இவரது மின்னிப் புற்களும் மிதுக்கம் பழங்களும் , பறவைகள் நிரம்பிய முன்னிரவு ஆகிய கவிதைத் தொகுப்புகளை ஏற்கனவே வாசித்த ஆவலுடன் இத்தொகுப்பினை வாசிக்க எடுத்ததும் வாசித்ததும் முடித்ததும் எப்படி நிகழ்ந்தது என்பது அறியாத நிலையில், அட்டைப்பக்கத்தை அதில் இருக்கும் வாசகங்களை திரும்பத் திரும்ப வாசித்துக் கொண்டிருக்கிறேன்.
“ இப்போது நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் ” என்று நம்மைப் பார்த்து பரிவாக\ சட்டமாக\ பகடியாக விசாரணை செய்கிறது (பழம்) பெரும் கவிஞர் சமயவேலின் இக்கவிதைத் தொகுப்பு.
எக்காலத்திற்கும் பொருந்தும் பேருண்மைகளை பிரகடனபடுத்துபவை கவிதைகள் மட்டுமே என்பதற்கு இவரது கவிதைகளே மிகச் சிறந்த சான்று .
காலம் நிலம் வெளி இவைகளின் சுவாசத்தை எளிய மொழியில் கவிஞர் இசையென பெருக்கெடுத்து ஓட விடுகிறார் இத்தொகுப்பில் உள்ள தன் கவிதைகளில்.
மார்கழி மாதத்தில் காலம் கருக்கிய மனிதர்கள் நிரந்தரமாக விடைபெறும் நிகழ்வுகள் ஏற்படுத்தும் பெருந்துன்ப உணர்வுகளும்….
குளிரும் வெய்யிலும் ஒன்றாக பரவும் தை மாதத்தின் கொண்டாட்ட உணர்வுகளும் நிறைந்தவை இத்தொகுப்பில் உள்ள கவிதைகள் அனைத்தும் என்று சொல்லத்தோன்றுகிறது.
பூசணிப்பூவை உச்சியில் சூடிக்கொண்ட சாணிப்பிள்ளையாரை
லேவண்டர் நிறத்தில் கொத்தாகப் பூக்கும் அவரைப்பூக்களை
தித்திக்கும் கரும்பை
பசும் மஞ்சளை
கூம்பு வடிவ வெள்ளை நிறப் பன்னைப்பூக்களை
மாக்கோலம் வரைந்த பொங்கல் பானைகளை
வாசல் வண்ண கோலங்களை…….
எல்லாம் பார்த்ததும் ஏற்படும் பரவசத்தில் ததும்பி வழிகிறது இவரது கவிதைகளை வாசித்த மனம் .
அதே சமயம் கருப்பு ஒரு நிழலாக தொகுப்பில் உள்ள பல கவிதைகளில் ஊடுருவி பாய்கிறது. அம்மனை மறத்தல் இயலுமா என்ற கவிதையில் “ வாஞ்சையுடன் தழுவுகிறது ஒரு சிற்றிருட்டு ” என்ற வரிகளை வாசிக்கும்பொழுதே யாருடைய அன்பின் பிடியிலோ நம் உயிர் ஆதுரத்துடன் அணைக்கப்பட்டு விடுவதை உணர்கிறோம்.
காலம் அசைக்க முடியாத ஒரு ஸ்தூல பிம்பமாக நிலைத்துவிட்டது போன்ற பிரமையை பல கவிதைகளில் உணரமுடிகிறது.
கருந்தொப்பி முதியவர் என்ற முதல் கவிதையில் வரும் முதியவர் அழுதுக் கொண்டிருக்கிறார் . அவரைப்பார்த்து யாரிவர் என்று கேட்டு தெரியாது என்று கூறியதும் புரியாமையின் அதிகாலைத்தெருவில் கவிஞன் நடந்து போய்விடுகிறான். நாம்தான் மலைத்து நின்று விடுகிறோம்
நம் மனம் இப்போது எல்லோரது வீட்டு (இல்லாத) திண்ணையிலும் காணக்கிடைக்கும் முதியவர்களை அவர்களுடன் யாராவது ஆதரவாக பேசும் சந்தர்ப்பங்கள் அரிதாகி வருவதை எல்லாம் நினைத்து பதறி விடுகிறோம். அவரை நானாகவும் நீங்களாகவும் அனைத்து முதியவர்களின் குறியீடாகவும் தான் கசியும் கண்ணீருடன் பார்க்க முடிகிறது .
நுரையீரல் பூக்கள் பூத்தகவிதையின் நறுமணம் வீசும் வெளியில் வாசகன் மிதக்கிறான்.
“ …… ரஸனைக் குலைவை உண்டாக்கும் நுரையீரல் பூ கவிதையில் வரலாமா ?
ஆனால் மரத்தில் பூத்திருக்கிறதே
ஒரு கவி எந்த மரத்தையும் வணங்கி அண்ணாந்து உச்சி துழாவி வானம் பார்க்க வேண்டும் என்று நமது பட்சிகளே அழைக்கின்றன”
அழகு என்பது காணும் பொருளில் இல்லை காண்பவர் கண்களில் உள்ளது
கவியின் கண்கள் நுண்மையானது
கவியின் மனமோ விசாலமானது.
“பட்சிகளே அழைக்கின்றன” என்று இரண்டு சொற்களில் இறைவனை வானத்திலிருந்து பூமிக்கு கட்டி இழுத்து வந்து விடும் கவியாற்றலை மெச்சியபடி கழுதையின் மீது பயணித்த மீட்பவன் மனதில் நிழலாட மேலே வாசிக்கிறோம்.
“அம்மாவின் யானைகள் தேசம்”
“அவள் இறந்து போனஅதே முப்பத்தைந்து வயது இளமையில் இருந்தாள் அம்மா
அறுபது வயது நிரம்பிய என்னை ஆரத்தழுவிக் கொண்டாள் அம்மா”
கவிதை என் அப்பாவின் மடியில் என்னை கிடத்தி விடுகிறது. நான் கேவி கேவி அழுதுக் கொண்டிருக்கிறேன். எத்தனை வயதானால்தான் என்ன அப்பா அம்மாவின் இடத்தை யாராலும் நிரப்பவே முடியாது. எல்லோரது மனதிலும் இருக்கும் ஏக்கத்தின் சாயலை பொதுமைப்படுத்தி விடும் கவிதை இது.
இவரது வாழ்க்கையை கட்டமைப்பதில் இரண்டு பெண்மணிகள் (இவரது அம்மா, இவரது அம்மாயி) அசைக்க முடியாத ஆளுமைகளாக நிலைத்து நிற்பதை அம்மாவின் யானைகள் தேசம் இவரது அம்மாயி ஒரு தூதுவளைச் செடியை வளர்த்தாள் ஆகிய கவிதைகள் அறியத்தருகின்றன
“அப்பத்தாவின் அடுக்குப்பானைகள்” ஒரு குடும்பத்திற்கு தேவையான அனைத்து விதைகளும் நிறைந்த ஒரு விதைப்பெட்டகம் என்பதை வாசிக்கும் பொழுது ஏற்படும் நெகிழ்ச்சியில் தத்தளிக்கும் மனதின் சிந்தனை உடனடியாக வேறு திசையில் பாய்கிறது.
வீட்டிற்கு ஒரு விதைக் காத்த அம்மன் வாழ்ந்த காலங்கள் அருகி உலகுக்கே விதையற்ற பயிர்களை சாகுபடி செய்ய அரசே விதையழிக்கும் அம்மனாக தலை விரித்தாடும் கலிகாலத்தின் அவலத்திற்கு சாட்சியாக இக்கவிதை நின்று கேள்வி கேட்பது விழ வேண்டிய காதுகளில் விழவேண்டுமே என்ற கவலை பற்றிக்கொள்கிறது .
.
எல்லோருக்குள்ளுமே ஒரு குட்டிப்பையனின் கைகளைப் பிடித்துக்கொண்டு ஓராயிரம் கவிதைகள் வாழ்வின் அந்தகாரத்தை கிழித்து தோரணம் கட்டி விளையாட்டு காட்டுகிறது. அதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும் பொழுதே முடிந்தது வாழ்க்கை என்று முடிந்து விட வேண்டும் நம் வாழ்வும் என்ற பேராசை எழுப்பும் கவிதை ஒரு குட்டிப்பையனாக இருந்தபொழுது என்ற கவிதை
“ஆமைகளும் குருவிகளும் ஒரு குடும்பம்
நான்
நானும் அந்தக்குடும்பம்தான்”
அவ்வளவுதான் முடிந்து விட்டது கவிதை
ஆஹா யாருக்குத்தான் இப்படி இயற்கையோடு தன்னை அடையாளப்படுத்தி இணைத்துக்கொள்ள ஆசை இருக்காது. நானும் அந்தக் குடும்பம்தான் என்று கை உயர்த்தி சொல்லத் தூண்டும் கவிதையின் அழகில் சொக்கிப்போகிறோம்.
வாசிப்பவருக்கு புரிதலில் சிக்கலைத்தராத, தன்னை புறக்கணிக்கும் கவிதைக்குள் பிரவேசிக்கத் துடிக்கும் வாசகனின் ஆர்பாட்டங்கள் எதுவும் வேண்டாத கவிதைகள் சமயவேலின் கவிதைகள்.
பயணித்து அவர் கவிதைகளை அவர் படைத்த அழகியலோடு அவைகளை புரிந்துகொள்ள முடிவது என்னைப் போன்றவரகளுக்கு ஒரு வரப்பிரசாதம் என்றுதான் சொல்வேன் .
கவிதை மொழி இயல்பில் கைவரப்பெற்ற கவிதைக்காரனின் உணர்வுகள் கவிதைகளில் பிடிபட்டுள்ளதை இரசித்து இரசித்து வாசிக்க வாசிக்க திகட்டினாலும் விடாமல் வாசிக்க தொடரச்சொல்லி தூண்டும் கவிதைகள் இவை.
ஆங்கில இலக்கிய வரலாற்றில் ரொமாண்டிசிசம் என்ற இயக்கத்தை முன்மொழிந்த மகா கவி வோர்ட்ஸ்வொர்த் ஒரு இயற்கை உபாசகன். கவிஞர் சமயவேலும் மீண்டும் மீண்டும் தன்னை இயற்கையின் உபாசகன்/காதலன் என்று பிரகடனப்படுத்திகொள்ளும் இன்னுமொரு தொகுப்பு .
“ …….ஆமாம் நாங்கள்,
நானும் பழமும் என்ன செய்துக்கொண்டிருக்கிறோம் ?”
இந்த வரிகளை கவனியுங்கள்.
ஞானத்தின் திறவுகோள் அனுபவமா? அனுபவத்தில் எழும் கேள்வியா? என்றால் நான் இரண்டும் என்பேன் . சமயவேலும் “ இப்போது நீங்கள் என்ன செய்துக்கொண்டிருக்கிறீர்கள்” என்று கேட்கிறார் . இந்த கேள்வி உலக மாந்தரை நோக்கி போகிற போக்கில் வீசி விட்டுப் போகும் கேள்வி இல்லை .
பழச்சாறாக அவரது நாவின் ஆயிரம் ருசியரும்புகளை ஊடுறுவுவது பேரிக்காயின் சுவை மட்டுமா ?
“எந்த நீரோ எந்தப் பனியோ எந்த மேகமோ
எந்த மழையோ எந்த மரமோ”
என்ற கேள்விகளுக்கு பதிலாக பிரபஞ்சத்தை நோக்கி கை உயர்த்தி வணங்கி அதன் காருண்யத்தை அனைவரின் மீதும் பொழியச்செய்யும் கவியின் நற்கருணையை அல்லாமல் நீங்கள் எதைச்சொல்ல முடியும்?
கவிதைகளை வாசிக்காத கவிதைகள் பற்றிய பெரிய அளவிலான மதிப்பீடுகள் இல்லாத நான் கவிதைகள் பக்கம் எப்படித் திரும்பினேன் என்பது மிகுந்த ஆச்சர்யத்தை எனக்குள் விதைக்கிறது.
முழு முதல் காரணம் முகநூல்தான் என்று உறுதியாக உணர்கிறேன். வாழ்க முகநூல் !
கவிதைகளை பல கவிஞர்களை அறிமுகப்படுத்தியது இந்த தளம் என்பது அளவற்ற மகிழ்ச்சி தரும் ஒரு விடயம்.
.
இந்த முகநூல் என்னும் வசீகர மாயா உலகத்தில் அறிமுகமான நல்லதொரு நண்பர் சிறந்ததொரு மனிதர் சமயவேல் அவர்கள் என்பதை நான் இங்கே குறிப்பிட விரும்புகிறேன். மனிதனின் அத்தனை இயக்கமும் மனிதனைத்தேடிதான் தொடர்கிறது.
தேடுவோம் கண்டடைவோம் ! நல்ல மனிதர்களை அவர்தம் கவிதைகள் மூலமும் இலக்கியத்தின் வாயிலாகவும்.
வாழ்த்துக்கள். !
பிரிவு : கவிதைத் தொகுப்பு
ஆசிரியர் : சமயவேல்
வெளியீடு : தமிழ்வெளி
வெளியான ஆண்டு : 2019
விலை : ரூ 85