சிறுகதைகள்நூல் அலமாரி

தாழிடப்பட்ட கதவுகள்


அ.கரீமின் “தாழிடப்பட்ட கதவுகள்” சிறுகதைத் தொகுப்பிற்கு எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் எழுதிய முன்னுரை.


சம்சுதீன் ஹீராவின்  ‘மௌனத்தின் சாட்சியங்கள்’ என்னும் நாவலும் ஏ.வி.அப்துல் நாசரின்  ‘கோவைக் கலவரத்தில் எனது சாட்சியம்’ நூலும் நம் மனங்களில் ஏற்படுத்திய அதிர்வலைகளும் அதிர்ச்சி அலைகளும் இன்னும் தணிந்திராத நிலையில் இப்போது கரீம் எழுதியுள்ள இந்தச் சிறுகதைகளின் தொகுப்பு இன்னும் கூர்மையாக நம் மனச்சாட்சியைத் தாக்கிக் குற்றவுணர்வு கொள்ளச்செய்கிறது.

1998 கோவைக்கலவரம் குறித்த அப்பட்டமான உண்மைகள் மெல்ல மெல்ல இப்படைப்புகள் வழியாக வெளி வரத்துவங்கியுள்ளன. அவ்வப்போது கட்டுரைகள் வழியாக வந்திருந்தாலும் 2013இல் கரீம் புதுவிசையில் எழுதிய மெஹல்லாவின் மையத்துக்கள் துவங்கி படைப்பிலக்கியங்களில் அத்துயர்மிகு நாட்கள் எழுதப்படும்போது அது செய்தியாகவோ தகவலாகவோ அல்லாமல் நம் ரத்த சொந்தங்கள் மீது நிகழ்த்தப்பட்ட கொடுமையாக அன்றைய அதே உக்கிரத்துடன் நம்மை வந்து தாக்குகின்றது.

அந்தோனி செல்வராஜ் என்கிற கிறித்துவரான காவலர் கொல்லப்பட்டதை அந்தோனியை வெட்டிவிட்டு செல்வராஜ் என்ற இந்து போலீஸ்காரர் கொல்லப்பட்டதாக இந்து முன்னணி திட்டமிட்ட முறையில் பிரச்சாரம் செய்து காவலர்களையும் பின்னிருந்து இயக்கி கொலையோடு எந்தத்தொடர்பும் இல்லாத இஸ்லாமிய மக்கள் 19 பேரை கொன்று பிணமாக்கியும் கோட்டைமேடு மற்றும் பல இஸ்லாமியக்குடியிருப்புகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களைச் சூறையாடியும் தீயிட்டுப் பொசுக்கியும் அழித்தபோது அந்த மக்கள் தனித்தனியாக அனுபவித்த துன்பமும் வலியும் இத்தொகுப்பில் ஒவ்வொரு கதையிலும் சொல்லப்பட்டுள்ளது.

மெஹல்லாவின் வீதியில் வெள்ளைத்துணியில் சுற்றப்பட்ட உடல்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் காட்சியை விவரிக்கும் இடத்தில் என்னால் அடக்க முடியாமல் வெடித்து அழுதேன். அடுத்த பக்கத்தைப் புரட்ட முடியாமல் நெடுநேரம் நொறுங்கிக் கிடந்தேன்.  மூடப்பட்டிருந்த உடல்கள் யாருடையவை என்று தெரியாமல், வீதியே கூடி நிற்கும் போது அனிபா பாய் ஒவ்வொரு முகமாக துணி விலக்கி இன்னாரெனக் காட்டும் இடத்தில் பெண்கள் தங்கள் கழுத்தில் கிடந்த கருகமணியை இரு கைகளாலும் இறுகப்பற்றியபடி அச்சத்துடன் துஆ சொன்னபடி காத்திருக்கும் இடத்தில் ..அல்லாகுவே….என்று அந்தப்பெண்களைப் போலவே என் உள்ளம் கூவியது. எந்த ஒரு அரசியல், சமூக இயக்கமும் துணை நில்லாத, சர்வதேச அனாதைகளாக இஸ்லாமிய மக்கள் அன்று பிணங்களாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த அந்தக்கோலம் என் வாழ்நாள் முழுதும் என்னைத் துரத்திக்கொண்டே இருக்கும். என் மனச்சாட்சியை அறுத்துக்கொண்டேதான் இருக்கும். பொது சமூகத்தை நோக்கி தங்கள் கழுத்தில் கிடக்கும் கருகமணியைப் பிடித்தபடி அப்பெண்கள் எழுப்பிய கதறல் ஒலிக்கு நம்மிடம் எந்த பதிலும் ஆறுதல் வார்த்தைகளும் இன்றுவரை இல்லையே.

இதற்குப் பதிலடி என்கிற பேரில் அத்வானியின் வருகையை ஒட்டி இஸ்லாமிய தீவிரவாதிகள் ரயில் நிலையத்திலும் ஆஸ்பத்திரியிலும் மக்கள் கூடும் இடங்களிலும் குண்டு வைத்து அப்பாவி மக்களை ஈவிரக்கமில்லாமல் கொன்றழித்து இந்து முன்னணியின் கொலை பாதகச் செயல்களுக்கு  நியாயம் கற்பிக்க உதவினார்கள். சாதாரண பொதுமக்களான இஸ்லாமிய ஆண்களும் பெண்களும் இக்குண்டுவெடிப்பை அல்லாவுக்கே விரோதமான செயல் என்றே கண்டித்த மனநிலை பல கதைகளில் பதிவாகியுள்ளது. ஆனால்,குண்டுவெடிப்புகளைத் தொடர்ந்து மீண்டும் இஸ்லாமிய மக்கள் கண்மூடித்தனமாகத் தாக்கப்பட்டனர். கொள்ளையடிப்புகளும் சூறையாடல்களும் கொலைகளும் தொடர்கதையாகின. அப்பாவிகள் கைது செய்யப்பட்டுச் சிறையிலடைக்கப்பட்டனர். எந்தக் குற்றமும் செய்யாதவர்கள் எனப் பதினேழு ஆண்டுகள் கழித்து விடுதலை செய்யப்பட்டனர். அந்தப் பதினேழு ஆண்டுகளும் ஆண்கள் இல்லாத குடும்பங்களாக இஸ்லாமியப்பெண்கள் பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கிப் படிக்கவைத்துத் திருமணம் செய்து கொடுத்து என எல்லாவற்றையும் தனித்து நின்று எதிர்கொண்ட கதைகள் எத்தனை?

கரீம் எழுதியுள்ள இக்கதைகள் ஒவ்வொன்றும் சில காட்சிகளை நம் மனங்களில் அழுத்தமாக வரைந்துவிட்டன. துயரத்தில் தூரிகை தொட்டு வரைந்த அந்த ஓவியங்கள் அழியாத கோலங்களாக வாசக மனத்திரையில் நிலைபெற்றுவிட்டன. நினைக்குந்தோறும் அக்கோலங்கள் குற்ற உணர்வை ஏற்படுத்துகின்றன. பெரும்பான்மை சமூகத்தின் ஓர் அங்கமாக வாசகன் தன்னை உணரும்போதெல்லாம் குற்ற உணர்ச்சி மேலெழும்பி வருவதைத் தவிர்க்க முடியாது. இதுதான் கரீமின் கலையின் வெற்றி.

கேரளாவிலிருந்து கோவைக்குப் பிழைக்க வந்து பலசரக்குக் கடை வைத்துப் பல ஆண்டுகள் எல்லா மக்களோடும் நட்புறவோடும் நெருக்கமாகவும் பழகி வாழ்ந்த சலீம் அடித்துத் துவைக்கப்பட்டு அவன் கண் முன்னே அவனுடைய கடை நொறுக்கப்பட்டு கிழிக்கப்பட்ட சட்டை கைலியுடன் கண்முன்னே எரியும் கடையை கண்ணீர் வழியத் திரும்பித் திரும்பிப் பார்த்தபடி ஓடுகிறான். அவன் திரும்ப வரவே இல்லை.

வீடிழந்த பாத்திமாவும் மைமூனும் நடுத்தெருவில் ஒருவரை இருவர் கட்டிக்கொண்டு நின்று கதறியழும் காட்சி. வெளியே வந்தால் தாக்கும் நோக்குடன் ஆயுதங்களுடன்  வெளியே சுற்றியலையும் இந்து முன்னணி ரமேஷின் ஆட்களுக்குப் பயந்து, வெளியே  பூட்டைத் தொங்க விட்டு பின் சுவர் ஏறிக்குதித்து வீட்டின்  கதவுகள், சன்னல்கள், பொந்துகள் என எல்லாவற்றையும் அடைத்து உள்ளுக்குள் தன் மனைவி மகளோடு பதுங்கியிருக்கும் அமானுல்லாவின் கதை. சத்தம் வெளியே வராமலிருக்க நாலைந்து போர்வைகளைப்போட்டுப் போர்த்திக்கொண்டு மனைவியையும் மகளையும்  கட்டிக்கொண்டு ”வாய் விட்டு அழக்கூட நமக்குக் குடுத்து வைக்கலியே ஆய்சா” என்று கதறி அழுகின்ற கொடுமையான காட்சி. பயன்படுத்தப்பட்டுத் தூக்கி எறியப்பட்ட அருந்ததியர் சமூகத்தின் மக்கள் அனாதரவாக கோர்ட் வாசலில் புலம்பித் தவிக்கும் காட்சி என ஒவ்வொன்றும் ஒரு சித்திரமாக நம் மனதில் நிலைத்துவிட்டது.

குண்டு வச்சவன் பொண்ணு என்கிற முத்திரையோடு பள்ளிக்கூடத்தில் ஒதுக்கப்படும் பெண் குழந்தை ஜாஸ்மின் தகப்பனை வெறுக்கிறாள். குற்றமற்றவன் என கோர்ட் தீர்ப்பளித்து 17 ஆண்டுகள் கழித்து வெளியே வரும் அகமதுவிடம் மகள் பாராமுகமாக இருக்கிறாள். வாப்பா என ஓடி வந்து கட்டிக்கொள்வாள் என உடலே எதிர்பார்க்க சிறையிலிருந்து வரும் அகமது குறுகி நிற்கிறான். தான் ஒரு குற்றமும் செய்யவில்லை என்பதை மகளுக்குச் சொல்லிப் பார்க்கிறான். அவள் பிஞ்சு மனதில் ஏற்பட்ட காயமும் வெறுப்பும் திருமணத்துக்குத் தயாராகி நிற்கும் அந்த நாள் வரை ஜாஸ்மினுக்குக் குறையவில்லை. திருமணம் முடிந்து கணவர் வீட்டுக்குப் புறப்படும் வேளையில் எல்லாரிடமும் சொல்லிக்கொண்டு போகையில் மனம் குன்றி நிற்கும் அகமதுவிடம் கடைசியாக வந்து அவன் கைகளைப் பற்றிக்கொண்டு  ‘அத்தா நான் போய்ட்டு வாரேன்’ என்று தோளில் சாய்ந்து அழுகிறாள். என் ஈரக்குலையே என்று மகளைக் கட்டிக்கொண்டு தாயும் அழுகிறாள். மூவரும் கட்டிப்பிடித்து உடைந்து அழுத அக்காட்சியில் மானசீகமாக என் மகள் ஜாஸ்மினைக் கட்டிக்கொண்டு, என் சகோதரன் அகமதுவைக் கட்டிக்கொண்டு நானும் அழுதேன். நெடுநேரம். நெடுநேரம். கோவை மக்கள் துன்பத்துக்குள்ளானது தெரியும். இப்படியெல்லாமா கஷ்டப்பட்டார்கள் என அறிய அறிய மனம் விம்மிக் கசிகிறது.

எங்கள்  மக்கள் கையறு நிலையில் அழுது நின்ற அந்தக்கணத்தில் நாங்கள் உடன் நின்று தேறுதல் செய்யாமல் எங்கள் ஊர்களில் எங்கள் கவலைகளில் எங்கள் வாழ்க்கைக் கூடுகளில் எப்பவும் போல உழன்றுகொண்டிருந்தோமே என்று மனம் கேவி அழுகிறது. கண்ணீரால் கழுவிவிட முடியாத குற்ற உணர்வில் மனம் துடிக்கிறது. இக்கதைகளின் சக்தி இது.

இந்து முன்னணி போன்ற கேடுகெட்ட அமைப்புகளின் மீது தீராத கோபத்தையும் வஞ்சத்தையும் உருவாக்கும் சக்தி இக்கதைகளுக்கு இருக்கிறது. கண்ணீரைத் துடைத்துக்கொண்டு இச்சக்திகளை வேரறுக்கும் காரியங்களில் தீவிரமாக களத்தில் இறங்க வேண்டும் என்கிற ஆவேசத்தை இக்கதைகள் தருகின்றன. இஸ்லாத்துக்குள் பரவி வரும் தீவிர வாதம், தர்கா எதிர்ப்பு, பெண்களுக்கு உரிய இடம் அளிக்காத இறுக்கம் போன்றவற்றை நியாயமான வாதங்களுடனும் கோபங்களுடனும் விமர்சனம் செய்யும் இரண்டு கதைகளும் பொருத்தமாக இத்தொகுப்பில் உள்ளன.

நீண்ட காலத்துக்குப் பிறகு என் மனதை உலுக்கிய கதைத்தொகுப்பு இது.

உங்கள் இலக்கியப்பயணம் உண்மைக்குப் பக்கமாக எப்போதும் இதுபோலத் தொடரட்டும் என வாழ்த்துகிறேன்.

தோழமையுடன்,

ச.தமிழ்ச்செல்வன்

20-12-2016

நூல் தகவல்:

நூல் : தாழிடப்பட்ட கதவுகள்

பிரிவு: சிறுகதைத் தொகுப்பு

ஆசிரியர் : அ.கரீம்

வெளியீடு : பாரதி புத்தகாலயம்

வெளியான ஆண்டு : 2017

விலை: ₹ 140

எழுதியவர்:


Advertisement

தீபிகா நடராஜனின் “ புத்தனிலிருந்து சித்தார்த்தனுக்கு திரும்புதல்” கவிதைத் தொகுப்பு.

சிந்தன் புக்ஸ் வெளியீடு | விலை : ₹ 100

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *