தமிழ் விமர்சகர்களின் பார்வையில் இன்று தப்பிய ஒரு நல்ல எழுத்தாளர் சூடாமணி. மனோதத்துவ பார்வையில் இலக்கியம் படைக்கும் ஒரு சில தமிழ் எழுத்தாளர்களில் மிக முக்கியமானவர் என்று இந்திரா பார்த்தசாரதி அவர்கள் முன்னுரை தந்து வாழ்த்தி இருப்பது வாசிக்கும் ஆவலைத் தூண்டுகிறது.

மொத்தம் 10 அதிகாரம் கொண்ட குறுநாவல் இது. முதல் அதிகாரத்தின் முதல் வரிகளே நம்மை வாசிக்கத் தூண்டி உள்ளே அழைத்துச் சென்று விடுகிறது.
“எண்ணமே வாழ்க்கை என்று இருப்பவனுக்கு வாழ்க்கையே ஓர் எண்ணம் மட்டுமாக நின்று விடும்” இதுதான் கதை. கதையின் உயிர்ப்பு வரியும் கூட. அத்தனை நேர்த்தியாகக் கதாபாத்திரங்கள் அமைத்துக் கதை சொன்ன விதத்திலும், மொழி ஆளுமையிலும் விஞ்சி நின்று வசீகரிக்கின்றார் சூடாமணி.

ஆச்சாரமான குடும்பச் சூழல் ன. ஒரு தாய், தகப்பன். அவர்களுக்குத் தங்காத மழலை. மூன்றாவதாகக் கரிய நிறத்துடன் பிறக்கும் பெண் குழந்தை. அந்த குழந்தைக்கும் தந்தைக்குமான அன்புப்பரிமாணம், அந்தக் குழந்தை பெரியவளான பின் அது ஏற்க விரும்பும் வாழ்வு, அவள் விரும்புகின்ற வாழ்வை விடுத்துத் திணிக்கப்பட்ட வாழ்வு, அதிலிருந்து அவள் எவ்வாறு மீள்கிறாள் என்பதை நெகிழ்ச்சியுடன் கதைப்படுத்தி இருக்கின்றார் சூடாமணி.

அவளுக்குப் பிறக்கும் பெண் குழந்தை, அவள் எடுக்கும் முடிவு அதை அந்தக் குடும்பம் எவ்வாறு ஏற்கிறது என்பதனை தெள்ளத் தெளிவான நீரோட்டம் போல காட்சிப்படுத்தி இருக்கின்றார் சூடாமணி. ஒரு நேர்மறைச் சிந்தனையோடு கதைப்படுத்துதலில் வென்றிருக்கின்றார் சூடாமணி.

மொழி நடை நம்மை வெகுவாக ஈர்த்து கதையோடு ஒன்றைச் செய்து விடுகிறது. ஒவ்வொரு கதாபாத்திரங்களும் கண்முன்னே விரித்து நாம் அந்த வீட்டிலேயே இருப்பது போன்ற ஒரு உணர்வினைத் தருகிறது என்றால் அதுவே சூடாமணி எழுத்தின் வெற்றிக்கான காரணம். அந்த ‘யாமினி’யாக நாம் இருந்து அந்த முடிவை ஏற்போமா என்று ஏங்க வைக்கிறது. ஒருபுறம் சாரானாக நாம் இருக்க இயலுமா? அவரைப் போல் இன்று நாம் அந்த முடிவினை சுவீகரிக்க இயலுமா என்ற மனம் பதறுவது நிதர்சனம். மறுபுறம் நம்மை அந்தக் கதாபாத்திரமாகவே மாற்ற வைத்திருக்கின்றார் சூடாமணி. காலச்சூழல், இரு பெண்களுடைய மனப்பாங்கு அதனை குடும்பத்தார் ஏற்கின்ற மனம் இதுவே இந்தக் கதையின் மூலப்பிரதானம். ரமேசன் அவருடைய இரண்டாவது மனைவி வசந்தி, இருவருடைய கதாபாத்திர அமைப்பும் வெகு நேர்த்தி சித்தி என்றால் கொடுமைக்காரி என்ற புனைவிலிருந்து விலக்களித்து அந்தச் சித்தி எவ்வாறு இந்த குழந்தை மேல் அன்பு செலுத்துகின்றாள் என்ற நேர்மறை சிந்தனையின் விதைத்திருப்பது அந்த சித்தியினுடைய கதாபாத்திரத்திற்கு வெகுவாக வலு சேர்க்கிறது.

யாமினியின் அம்மா கதாபாத்திரப் புனைவு நெஞ்சை அள்ளுகிறது. இப்படி ஒரு அம்மா இருந்தால் நமக்குக் கவலையே இருக்காது. கீதா கதாபாத்திரம் நேர்த்தி. எடுக்கும் தீர்க்கமான முடிவு கதைக்களத்தின் மேன்மையை உணர்த்துகிறது.

பல்வேறு தளங்களில் நேர்மறைச் சிந்தனைகளோடு பேசுகின்ற கதாபாத்திரங்கள் கொண்ட இந்தக் கதை நம்மை நெகிழ்ச்சியுறச் செய்து நம்மையும் அறியாமல் நம் கண்களில் கண்ணீரை வரவழைத்து விடுகிறது என்பது உண்மை.

நூல் பின்னட்டையில்

1974இல் 'இரவுச் சுடர்' வெளிவந்தபோது பெண் எழுத்தாளர்களைப் பற்றிய என் ஆராய்ச்சி தொடங்கியிருந்தது. பாலுறவு, கற்பு மற்றும் காதல் என்ற கோணத்திலிருந்து அதைப் பார்த்தபோது, உடலுறவு என்பது தூய்மையைக் குலைக்கும் ஒரு தாக்குதலாக நோக்கப்படுவதுபோல் தோன்றியது. 1975இல் 'மீண்டும் தூயவை தொடர்' என்ற தலைப்பில் சதங்கை பத்திரிகையில் சூடாமணி எழுதிய கதையில் உடலுறவு பூவைக் கசக்குவதுபோல் ஓர் அழிக்கும் செயல் என்ற தொனி இருந்தது. 1972இல் சூடாமணி எழுதிய 'நான்காம் ஆசிரமம்' கதையில் வெளிப்பட்ட உடலுறவு என்பது உடலின் தெய்வீகத்தன்மைக்கு மேலும் மெருகூட்டும் செயல் என்ற நோக்கிலிருந்து இரவுச் சுடர் நாவலும் அடுத்து வந்த கதையும் மாறுபட்டன. மூன்றையும் சேர்த்துப் பார்த்தபோது இரு வேறு அதீதங்களாக அவை எனக்குப் பட்டன அப்போது, அவளை அறியாமல் அவள் மனத்தில் புதைந்துகொண்டு அவளை ஆட்டிப்படைக்கும் உணர்வுகளுடன் சமரிடும் பெண்ணாக, இரவின் மௌனத்திலும், தாரகைகளின் ஒளியிலும் ஒன்றி இயற்கையுடன் ஓர் அந்தரங்க உறவு பூணும் பெண்ணாக இரவுச் சுடர் நாவலின் நாயகி யாமினியைப் பிறகு வந்த ஆண்டுகளில் பார்த்தபோதுஅதிலுள்ள உணர்வுச் சிக்கல்களும், இதுதான் சரி என்று உலகம் நிர்ணயித்த ஒன்றிலிருந்து ஒருத்தி மாறுபடும்போது அவளுக்கு ஏற்படும் மன உளைச்சல்களும், அவளுடைய அந்த விலகலே அவளை மனப்பிறழ்வு கொண்ட ஒருத்தியாக மற்றவர்கள் பார்க்கும்படி மாற்றுவதும் மஞ்சு விலகியபின் தெரியும் காட்சியாக எனக்குத் தெரிந்தது.
மன ஆழத்தில் ஊன்றிக்கொண்ட தூய்மை பற்றிய எண்ணங்கள் ஒரு வெறியாகக் கிளர்ந்து பின் ஓர் உன்னத உன்மத்தமாக மாறிவிடும், கதை இரவுச் சுடர். ஏ.கே. ராமானுஜத்துடன் ஒரு முறை சூடாமணியின் கதைகள் பற்றிப் பேசிக்கொண்டிருந்தபோது அவளுடைய கதைகளில் அவருக்கு மிகப் பிடித்தது எது என்று கேட்டபோது அவர் இரவுச் சுடர் நாவலைத்தான் குறிப்பிட்டார். அவருக்கே உரிய கவிதை தோய்ந்த நடையில் இரவில் ஒளிரும் சுடராக யாமினியைப் படைத்திருக்கிறார் சூடாமணி. மற்றவர்கள் பாதை மறந்துவிடும் கருமையான இரவும், யாமினிதான். அதில் ஒளியைச் சிந்தும் சுடரும் யாமினிதான். இருட்டும் வெளிச்சமும் இரண்டறக் கலந்த படைப்பு அவள்.

- அம்பை

நூல் தகவல்:

நூல் :     இரவுச் சுடர்

ஆசிரியர் : ஆர்.சூடாமணி

வகை :  ;  நாவல்

வெளியீடு :  காலச்சுவடு

வெளியான ஆண்டு :   2010

பக்கங்கள் :   96

விலை : ₹ 100

 Buy On Amazon :

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *