வலி நிரந்தரம் என்பது தெரிந்ததுதான். ஆனாலும் அந்த வலியை மறக்க, மறைக்க தெரிந்தவர்கள் திறமைசாலிகள் அதுவும் மொழியின் துணைகொண்டு கவிதைகளால் தானும் மருந்திட்டுக்கொண்டு, வாசகனுக்கும் மருந்திடும் மாயங்கள் செய்ய தெரிந்தவர்கள்.
உமாக்காவின் கவிதைகளும் அப்படித்தான். (ஏன் அவருமே கூட!) ” ஒண்ணும் நேரமாகாது .. வா வந்து ஒரு வாய் காப்பி குடிச்சுட்டு போகலாம்” என மறுத்து சொல்லிட முடியாதவாறு கையை பிடித்து அழைத்துச்செல்கிற என் சிறுவயதில் என்னோடு பழகின “உமாக்காக்களை” நினைவூட்டுபவை அவரின் வார்த்தைகள்.
இன்னும் பேருந்து வரை வந்து
இருக்கை எண் பார்த்து அமரவைத்து கிளம்பும் வரை ஜன்னல் கம்பிகளை பற்றி நின்றுகொண்டிருக்கிற நெருங்கிய உறவினரை போன்றவை.
நல்லா இருக்கு உமாக்கா! கவிதைகள்.
எனக்கும் ரோஸ் நிற கவுன் வாங்க முடியாமல் போன ஏக்கமுண்டு.
// முன் முற்றச்செம்பருத்தியிடம் விட்டுச் செல்// சொல்லலாம் தான்..
செம்பருத்தி வளர்க்கவும்,வளரவும் அதிர்ஷ்டம் வேணும்.
நல்ல விமர்சனக்குழுவின் விமர்சனத்தை படம் பார்த்து விட்டு வந்து படிப்பதில் ஒரு ‘ த்ரில்’ இருக்குமல்லவா ? அப்படித்தான் இருந்தது எனக்கு கல்யாண்ஜியின் (வண்ணதாசன் அவர்களின் ) முன்னுரையை படிக்கையில்.
வாழ்த்துகள் ‘ க்கா!
சில கவிதைகள்
கனவு செருகிய எரவாணம்
பார்ப்பதற்கு நீங்கள் தேடுவதுபோலவே
விழுவதற்கு மழையும் தேடுகிறது
ஒரு கண்ணாடி சன்னலை
அப்போது வழிந்த அழகின்
நினைவு
அதற்கும்.
ஒருநாளும் வாய்க்கவில்லை
அவள்போல் ரோஸ்கவுனில்
சுழன்றாட
பார்த்துவிட்டு வந்தவுடன்
குழம்பு சுட வைத்து
தோசை வார்த்த மும்முரத்தில் மறந்தாலும்
கனவில் நினைவு வரும்.
ஒரு காலத்தில்
அதே ரோஸ் இல்லையென்றாலும்
அதன் சாயலில் ஒரு ரவிக்கைத்துணி
எடுத்தபோது ஏனோ நினைவிலேயே
நினைவு வந்தது.
உன் இருப்பு தரும் அண்மையை
உன் சொற்களின் கரகரப்பை
முன்முற்றச் செம்பருத்தியிடம்
விட்டுச்செல்
நீ வரும் வரை.
குடை ஜிமிக்கியின்
ஓரச்சலங்கைமுத்து
அளவே உள்ள அன்பை
பேரன்பு என்கிறாய்
கோயிலின் கண்டாமணியையே
ஒத்துக்கொள்ளாத உலகத்திடம்
தருவதின் அளவும்
பெறுவதின் அளவும் உணர்வதன் நாழி நிறை
தன்னைத்தானே சுற்றிச் சுழன்றாடும் சிறுமியின்
சிற்றாடைப்பூ
சாயமிழந்த மலர்ச்சிக்குமுன்
ரங்கராட்டினத்தின் சக்கரம் சிக்கிக்கிடக்கிறது.
நினைவுகள் இப்படி ஒரேநாளில் அமைவது …
– சரஸ்வதி காயத்ரி
நூலாசிரியர் குறித்து:
உமா மோகன் திருவாரூரில் பிறந்து பாண்டிச்சேரியில் வசிப்பவர். இவரது ’டார்வின் படிக்காத குருவி’ , ‘ஆயி மண்டபத்தின் முன் ஒரு படம்’ , ‘துயரங்களின் பின் வாசல்’ , ‘நீங்கள் உங்களைப் போலில்லை’ , ‘தழையுணர்த்தும் சிறுவாழ்வு’ , ‘கனவு செருகிய எரவாணம்’
முதலிய கவிதைத்தொகுப்புகள் ’வெயில் புராணம்’ என்ற பயணக்கட்டுரை
‘ராஜகுமாரி வீடு வழியில் இருந்தது’ என்ற சிறுகதைத் தொகுப்பு முதலியன இதுவரை வெளிவந்தவை.
நூல்: | கனவு செருகிய ஏரவாணம் |
பிரிவு : | கவிதைகள் |
ஆசிரியர்: | உமா மோகன் |
வெளியீடு: | படி வெளியீடு ( டிஸ்கவரி புக் பேலஸ்) |
வெளியான ஆண்டு | ஜனவரி 2019 |
விலை: | ₹ 100 |
பக்கங்கள் | 112 |
தொடர்புக்கு : | +91 87545 07070 |