தொடரட்டும் வளரட்டும்
பேசுவதற்கு விஷயம் இருந்தால் பேச வேண்டும். அப்படி ஏதும் இல்லாத பட்சத்தில் மௌனமாக இருக்கப் பழக வேண்டும். இதே மொழி எழுத்துக்கும் பொருந்தும். எழுதுவதற்கு ஏகப்பட்ட விஷயங்களை வைத்திருப்பவர்கள் எழுதினால் தான் படிப்பவர் பாக்கியசாலி ஆகிறார்.
உயர்திரு சூ.ம.ஜெயசீலன் எழுதுவதற்கு ஏகப்பட்ட விஷயங்கள் வைத்திருக்கிறார். அதனால் அவர் புத்தகம் காகிதங்களால் மட்டுமன்று.. கருத்துக்களாலும் கனமாக இருக்கிறது. எல்லாக் கட்டுரைகளுமே ஏதோ ஒரு நல்ல செய்திக்கான தூதுவனாக இருப்பதுதான் அதில் இன்னுமொரு சிறப்பு. Motivational book என்கிற வரிசையில் பலர் வெறும் வசனங்களையும் குட்டிக் கதைகளையும் கொட்டி விற்கிற உலகில் நடந்த நிஜமான நிதர்சனமான சம்பவங்களை, சோதனைகளை வென்ற சாதனைகளை தொகுத்து வழங்குகிறார் ஆசிரியர்.
மொழி அழகு, எழுத்துநடை, பிழையற்ற தமிழ் இப்படி எல்லா அணிகலன்களுடனும் புத்தகம் அமைந்திருப்பது பாராட்டுக்குரியது. கல்விக்குயில் என்ற கட்டுரையில் “இலைகள் வடிகட்டிய வெயிலாக வாழ்வில் வெளிச்சம் தெரிந்தது” என்கிற வெளிப்பாடு இனிக்கிறது. “மழை கழுவிய இலைகளைக் காற்று உலர்த்திய பொழுதில்” (மன வலிமை மந்திரம்) என்கிற வரிகள் இவரது நடையழகின் அடையாளங்கள்.
வாழவே முடியாது என்கிற வருத்தம் உள்ளவர்கள் எவரும் இந்தப் புத்தகத்தை வாசித்தால் வாழ்ந்து காட்டுவேன் என்று வீறுகொண்டு எழுவர். ஒரு பள்ளத்தாக்கில் பாறை இடுக்கில் அதல பாதாளத்தில் ஒரு கையை மற்றொரு கையால் அறுத்து எடுத்துத் தப்பிக்க முடியும் என்று நம்ப முடிகிறது. ஐந்து நாட்கள் மரணத்துடன் பேச்சு வார்த்தை நடத்தி பிழைத்து எழுந்து நடமாடிய ஆரோன் ரால்ஸ்டன் வாழ்க்கை ஒரு அதிசய வரலாறு.
M.E என்றொரு நோய். Myalgic Encephalomyelitis எனப்படும் நோய் மருத்துவத் துறையால் பிழைபடப் புரியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டவர் ஜெனிஃபர் பிரி. படுத்த படுக்கையான அவர், அதே நோயினால் பாதிக்கப்பட்டு தவறாக டென்மார்க் அரசால் மனநல மருத்துவமனையில் சிறைவைக்கப்பட்ட கரீனாவை விடுவித்ததுடன், அந்நோய் பற்றிய மருத்துவக் கருத்துப் புரிதலை ஏற்படுத்தி, உலகில் அந்நோய் தாக்கிய பலரை ஒருங்கிணைத்த புரட்சி அசாதாரண சாதனை. உலகத்தின் கண்களைத் திறந்த அவரது வாழ்க்கை கூர்ந்து படிக்க வேண்டிய ஒன்று. வைத்தியத்திற்கு வைத்தியம் பார்க்க வேண்டும் என்று ஒருமுறை நான் பேசிய பேச்சு… நியாயம்தான் என்று மறுபடியும் நம்புகிறேன்.
நீர்ச்சறுக்கு விளையாட்டில் புலிச்சுறா கடித்து இடதுகை போனாலும் வலக்கையும் நம்பிக்கையும் வாழ்க்கையின் இருகரங்கள் என்று வென்று காட்டிய பெத்தனியின் சாதனை மற்றொரு சரித்திரம். தான் மட்டும் மீண்டால் போதாது தன்னொத்த பலரும் தழைக்க “பெத்தனியின் நண்பர்கள்” என்றொரு சேவை அமைப்பை உருவாக்கிய பொதுநோக்கு, வாழ்வாங்கு வாழ்தலின் வரையறை ஆகிறது.
“எதுவும் சாத்தியம் என நீங்கள் எங்களுக்கு நினைவூட்டுகிறீர்கள்” என்று பராக் ஒபாமா ஒருவரைப் பாராட்டுகிறார் என்றால் அவர் என்ன லேசுப்பட்ட சாதனையாளராகவா இருக்க முடியும். அவரை அறிய மலைக்காத மலைக் காதலன் என்ற கட்டுரை படியுங்கள். நீங்கள் மலைத்துப் போவீர்கள்.
வாழ வேண்டிய வளர வேண்டிய வெற்றி வீரனாக வலம் வர வேண்டிய இளைஞர் முதுகில் குண்டு பாய்கிறது. சுட்டவரோ பதறியபடி “துப்பாக்கியைச் சுத்தம் செய்து கொண்டிருந்தபோது தவறுதலாக விசையை இழுத்துவிட்டேன்” என்கிறார். துவண்டு விழுந்த இளைஞரை மருத்துவம், உறவின் விமர்சனம், பலரது பரிதாபம் படுத்தபடுக்கை ஆக்கியது. ஆனால், அண்ணனின் ஆதரவு அன்புக் கரம் நீட்டியது. நிமிர்த்தி உட்கார வைத்தது. நிற்க வைத்தது. நடக்க வைத்தது. ஓடவும் வைத்தது. அண்ணனின் அரவணைப்பினாலும் தனது தன்னம்பிக்கை விடாமுயற்சியாலும் அந்த சந்தீப் சிங் இந்திய ஹாக்கி அணியின் தலைவனாகிறார். அர்ஜுனா விருது பெறுகிறார். உலகின் தலை சிறந்த ஐந்து ஹாக்கி வீரர்களில் ஒருவர் என்று நிலைத்து நிற்கிறார். துளைத்துக் கொண்டுபோன துப்பாக்கிக் குண்டுதான் தலை கவிழ்ந்து தரையிறங்கியது. இந்தக் கட்டுரை இந்திய இளைஞர்களின் பாடப் புத்தகத்தில் பதிய வேண்டியது.
இந்தப் புத்தகம் முழுவதும் நம்பிக்கையாளர்கள் உயிர் வாழ்கிறார்கள். சோதனைகளைச் சாதனைகளாக்கிய சரித்திரபுருஷர்களின் சாம்ராஜ்யங்கள் படம் பிடிக்கப்பட்டுள்ளன. எழுத்துமூலம் மருந்தூட்டல், அறுவை சிகிச்சை, மறுவாழ்வு தரமுடியும் என்று வரிக்குவரி நிரூபிக்கிறார் ஆசிரியர். மல்டிபிள் சிரோசிஸ் என்கிற நோய் மடித்து வைத்த மனிதரின் வாழ்வை அவரது வீர்யமிக்க கோட்பாடு நிமிர்த்தி வைத்துவிட்டது. Giving up is not an option. விட்டு விடுதல் ஒதுங்குதல் ஒரு வாழ்க்கை முறைத் தேர்வாகாது என்று வாழ்ந்த ரமோன் ஒரு சாதனையாளர். மாணவர்களுக்குத் துணைப்பாட நூலாக இந்நூலை வைத்தால்கூட நலம் என்று நம்புகிறேன்.
பல கட்டுரைகள். பாராட்டி பக்கம் பக்கமாக எழுதலாம். என்றாலும் கோபுரகலசமாக ஒரு கட்டுரை ஆசிரியர் ஜவஹர் மாரியப்பன் அவர்கள் பற்றியது. எப்பேர்பட்ட ஆசிரியர். மாணவர்களை அழைத்துக்கொண்டு நாடகப் போட்டிக்குப் போகிறார். தமிழில் தயாரானது. ஆனால் மேடையேறும் முன் அங்கிருந்த நிபந்தனை மாணவர்களை அடித்து நொறுக்கிவிட்டது. ஆங்கிலம் அல்லது ஹிந்தி மட்டுமே அனுமதிக்கப்படும். ஆசிரியர் மாணவர்கள் காதில் ஏதோ சொல்கிறார். நாடகம் பங்கேற்றது. முதல் பரிசு வென்றது. மொழித்தடையை வெல்ல மாணவர்கள் மவுன நாடகமாகவே நடத்தி விட்டார்கள். வென்றும்விட்டார்கள். ஆஹா! இவரல்லவா ஆசிரியர்.
ஆசிரியரின் இளமை வாழ்க்கை குறித்த எழுத்தாளரின் எழுத்துநடை திரைக்காட்சியாகக் கண்ணில் விரிகிறது. படம் பார்க்கிற அனுபவம் தான் நெஞ்சில் படருகிறது. புத்தகம் வாங்கக் காசில்லை. கேட்டால் அவமானம். அதனால் புத்தகம் இல்லாமலேயே வகுப்பில் முதல் மதிப்பெண் எடுத்தார் ஜவஹர். இதைவிட நம்பிக்கையூட்டும் வாழ்க்கை எங்கே காட்டமுடியும்.
வகுப்பெடுக்கும் போது மாயா வசியம் செய்யும் மாயாவி அவர். மாணவர்களிடம் “நீங்க எல்லாரும் பத்தாம் வகுப்பு பாஸ்.. நெனச்சா கூட ஒரு பய ஃபெயில் ஆகவே முடியாது” என்று ஜெயிக்க வைக்கும் மந்திரவாதி அவர். கூலிக்கு மாரடிக்காமல் குழந்தைகளை உயர்த்த பாடுபடும் ஆசிரியத் தெய்வம். நாட்டுநலப் பணி மாணவர் பீடி குடித்தது தெரிந்ததும் தான் உண்ணாமல் கிடப்பது மூலம் அவர்களை மாற்றிய பண்பாளர். மூன்று M.Phil மற்றும் எட்டு முதுகலைப் பட்டங்கள் பெற்றிருந்தாலும் அத்தனைக்கும் மேலாக “எங்க வாத்தியார்” என்று சகல மாணவர்களாலும் உரிமைகொண்டாடப்படுவதையே உயிராக நினைக்கும் ஜவஹர் மாரியப்பன் ஒரு சகாப்தம்.
இப்படி புத்தகம் முழுவதும் மனிதர்கள். மனதை நிறைக்கும் மா மனிதர்கள். சாதனையாளர்கள். மாற்றுத்திறனாளிகளாக ஒதுங்கி விடாது மாற்றுத் திறன் மிக்க போராளிகளாக இருக்கிறார்கள்.
ஜெயசீலன் சார்.. இந்த எழுத்து வேள்வி, வார்த்தைத் தவம், ஜன முன்னேற்ற ஜெபம் தொண்டர்களின் தொழுகை தொடரட்டும். வளரட்டும்.
–சொல்வேந்தர் சுகி. சிவம்
16 ஜுன் 2020
பிரிவு : கட்டுரைகள்
பதிப்பகம் : பாரதி புத்தகாலயம்
விலை : ரூ 140
வெளியான ஆண்டு : 2020