கி.ராவின் ஒட்டு மொத்த கதைகளையும் படித்த வாசகன் அதிலிருந்து எதையும் புறந்தள்ளி விட முடியாது. தொகுப்பு என்பது மயிற்பீலிகளை தனித்தெடுத்து பகுப்பது போன்றது அது. எப்படிப் பார்த்தாலும் அது அழகு நிறைந்தது. குட்டை நெட்டை என்று அளவு கோலை வைத்து பட்டியலிடலாம். அவற்றை வாசகன் அறிவுக்கேற்ப சிறு டப்பாக்களில் அடைத்து வைத்து ரசித்துக் கொள்ளலாம் அவ்வளவே.

இத்தொகுப்பு டிஸ்கவரி பதிப்பகத்தால் சென்ற ஆண்டு கி.ராவின் 99வது பிறந்த நாளின் போது சிறப்பு நூலாக வெளியிடப்பட்டது.

இந்நூலில் மொத்தம் 23 கதைகள் தொகுக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான கதைகள் பல்வேறு காலகட்டத்தில் பல்வேறு இதழ்களில் , புத்தகங்களில் , தொகுப்புகளில் வெளியானவை எனினும் கி. ராவின் முதல் கதையான “சொந்த சீப்பு” (1948) இதுவரை வந்த எந்தத் தொகுப்பிலும் இல்லாதது.

இதில் இறுதியாகச் சேர்க்கப்பட்டுள்ள “சாவஞ்செத்த சாதிகள் “(2020 )எதிலும் வராத புதிய கதையாக இத்தொகுப்பில் தான் அறிமுகமாகி உள்ளது. பிற்படுத்தப்பட்டவர்கள் மீது கி.ரா எதிர்மறை மனோபாவம் கொண்டவர் எனும் சிலரின் தவறான பிரித்தறியும் கருத்திற்கு இக்கதை பதிலாய் அமைகிறது.

 • சிநேகம்

சிறுவயதில் அறுபட்ட நட்பின் வலியையும் இயலாமையும் சொல்கிறது.

 • சுப்பன்னா

1981-ல் வெளிவந்தது .ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு கேரளாவில் ஒரு கைப்பிடி அரிசிக்காக ஒரு மனிதனை அடித்துக் கொன்ற செய்தியை அறிவோம். அது போன்ற மனிதர்களை சமூகம் எவ்வளவு மூர்க்கமாக நிராகரித்தாலும் சமூகத்தின் மீதான இவர்களது அன்பு நிலையானது.

 • கோடாங்கிப் பேய் 

கிராமங்களில் பேய் விரட்டக் கோடங்கி செய்யும் பிரயோகங்களை அதிர்ச்சி மூலம் சித்தம் தெளியப் பயன்படுத்தும் உளவியல் யுக்திகள் என்றாலும் சில நேரம் சில கோடங்கிகளின் செயல்பாடு அத்துமீறி வன்முறையாகி விடுகிறது. இது மாதிரி வன்முறை எல்லா பேய்களிடமும் பலிதமாகாது.

 •  திரிபு

ஒரு நுணுக்கமான கதை. குழந்தைக்கு முதல் மொட்டையும் காது குத்தலும் நம்மைப் பொறுத்தவரை ஒரு சடங்கு தான். ஆனால் கி.ரா இதில் பொதிந்துள்ள வன்முறையை அழகாகக் கோடிடுகிறார். ஒரு குழந்தையின் அணுகுமுறையில் இச்சடங்கு முதல் மாற்றத்தை ஏற்படுத்துகிறது.

 • விளைவு

ஒரு ஜனரஞ்சகமான கி.ராவின் தனித்த குசும்பு நிறைந்த கதைகளில் ஒன்று. காதல் அரும்பும் நிகழ்வுகளில் இதுவொரு வகையான தினுசு.

 • கோமதி

ஆண்பால், பெண்பால், இருபால் எதுவாக இருந்தாலும் அவர்களின் மனம் என்பது உணர்வுகளோடு இயைந்த ஒன்றாகவே உள்ளது.

 • கொத்தைப்பருத்தி

கால் காணி இல்லாதவனுக்குப் பெண் தர மறுத்த காலம் போய் கால் காசுண்ணாலும் கவர்மெண்ட் உத்தியோகம் தான் வேணும் என்கிற ஒரு சமூக கலாச்சார விழுமியத்தைக் காட்சிப்படுத்துகிறார்.

 • அங்கணம்

வாழ்க்கையில் நமது சௌகரியங்களை எவ்வளவு பெருக்கிக் கொண்டாலும் நமது சிறு பிராயத்தின் படிமங்களை மீறி அவை ஒரு போதும் உசத்தியாகி விடுவதில்லை.

 • மின்னல்

சூழல் அப்படியே தான் இருக்கிறது. அதில் மாற்றங்கள் என்பது மனிதர்களின் இயக்கங்கள். மனித முகங்களை விவரிக்கும் கி.ரா “சித்திரகாரன் எவனாவது அப்போது அவரைக் கண்டிருந்தால் விடவே மாட்டான் ” என்பதும், ” பஸ்ஸினுள் மூதேவிகளை விலகி லட்சுமிகரம் வழிய ஆரம்பித்துவிட்டது” என்பதும் சிறுகதை கட்டுமானத்தின் நேர்த்தியான கடையாணிகள்.

 • நாற்காலி 

ஒரு வீட்டின் பந்தத்திலிருந்து சமூகத்தின் பந்தமாக மாற்றப்படுகிறது. பன்முக தரிசனம் கொண்ட கதை. கி.ரா எப்போதும் ஒரு சாய்வு நாற்காலியில் கம்பீரமாக அமர்ந்திருப்பார். அது தேக்கினால் செய்தது. மடக்கித் தூக்கி வைப்பது கூட சிரமம். அவ்வளவு கனம் . “அதுவொரு வாசகர் அன்பாகச் செய்து கொடுத்தது அதான் அவ்வளவு கனம் என்பார் சிரித்துக் கொண்டே.., “. அந்த வாசகர் இக்கதையில் வருவதை போல் இரண்டு நாற்காலிகளைச் செய்து கொடுத்துள்ளார். மனுசன் மகா ரசிகன் தான்.

 • பேச்சி

வலசை பெண்கள் அதாவது பிழைப்பிற்காக இடம்மாறும் நாடோடி பெண்களின் மீதான பாலியல் அத்துமீறலும், அகச்சிக்கலும் அதனால் ஊரில் ஏற்படும் அதிர்வுகளையும் விவரிக்கும் கதை.

 • ஜீவன்

‘ஊருக்குள் நடப்பது ஊமைக்குத் தெரியும் ‘என்பது சொலவடை. ஆனால் அவர்களின் உடல் மொழியைப் புரிந்து கொண்ட நம்மால் உள்ளத்தைப் புரிந்து கொள்வதில்லை.

 • கனிவு

புதிய தம்பதிகளுக்கிடையே அரும்பாகி மலரும் காதல் வாசத்தை வீசுகிறது.

 • கருவேப்பிலைகள் 

அந்திமாலை அழகு போல் மனிதனின் அந்திமகாலம் அப்படியொன்றும் சொல்லும் படியில்லை. அவை வாசம் போன கருவேப்பிலைகள்.

 • புறப்பாடு 

இந்தக் கதையைப் படிக்கும் போது கி.ராவின் இறுதி யாத்திரை தான் நிழலாடுகிறது. ஒரு தீர்க்க தரிசனம் 1973 லேயே. ஆனால் அவர் மரணத்தோடு விளையாடவில்லை. கதைகளோடு தான் அவரின் விளையாட்டு. இந்தக் கதையின் இறுதியில் பல தலைமுறைகள் கண்ட அந்த மனிதரின் இறுதி பயண ஆட்டத்தில் தலை இட வலமாக “மாட்டேன், மாட்டேன்.. ” என்று ஆடிக்கொண்டு செல்வதாக எழுதியிருப்பார். கி.ராவின் உடல் புதுவையிலிருந்து எடுத்துக் செல்லும் போது இதுதான் எனது நினைவுக்கு வந்தது.

ஆனால் இடைச்செவல் அவர் பிறந்து விழுந்த மண். அதில் தான் தவழ்ந்து விளையாடி மகிழ்ந்தார் . அவ்வூரும் மண்ணும் கி.ராவின் பிரியம்.அந்த ஊர் புழுதியை அவர் வாரி தலையில் போட்டுக் கொண்டு விளையாடியதையும் , மண்ணில் உருண்டு புரண்டதையும். கரிசல் மன்னை கட்டி வெல்லம் போல் தெரியாமல் ருசித்துத் தின்று பெற்றோரிடம் அடி வாங்கியதையும் நிறையச் சொல்லியுள்ளார். அந்த தெவிட்டாத மண் நோக்கிப் போனது அவரின் உடலின் புறப்பாடு மட்டும் தான். கொடுத்ததை எடுத்துக் கொள்வது தான் மண். வந்த இடத்திற்கே சென்று விட்டது. இதுவொரு தார்மீகம்.ஆனால் பெயர்ந்து கொண்டு செல்ல முடியாத மூச்சுக்காற்று இந்த வேதபுரத்தார்க்கே * சொந்தம்.

*வேதபுரம் – புதுச்சேரி


– மஞ்சுநாத்

நூல் தகவல்:
நூல் :

கி.ராஜநாராயணன் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்

பிரிவு : சிறுகதைகள்
தேர்வும் தொகுப்பும் : மா.ஞானபாரதி
வெளியீடு: டிஸ்கவரி புக் பேலஸ்
வெளியான ஆண்டு : 2020
பக்கங்கள் : 238
விலை : 270
அமெசானில் நூலைப் பெற

 

 

எழுதியவர்:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *