காலாதீதத்தின் சுழல் – கவிதைத் தொகுப்பிற்கு கவிஞர் ரவிசுப்பிரமணியன் எழுதிய முன்னுரை.

நீர்  நிரம்பிய  குடுவையை  வெட்டவெளியில்
இரவு  முழுவதும்  திறந்து  வைத்திருந்தேன்
இருளைப் பிரதிபலித்ததே  தவிர
நிலவின்  கதிர்கள்கூட  அதைத்  தொடவில்லை

 இயலாமையின்  கடைசி  நிமிடத்து  முடிவாய்
சட்டெனத்  தண்ணீரைக்  குளத்தினில்  விடுத்துக்
கரையோரம்  ஒதுங்கி  அமர்ந்தேன்

இப்போது  மிதந்து  கொண்டிருக்கிறது
வெண்ணிலவு.

மானுட நேயம் கொண்ட ஆயிரம் இடது சாரிகளின் கோஷங்களை இருவிரல்களில் பிடிக்கிற எளிய கலைக் குளிகையாய் மாற்றித் தருகிற இந்த மாயம்தான் கவிதை. எழுத துவங்கியிருக்கும் இக்காலத்திலிலேயே இது ரத்னாவுக்கு வசப்பட்டிருப்பது ஒரு வரம் தான்.

படித்து முடித்த பிறகும் மீட்டிய விரல் மெளனித்த பின்னும் ஒலிக்கும் நாதமாய் நம்மோடு நல்லொலியின் மெல் அதிர்வை நிகழ்த்திக்கொண்டே இருக்கின்றன சில கவிதைகள்.

ஆடிக்கொண்டே  இருக்கிறது  கிளை
காற்றால்  தானென்று  நகர்கிறது  உலகு

 கனம்  முழுவதையும்  தந்துமர்ந்து
கவனத்தை தன் சிறகின் மேலிட்டு
சட்டென உயர்ந்த சிறு பறவை
விளைவித்த தடுமாற்றம் யாருக்குப் புரியும்

 பட்டும் படாது அலட்சியமாய்
கதை கேட்கிறது காற்று
மெளனித்து நோக்கிற்று வான்
ஆனால் ஆடிக் கொண்டே இருக்கிறது கிளை 

காற்றால்தானென்று நினைத்து
நகர்கிறது உலகு.

 தேர்ந்த ஒரு குறும்படத்தின் காட்சிகளாய் அர்த்த புஷ்ட்டியாய் விரியும் இது போன்ற கவிதைகளை அரிவைப்பருவத்தில்  ரத்னா எழுத வந்திருந்தாலும் அவர் வெகுகாலம் மனசுக்குள் எழுதிக்கொண்டேயிருந்திருக்கிறார் என்பதற்கான சாட்சி இது. சொற்களின் புனைவில் வெட்டும் நெடு குறுக்குக் கோட்டு மின்னல்கள் கணத்தில் வெட்டி விதிர்க்கவைத்த பிறகும்  மனசுக்குள் மறுபடி மறுபடி ஒளிர வைக்கிறது கவித்துவ வெளிச்சத்தை. எப்போதும் எதையும் பெரும்பாலும் பிறழ உள்வாங்கும் உலகை – எல்லோர்க்கும் எல்லாம் விளக்க முடியா நம் கையறு நிலையை – இதைவிட வேறெப்படிச் எப்படி சொல்ல முடியும்.

அகக்கவிதைகளே அதிகமிருப்பினும் அதை சொல்லும் விதத்தால் வெவ்வேறு தளங்களுக்கு நகர்த்தி நவ கவிதையாக்குகிறார் கவிஞர். ஏமாற்றம், புரிதலின்மை, சுடு சொற்கள், தற்காலிகப் பிரிவுகள், வலி கனத்த ஊடல்கள், கூடல் இவற்றிற்கு பால் பேதம் உண்டா என்ன என்கிறது கவிதைகள். ஆனால் ஆண் உணர்வுகளின் அர்த்தங்களுக்கு பல சமயம் எதிர் துருவ புரிதல் நிகழ்ந்துவிடுகிறது என்பதை புரியா பெண்மனசின் புதிர் கேள்விகள் – சில கவிதைகளில் விளக்குகிறது. அம் மனசின் சொற்களுக்கு எந்த அகராதியில் அர்த்தம் தேட முடியும். எத்தனை கண்டிபிடிப்புகள் நிகழ்ந்தால் என்ன. எவ்வளவு யுகங்கள் கடந்தால்தான் என்ன இன்னமும் பெண் மனம் ஆணால் முழுதும் திறக்கமுடியா ரகசியப் பரிசுப் பொருளாகத்தானே இருக்கிறது.

எள்ளிறைத்து
முற்றும் களைந்து
முழுதாய்த் தொலைத்தேனென நினைத்து
முக்குளித்துக் கரையேற ஏறுகையில்


தூரப் பார்வையை அசைத்து
ஊன்றவும், பிடிக்கவும்
பற்றுக்கொள்ளவும் வைக்கிறது
பாசம் படர்ந்த இந்தப்படித்துறை.

எழுத்தாளர் சுஜாதா என்னோடான தனி உரையாடலின் போது தடை செய்யப்பட வேண்டிய என் சொற் பட்டியலில் காதல், முத்தம், பூ, மேகம், மழை இப்படி கட கட வென பதினைந்துக்கு மேற்பட்ட சொற்களை சொல்லி இன்னும் ஒரு ஐம்பது இருக்கிறது. தவிர வெறும் காதல் கவிதைகளை மட்டும் எழுதுபவர்களுக்கு கவிதையே வரமாலிருக்க சாபம் தரவும் உத்தேசத்திருக்கிறேன் ரவி என்றார். ஆனால், அப்படி யாரும் எழுதிவிட முடியுமா. ஆனானப்பட்ட இன்குலாபே இதற்கு விதிவிலக்கில்லை என்கிற போது.

எத்தனை தடவை சொன்னாலும் மழை,  யானை, குழந்தையின் சிரிப்பு, மஞ்சுக்கூட்டம், நதியின் சுழிப்பு, வாலைக்குமரியின் சிரிப்பு போன்றவை சலிக்கிறதா நமக்கு. சொல்லும் விதத்தால் அவை – தானே நிலை பெறும் என்று கட்டியம் கூறுகின்றன ரத்னாவின் கவிதைகளும் அவர் கவிதைகளின் உள்ளீட்டுச் சேர்மானங்களும். மேல் சொன்ன ’படித்துறை’ கவிதையை அப்படி நீங்கள் விலக்கிவிட முடியுமா. அல்லது பொருள் கனக்க ஒலி ஒழுங்கில் இயைந்து கவ்வும் இந்த கவிதை வரிகளை நீங்கள் அவ்வளவு எளிதில் கடந்து போய்விட முடியுமா பாருங்கள்.

தீராப் பேரன்பில்
தீதொன்றுமில்லை
தீர்வெல்லாம் உன் கையில்
தீர்ந்ததென நான் எதைச் சொல்ல?

இப்படித்தான் உருவற்ற உணர்வுகளை கவித்துவ லிபிகளாக மொழிபெயர்த்து முன் வைத்துவிட்டு அமைதியாக நிற்கிறார் கவிஞர். இவை தவிர சமூக கவிதைகள், பிரார்த்தனை, கடவுளோடு உரையாடல், ஆட்டோ பொயட்டரி வகையைச் சார்ந்த தான் கவிதை எழுதுவதைப் பற்றியான கவிதைகள் என்று சில கூறுகளில் இவர் கவிதைகள் வகைப்பட்டாலும் முதல் தொகுப்புக்கான கோட்டா எதையும் கோராமல் கம்பீரமாக நிற்பதுதான் கவிஞரின் கவித்துவத்தைச் சொல்கிறது.

'உம்' என்ற குழைதலிலும்
'ஆம்' என்ற அழுத்தத்திலும்
இடைப்பட்ட மௌனத்திலுமென
இற்றுப் போன இழைகளால்
நெய்யப்படுகிறது உறவுகள் 

புறங்கை போர்த்தும் விரல்களின்
அவஸ்தையான ஸ்பரிசம்
நடுக்கமுற வைக்கையில்

சிதிலத்தின் ஆரம்பம் தொடங்க
தூண்களின் ஆட்டத்தில்
அஸ்திவாரங்கள் பலமிழப்பது
அமளியற்று அரங்கேறுகிறது.

இதே உள்ளடக்கம் விக்ரமாதித்யனால் ஆண் குரலில் நீலகண்டம் என்ற தலைப்பில் அவனுக்குத் தெரியாதா/ ஆலகால விஷம்/ அவளேன் அலறிப்புடைத்து ஓடி வந்து/ அவன் சங்கைப் பிடித்தாள்/ கறுத்த கழுத்து/ காமத் தழும்பு.

இப்படி எழுதப்பட்ட போது பெண்ணடிமைத்தனமாக பார்க்கப்பட்டது. அதே விஷயம் பெண்குரலில் வெளிப்படுகையில் என்ன சொல்ல முடியும். இதை வேறு விதமாய் பார்க்க கவிஞரின் கீழ் வரும் கவிதை சொல்லித்தருகிறது.

 

தேர்வு

போகிற போக்கில்
பதில் சொல்ல முடியாத
பதிலொன்று இல்லாத கேள்விகளை
என் முன் விளையாட்டாய் இறைத்துச் செல்கிறாய்
குழந்தையைப் போல

திணறி அள்ளி ஆராய்ந்து சிந்தித்து உணர்ந்து
வார்த்தைகளைத் தேடும் முன் கடக்கிறாய்
அனுபவம் தந்து கடவுளைப் போல

வலிகள் நீ தந்தாலும்
தாண்டிடும் திறன் தந்தாய்

துன்பம் சலித்துத் தக்க வைத்துப்
புறவுலகிற்காய்ப் புன்னகை
சிந்தும் இதழ்கள் தந்தாய்

சிரிப்பு சென்றடையாத
என் கண்களை மறைக்க வேண்டிய அளவில்
பாவனைகள் கற்பித்தாய்

வருத்தங்கள் உன் மேல் இருந்தாலும்
வாரி வழங்கும் வள்ளலல்லவா

இன்பமும் துன்பமும் சரியான விகிதத்தில்
ஒன்றின் பிடியில் மற்றொன்றைத் தேட வைக்கும்
முயற்சியின் தூண்டுதலில் என
கோபம் சாத்தியமில்லை
கொண்டாலும் செல்வதெங்கே

அணு அணுவாய் ரசிக்கிறேன்
அனுதினமும் நிந்தனை செய்து

இரண்டையும் ஒன்றாய்ப் பார்த்து
மந்தகாசப் பார்வையொன்றை ஈன்று
இன்றைக்கான கேள்விகளைத் தந்து
இமை தாழ்த்திக் கையிலெடுத்து
நிமிரும் முன் நகர்கிறாய்

திகைத்தாலும் தொடர்கிறேன்
முடிவில்லாத் தேர்வெழுதி
உன் மதிப்பீட்டிற்கான காத்திருப்பை.

ஏனோ இந்த கவிதையை வாசித்ததும் வள்ளலாரின் இந்த கவிதை ஞாபகம் வந்தது எனக்கு.

எத்துணையும் பேதமுறாது எவ்வுயிரும்
தம்முயிற் போல் எண்ணி உள்ளே
ஒத்துரிமை யுடையவராய் உவக்கின்றாற்
யாவர் அவர் உளந்தான் சுத்த
சித்துருவாய் எம் பெருமான் நடம் புரியும்
இடம் என நான் தெரிந்தேன்

 ரத்னாவின் நல் கவிதைகள் நிறைந்த இந்த முதல் தொகுப்பை வரவேற்க காத்திருக்கும் துலாக்கோல் விமர்சர்களுக்கு கவிஞரின் இந்த கவிதை வரிகளை சொல்வது நல்லதெனப்படுகிறது எனக்கு.

உறுத்தும் முள்ளெடுத்து குணப்படுத்த இருக்கும் ஆண்டவரே ஒரே ஒரு  விண்ணப்பம்
ஏந்தும்  என்  கரங்களில்  தயவுசெய்து
உம்  மன்னிப்பை  இடாதிரும்.

மாணிக்க வாசகரின் சொற்பதம் கடந்த அப்பன்என்ற இந்த வரியை கவிஞர் வாசித்திருப்பாரா என்றெனக்கு தெரியவில்லை. ஆனால் ஒரு கவிதையில் இப்படி எழுதுகிறார்.

என் இறையே
திரும்பிப் பார்த்தலென்பதை
முழு நேரத் தொழிலாக்கிப்
பித்தாக்கும் நினைவுகளுக்கு
உனது பெயர்.

பக்தி இலக்கியத்துக்கும் நவீன கவிதைக்குமான நீள் கால இடைவெளியை இட்டு நிரப்ப தன்னாலான வரிகளை எப்படி இவரால் எழுத முடிந்தது என்பது போன்ற பல வியப்புகளை தன் முதல் தொகுப்பில் எப்படி சாத்தியமாக்கினார் ரத்னா என்று என்னால் வியக்கமால் இருக்க முடியவில்லை.

– ரவிசுப்பிரமணியன்


நூல் தகவல்:

நூல் : காலாதீதத்தின் சுழல்

பிரிவு:  கவிதைத் தொகுப்பு

ஆசிரியர் : ரத்னா வெங்கட்

வெளியீடு :  படைப்பு பதிப்பகம்

வெளியான ஆண்டு :   2020

விலை: ₹ 100

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *