பிறைமதி எனக்கு முகநூல் மூலம் நண்பர் ஆனவர். அப்போது கவிதைகள் எழுதிக் கொண்டிருந்தார். நான் ஏதாவது நல்ல பதிவுகளை எழுதும் போது அதில் கருத்திடுவார். அப்போது எனக்குத் தெரியாது இவர் வரும் வருடங்களில் எனக்கு நெருக்கமான நண்பராக அடிக்கடி இலக்கியம் குறித்து விவாதிக்கும் நண்பர் ஆவார் என்பது. 2016 ஆண்டின் இறுதியில் இரண்டாம் பதிப்பாக வெளிவந்த எனது சிறுகதைத் தொகுப்பு “நகரத்திற்கு வெளியே” வாங்கிப் படித்துவிட்டு போனில் அந்த கதைகளைக் குறித்து நுட்பமாகப் பேசினார். நகரத்தின் மறுபக்கம் ஒன்றை உங்கள் கதைகள் மூலம் தெரிந்து கொள்ள முடிந்தது என்றார். புத்தகம் படித்து விட்டு இவ்வாறு பேசுபவர்கள் பலர் தங்களது கருத்துக்களை எழுத்தில் முன்வைக்க மாட்டார்கள். ஆனால் பிறைமதியோ என்னிடம் என்ன பேசினாரோ அதை முகநூலில் வெளிப்படையாக எழுதவும் செய்தார். அவரது எழுத்துக்கும் பேச்சுக்கும் அதிக வேறுபாடின்றி வாழும் நேர்மையான மனிதர் என்று அதன் மூலம் அறிந்து கொண்டேன். அப்போது அவரைப் பற்றிய இன்னொரு விஷயமும் தெரிய வந்தது. அவர் ஆசிரியர் மட்டுமல்ல நல்ல குரல்வளம் கொண்ட பாடகரும் கூட. இளையராஜா அவர்களின் பாடல்களை அவர் பாடினால் கேட்டுக்கொண்டே இருக்கலாம்.

இவ்வாறு இசையும், இலக்கியமும் எங்களை இணைத்தது. இசை, பாடல்கள் என்று பேசினால் இருவரும் விடிய விடியப் பேசும் அளவுக்கு நண்பர்களாக மாறினோம். அப்போது பார்த்து எனது இன்னொரு புத்தகமான “ஏ.ஆர்.ரஹ்மான் – நவீன இந்தியத் திரையிசையின் அடையாளம்” புத்தகம் வெளிவந்தது. பாடகரான பிறைமதி அந்த புத்தகம் படித்த ஒருவாரமும் ரஹ்மான் குறித்தும் அந்த புத்தகம் எழுதப்பட்டிருக்கும் விதம் குறித்தும் கொண்டாடித் தீர்த்தார். அதன் பிறகு நான் என்ன எழுதினாலும் அவரிடம் அனுப்பி கருத்துக்கள் கேட்பதை வழக்கமாக வைத்துக் கொண்டேன். அவரும் அவ்வாறு எனக்கு அனுப்பி கருத்துக்கள் கேட்பார். நிறைய விவாதங்கள் செய்வார். இருவருக்கும் பயனுடைய பொழுதுகள் அவை. இருவரும் எண்பதுகளில் மக்கள் வாழ்ந்த எளிமையான வாழ்க்கை குறித்தும், சாட்டிலைட் சேனல்களின் பெருக்கத்திற்குப் பிறகு மக்களின் வாழ்க்கை மாறியுள்ள விதம் குறித்தும் நிறையப் பேசியுள்ளோம். ஒருநாள் பிறைமதி தனது முதல் சிறுகதையை எனக்கு அனுப்பி வைத்து போனில் தகவல் சொன்னார். அதை உடனே படித்து விட்டு அவரிடம் போனில் பேசினேன். அதிலுள்ள குறை, நிறை இரண்டையுமே அந்த உரையாடலில் சொன்னேன். இதற்குப் பிறகு இரண்டு மாதங்களில் தொகுப்புக்கான சிறுகதைகள் அனைத்தையும் எழுதி முடித்து “பார்வேட்டை” என்ற தலைப்பில் முதல் சிறுகதைத் தொகுப்பு வருவதாக அறிவித்தார். அதற்கு முன் உள்ள மாதங்களில் அவர் சிறுகதைகளுக்கான நுட்பங்கள் குறித்தும் மட்டுமே என்னிடம் பேசிவந்தது நினைவுக்கு வந்தது. “பார்வேட்டை” வெளிவந்து இலக்கிய உலகில் கதையாளராக அவருக்குப் பரவலான கவனத்தை அளித்தது. அவரது நெருங்கிய நண்பர்களும் அதற்குத் துணை நின்றனர். அந்த தொகுப்பில் தஞ்சை டெல்டா விவசாயிகளின் பாடுகளை, பல கதைகளில் மிக யாதர்த்தமாக பதிவு செய்திருந்தார்.

பழைய தஞ்சை மாவட்ட கிராமிய வாழ்வை அப்படியே பெயர்த்து எடுத்து வந்து பிறை எழுதுவதற்குக் காரணம் அது அவர் வாழ்ந்த பூமி அவர் கண்முன் வாழ்ந்த மனிதர்களின் அசலான வாழ்க்கையாக இருந்தது. இதோ இப்போது அடுத்த வருடமே ‘’கானாந்தேசத்து கதைகள் ‘’ தொகுப்போடு நம்முடன் உரையாட வந்துள்ளார் பிறைமதி.

பிறைமதிக்கு எழுதித் தீராத கிராமிய வாழ்க்கை, விவசாய மனிதர்கள், விவசாயம் பொய்த்து வேறு தொழிலுக்குப் போனவர்கள், கணவனால் கைவிடப்பட்டு குழந்தைகளை வைத்துக் கொண்டு அல்லல்படும் தாய்மார்கள், ஏழ்மையான சூழலில் கஷ்டப்பட்டு மகள்களைப் படிக்க வைக்கும் பெற்றோர்களிடம் சொல்லிக் கொள்ளாமல் காதலனுடன் ஓடுபவர்கள் என்று ஏராளம் இருக்கிறது. அவர்கள் அனைவரும் கானாந்தேசத்து மனிதர்களாக இக்கதை தொகுப்பில் உயிருடன் நடமாடுகிறார்கள்.

இந்த தொகுப்பிலுள்ள கதைகளில் எனக்கு முதன்மையாகவும், முக்கியமானதாகவும் பட்டது ‘’நொண்டித்தாத்தா’’ என்னும் சிறுகதை. கதை விவரிக்கப்பட்டிருக்கும் விதமும், மொழியைப் பிறைமதி கையாண்டிருக்கும் விதமும் சிறப்பானது. ’’நொண்டித்தாத்தா’’ நெல் கதிரறுப்புக்கு அனைவரையும் கூக்குரல் எழுப்பி அதிகாலையில் கூப்பிடும் படி கதையை ஆரம்பிக்கும் இடமே விவசாய கூலிகளின் முழிப்போடு ஆரம்பிக்கிறது. மிக நுண்ணிய விவரணைகள் இந்த கதை முழுவதும் விரவிக் கிடக்கிறது.

நெற்கதிர்களை அறுக்கும் போது நடக்கும் விவரணைகள், அவர்கள் நீராகாரம் அருந்திக் கொண்டு வேலை பார்க்கும் விதம், நீராகாரம் அருந்தப் பச்சை மிளகாய் மற்றும் வெங்காயம் கடித்துக் கொள்வது வரை அனைத்தையும் நாம் இழந்து போன விவசாய வாழ்க்கையை மிக அழகாக விவரிக்கிறார். நெற்கதிர்களைக் களத்துமேட்டிற்குக் கொண்டு சென்று வைக்கோல்போருடன் இணைத்து அடித்துப் பிரிக்கும் விதம் குறித்து பிறைமதி எழுதியிருக்கும் இடம் இன்றைய தலைமுறையினர் அறியாதது. அதை அவரை போல விவசாயிகளின் வாழ்க்கையை வாழ்ந்தவர்களே இவ்வளவு உயிர்ப்புடன் எழுத முடியும். எந்த கதிர்களை அறுத்து கூலி பெற்று, சாக்குப் பையில் இலவசமாக நெற்களைப் பெற்று, அவற்றை அரிசியாக அவித்து உண்டு வாழ்ந்து வந்தார்களோ, அவர்களின் வயிற்றில் அடிக்க அந்த கிராமத்தினுள் நுழைகிறது கதிர் அறுக்கும் டிராக்டர் மெஷின். ஆனாலும் அந்த மக்கள் நமது ஆண்டை நல்லவர் பக்கத்துக் கிராமத்தில் வேண்டுமானாலும் அப்படிச் செய்வார்களே தவிர நமது முதலாளி செய்யமாட்டார் என்று நம்புகிறார்கள். நாம் சில புதிய அரசியல்வாதிகளை வந்தால் நல்லது செய்வார் என்று கண்மூடித்தனமான நம்புகிறதுக்கு இணையான இடம் இந்த கதையில் நிகழ்கிறது. ஆனால் முதலாளிகளும், அரசியல்வாதிகளும் அதிகாரம் கைக்கு வந்த பின்னர் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்பதை நாம் பல சம்பவங்கள் மூலம் அனுபவித்து வந்துள்ளதை ’’நொண்டித்தாத்தா’’ கதையும் உணர்த்துகிறது. காவல்துறை எவ்வாறு அதிகார வர்க்கத்திற்குத் துணை போகிறது என்பதையும் இந்த கதை தோலுரித்துக் காட்டுகிறது. இப்படி பலவிதங்களில் தங்களது அடிப்படைத் தேவைகளை, வேலை வாய்ப்பை இழந்து வாழும் மக்களின் குரலை இந்த கதை பிரதிபலிக்கிறது. நொண்டித்தாத்தா போல ஒருவரை எல்லா ஊர்களிலும் ஒரு கதாபாத்திரம் இருக்கும். அவர்களிடம் கேட்டால் இழந்து போன விவசாய நிலத்தை, கைவிட்டுப் போன இயற்கையான வாழ்க்கையை, வேறு தொழில் தெரியாமல் அவர்கள் நகரங்களில் கூலியாக வசிக்க நேர்ந்த கொடுமையைக் கதைகளாக விவரிப்பார்கள். அப்படி ஒருவரைச் சமீபத்தில் மதுரையில் சந்தித்தேன். சோனை முத்து என்ற பெயர் கொண்ட அந்த முதியவருக்கு இப்போது 70 வயது அவருக்கு விவசாய நிலம் சில ஏக்கர்கள் இருந்திருக்கிறது. அது ஏமாற்றிப் பிடுங்கப்பட்டு விவசாய கூலியாகப் பலகாலம் உழைத்து தனது காலத்தைக் கழித்திருக்கிறார். அந்த வேலையும் இப்போது இல்லாமல் போக தற்போது மதுபானக்கடை ஒன்றில் சர்வராக வேலை செய்து எஞ்சியுள்ள காலத்தைக் கழித்து வருகிறார். இப்படிப் பல அமுக்கப்பட்ட, மறக்கப்பட்ட விவசாய கூலிகள் பலரது குரல்களை இந்த கதையில் உயிரோட்டமாகச் சித்தரிக்கச் செய்ததன் மூலம் முக்கியமான கதையாக மாற்றியுள்ளார் பிறைமதி.

முக்கியமாக இவரது பல கதைகள் விளிம்பு நிலை மக்களின் வாழ்க்கையைச் சித்தரிக்கின்றன. அந்த வகையில் ‘’மல்லிகா சூப்புக்கடை’’, ‘’ஆட்டக்காரி’’ இரண்டு கதைகளும் என்னை மிகவும் கவர்ந்தன. மற்ற வாசகர்களுக்கு வேறு கதைகள் பிடிக்கக் கூடும். ரசனை என்பது ஒவ்வொருவருக்கும் வேறுபட்டது தானே. ‘’மல்லிகா சூப்புக்கடை’’,கதையில் கணவனும் மனைவியும் காய்கறிகள் தள்ளுவண்டியில் விற்று தங்களது வாழ்க்கையை ஆரம்பிக்கிறார்கள். கணவன் வீதி வீதியாகச் சென்று காய்கறி விற்பது பொறுக்காமல் மல்லிகா சூப்புக்கடை ஒன்றைத் துவங்குவதன் மூலம் ஒரே இடத்திலிருந்து வியாபாரம் செய்யலாம் என்ற யோசனையைச் சொல்லி அவளே சூப் செய்து கொடுக்கிறாள். அவளது கைப்பக்குவத்தால் விரைவில் அவர்களது கடைக்கு வாடிக்கையாளர்கள் பெருகுகிறார்கள். இப்படி உழைத்துக் களைத்து பொருள் சேர்த்து ஒரே மகளைச் செல்லமாக வளர்க்கிறார்கள். எதிர்பாராமல் அவர்கள் வாழ்க்கையில் நடக்கும் சம்பவம் ஒன்றால் எவ்வாறு பாதிக்கப்படுகிறார்கள் என்பது தான் கதை. இந்த கதையிலும் பிறைமதியின் விவரணைகளும், சித்தரிப்புகளும் சிறப்பாக இருக்கின்றன. ‘’ஆட்டக்காரி’’ கதையிலும் கணவன் இளவயதில் மரணிக்க இரண்டு குழந்தைகளை வளர்க்கப் பொருளாதார தேவைகளுக்கு ரிக்கார்டு டான்ஸ் ஆடப்போகும் பெண்ணைப் பற்றிய கதை. அதனால் மாறும் குடும்பச் சூழல், கவர்ச்சி உடையில் அவள் இருக்கும் போது ஆண்களால் அவளுக்கு ஏற்படும் தொல்லைகள், அவற்றை அவள் எதிர்கொள்ளும் முறை, அவளது உறவினர்களால் ஒதுக்கப்படுவது என்று மிக யதார்த்தமான முறையில் இந்த கதையை எழுதியுள்ளார் பிறைமதி.

இவரது கதைகளில் பெண்களும், குழந்தைகளும் சிறப்பாகச் சித்தரிக்கப்படுகிறார்கள். எதையும் அதிகபட்சம் பெருக்கிக் காட்டாமல் வாழ்க்கை இப்படித்தான் அதன் போக்கிலேயே யதார்த்தமான மனிதர்களை உலவவிட்டிருக்கும் பிறைமதியை யதார்த்த கதைசொல்லி என்று தயக்கமில்லாமல் சொல்லலாம். சில கதைகள் குறுநாவல்களுக்கு உண்டான கருப்பொருட்களை உடையவை. ஒரு மனிதனின் முழு வாழ்க்கையையும் சில சிறுகதைகளில் சொல்ல நினைக்கிறார். சிறுகதை என்பது ஒருநாள், ஒரு மாதம், ஒரு வருடம் இந்த காலத்துக்குள் நடக்கும் அரிதான கணங்களைப் பதிவு செய்வதே. முழு வாழ்க்கையை அள்ளுவது நாவல்களின் வேலை. வழக்கத்துக்கு அதிகமாக நீளாமல் சிறுகதையைச் சரியான இடத்தில் முடிப்பதும் ஒரு நல்ல சிறுகதையாளனின் பணியாகும். இந்த விஷயங்களைப் பிறைமதி தனது அடுத்த தொகுப்பில் கவனத்துக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். ‘’கானாந்தேசத்து கதைகள் ‘’ கதைகள் தொகுப்புக்கும், அவர் சொந்த பதிப்பகமான பிறை பதிப்பகத்துக்கும் எனது வாழ்த்துக்கள்.

விஜய் மகேந்திரன்

நூல் தகவல்:
நூல் : கானாந்தேசத்து கதைகள்
பிரிவு : சிறுகதைகள்
ஆசிரியர்: பிறைமதி
வெளியீடு: பிறை பதிப்பக்ம்
வெளியான ஆண்டு :  ஜனவரி 2020 (முதற் பதிப்பு)
பக்கங்கள் : 144
விலை : 150

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *