தான் தெருவிற்கு வந்தாலும் மற்றவர் குடும்பம் சிறப்பாக இருக்க வேண்டும். அதற்காக எதையும் இழக்கலாம் என்கிற அரிய மனிதர் கோவிந்தன். அவருடைய தொழில் கள்ளுக்கடை வியாபாரம். இது குலத்தொழில்.

காந்திய கொள்கையின் ஈர்ப்பு காரணமாக,  சுதந்திரத்திற்கான நிகழ்வுகளுக்கு தனது வருமானத்தை மிகுதியாகவே நன்கொடை தருபவர்.

மூதாதையர்களுக்கு வள்ளலார் உடனான நேரேடி தொடர்பும் பக்தியும் இவரிடம் எட்டிப் பார்க்கும் தருவாயில் அதற்கு மதிப்பளித்து அசைவம் துறந்து சைவம் கொள்கிறார்.

முற்போக்கு எண்ணத்தின் காரணமாக மனைவிக்கும் மகளுக்கும் அவர்களது விருப்பதிற்கு இசைந்த சுதந்திரம்.

மனைவி அமைந்தால் இதுபோல் இருக்க வேண்டும் என்ற அளவிற்கு ஆண் வாசகனின் மனம் அலைவுறும் வண்ணம் குணம் கொண்ட அற்புத பெண்மனி  கோவிந்தனின் மனைவி. வாசகிகள் மனதில் கோவிந்தன் போன்ற கணவனை ஏற்கும்  அங்கீகரிப்பு குறைவாகவே இருக்கும். வாழ்தல் பிழைத்தலாகி விட்டதன் காலச் சூழல்.

அளவுக்கு மீறிய தானம், தர்மம், கட்டற்ற மகளின் மீதான பாசம் . ஆசை மகள்  வயதுக்குரிய மதிமயக்கத்தால் தனது தகுதியற்ற காதலனுடன் ஒடிப்போகிறாள்.

ஒரு நல்ல குடும்பம் சிதைய தொடங்குகிறது. ஏற்கனவே கொள்கையா தொழிலா என்ற போது கொள்கை முன்னின்றது.  செல்வமும் அதனால் வந்த சமூக உறவு, மரியாதைகளை பெருக வைத்த கள்ளுக்கடை தொழிலை அது துறக்க வைத்துவிட்டது.

சோற்றுக்கு திண்டாடி இருக்க இடமில்லாது தவிக்கும் போது  இறுதி ஞானமாய் “எத்தொழிலைச் செய்தாலும் ஏதவத்தைப் பட்டாலும் முத்தர் மனம் இருக்கும் மோனத்தே.”

பிரபஞ்சன்

“எதைச் செய்தால் தான் என்ன? அது தப்பு. இது முறையில்லனு சொல்லிக்கிட்டு வெறுமனே காலத்தைக் கழிச்சுட்டேன். நம்மை நாம் காப்பாத்திக்கிட  முடிஞ்சா, உலகத்தில் எது தப்பு.? எது சரி.? எல்லாம் ஒன்றுதான்.!”

கோவிந்தனின் ஆரம்ப கால கொள்கை, குணம், கம்பீரம் போன்ற ஈர்ப்புகளால் கவரப்பட்ட சிறுவர்கள் உத்ராவும், வேதமும்  அவர்கள் வளர்த்து ஆளானப் பின்பு அந்த தளர்ந்த நல்ல மனிதரையும் வீழ்ந்து விட்ட அவரது குடும்பத்தையும் தாங்கி பிடிக்கிறார்கள்.

துவக்கம் முதல் இறுதி வரை  வேதத்தின் சொல்வழியே கதை நகர்கிறது.

நாவல் சமீபத்தில் கடந்து போன ஒரு சமூக வரலாற்றை பேசுகிறது.

சுதந்திரத்திற்கான உச்சத்தில் தேசம் இருந்த போது புதுச்சேரியின் அரசியல் போக்கு, பிரெஞ்சு அதிகார அடக்கு முறை,  நகரத்தின் வளர்ச்சி , அப்போதைய மனிதர்களின் உளவியல் என சிற்றோடையாய் துவங்கி காட்டாற்று வெள்ளமாய் விரைவு கொள்கிறது.

ஆணின் அழிச்சாட்டியங்களில்  ஒன்றான பல தர திருமணம் என்பது தொழில் விரிபடுத்தலுக்கான யுக்தியாகவும்  ஆண்கள் பயன்படுத்திக் கொண்டது பற்றி பேசுகையில் பெண்களின் துயரங்கள் வழக்கமான உள்ளீடாக கதையில் வருவது வழக்கமே .. ஆனால் பிரபஞ்சன் வேறு கோணத்தில் பார்க்கிறார்.

“ஒரு மனுஷன் இப்படி அஞ்சு பொம்பளைகளுக்கு முன்னாடி, மாத்தி மாத்தி நிர்வாணமா எப்படி நிக்க முடிஞ்சது ? ஒரு அந்தரங்கம் இப்படியா திறந்தவெளியை மாறிடறது ? ஒரு மனுஷனுக்கு இது எவ்வளவு பெரிய வீழ்ச்சி…”

இந்த சாட்டையடி தான் பிரபஞ்சனின் முத்திரை.

1928-ம் ஆண்டு பாரதியாரின் கவிதைகள் தடை செய்யப்பட்ட போது பாரதியார் சார்பாக அதை மக்கள் மத்தியில் கொண்டு சென்று மீட்டெடுத்தவர்கள்  நாடகக் கலைஞர்கள் என்ற  வரலாற்று தடயத்தை பதிந்துள்ளார்.

சுதந்திர போராட்டங்களில் நாடகக் கலைஞர்களின் பங்களிப்பைப் பற்றி பேசும்போது  ஆண்களின் தீரத்துக்கு நிகராக ஒரு நடிகை பிறந்த குழந்தையுடன் ஜெயிலுக்கு சென்றாராம். அது அந்த காலம் . அது அந்த கால நடிகை ..என்று தான் உள்குரல் சொல்கிறது.

அரவிந்தர் மற்றும் ஆய் மண்டபம் மீதான கருத்துகளையும் முன்வைக்கிறார். அப்போதைய பெரும் அரசியல் தலைவர் குபேர் என்கிற பப்பாவின் அரசியல் உச்சத்தையும் வீழ்ச்சியும் சொல்கிறார்.

அரசு உயரதிகாரிகள் பற்றிய பிரபஞ்சனின்  கருத்துருவு காலத்தால் பின்னடையாத தரிசனம்..,

“அரசாங்க உத்தியோகஸ்தர்கள் நவீன மாணிக்கவாசகர்கள். நரியைப் பரியாக்க அவர்களால் முடியும். பரியை கரியாக்கவும் அவர்களால் முடியும். நாம் தடுக்கில் புகுந்தால் அவர்கள் கோலத்தில் புகுவார்கள்.”

பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைக் கல் -குறள்

(அதிகாரம்: தெரிந்து தெளிதல் )

இதில் உள்ள கருமம் என்பது செயல் மட்டுமல்ல, எண்ணமும் தான் ஒருவரது வாழ்வின் வளர்ச்சிக்கும் வீழ்ச்சிக்கும் காரணம்.

“யாராலும் குலைக்க முடியாத நிம்மதி, அலை ததும்பாத கடல் . மனசு சட்டைப்பையில் இருக்கிற கைக்குட்டை மாதிரி பாதுகாப்பா இருந்துடுச்சுன்னா அதன் பெயர் தான் சந்தோஷம்.”


நூல் தகவல்:

நூல் :  மகாநதி

பிரிவு:  நாவல்

ஆசிரியர் : பிரபஞ்சன்

வெளியீடு :  நற்றிணை பதிப்பகம்

வெளியான ஆண்டு :  –

விலை: ₹ 240