நூல் விமர்சனம்புனைவு

சூல்


உருளைக்குடி – தலபுராணம்

 ‘சூல்’ நூலை ஒரு நாவல் என்று சொல்லுவது, நவீன இலக்கிய வடிவத்தில் அதை அடையாளப்படுத்தும் ஒரு முயற்சிதான். ஒரு பெயர் சூட்டல்தான். ஒரே பெயரைக் கொண்ட பல மனிதர்கள் பலவேறு குணாதிசயங்களைக் கொண்டிருப்பது போன்றதே அது.

நாவலின் தன்மைகள் சூல் கதையில் இருக்கிறதா? இருக்கக்கூடும். ஆனால் அதை நாவல் என்று சொன்னால் அதன் பரப்பு, நிலவெளி, கதைசொல்லும் முறைகள் அனைத்தையும் அது சொல்லிவிட்டதாகாது. சூல் நாட்டார்கதைகளின் களஞ்சியமாக இருக்கிறது. அவை கதைக்குள்ளேயே யதார்த்தமான கதைசொல்லலில் இருந்து விலகி ஒன்றுக்குள் ஒன்றாக ஊடுபாவாக நெய்யப்பட்டிருக்கின்றன. தொன்மங்கள் சில பதிவாகியிருக்கின்றன. புதிய தொன்மங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. கிளாசிக் புராணக் கதைகளில் இருந்து ஒட்டியும் விலகியும் புதிய புராணக்கதைகள் பதிவாகியிருக்கின்றன. உதாரணமாக மச்சவல்லான் கதை. (அனுமனுக்கும் மச்சகன்னிக்கும் பிறந்து, யாரென்று அறியாமல் தந்தையுடன் போரிட்டு, பிறகு தன்னைத் தெரிந்து கொண்டபின்னும், தாயும் தந்தையும் சேரமுடியாது என்ற நிலைமையை அறிந்து அனுமனும், மகனும் பிரிந்து விடுகிறார்கள். காவிய மரபிலிருந்து கிளர்ந்த உள்ளூர்ப் புனைவான கதை, பெரும் காவிய மரபிலிருந்து தனித்தே உலவுகிறது).

தமிழ்க்காவிய மரபை ஒட்டிய ஊர்வர்ணிப்புப் படலம் வருகிறது. – அய்யர் பண்டாரத்திற்குச் சொன்ன பரிகாரப்படலம், அய்யர் பண்டாரத்திற்குச் சொல்லி, பண்டாரம் கொப்புளாயிக்குச் சொன்ன பாம்புக்குளம் உருவான பரிகாரப் படலக் கதை – என்று தலைப்புக்களில், டான் கி ஹோடெ (Don Quixote, by Cervantis) என்ற உலகத்தின் முதல் ஸ்பானிய நாவலின் குட்டித்தலைப்புகள் போல கதைகள் வருகின்றன. வாசகனின் உணர்ச்சிகளை முன்பின் சரியாக வழிநடத்தாமல் திடீரென்று சினந்து, ஒரு பெரிய கண்மாயை ஒரு தனிமனிதன் உடைத்துப் பேரழிவை உருவாக்கும் காட்சியும் உண்டு. காலங் குறிப்பிடாத காலத்தில் இருந்து, கட்டபொம்மன் உதவி கேட்கவரும் காலக்கட்டமும் உண்டு.

இப்படிப்பட்ட பல தலைகளைக் கொண்ட, பல விதமான கூறுகளைக் கொண்ட ஒரு படைப்பை ஒரு நாவல் என்று சுருக்கிவிட முடியாதென்றே தோன்றுகிறது. சுருக்கமாகச் சொன்னால், காலனியாதிக்கக் காலத்தின் விளைபொருளான நாவல் என்னும் ஒரு ஒழுங்கான வடிவமைதியான .. பிறப்பு முதல் இறப்பு வரை சொல்லும் கதைமுறை முழுவதுமாக சிதைந்து, வாய்மொழிக் கதைகளாக, அதற்குள் ஒன்றுக்குள் ஒன்றாகப் புதைந்த நாட்டார் தொன்மங்களின் கதைகளின் ஊடே யதார்த்தமாகப் பின்னப்பட்டிருக்கும் கதைகளின் கதை இது. இதில் காவிய மரபில் வரும் இயற்கை வர்ணனையும் உண்டு.

இந்தப் புதிய யதார்த்தம், தொன்மங்களையும் புதிய புராணங்களையும் வரைகிறது. அது சிறுதெய்வங்களால் அவர்களின் சாமியாடிகளால் உருவாக்கப்படுகிறது. அவர்கள் சொன்னதை மனிதர்கள் நிறைவேற்றுகிறார்கள். குற்றங்கள் சட்டங்களால் அல்ல, குற்றத்திற்குத் தெய்வங்கள் கொடுத்த தண்டனைகளால், அவற்றிலிருந்து விடுதலை பெற குறிசொல்லிகள்/ஜோஸ்யர்கள் வழியாக கட்டமைக்கப்படுகின்றன. அவற்றிற்குப் பரிகாரமாக சமூகத்திற்கு உபயோகமான பணிகளே தரப்படுகின்றன. அதாவது நவீன உலகில் நடப்பதுபோல் சட்டத்தின் பணி உபயோகம் இல்லாத சிறையும் வதையும் அல்ல. குற்றத்திலிருந்து மீண்டெழுதல் முதன்மையாகச் செயல்படுகிறது. இது ஒரு பழைய யதார்த்தமாக இருக்கலாம். இன்று அது ஒரு நிகழ முடியாத கனவு. இவ்வகையில் ஒரு கனவுலகையும் இந்த நாவல் படைக்கிறது.

நாவலின் தன்மைகள் இருந்தாலும் நாவலின் நவீனத்தன்மை கொண்டு மட்டுமே சூல் நாவலின் மிகையதார்த்தங்களை, நாட்டார்கதைகளின் புனைவுலகை சிறைப்பிடிக்க முடியாதென்றே தோன்றுகிறது.

கண்மாய்தான் சூல் கொண்டதெனில் அதில் செடிகொடிகளும், மீன்களும் மட்டுமல்ல, மனிதர்களும், வாழ்வும், அதன் பழைய புதிய விழுமியங்களும் அதிலிருந்து பிறக்கின்றன.

”மஹாராஜா தொட்டுக் கொடுத்த மண்வெட்டியைத் தரையில் வைத்துவிடாத” அளவுக்கு பழைய விழுமியங்கள் கொண்ட ஊரில், சூல் கதையின் கடைசிப்பகுதியில், அஞ்ஞான் என்ற மந்திரவாதி, அரண்மனையில், மஹாராஜாவிடம் பெருஞ்சினத்தில் வசைபாடுகிறான், சாபம் இடுகிறான் “என்னைக் கொல்வதன் மூலம் கட்டுப்படுத்த முடியாத ஆவிகளின் அட்டகாசங்களையும் சேட்டைகளையும் நீ அனுபவிக்க வேண்டிவரும்……அதிகாரத்தை விரட்ட ஆங்காங்கே சண்டையிடும் … உன் கோட்டை நிர்மூலமாக்கப்படும்….தலைமுறை தலைமுறையாக உன்போன்றவர்களிடம் இருந்த அதிகாரம் இனி பரவலாக்கப்பட்டு, ஆவிகளைப் போல் எல்லா மக்களுக்கும் பகிர்ந்தளிக்கப்படும்… இதே போல் உன்னையும் உன்னைப்போல் கோட்டைக்குள் அமர்ந்து கொண்டு அதிகாரம் செய்யும் ஆயிரமாயிரம் பேய்களை விரட்ட ‘அரையாடை’ அணிந்த இருளப்பர் வந்துவிட்டார். அவரின் கைத்தடியின் முன்னால் உன்னுடைய துப்பாக்கியும் பீரங்கியும் சரணடையும்..

” இதில் பழைய வார்த்தைகளுக்குப் புதிய பொருள்கள், பழைய சாமிகளின் பெயர்களில் புதிய தலைவர்கள், என்று ஒரு புதிய புராணம் அரங்கேறுகிறது. ஆவிகள் மக்களாக, மன்னர்களின் அநீதிகளைக் கேள்வி கேட்பவர்களாக மட்டுமல்ல, அவர்களுக்குத் தண்டனை கொடுப்பவர்களாக மாறிவிடுகிறார்கள். இருளப்பசாமிதான் காந்தியாகிறார். நிலப்பிரபுத்துவம் மக்களாட்சியாக மாறும் விந்தையை மந்திரவாதி முன்மொழிகிறான். இது புதிய புராணத்தின் காட்சி.

மஹாராஜா மக்களுக்குத் தீமை செய்ததாக, அநியாயமாக வரி போட்டதாக, மற்ற வகையில் தொந்தரவு செய்தததாக சூல் நாவலின் எங்குமே எழுதப்படவில்லை. குஞ்ஞான் என்ற தனிமனிதனை வதைக்கும் போது அவன் ஏன் சமூகம் குறித்த கேள்விகளை, அடக்குமுறை அதிகாரத் துஷ்பிரயோகம் பற்றிய கேள்விகளை எழுப்புகிறான்? நாவலின் இந்த மர்மம் சொல்லப்படவில்லை. வாசகன் என்ற வகையில் என்னால் ஊகிக்க முடிந்ததெல்லாம், கதைநெடுகிலும் சொல்லமுடியாத/எழுதமுடியாத மறைத்துவைக்கப்பட்ட ஓரிரு வார்த்தைகளாகவே சிந்துகிற துயரங்களின் வெடிப்பாக இது இருக்கக் கூடும். அரசியல், பின்புலம் இல்லாமல் போனதற்கு இன்னொரு காரணத்தையும் நான் கற்பித்துக் கொள்ள முயற்சி செய்கிறேன். முகலாய ஆட்சியோ, விஜயநகர ஆட்சியோ ஆங்கிலேயேன் ஆட்சியோ, உருளைக்குடி மக்களுக்கு உடனடி ராஜா எட்டையாபுரம் ராஜாதான். யார் ஆண்டால்தான் என்ன பயன்? என்ற விலகல் ஒரு காரணமாக இருக்கலாம். கதை நெடுகிலும் ராஜா வசதிகள் செய்துகொடுக்கிறவறாகவே தொனிக்கிறார். வதைகள் செய்கிறவராக அல்ல. கதையில் யதார்த்தமான நடையில் சொல்லப்படும் பெரும்பகுதி அரசியல் அற்ற அந்தரத்தில் தொங்குவதுபோல் தோன்றுகிறது.

காவிய மரபில் கிடைக்காத பல கதைகளை சூல் கொண்டிருக்கிறது. பார்வதியின் மார்பை பழமென்று காகம் கொத்திவிடுகிறது. அதன் விளைவாக, அதற்கு நேர்பார்வை இல்லாமல் போகிறது. ஒளிச்சுவைச்சுத் திங்க முடிவதில்லை. நினைச்ச இடத்தில் இணைசேர முடிவதில்லை. இன்னொரு வம்சத்தை (குயிலினத்தை) காப்பாற்ற வேண்டியதாகிறது.

சூல் நாவலில் அறம் பல விதங்களில் கட்டமைக்கப்படுகிறது. உருளைகுடியில் தற்கொலை செய்து கொண்டவர்கள், அங்கிருக்கும் மனிதர்களின் மேல் வருகிறார்கள். சினம் அடங்க சிலைவைக்கச் சொல்கிறார்கள். மாமாவைத் திருமணம் செய்ய விரும்பிய செவனி தற்கொலை செய்து கொள்கிறாள். அவள் சாமியாக வரும்போது மாமாவைத் துன்புறுத்துவதில்லை. ஆனால் மொட்டையனைப் பிடித்துக் கொள்கிறாள். மறந்தும் கூட மாமாவுக்குத் தண்டனை தருவதில்லை. அது அவளது அறம்.

ஆனால் ஆத்தூர் சென்று, நாடாரிடம் பொய்சொல்லி வெற்றிலையைச் சுவையானதாக மாற்றும் கலையைக் கற்றுவந்த மஹாலிங்கம் பிள்ளை, தான் தோண்டி வைத்த கிணற்றில் அடிபட்டு விழுந்து இறந்து போகிறார். பொய்சொல்லி வித்தை கற்றதற்கான தண்டனை போலத் தோன்றுகிறதோ?

செவனியைக் கர்ப்பவதியாக்கிவிட்டு, பொறுப்பேற்க மறுக்கும் கருப்பன். ஊர்க்கூட்டத்தில் அவன் நடத்தையைப் பார்த்துவிட்டு, என்மகளை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று நங்கிரியான் என்ற தந்தை சொல்லுவது இன்னொரு அறம். முழுச்சூலியாக, தன் வயிற்றைக் குத்திக் கிழித்துக் குழந்தையை எடுத்து வெளியே போட்டுவிட்டுச் செவனி கருப்பனையும் கழுத்தறுத்துக் கொன்றுவிட்டுத் தற்கொலை செய்து கொள்வது, ஒரு பயங்கரக் காட்சியாக மனதில் நின்றுவிடுகிறது. அது கனவா அல்லது நனவா என்று வாசகன் மனம் தடுமாறும் வகையில் எழுதப்பட்டிருக்கிறது.

கருப்பன் என்ற நீர்ப்பாய்ச்சி, அடைத்துவிட்ட கண்மாய் மடையைத் திறந்துவிட தன் உயிரைத் தியாகம் செய்கிறான். ‘உசுரக் கொடுத்து ஊர்ப்பசிய வெரட்டிட்டான். இல்லைன்ன என்ன செய்ய முடியும் தண்ணிமுழுவதும் வத்தின பிறவுதான் மராமத்துப் பார்க்க முடியும்’. வழிவழி வரும் பொறுப்புகளில், பதவிகளில் இப்படி விழுமியங்கள் இருக்கும். ஆனால் சம்பளம் வாங்கும் அரசு அலுவலர்களில் காண முடியாத அறம் இது. அவனுக்குச் சிலைவைத்து வழிபடுகிறார்கள்.

பன்னிமாடன் – புலமாடன் சண்டையில், பன்னிமாடன் திட்டமிட்டுப் புலமாடன் மகனைப் பாம்புகடிக்க வைத்துவிடுகிறான். யாருக்கும் தெரியாதென்று அவன் நினைத்துக் கொண்டிருக்க, அவனுடைய பேரன் பிறக்கும் போது, அவன் தோலெல்லாம் பாம்புச் செதில்கள் போல் உருவாகிறது. உண்மையோ பொய்யோ இதன் அறம் இன்னொரு அறத்துக்கு வழிவகுக்கிறது. பன்னிமாடன் ஐயரிடம் பரிகாரம் கேட்க, அவர் குளம் வெட்டு, மரங்கள் நடு என்று சொல்லுகிறார். அவன் தனியாளாய் வெட்டிய குளம் பாம்புக்குளம் என்றழைக்கப்படுகிறது.

சித்தாண்டி-இருளப்பன் தகராறில், ஊர்க்குளத்தை பொறாமையில் சித்தாண்டி ஊர்க்குளத்தை தனியனாகவே உடைத்து வெள்ளத்தை ஏற்படுத்துகிறான். அவ்வளவு பெரிய கரையை, ஒற்றையாளாக, அதுவும் இரவின் ஒருபகுதியில் சித்தாண்டி உடைத்துவிடுவது மிகையாகவே தெரிகிறது. சினிமாத்தனமாகவும் தெரிகிறது. அந்த நிகழ்வுக்குத் தேவையான சினம், சினத்துக்குத் தேவையான உணர்ச்சி, அந்த உணர்ச்சிக்குத் தேவையான நியாயம், ஒரு பேரழிவின் சித்திரம் சரியாகச் சொல்லப்படவில்லை என்றே எனக்குத் தோன்றுகிறது. சித்தாண்டியின் மனைவிக்குத் தெரிந்த்தும் அவள் அறச்சீற்றத்தில் தாய்வீடு போய்விடுகிறாள். யாரிடமும் காரணம் சொல்லவில்லை. அவனுடன் சேர்ந்து வாழ விரும்பவில்லை.

பின்பு வேறு வழியின்றி இரட்டைக் குழந்தைகளுடன் அவனுடன் வாழ வருகிறாள். பின்னர் தெரிகிறது. அவளுக்கும் பிறந்த குழந்தைகள் இரண்டும் ஊமைகள். மீண்டும் பரிகாரம். வழக்கம் போல ஐயர் சொல்கிறார்… மரங்களை நடு.. பறவைகள் வாழ இடங்கொடு.. வசதி செய்து கொடு. அவன் எதிர்காலத்தில் நம்பிக்கையுடன் மரங்களை நடுகிறான், பறவைகள் வருகின்றன. முட்டைகள் இடுகின்றன, குஞ்சுபொறிக்கின்றன, அவற்றின் கீச் கீச் ஒலியில் தனக்குப் பிறக்கப் போகும் குழந்தைகளின் பேச்சொலியைக் கேட்கிறான்.

இன்னொரு கேள்வியும் எனக்கு எழுந்தது. ஜாதியத்தின், மோசமான விளைவுகளே இல்லாத ஒரு புனித ஊராக உருளைக்குடி இருக்கிறது. அங்கு எல்லோருக்கும் நிலம் இருப்பது போலவே தோன்றுகிறது. பிரச்சனைகள் இல்லையா? அல்லது அதுபற்றிய விழிப்புணர்வு மக்களுக்கு இல்லையா? என்று கேட்கத் தோன்றுகிறது. ஒரு முன்னுதாரணமான ஊர்.

‘கீழ்நாட்டு ஐயர்’ முக்காலமும் உணர்ந்த ஞானியாகவே வருகிறார். யார் அவரிடம் போனாலும் அவர்கள் செய்த தவறு அவருக்குத் தன்னாலேயே தெரிந்து விடுகிறது. அவருடைய ஜோஸ்யம் ஒருபோதும் தப்பியதில்லை. ஆனால் அவரைப் பற்றிய நேரடி வர்ணனை இல்லை. இன்னொன்றையும் சொல்ல வேண்டும், அவர் பாவம் பண்ணிவிட்டாய் என்று சொல்லுகிறாரே தவிர, சாபம் விடுவதில்லை. பாவத்திலிருந்து விடுதலை பெற, பரிகாரம் சொல்லி, குற்றத்திலிருந்து  விடுவித்து சமூகக் காரியங்களில் ஈடுபடவைக்கிறார். இந்த அளவில், சட்டம் செய்ய முடியாததை அறம் செய்துவிடுகிறது. இது இந்திய பீனல் கோட் புகமுடியாத இடம், ஐ.பி.சி புரிந்து கொள்ள முடியாத இடமும் கூட உருளைக்குடியும் தான்.

ஆனால் குஞ்ஞான் என்ற கேரள மந்திரவாதி வரும்போது, ஆவிகள் சாதாரண மக்களின் சார்பாக, அல்லது சாதாரண மக்களாகவே வருகின்றன. குஞ்ஞான் பிடித்துவைத்திருந்த ஆவி அரண்மனையில் புகுந்துவிடுகிறது. அவனைப் பிடித்துச் சித்திரவதை செய்து கேட்கிறார்கள் ‘அரண்மனையில் இத்தனை தெய்வங்கள் இருந்தும் ஆவி அரண்மனைக்குள் வந்தது எப்படி?” அவன் பதில் சொல்கிறான் “இங்கிருக்கும் அத்தனை தெய்வங்களும் தேக சுகத்தையும் தேவையான செல்வத்தையும் அந்தஸ்தையும், பதவியையும் அதிகாரத்தையும் கொடுப்பவைகளே ஒழிய, ஆவிகளை விரட்டும் சக்தியற்றவை’. அதாவது, நிலவுடமைக் காலத்தின் அதிகார மையங்கள். மக்களாட்சியில், மக்களின் முன்னால் இவையனைத்திற்கும் சக்தியில்லை.

இன்னும் தொடர்கிறான் ‘அதிகாரம் கோலொச்சி ஆயிரம் ஆயிரம் பாவங்கள் அரங்கேறிய இடம் இதுதான் என்று மக்களிடம் முள்மரங்கள் பேசும். ஆசிரியர் அல்லது ஆவிகள் அல்லது குஞ்ஞான் பேசுவதில்லை, முள்மரங்கள் பேசும். ஏன் அதிகாரத்திற்கு அஞ்சி ஒளிந்து அலைந்து திரிந்து மடிந்து போனவர்களின் சமாதிகள் கோவிலைப் போல் மக்கள் வழிபடும் இடங்களாக மாறிப் போயிருக்கும்’ மந்திரவாதிக்கு அப்படிப்பட்ட ஆவிகள் கனவில் வருகின்றன. அவர்களின் பெயரை குஞ்ஞான் பட்டியலிடுகிறான் ‘தவசித்தேவர், கீரைபுசித்தான், சாடல்குடி நல்லப்ப சுவாமிகள், நாகலாபுரம் வெள்ளைச்சாமித் தேவர், கட்டபொம்மன், ஊமைத்துரை, பாஸ்கரதாஸ், சுப்பிரமணி’ இவர்களுக்கு அதிகாரத்தல் இழைக்கப்பட்ட அநீதிகள் என்ன என்ற தகவல்கள் சூல் கதையில் இல்லை. இதுதான் சூல் நாவலில் மந்திரவாதியை வைத்து நிகழ்த்தப்படும் ரசவாதம். சொல்லாமல் விடப்பட்ட அநீதிகளின் கதை. நாவலாசிரியர் அவற்றைச் சொல்ல இந்த மக்களாட்சிக் காலத்தில் என்ன தடை என்று புரியவில்லை. அதற்கான தகவல்களை வாசகன் வேறெங்காவது படித்துத் தெரிந்துகொள்ளவேண்டும்.

குஞ்ஞானின் அறிவுரைப்படி இருளப்ப சாமியைத் தேடுகிறார்கள். அது சக்கலியக்குடியில் குடிகொண்டிருக்கிறது. திருஉருவத்தைப் பெயர்த்தெடுக்க முயற்சி செய்கிறார்கள். ஏனெனில் அதிகாரத்திற்கு கொள்ளை அடித்துத்தான் பழக்கம். அது முடிவதில்லை. பிடிமண் எடுத்துப் போகலாம் என்கின்றனர். ஆனால் பிடிமண்ணுடன் இருளப்ப சாமியின் சக்தியும் போய்விடும் என்று மறுக்கின்றனர் மக்கள். அதற்குப் பிறகு சாமிக்கும் மக்களுக்கும் தொடர்பிருக்காது. அதிகாரம் மக்களுடைய சாமியை தனக்காக வைத்துக்கொண்டு தனிமைப்படுத்திவிடும் ’என்னைக்குமே அங்கே நமக்கு இடம் கிடையாது. ஏம்னா எப்பவுமே அதிகாரம் நம்மளை கைகட்டிச் சேவகம் பண்ற அடிமையாய்த்தான் வைத்திருக்கும். சமதையாக இருக்கச் சம்மதிக்காது” கடைசியில் ஒரு கோரிக்கை வைக்கிறார்கள். எங்களை உள்ளே அனுமதிக்க வேண்டும். வருஷத்துக்கொருதரம் மஹாசிவராத்திரிக்குக் குடகொடுப்பம். அப்பக் காடுதாங்கி செஞ்சு போடுவம். அந்தக் காடுதாங்கிதான் வருஷம் பூராவும் சாமி வேட்டையாட கால்ல முள்தைக்காம காப்பாத்திறதா எங்க நம்பிக்கை. அன்னைக்கு அரண்மனைவாசல் எங்களுக்கும் தொறக்கணும். நாங்க கொண்டாற காடுதாங்கிய மன்னர் வாங்கி இருளப்ப சாமி சன்னதியில் தொங்க விடணும்’ அது நிறைவேறுகிறது.

குஞ்ஞான் நவீனக் கருத்துக்களைப் பிரதிபலிக்கும் உருவகம். அதிகார சுகங்களை வழங்கும் பழைய தெய்வங்களை மக்கள் என்ற ஆவிகள் விரட்டியடிக்கின்றன. ஆட்சிசெய்ய உரிமைதரும் அரண்மனைக்குள் வர உரிமைகொண்டாடுகின்றன. முதலில் உள்ளே போனது இருளப்ப சாமி என்ற, காந்தி. இப்படி சூல் நாவலை கலைடாஸ்கோப் போல வெவ்வேறு கோணங்களில் வாசிக்க முடியும்.

ஊரின் காட்சிகளும், அதன் வர்ணனைகளும் சூல் கதையின் மிகச் சிறப்பாக இடம்பெறுகின்றன. சில காட்சிகளை எடுத்துக் கொள்ளலாம்:;

“கண்மாயில் கரை திறந்துவிட்டால், இனி சுற்றியுள்ள ஊர்களின் வண்டிமாடுகள் நிறந்துவிடும். கண்மாயின் கரம்பை மண்ணை ஏற்றிக் கொண்டு வண்டிகள் கட்டெறும்பு வரிசை போல் வந்துகொண்டும், போய்க்கொண்டும் இருக்கும். நீர்ப்பாய்ச்சிக்கு ஓயாத வேலை. மண்ணை காடுகளில் வயக்காடுகளில் தோட்டங்களில் கொண்டுபோய்த்தட்டிவிட்டு வெற்று வண்டியாய் வரும் வண்டிகள் இரண்டையும் ஒழுங்குபடுத்திவடுவது நீர்ப்பாய்ச்சியின் வேலை’

“இந்தப் பனையோலை எம்புட்டு வழுவழுப்பா இருக்கு. அதுல தொங்குது தூக்கணாங்குருவிக் கூடு. மேகாத்து வெளுத்து வாங்குது. கூடு அங்கிட்டும் இங்கிட்டும் இப்படி லாந்துது, ஒரு கூடாவது கீழவிழுதான்னு பாருங்களேன்’

‘கரிசல்மண் அப்படியே கலப்பைக் கீறலில் சந்தனமாய் மகிந்து விரிந்தது. உழுத இடங்களில் கருப்பு வைரமாய் மண் பரந்து கிடந்தது. புழுபூச்சிகள் பொறுக்குவதற்காக காக்கைகளும் மைனாக்களும் நிறைபிடித்துத் திரிந்தன. பறந்து தாவிப்பிடித்தன.

’கண்மாய் நிறைபெருக்கு பெருகி கெத்துக்கெத்தென்று தண்ணீர் தழும்பி நிற்கிறது’

முதல் நாற்று நடும் காட்சி இப்படி விரிகிறது “மடைக்குடும்பன் முதல் நாற்றுமுடியைக் கும்பிட்டு குடும்பச்சியின் கையில் கொடுக்க, கும்பிட்டு வாங்கிய குடும்பச்சி முதல் நாற்றைத் தண்ணீருக்குள் பதித்து நட்டாள். குலவைச் சத்தம் ஏகமாய் ஒலித்தது. நாளையிலிருந்து நடவு வேலைகள் ஆரம்பித்துவிடும். ஊர்த்தலைகள் அனைத்தும் வயக்காடுகளிலும், கண்மாய்க்கரைகளிலும் நிரம்பி நிற்கும். தண்ணீராய்த் தெரியும் வயக்காடுகள் இன்னும் சில நாட்களில் பயிர்களின் வேர்ப்பிடிப்பால் பச்சைப் பசேலென்று அடர்ந்து வரப்புகள் மறைந்து ஊர்வயலெல்லாம் ஒரே வயலாக மாறிப்போகும். காளான் பூத்த்தைப் போல புழுப்பூச்சிகள் பொறுக்கித்திரியும் கொக்குக் கூட்டங்களின் வெண்மை பசுமைக்கு நடுவில் தெரியும். உள்ளான்களும் சிறகிகளும் முக்குளிப்பான்களும் தாராக்களும் வயல் பூராவும் சுற்றித் திரியும். நீர்ப்பறவைகள் எழுப்பும் விதவிதமான சப்தங்கள் தண்ணீரில் ஒலித்து காதுகளில் பிரதிபலிக்கும். மூன்று மடைகளிலும் தண்ணீர்ப்பாயும் மடைச்சத்தம் கச்சேரிகளில் ஊமைக்குழலின் சத்தம் போல கும்மென்று இரைந்தபடி கேட்கும்”

இக்காட்சிகள் நாம் இழந்துவிட்ட, இழந்து கொண்டிருக்கிற நிலப்பரப்பின் ஒலிகளை, வண்ணங்களை, வாழ்க்கையை கண்முன் நிறுத்துகின்றன. சோ தர்மன் அவர்களின் உருளைக்குடிக் காவியங்களின் நில வர்ணனைகளை ஞாபகப்படுத்துகிறது. ”உருளைக்குடிக் கிராமத்தை இயற்கை மணப்பெண்ணாய் அலங்கரித்து மகிழ்ந்தது. ஊரைச் சுற்றிலும் அடைத்துக் கொண்டு நிற்கும் பெரிய பெரிய படப்புக்கள். நிறைந்து மறுகால் ஓடும் கண்மாயும், ஊருணியும் ஓடைகளும் தளிர்த்துக் குமுறி வனமாய் நிற்கும் அடந்த மரங்கள், கால்வைக்கக் கூட இடமின்றி பச்சைப் பசேலென்று உருமாறிக் கிடக்கும் கரிசல் பூமி, இத்தனையும் சுற்றி நிற்க நடுவில் ஊர் அலங்கரிக்கப்பட்ட நிலையில் நிற்கும் தேர்போல் தெரிந்தது”

இந்த ஊரை சூல் நாவலில் மட்டும் தான் பார்க்க முடிகிறது. இது கற்பனையோ உண்மையோ, இலக்கியத்தைப் பொறுத்தவரை அழகின் உருவம். இந்த அழகு நாவலுக்கும் பொருந்தும்.

நாவல் நிகழ்கின்ற காலம் 1799க்கு முன்னால் என்பது 15வது அத்தியாயத்தில் கட்டபொம்மன் பாத்திரமாக வரும்போது புரிகிறது. மிகச் சிறந்த ஊரைப்பற்றிய கதையில் கருவேலமரமும், புதிய மீன்வகையை குளங்களில் அறிமுகப்படுத்தியதுமான காங்கிரஸ் காலக் குறிப்புகள் மட்டும் வருகின்றன. பெரியாரைக் குறித்த, திமுகவைக் குறித்த விமரிசனங்கள் வரை வருகின்றன. மனிதயினம் ஒவ்வொரு நாளும் தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கும் இயற்கையை அழித்தல் என்ற குற்றத்தை சின்னாத்துரை மீது மட்டும் வைத்துவிடுதல் சரியா? கடவுள் இல்லை என்பவர்கள் மட்டும்தான் பொதுவாழ்வில் ஒழுக்கம் கெடக்காரணமா? என்ற கேள்விகள் எழுகின்றன. நவீன வசதிகளுக்காக காடுகளை, குளங்களை அழிப்பதில் எல்லோருடைய பங்கும் இருக்கிறது என்பதை ஒத்துக் கொண்டால்தான் அதற்கான பொதுவான தீர்வை அடைய முடியும் என்று தோன்றுகிறது. இவை நாவலைத் தொடர்ந்து மனதில் எழுந்த எண்ணங்கள். நாவல் புனைகிற, விலக்குகிற உள்ளரசியல் குறித்துத் தனிக் கட்டுரை எழுதலாம்.

கம்பெனி ஆட்சியில் நிகழ்ந்த கொடுமைகள் எதுவும் நாவலில் பதிவாகவில்லை. உருளைக்குடியில் எந்த மாறுதலும் நிகழவில்லை என்றால் மகிழ்ச்சி அடையலாம்.

இன்னொன்றும் சொல்லத் தோன்றுகிறது. முன்னரே சொன்னது போல, கண்மாய்-நீர்ப்பாய்ச்சி-ஊர்-விவசாயம் என்ற மையத்தில் மட்டும் சுழலாமல் பலதளங்களில் நாவல் ஒரு பெருவெளியில் சுழல்வதால் சுவராஸ்யமாக இருந்தாலும் இன்னும் இறுக்கமான கட்டமைப்பில் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்குமோ என்றும் தோன்றுகிறது.

சென்ற காலம் பொற்காலம் என்ற கனவை நாவல் முன்னிருத்துகிறது. அதைக் அனுபவத்தில், வரலாற்றின் பக்கங்களில் உரசிப்பார்ப்பது வாசகனின் பொறுப்பாகிவிடுகிறது. இன்னும் இன்னும் சொல்லப்படாத எத்தனையோ சிறந்த பகுதிகள் நாவலில் உண்டு. நேரம் கருதி முடிக்க வேண்டியிருக்கிறது.

அடுத்த தலைமுறைக்கு புனையப்பட்ட ஒரு கிராமத்தின் கலைக்களஞ்சியமாக இயங்கும் ஒரு நாவலைப் படிப்பது மனதிற்கு இனிமையாக இருக்கிறது. அது எழுப்பும் கேள்விகள், கொடுக்கிற பதில்கள் அலையலையாக வந்துகொண்டிருக்கின்றன. சூல், விவசாயக் கிராமங்களை நோக்கி நம் கவனத்தைத் திருப்புகிறது. அது சாப்பாடு பிளாஸ்டிக் டப்பாக்களில் கிடைக்கிற காலத்தில் அவசியமானதும் கூட.

நூல் தகவல்:

நூல் : சூல்

பிரிவு:  நாவல்

ஆசிரியர் : சோ.தர்மன்

வெளியீடு :  அடையாளம் பதிப்பகம்

வெளியான ஆண்டு :   2016

விலை: ₹ 380

எழுதியவர்:


Advertisement

தீபிகா நடராஜனின் “ புத்தனிலிருந்து சித்தார்த்தனுக்கு திரும்புதல்” கவிதைத் தொகுப்பு.

சிந்தன் புக்ஸ் வெளியீடு | விலை : ₹ 100

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *