கி.ராவின் இடத்தை நிரப்ப இனி யாரேனும் இருக்க முடியுமா? இலக்கிய உலகின் மிகப் பெரிய ஆளுமையை இழந்து விட்டோம் .
இந்நாவலில் கீதாரிகளின் வாழ்வை அவ்வளவு அற்புதமாகக் கண் முன்னே நிறுத்துகிறார். ஆடுகளின் வகைகளையும் அவற்றின் இயல்புகளோடும் நம்மைப் பயணிக்க வைக்கும் யுக்தி அருமை.
ஆடுகளை மேய்ச்சலுக்குப் பிரித்துக் கொண்டு போகும் நேரத்தில் கிடை மறிச்சிருக்கு என்று ஒரு பெண் மூச்சு வாங்க வந்து நிற்கிறாள். ஆடுகளை அப்படியே மறித்து நிறுத்துகிறார்கள்.
விதவையான அப்பெண்ணின் அரை ஏக்கர் பருத்தியை ஆடுகள் நாசம் செய்து விட்டதாய் ஞாயம் கேட்கிறாள். ஊர் பஞ்சாயத்து கூடுகிறது.
பஞ்சாயத்தில் இருப்பவர்களை ஒவ்வொருத்தர் பற்றியும் விலாவாரியாக வர்ணிக்கும் பாங்கு கி.ராவுக்கே உரியத் தனி பாணி.
துப்பு துலக்கப் போகும் பெரியவர்களில் ஒருவர் இரண்டு பேரின் காதல் விளையாட்டால் தான் ஆடுகள் பருத்தி தோட்டத்தை பதம் பார்த்துள்ளது என்று கண்டு பிடிக்கிறார் இதில் முள் வாங்கி முக்கிய சாட்சியாய் நிற்கிறது.
இதில் பொன்னுசாமியும் அவர் மனைவியும் செய்யும் அட்டகாசங்கள் சிரிப்பை உண்டாக்கினாலும் அடுத்தவனின் உடைமையில் ஆட்டையைப் போட்டு சொகுசு அனுபவிக்கும் அவரின் ஆட்டத்திற்குக் கடைசியில் செய்யாத தவறுக்கு அபராதம் கட்டுவது சரியான தண்டனை.
எல்லப்பனும் செவனியும் ஜாதியால் மாறுபட்டவர்கள் என்பதால் ரகசியமாக எல்லப்பனுக்கு கல்யாணம் முடிப்பதும் அவனின் செய்கையை வெளிப்படுத்தாமல் , செவனிக்கு பேய் பிடித்ததாக் காட்டுவது பரிதாபம். எல்லப்பனின் கல்யாண ஊர்வலம் நடக்கும் பொழுது செவனிக்கு பேய் ஓட்டுவது பெரிய மனிதர்களின் முரணான செயல்களை அப்பட்டமாகக் காட்டுகிறது.
கீதாரிகளின் வாழ்வு கம்பும் காடுகளிலுமே முடிந்து விடுகிறது. கம்பில் தலையூன்றி நின்ற வாக்கிலேயே உறங்கும் அவர்களின் பாடும் பரிதாபம் தான்.
சம்சாரிகளின் பார்வையில் மோசமானவர்களாகவே பதிந்து போகிறார்கள். இவர்களின் நிலை அப்படி. எப்படியும் ஆடுகளுக்கு வயிறு நிறைந்தால் போதும்.
இதில் குறி சொல்பவன் தவறான ஒருவனை அடையாளம் காண்பிப்பதும் மக்கள் அதை நம்பி தண்டனையைத் தருவதும் சாமானியனின் நம்பிக்கையைப் பலப்படுத்தி விடுகிறது.
பஞ்சாயத்து பேசுபவர்களின் மனநிலையும் ஆரம்பத்திலேயே ஒருவனைக் குற்றவாளியாய் முடிவு செய்தே பஞ்சாயத்தை நடத்துகின்றனர்.
கி.ராவின் இன்னொரு இலக்கியப் பெட்டகம் இது.!
–சுகந்தி
நூல் : கிடை
பிரிவு : குறுநாவல்
ஆசிரியர் : கி.ராஜநாராயணன்
வெளியீடு : காலச்சுவடு பதிப்பகம்
வெளியான ஆண்டு : 1968 ( வாசகர் வட்டம்)
மறுபிரசுரம்: டிசம்பர் 2017
பக்கங்கள்: 64
விலை : ₹ 70
Kindle Edition