பார்க்கும் பொருளை அல்லது பாதித்த நிகழ்வுகளை உணர்வுகளாக மாற்றிப் பதிவிடுவது கவிதை. உள்ளத்தில் உள்ளது கவிதை என்பார் கவிமணி. பா புனைகின்ற ஆற்றல் அனைவருக்கும் வாய்த்து விடுவதில்லை அதனைக் கைப்பற்றியோர் அதிலிருந்து விடுபடுவதும் இல்லை. குறிப்பிடத்தக்கப் பெண் கவிஞர்களில் ஒருவர் மஞ்சுளா. அவரது கவிதைத் தொகுப்பு இன்னுமொரு மழை.
நான்கைந்து கவிதைகளை மேற்கோளிட்டு வாசகர்களின் இதயங்களில் எளிதில் சிம்மாசனமிட்டு அமர்ந்து கொள்வதற்குக் கவிதைகளின் தனித்துவமான பேச்சுமொழிதான் காரணம். அத்தகைய கவிதை மொழி மஞ்சுளாவுக்கு இயல்பாகவும் சிறப்பாகவும் அமைந்திருக்கிறது என்று கவிஞர் மு.செல்லா அணிந்துரை வழங்கி இருக்கின்றார்.
இத்தொகுப்பில் மொத்தம் 68 கவிதைகள் இடம் பெற்றிருக்கின்றன. ஒன்றிரண்டு குறுங்கவிதைகள் தவிர்த்து அனைத்துமே நீள் கவிதைகள் தான். நீள் கவிதையென்றால் வரிகள் மட்டும் நீள் என்பதல்ல. அதன் நேர்த்தியும் சொல்ல வந்த கருத்தின் ஆழமும் நீள்தான்
‘அடையாளம்’ எனும் முதல் கவிதையே நம்மை ஈர்த்து விடுகிறது.
அடையாளம்
“தனிமை தின்னக் காத்திருக்கும் வீடு என்னுடையது
முன்புறக் கதவு தொடங்கி
பின்புறக் கதவு வரை
என் வாழ்வின் பயணம்
மிக அற்புதம்
ஒவ்வொரு சன்னலிலும் எனக்கான விளக்கை
எடுத்துத் தரும் சூரியன்
தன் பிரகாசத்தை இழப்பதேயில்லை” என்று தொடங்கி
“பெண்ணின் உடலைப் புறக்கணித்து வாழும்
மதப் புனிதங்கள்
சொல்லி வைத்தபடி
தங்கள் பாவங்களைத் தீர்த்தங்களில் கழுவிக் கொள்கின்றன”
என்றொரு ஆழமான வரிகளில் சூழலை அடையாளப்படுத்தி இருப்பார். இயற்கையில் தொடங்கி இவ்வாறு அழுத்தமாக நிறைவு செய்திருப்பது ஒரு புதிய உத்தி.
கேளா ஒலிகள்
“பறவைகளைப் போல் இருப்பதில்லை
மனிதர்களுக்குப் பறவைகளும் நட்சத்திரங்களும்
தலைக்கு மேலே இருப்பது பற்றி அக்கறை கொள்வதில்லை மனிதர்கள்
.
.
இரவு நட்சத்திரங்களோடு
ரகசியம் ஒப்பந்தம் செய்து கொண்டுவிட்டன பறவைகள்
இனி நிமிர முடியாது போகலாம் நம் தலைகள்”
வானில் மின்னிக் கொண்டிருக்கின்ற நட்சத்திரங்களை பறவைகளாக உருவகமாக மாற்றி மனிதர்களின் வயிற்றுப்பாடுகளைக் கவிதைக்குள் கொண்டு வந்து எத்தகைய இரவு ஒப்பந்தம் செய்து கொண்டிருந்தாலும் பறவைகள் பறவைகள் தான். நாம்தான் நிமிர இயலாத தலைகளைக் கொண்டிருக்கிறோம் என்று யதார்த்த நிலையைப் பதிவு செய்திருக்கின்றார்.
தடங்கள்
“மனம் விரிந்து கொள்ள
காற்று உள் நுழைந்தது
இமைகள் திறந்து கொள்ள வெளிச்சம் நுழைந்தது
கேள்விகள் எதுவும் செவிகளை அண்டவில்லை
பறவை தனது சிறகுகளைக் கொடுக்க வந்த போது பறவையாய் மாறியிருந்தேன்
..
எங்கிருந்தோ வந்த அம்பில் சிக்கி உடல் தாண்டிய பயணத்தைத் தொடங்கினேன்”
ஒவ்வொரு பொருளாகக் கூடு விட்டுக் கூடு பாய்ந்து அந்நிலை உய்த்தபின் இறுதியாக எங்கிருந்தோ இருந்து வந்து தாக்கிய அம்பில் அதன் வலி சுமந்து படி பயணத்தைத் துவங்கியிருக்கிறேன் என்று பயணப்பட்டுக் கொண்டிருப்பதைக் கவிதையாக்கித் தந்திருக்கின்றார்.
எங்கு காணினும்
பாரதியின் வரிகளை எடுத்துக் கொண்டு மிகப் பொருத்தமான வார்த்தைகளால் இந்த கவிதையினை கட்டமைத்துக் கொண்டு இருக்கின்றார் மஞ்சுளா.
“எங்கு காணினும் நீரடா!
என்ற உலகம் கண்டு
கண்ணுறக்கம் கலைந்தெழுந்த போது
கையில் மினரல் வாட்டர் பாட்டில்களுடனும்
காலிக் குடங்களுமாக
அலைந்து கொண்டிருந்தனர்
எங்கள் ஊர்ப் பெண்கள்!”
என்ற வலி மிகுந்த வரிகளைப் படைத்திருக்கின்றார். எங்குப் பார்த்தாலும் நீர் நிறைந்து ததும்பியிருந்த காலங்கள் உண்டு. தற்பொழுது குடிநீருக்கே வெகு திண்டாட்டம். எங்குச் சென்றாலும் கையில் ஒரு மினரல் வாட்டர் பாட்டிலுடன் செல்லக்கூடிய அவல நிலை. இதைப்பற்றிக் கவலைப்படாத ஒரு உலகத்தில்
பயணப்பட்டு வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். அங்கு காலிக் குடங்களுடன் மக்கள் அலைந்து கொண்டிருக்கின்றார்கள். அதில் நம் குடிநீர் தாகமும் அடக்கம் என்பதனை தெளிவாக உணர்த்தி இருக்கின்றார்.
நான் எப்போது நதியாவேன்?
“அதோ
அன்று ஓடிய நதி தான் அது
இன்று நதியின் வாழ்க்கை
நாக்கறுந்து கிடைக்கிறது சிறுவர்கள் மீன்களாகவும்
மீன்கள் சிறுவர்களாகவும்
மாறி மாறி நீந்தினோம்
..
பூகோளத்தில்
நதியைப் படித்த பள்ளிச் சிறுமி நதியைப் பார்க்க வந்து
பூகோளம் பொய்யென்று சொன்னாள்”
நாம் கண்ட, நாம் துள்ளி விளையாடிய நதியின் அவல நிலையினை இதைவிட வேறெப்படி வலி மிகுந்த வார்த்தைகளால் சொல்லி விட இயலும். பூகோள வரைபடங்களில் நதியினை படித்த பள்ளி படித்த பள்ளிச் சிறுமி அதனைப் பார்க்க நேரில் வந்து அது கோடுகளாக இருப்பது கண்டு பூகோளம் பொய் என்று சொல்வதாக இயம்பி இருப்பது முற்றிலும் உண்மை. நாம் நதிகளைத் தொலைத்துத்தானே இருக்கின்றோம்.
கனவுகளற்ற மனிதர்கள்
“காட்டு மரங்கள்
தன்னிச்சையாய் பாடிக் கொண்டிருக்கின்றன புல்வெளிகளற்ற வலைத்தளங்களில்
மேயும் ஆடுகள்
இரவு பகலற்ற உலகத்தைத்
தனதாக்கிக் கொண்டு
மனித வாழ்வின்
அர்த்தமுள்ள பொழுதுகளைப்
பகடி செய்கின்றன.
..
செல்லிடைப் பேசிகளுடன் குழந்தைகள் சிரித்துக் கொண்டிருந்தன
எதுவுமில்லாமல் வானம் அமைதியாயிருந்தது.”
இதுவும் நாம் வாழ்ந்த ஒரு இயற்கையான சூழல் குறித்தான கவிதையாகும். நாம் வாழ்ந்த வாழ்வினை இரவு பகலற்ற அர்த்தமுள்ள பொழுதுகளை இன்றைய நாகரிக வாழ்வு பகடி செய்கின்றன என்று எழுதி செல்லிடை பேசிகளில் குழந்தைகள் சிரித்துக் கொண்டிருக்கின்றன. ஆனால் வானம் அமைதியாக இருக்கிறது. இயற்கையோடு இயைந்த வாழ்வு புறக்கணிக்கப்பட்டு செயற்கை உலகில் உலாவி சிற்றின்பத்தைப் பேரின்பமாகக் கருதி வாழக்கூடிய சூழலைக் கவிதை வரிகளில் சாடி இருக்கின்றார்.
சகாரா
“இலையுதிர் காலத்தின் அதிகாலைப் பொழுதொன்றில் சருகுகளின் பாடல்களை
என்னருகில் கொண்டு வந்து சேர்க்கும்
காற்றின் வெப்பத்தை முத்தமிடுகிறேன்
முதல் காதலாய் தொடங்குகிறது இக்கவிதை
…
உயிரணுக்கள் மிதக்கும் பாழ்நிலத்தில்
பெருமழையைப் பொழியும் வெப்பமொன்று
கர்ப்பத்தின் சிசுவென அசைகிறது
…
பெருங்குருதியாய்
என்னுடலில் பாயும் வெப்பமொன்று
மரணவெளியில்
புதையுண்ட காதலொன்றை
என் நினைவில் பிரசவிக்கிறது.”
காதலின் வலியினை பாலை நிலத்து வெம்மையோடு ஒப்பிட்டு கவிதை புனைந்திருப்பது வசிகரிக்கிறது. அந்த உணர்வை நம்முள்ளும் புகுத்தி நமக்கும் காதல் தீயின் வெம்மையினை உணரச் செய்கின்றார்.
மயக்கும் நடையிலான நவீனத்துவ கவிதை நடையிலிருந்து மாறுபட்ட திறந்த மொழி நடையைக் கொண்ட கவிதைகளை இத்தொகுப்பில் காண முடிகிறது என்று பறைசாற்றும் பின்னட்டை வரிகள் உண்மை. புறத்தே பெய்கின்ற மழை அகத்தேயும் பெய்கிறது. ஆம். அது கவிதை மழை. இன்னுமொரு மழை.
கவிஞர் மஞ்சுளா மதுரையைச் சேர்ந்தவர். கடந்த பதினைந்து ஆண்டுகளாக மரை, செம்மலர், உயிரெழுத்து, அம்ருதா, வடக்கு வாசல், புதிய பார்வை, புதிய காற்று, இனிய நந்தவனம், கல்வெட்டுப் பேசுகிறது, மனித நேயம், புதுகைத் தென்றல், நிலவெளி, புரவி, நுட்பம்- கவிதை இணைய இதழ் முதலான இலக்கியச் சிற்றிதழ்களில் கவிதைகள் எழுதி வருகிறார். இது தேனீர் காலம், தீமிதி, மொழியின் கதவு, இன்னுமொரு மழை, ஒரு பொத்தல் குடையும் சில போதி மரங்களும், வாகை மரத்தின் அடியில் ஒரு கொற்றவை ஆகிய ஆறு கவிதை நூல்களை எழுதியுள்ளார். மொழியின் வழியாக வாழ்வின் போதாமைகளை மாயங்களை மௌனங்களை ரகசியங்களை உடைத்து வெளிவரும் சொற்களையே தன் கவிதை வெளியில் மிதக்க விடுகிறார். மொழியின் கதவு என்ற நூலுக்காகத் திருப்பூர் அரிமா சங்கத்தின் 'சக்தி' விருது (2012), தமிழ்நாடு முற்போக்குக் கலை இலக்கிய மேடை (தேனி) வழங்கிய அசோகமித்திரன் நினைவு படைப்பூக்க விருது (2019), உள்ளிட்ட விருதுகளைத் தனது கவிதை நூல்களுக்காகப் பெற்றுள்ளார். முத்தமிழ் இலக்கிய மன்றம் மதுரை, தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் மதுறை, வளரி போன்ற கலை இலக்கிய அமைப்புகளில் தனது இலக்கியப் பங்களிப்புகளை நிகழ்த்தியுள்ளார். தாரகை, வளரி, பயணம் இதழ் போன்ற பல்வேறு இலக்கிய அமைப்புகளின் நினைவுப் பரிசுகளையும், விருதுகளையும் பெற்றுள்ளார்.
நூல் : இன்னுமொரு மழை ஆசிரியர் : மஞ்சுளா வகை : கவிதைகள் வெளியீடு : படி வெளியீடு வெளியான ஆண்டு : முதற்பதிப்பு ஆகஸ்ட் 2018 பக்கங்கள் : 96 விலை : ₹ 80