சிறுவயதிலிருந்தே பல்லி, அட்டைப்பூச்சியைக் கண்டாலே பலரையும் போல் பதறியோடும் எனக்குப் பாம்புகளைப் பார்க்கும் போது மட்டும் எங்கிருந்தோ ஒரு குதூகலம் வந்துவிடும். கொஞ்சம் பாதுகாப்பான தொலைவில் நின்று சுவாரசியமாய் வேடிக்கை பார்ப்பேன். ஒருமுறை அதைக் கையில் பிடிக்கும் வாய்ப்பும் கூட அமைந்தது. சேலம் மாவட்டத்தில் சேர்வ ராயன் மலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய மிருகக்காட்சி சாலை தான் “குரும்பப்பட்டி விலங்கியல் பூங்கா” அங்குப் பாம்புகளுக்கென்று தனியாக அமைத்துள்ளது ஒரு சிறு கூடாரம். அங்குப் பாம்புகளைக் கையாளுவதற்கென்றே ஒரு நபர் உண்டு. அனாசியமாய் கூடாரத்தில் குதித்து அங்கு இருந்து ஒரு மஞ்சள் சாரையோடு வெளியில் வந்தவர் ஏதோ கைக்குழந்தையைத் தரும் தோரணையோடு கூட்டத்தைப் பார்த்து நீட்ட ஆசையாய் அதை நான் வாங்கிக்கொண்ட நாள் இன்னும் பசுமையாய் நினைவில் இருக்கிறது. இப்படி பிடிக்கணும், அப்படித்தான் தூக்கணும் என்று லாவகமாய் அவர் சொல்லிக்கொடுத்ததெல்லாம் வாழ்நாளெல்லாம் மறக்கவே முடியாது.அப்படிப்பட்ட எனக்கு இப்புத்தகம் கொடுத்ததோ வார்த்தைகளில் சொல்லமுடியா குதூகலம்! இருளர்கள் பண்பாடு, கலாச்சாரம், வழிபாட்டு முறைகள், தொழில், உணவுப்பழக்கங்கள் எனப் புத்தகம் முழுக்க கொட்டிக்கிடக்கும் தகவல்கள் அத்தனை ஆச்சரியம்!
அடர்ந்த காடுகளுக்குள் இருண்ட இடங்களில் வாழ்ந்ததால் அல்லது இருளுக்கு ஒப்பனை கறுத்த மேனியின் காரணமாக இவர்களுக்கு இப்பெயர் வந்திருக்கலாம். தொழிலின் காரணமாகக் குறவர் மற்றும் வேடர் குழுவைச் சார்ந்தவர்களாக அடையாளப்படுத்தப்பட்டனர். தொழில் மற்றும் உணவுகளுக்காக அடிக்கடி இடம்மாறி அரை நாடோடிகளாக வாழ்ந்தாலும் இவர்கள் சங்க காலத்திற்கு முந்தைய வரலாறு கொண்டவர்கள். இவர்கள் தாவரங்கள், பறவைகள், இயற்கை அமைப்புகளை குலச் சின்னங்களாக கொண்டிருக்கின்றார்கள். கன்னிமார், நடுகல் வழிபாட்டு முறையைப் பின்பற்றுகிறார்கள், மூலிகை மருத்துவமெல்லாம் கைவந்த கலை இவர்களுக்கு. பெண்களை இவர்கள் மதிக்கும் பாங்கு பெரும் ஆச்சரியம்! பாரபட்சம் இல்லாமல் பெண்களுக்குச் சம உரிமை அளிக்கின்றனர். மணமகனைத் தேர்ந்தெடுக்கும் உரிமை முழுக்க முழுக்க பெண்ணையே சார்ந்து இருக்கிறது. சகல சடங்கு சம்பிரதாயங்களில் பெண்களே முன்னிலைப் படுத்தப்படுகின்றனர். பிறர் நிலங்களில் கூலியாட்களாக இவர்கள் வேலை பார்ப்பதில்லை, சுயமரியாதையை உயிராகப் போற்றுகிறார்கள், கட்டுப்பாடுகளுக்கு அடிபணியாத சுதந்திர வாழ்க்கை முறை இவர்களுடையது. திராவிட இனத்தின் ஒரு பிரிவான இருளர்கள் இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, மலேசிய நாடுகளில் வாழும் பழங்குடிகளுடன் நெருங்கிய தொடர்புடையவர்கள் என்பது டி.என்.ஏ சோதனை வாயிலாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
இத்தனை சிறப்பை கொண்டவர்களின் வாழ்க்கை முறை இன்றும் பரிதாபமாகத்தான் உள்ளது. பொருளாதார சுரண்டல்கள், கல்வி, ஜாதிச்சான்றிதழ், பட்டா என எல்லா அடிப்படைத் தேவைகளுமே இவர்களுக்குப் போராட்டம் தான்.
சமீபத்தில் டி ஜெ ஞானவேல் அவர்களின் “ஜெய் பீம்” திரைப்படமும், பழங்குடியின பெண் அஸ்வினியும் பலரின் கவனத்தை ஈர்த்தது நிறைய நல்ல மாற்றங்களுக்கு ஆரம்பமாய் இருக்கவேண்டும்.
இருளர்கள் : ஓர் அறிமுகம், மக்களின் நிலப்பரப்பை, வாழ்க்கை முறையை, வரலாற்றைத் தெரிந்துகொள்ள ஆர்வமுள்ளவர்கள் படிக்க வேண்டிய புத்தகம்.
நூல் : இருளர்கள் : ஓர் அறிமுகம்
வகை : கட்டுரை
ஆசிரியர் : K.குணசேகரன்
வெளியீடு : கிழக்கு பதிப்பகம்
வெளியான ஆண்டு: 2008
பக்கங்கள் : 128
விலை: ₹ 155
Kindle Version :