வாழ்வில் பருகப்படாத சந்தோஷத்தின் மிச்சத் துளிகளில் நிறைந்திருக்கின்றன சொற்கள். அந்தச் சொற்கள் ஆசிர்வதிக்கப்பட்டவை போல் யாரோ ஒருவரின் கவிதை தொகுப்பில்இடம்பெற்றுவிட்டாலும் யாராலும் கவனிக்கப் படாத ஒரு வரிபோல் துயருற்றுக் கிடக்கிறது. சுகிர்தராணியின் கவிதைகள் மீதான என் அறிமுகம் அவரது இரண்டாவது தொகுப்பான இரவு மிருகத்தில் இருந்துதான் கிடைத்தது.

கவிதை என்பது கண நேரத்தில் நிகழ்ந்துவிடக்கூடிய ஒரு செயல்தானா என்று அடிக்கடி நினைத்துப் பார்க்கும் வேளையில், சுகிர்தராணியின் இரவுமிருகம் என்ற இத்தொகுப்பு அதற்கான கணங்களைத் திறந்து கொடுப்பதாகவே  அமைகிறது. வாசிப்பை வெறும் வாசிப்பாக மட்டுமே எடுத்துக் கொள்ள முடியாத நிலையில் கவிதை மீதான நமது விசாலப் பார்வையை ,வாசிப்பின் மீதான ஆழமான நம்பிக்கையை சோதித்தறிவதாக இத்தொகுப்பு நம் முன் விரிகிறது.

 

என்னுடல்

குறுஞ்செடிகள் மண்டிய மலையில்

பெருகுகிறது ஒரு நதி

அதன் கரைகளில் வளைந்து

நீர்ப்பரப்பினை தொட்டோடுகின்றன

பால்வழியும் மரத்தின் கிளைகள்

இஞ்சியின் சுவை கூடிய பழங்கள்

மெல்லிய தோல் பிரித்து

விதைகளை வெளிததள்ளுகின்றன

பாறைகளில் பள்ளம்பறிந்தெஞ்சிய நீர்

முனைகளில் வழுக்கி விழுகிறது அருவியாய்

நீர்த்தாரைகளின்அழுத்தத்தில்

குருதி படர்ந்த வாயை நனைக்கிறது

வேட்டையில் திருப்தியுற்ற புலி

கீழிறங்குகையில்

எரிமலையின் பிளந்த வாயிலிருந்து

தெறிக்கிறது சிவப்புச் சாம்பல்

வானம் நிறமிழக்க

வளஞ்சுழிப்புயல் நிலத்தை அசைக்கிறது

குளிர்ந்த இரவில் வெம்மை

தன்னைக் கரைத்துக் கொள்கிறது

இறுதியில் இயற்கை

என் உடலாகிக் கிடக்கிறது

 

பெண்ணின் உடல் வர்த்தகப் பொருளாகிப் போன தற்போதைய சூழலில் பெண்ணின் உடலை மீட்டு இயற்கையின் உடலாய் கிடத்தும் சுகிர்தராணியின் இக்கவிதை வாசிப்பவரின் மனநிலையை கிளறுகிறது.சமயங்களின் பேராலும் மதங்களின் பேராலும் சமூகத்தால் மண்டையில் திணிக்கப்பட்டு பொதுப் புத்தியில் உறைந்து கிடக்கும் பொருள்கள் ஒவ்வொன்றாய் வெளியேறி காலியாகி விட்ட அதன் இடத்தில கவிதையின் அர்த்தம் பொதிந்து கொள்கிறது. இயற்கையை பெண்ணின் உடலாய்க் கிடத்தும் வாழ்வொன்றை நமக்கு கவிதையின் வழி அடையாளப் படுத்துகிறார். இதன் வழி பெண்ணின் உடலை வர்த்தக அடையாளங்களிலிருந்து விடுவிக்கும் இவரது கவிதை மொழி வாசிப்பவரின் நம்பிக்கையை கோரி நிற்கிறது. பொதுவாகவே, சுகிர்தராணியின் கவிதைகள் அதன் உள் நிறைந்திருக்கும் பெண் விடுதலை  சமத்துவத்திற்காகவே அறியப்படுபவை

மொழி அழகானது. அதுவும் கவிதைமொழி அழகியலுக்ககாகவே பேசப்படுவது. அந்த அழகியலையும் ஆயுதமாக்கி தன் மொழியையே பெண் விடுதலையை மீட்டெடுக்கும் ஒரு கருவியாக சுகிர்தராணியின் மொழியை அறியும்போது, அவருடைய கவிதை மொழியை மேலும் மேலும் அறிவதற்கான ஆவலையே உருவாக்குகிறது.

 “மெல்லிய

புலால் நாற்றம் வீசுகின்ற

நானும்

தசைகளை முற்றாகப்

பிய்த்தெடுத்த எலும்புகள் தொங்கும்

என் வீடும்

கொட்டாங்கச்சியில் தோலைக்கட்டி

பறையொலி பழகும்

விடலைகள் நிறைந்த

என் தெருவும்

ஊரின்கடைசியில் இருப்பதாக

நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்

நான் சொல்லிக்கொண்டிருக்கிறேன்

முதலில் இருப்பதாக “

இந்ததொகுப்பு வெளியிட்ட காலத்திலிருந்து இந்தக் கவிதை சமூக வலைத்தளங்களை கலக்கிக்கொண்டேதான் இருக்கிறது.

சமூகவெளிச்சத்திற்காக போராடக்கூடிய தலித் இலக்கியத்தில் மிகமுக்கியமான பெண் கவிஞராகவும் இருக்கக்கூடிய சுகிர்தராணி தனது கவிதைகளையே பகடைக்காய்களாக உருட்டுகிறார். அவை ஏற்றத்தாழ்வு மிக்க நமது சமூகத்தின் மீதும் நமது ஜனநாயகத்தின் மீதும் கேள்விகளாக உருண்டு அவற்றின் மனச்சாட்சியை குத்திக் கிழிக்கின்றன.

எது பெண்ணியம்? என்ற கேள்வியில் தொடங்கி அதன் வரம்புக்குட்பட்ட எல்லாவிதமான பதில்கள் வரை அதன் வரையறைக்குள் அடங்காத தொனியில் உரத்துப்பேச ஒரு மொழி தேவைப்படுகிறது. அந்த உரத்த மொழியையே தன் கவிதை மொழியாக தேர்ந்து கொள்வதுதான் சுகிர்தராணியின் கவிதை அரசியலாக அடையாளம் பெறுகிறது.

 

கலவி வாசனை

கிழிந்த தேகத்தை

நேர்படுத்திக்கொண்டு நிமிர்கிறேன்

மறுபடியுமென்

உறுப்புக்கிளைகள் ஒடிந்து விழும்படியாக

வந்தமர்கிறது ஓர் உருவபூதம்

ரகசியங்கள் போர்த்தப்பட்ட பெண்மையை

தன்விரல் அம்புகளால்.

நேர்த்தியுடன் தோலுரித்துச் செல்கிறது

ஒரு தேர்ந்த வௌவாலைப்போல

உயிர்மன் உதிரஉதிர

வெடித்த பிளவுகளில் கசியும்

எச்சிலும் காமநீரும்

உடலாறு முழுக்கப் பரவிப்பாயும்

முடிவின் பிந்தைய கணத்தில்

இரத்தம் தோய்ந்த ஆடையைத்

துவைத்துப் போடுகிறேன்

பிரபஞ்ச மெங்கும் கலவி வாசனை

 

ஒருபெண் நிருபர் செய்தி சேகரிக்கச் செல்லும் போது யாரென்று தெரியாத சில நபர்களால் கூட்டு வன்புணர்வுக்கு ஆளாகிறார்.. ஆனால், அது ஒரு விபத்துதான். நான் அவமானப்பட இதில் என்ன இருக்கிறது. இதில் என் மீது எந்தத் தவறும் இல்லை என்று சொல்லிவிட்டு எப்போதும்போல் வேலைக்குச் சென்றார். இந்தச் செய்தியை அறிந்த போது அந்தப் பெண்ணை சமூகத்துக்கான முன்னோடியாக அறிவிக்கிறார் சுகிர்தராணி. மேற்கூறிய கவிதையும் இந்தச்செய்தியும் ஒன்றுபடுவதகவே தெரிகிறது. ஆணாதிக்க மிருகங்களை தனது மொழிவழியே கிழித்து போலி சமூக மனங்களை இடிக்கிறார்.

 “செத்துப்போன மாட்டைத்

தோலுரிக்கும் போது

காகம் விரட்டுவேன்

வெகுநேரம் நின்று வாங்கிய

ஊர்ச்சோற்றைத் தின்றுவிட்டு

சுடுசோறெனப் பெருமை பேசுவேன்

தப்பட்டை மாட்டிய அப்பா

தெருவில் எதிர்ப்படும் போது

முகம் மறைத்து கடந்து விடுவேன்

அப்பாவின் தொழிலும் ஆண்டு வருமானமும்

சொல்லமுடியாமல்

வாத்தியாரிடம் அடிவாங்குவேன்

தோழிகளற்ற

பின்வரிசையிலமர்ந்து

தெரியாமல் அழுவேன்

இப்போது

யாரேனும் கேட்க நேர்ந்தால்

பளிச்சென்று சொல்லிவிடுகிறேன்

பறச்சி என்று”

 

தனது சாதியின் மீது இந்தச் சமூகம் போர்த்தியிருந்த இழிவை தனது கவிதை மொழியிலேயே தலித் அரசியலாக கூர் தீட்டி அந்த இழிவைக் கிழித்து எறிகிறார். இந்த தொகுப்பில் இவருடைய மற்றக் கவிதையிலிருந்து வேறுபட்ட நேரடிக் கூற்றாக அமைந்தது இந்தக் கவிதை. இதே தொனியில் பறக்கடவுள் என்ற கவிதையும் பேசுகிறது. முகத்துக்கு முன்னால் அறைந்து செல்லும் இந்தக் கவிதைகள் உண்மையில் ஆதிக்க சமூகங்களால் அவமதிக்கப்பட்ட அவரின் பால்யகால வலியை அப்படியே உணர்த்துகிறது. இந்த தொகுப்பில் பெருவாரியான கவிதைகளில் இயற்கையையும் தனது உடலையும் இணைத்தே எழுதியுள்ள வரிகளைப் படிக்கும் போது , பெண்ணுடல் எத்தகையது என்ற கேள்வி எழுகிறது. அதன் புனிதங்கள் தீட்டுகள் கட்டுடைக்கப்பட்டு அதன் இயற்கையான தன்மையை காட்டுவதற்காக தன்னுடலையே பொருத்திக் கொள்ளும் அசாதாராண மொழி சுகிர்தாராணியுடையது.

 

 “குன்றும் சரிவுமாய் உருமாறிவரும்

என் நிலத்தின்

அகழ்ந்தெடுத்த இடத்திலெல்லாம்

பிரசவத் தழும்புகள் “

 

 “மயிர்கள் சிரைக்காத என் நிர்வாணம்

அழிக்கப்படாத காடுகளைப் போல

கம்பீரம் வீசுகிறது

இயற்கையின் பிஞ்சு நிறத்தில்

ஆழ்ந்து கிடக்கும் என்னுடலை

தூர நின்று கவட்டுக் குச்சியால்

கிளறிப் பார்க்கிறாய் “

இதுபோன்ற வரிகளில் இயற்கையின் மறு உருவமாகத் திகழும் பெண்ணின் உடலை வல்லுறவுகளால் மட்டுமல்ல திருமணம் என்ற பேரில் புனிதங்கள் கட்டமைக்கப் பட்டு பெண்ணுடல் சிதைவதை தனது வழமையான கலக மொழியில் எழுதிச் செல்கிறார்.

தன்னுடலை தானே எழுதிச் செல்லும் மொழியின் வழியாகவே பெண்ணுடலின் மீது ஆதிக்கம் செலுத்தும் எல்லாவிதமான ஆண்மைய பிம்பங்களையும். சமூக போலிமைகளையும் உடைத்தெறிவதன் வழியாக சமூகவெளியிலும், இலக்கிய வெளியிலும் எப்போதும் அதிர்வுகளை ஏற்படுத்திக் கொண்டிருப்பவை.இவரின் கவிதை மொழி.

மொழி என்பது அழகியலுக்கானது மட்டுமல்ல,அது சமூகத்துக்கானது என்பதில் உறுதியானவர்.மேலும் சாதிய அரசியலின் விளைவாக ஒடுக்கப் பட்டவர்களின் குரலை பிரதிநிதித்துவப் படுத்தும் வழியாக தனது மொழியை உடலரசியலின் ஒரு கூறாகப் பயன்படுத்தி வருபவர்.பெண்ணுடல் விடுதலை பெறாமல் பெண் விடுதலை சாத்தியமில்லை என்பதை தன் கவிதையின் அடி நாதமாகக் கொண்டு எழுதிவருபவர்.

‘ இரவுமிருகம்’ என்ற தொகுப்பின் வழியே எனக்கு அறிமுகம் ஆன சுகிர்தாராணி தொடர்ந்து தனது கலகக் குரலை தன் கவிதைகளின் வழி நிகழ்த்துபவராக அறியப்படுகிறார்.

குறிப்பு :சமீபத்தில் டெல்லி பல்கலைக் கழகத்தில் இருந்து தனது படைப்புகள் நீக்கப்பட்டதற்கு சாதிய அரசியலும் , அதற்குப் பின்னால் இருக்கும் மதமும் தான் காரணம். எனவே இதனை மதவாத அரசியலாகத்தான் பார்க்கிறேன் என்று செய்தியாளர்களிடம் தெரிவித்திருக்கிறார்.


மஞ்சுளா

 

நூல் தகவல்:
நூல்:  இரவுமிருகம்
பிரிவு : கவிதைகள்
ஆசிரியர்: சுகிர்தராணி
வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம்
வெளியான ஆண்டு  2010
விலை: ₹ 90
 பக்கங்கள் 64
Buy on Amazon

 

நூலாசிரியர் குறித்து:

சுகிர்தராணி (1973)

தமிழில் எம். ஃபில் பட்டம் பெற்றவர். வேலூர் மாவட்டத்தில் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிகிறார். இது இவருடைய இரண்டாம் கவிதைத் தொகுப்பு. முதல் தொகுப்பு 'கைப்பற்றி என் கனவு கேள்' (2002).

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *