்ளும் மண் வாசனை… “மேகம் கருக்குது மழை வர பாக்குது… வீசி அடிக்குது காத்து” என்று சிரித்துக் கொண்டே முணங்கலாம். மண்வாசனை எழுத்தில் இருக்கிறது. மண் வாசனை தான் எழுத்தாய் இருக்கிறது.
“கல்லு செலை சாமி கூட கட் அவுட்டுக்கு மாறிடுச்சு…” தீ பற்றி எரியும் வரிகளில்…அநீதி அழிக்கும் காட்டுத்தீ கண்டிப்பாக – நம்புவோம்.
"கழுத்தறுத்து கதைகளில் சாதி வென்றதென
ஊதிக் கொள்கிறது மீதி பிணங்கள்"
காதலுக்கு கழுத்தறுப்பவனை பிணம் என்று தானே சொல்ல வேண்டும். சாதி வென்று விட வேண்டுமென துடிக்கும் மாக்களிடமிருந்து காதலையும் காப்பாற்ற வேண்டும். காதலிப்போரையும் காப்பாற்ற வேண்டும்.
பெரும்பாலான கவிதைகளில் வாழ்வும் சாவும் ஒன்றை ஒன்று மீறிக் கொண்டேயிருப்பதை கவனிக்கிறேன். ஒன்றிலிருந்து ஒன்று முளைக்கும் ஒன்றென அது ஒன்றோடு ஒன்றாக ஓடிக் கொண்டே இருக்கிறது. கடவுளை பகடி செய்யும் நியாயம் காதலாரா கவிதைகளில் காணலாம். காதலை நியாயம் செய்யும் அன்பு காதலாரா வாழ்வில் காணலாம். காதலாராவின் மொழி சாமானிய மொழி. ஆனால் சமரசம் அல்லாத மொழி.
“பிண்டத்திற்கு பிச்சையிட வேலை உண்டா உன்னிடம்” என்று காதலாரா கேட்பது பயங்கர நுட்பத்தோடு கேட்கிறது. செவி இருந்தும் கேட்கும் திறனற்ற முதலாளித்துவம்…. என்ன பதில் வைத்திருக்கிறதோ…!
“உருமாற்றம்” என்ற கவிதை இப்படி முடிகிறது.
"வயிறு எரிய எழுதி
கயிறு முறிய வீழும் என் பிண்டத்தின் பிம்பம்
சாத்தான் சாயலில் திமிறி எழும்'
வேறு வழி இல்லாத போது உருமாற்றம் நிகழ்ந்தே தீரும். நாம் என்ன ஆயுதம் எடுக்க வேண்டும் எதிரிகளே தீர்மானிக்கிறார்கள்….என்பது போல.
காதலின் குகையை அவளிடம் காண்பதாக இரண்டாம் பகுதியில் ஒரு கவிதை. மனதுள் நுழைந்த வரைகலை பிறகும் அசை போடும் மூளை. பெரும்பாலும் இரண்டாம் பகுதி கவிதைகளில் மனம் சார்ந்த ஆழமான ஊடுருவல் சார்ந்த வரிகளை காண முடிகிறது. படிம நிலைக்குள் நிகழும் வண்ணப் பிறழ்வுகளை தெளித்த காதலாராவின் கவிதை உலகம் உள் சார்ந்த அடுக்குகளால் நிறைந்தவை. நுனிப்புல் மேய்வோரை முதல் வரியே எட்டி உதைத்து விடும். சில கவிதைகளில் கடைசி வரியில் கவிதை செய்யும் வித்தை இருக்கிறது. ஒவ்வொரு தலைப்பும் மிக நுட்பமாக கையாளப்பட்டிருக்கிறது. முதல் புத்தகம் என்ற போதும்… முக்தி வரிகளை காண முடிகிறது.
"வளையல் உடைத்து கவிதை செய்கிறாய்
வலையில் அடைந்து தரையை நெய்கிறேன்"
ஒரு சோற்று பதம் இந்த காதல் வரி. வரிக்கு வரி காதலும் உண்டு. வரி வரியாய் காதலே உண்டு. ஆன்ம தொடுதல் என்பது காதலாராவின் வரிகளில் அடிக்கடி நிகழ்கிறது. நாம் செய்ய வேண்டியதெல்லாம்.. பரிசுத்த கண்களோடு வரி வரியாய் வாழ்ந்து பார்ப்பது மட்டும்தான். காதலாராவின் மொழி தனித்து இயங்குகிறது. வழக்கு மொழி என்றாலும் அதிலும் ஒரு தனித்தன்மை. காதல் மொழி என்றாலும் அதிலும் ஒரு தனித்தன்மை. வெற்றுப் புகழ்ச்சிக்கு இங்கே ஒரு சொல்லும் இல்லை. வெயில் சுடும் வரிகளும்.. வேதம் விடும் துளிர்களும் தான் நூல் முழுக்க.
“போர்முனை காதலென்பது வெறும் மனிதம் அல்ல…” என்று புத்தகத்தை முடிக்கும் காதலாராவுக்கு தெரிந்திருக்கிறது….காதல் அதையும் தாண்டி சிந்தனை சார்ந்ததென்று.
“கெணத்து வெயிலு ” என்பது பேரன்பு தராத…….பிரியங்கள் இல்லாத……… நீர் இல்லாத அந்த வட்டத்தில் இருந்து தான்.
” கெணத்து வெயிலு” என்பது சுயலாபம் சூழ வாழும் இந்த வாழ்வின் பகட்டிலிருந்து தான்.
” கெணத்து வெயிலு” என்பது அன்பென்னும் அரூபத்துக்கு உன் உடல் கொடுத்து உயிர் கொடுத்து நீயாக உனக்கே அடையாளம் காட்டிக் கொள் என்பதுதான்…
” கெணத்து வெயிலு ” என்பது இந்த நூலின் வாயிலாக இன்னமும் அந்த மண்ணின் சூடு வாழ்வதென்பது தான்…!
- கவிஜி
நூல் : கெணத்து வெயிலு
பிரிவு: கவிதைத் தொகுப்பு
ஆசிரியர் : காதலாரா
வெளியீடு : படைப்பு பதிப்பகம்
வெளியான ஆண்டு : 2020
விலை: ₹ 100
கவிஜி கோவைச் சார்ந்தவர் B.com. MBA, PG Dip in Advertising ஆகிய கல்வித் தகுதியுடன் கோவையிலுள்ள ஒரு பிரபல நிறுவனத்தில் மனித வள மேலதிகாரியாக பணி புரிந்து வருகிறார். ”பிழைப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. வாழ்வதில்தான் எனக்கு விருப்பம். அவைகள் எழுதுவதால் எனக்கு கிடைக்கிறது.” என கூறும் கவிஜியின் இயற்பெயர் விஜயகுமார்.
4000-க்கும் மேற்பட்ட கவிதைகள். 250-க்கும் மேற்பட்ட சிறுகதைகள். 400-க்கும் மேற்பட்ட கட்டுரைகள் 50-க்கும் மேற்பட்ட குறுங்கதைகளோடு மூன்று நாவல்களையும் மூன்று திரைப்படத்திற்கான ஸ்கிரிப்ட்கள் எழுதி இருக்கிறார். குறும்பட இயக்குநராகவும் செயல்பட்டு இதுவரை 12 குறும்படங்களையும் எடுத்திருக்கும் கவிஜி பன்முகத் திறன் வாய்ந்த படைப்பாளியாக மிளிர்கிறார்.
|
ஆனந்த விகடன், குமுதம், பாக்யா, கல்கி, தாமரை, கணையாழி, ஜன்னல், காக்கை சிறகினிலே, தினை, புதுப்புனல், மாலைமதி, காமதேனு, இனிய உதயம், அச்சாரம், அத்திப்பூ, காற்றுவெளி உள்ளிட்ட அச்சு இதழ்களிலும் பல மின்னிதழ், இணைய இதழ்களிலும் இவரின் படைப்புகள் வெளியாகி உள்ளன. பல்வேறு இலக்கிய அமைப்புகளிடமிருந்து பலவேறு இலக்கிய விருதுகளையும் பெற்றிருக்கிறார்.