இஸ்ஸத் ரீஹானா முஹம்மட் அஸீம் என்ற இயற்பெயர் கொண்ட அனார் 1990 களின் நடுப்பகுதியிலிருந்து ஈழத் தமிழின் நவீன கவிதைக்கு அறிமுகம் ஆன மிக முக்கியமான கவிஞராக அறியப்படுகிறார்.
“எனக்கு கவிதை முகம்” என்ற அவரது இரண்டாவது தொகுப்பின் வழியே எனக்கு அறிமுகமாகியிருக்கும் அனாரின் கவிதைகள் வழியே அவரின் மொழியை அறியும் ஆர்வமும் எனக்கு ஏற்பட்டது.
மொழி வழியே தனது கனவுகளையும், அனுபவ வெளியில் அவர் பழகிய புழங்கு மொழியைக் கொண்டு வயல் வெளியளவு சொற்களாகவும், கனவின் கத்தி பாய்ந்த கவிதைகளாகவும் நம் முன் வாசிக்க கிடைக்கின்றன. வாசிக்க… வாசிக்க… நம் முன் விரிகின்ற காட்சிப் புலங்கள் அவரது நிலம், மொழி, வேட்கை, காதல், கனவு, தனிமை, காத்திருப்பு, பதற்றம் என வெவ்வேறு திசைகளில் நீள்கின்றன.
பெண் பலி (பக் 27)
அது போர்க்களம்
வசதியான பரிசோதனைக் கூடம்
வற்றாத களஞ்சியம்
நிரந்தரச் சிறைச்சாலை
அது பலிபீடம்
அது பெண் உடல்
உள்ளக் குமுறல்
உயிர்த்துடிப்பு
இருபாலருக்கும் ஒரே விதமானது
எனினும்
பெண்ணுடையது என்பதனாலேயே
எந்த மரியாதையும் இருப்பதில்லை அதற்கு
என் முன்தான் நிகழ்கின்றது
என் மீதான கொலை.
இந்த உலகம் தோன்றியது முதல் மனித இனத்தில் மட்டுமே பெண் இனத்தின் மீதான ஒடுக்குமுறைகளும், பாலியல் வன்முறைகளும் வற்றாத ஜீவநதியைப் போல அவள் கண்ணீரும், குருதியும் நிலமெங்கும் பெருகி ஓடுகின்றன.
மனித சமூகத்தில் பெண் உடல் எப்போதும் பலிபீடமாகவே காட்சியளிக்கிறது. அவளது உயிர்த் துடிப்பு அடங்கும் வரை அவள் மீதான கொலைகள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. மரியாதையின் நிமித்தம் என்ற பெயரில் சில வெளிப்பாடுகள் கூட வெறும் பகட்டுகளாக மாறி அவளறியா வெளிகள் இன்றும் இருளுக்குள் இருக்கும் விளக்குகள் போல் பூட்டியே கிடக்கின்றன.
பெண் இனத்தின் ஒட்டு மொத்த குரலை “பெண்பலி “என்ற சிறிய கவிதைக்குள் மிகச் செறிவாகவும் கவனமாகவும் வார்த்தைகளை கையாள்வது சமூகத்தில் பெண் மீதான நுண்ணரசியலை வெளிக்காட்டுகிறது.
வெயிலின் நிறம் தனிமை (பக் 33 )
நீண்டு உயர்ந்த மரங்களுக்கிடையில்
விழுந்து முகம் பார்த்தேங்குகின்ற
அந்தி வெயில் துண்டங்களில்
என் தனிமையின் பெரும்பாரம்
ரத்தமாய் கசிகின்றது.
தனிமையின் துயர்களை அந்தி வெயிலில் ரத்தமாய் கரைக்கும் இவரது உஷ்ணப்பெருமூச்சுகள் வெயிலின் எல்லா நிறங்களிலும் ஊடுருவிக் கிடக்கிறது.
எனக்குக் கவிதை முகம் (பக் 42)
..........................
...........................
இக் காலைக் குளிரில்
முகை வெடித்த பூக்களின் காதுகளுக்குள் கோள் மூட்டுகின்றது
பெயர் தெரியா ஒரு காட்டுப் பூச்சி
அதனாலென்ன
எனக்குத் தெரியும்
அவன் வாள் உறைக்குள்
கனவை நிரப்புவது எப்படியென்று
எனக்குத் தெரியும்
மகத்துவம் மிகுந்த இசை
தீர்வதேயில்லை
நான் பாடல்
எனக்குக் கவிதை முகம்.
ஆழமான கடலில் ஒளிந்து கிடக்கும் நுண்ணிய ஒளித்திரள்கள் போல் தன் மனதின் அடியாழத்தில் மீட்டிக் கொண்டேயிருக்கும் மகத்துவமிக்க ஒரு பாடலை இசைக்கும் இவரது உணர்வலைகள் எப்போதும் தீராதது.
நான் பாடல், எனக்கு கவிதை முகம் என்று அவர் வெளிப்படுத்தும் சொற்களின் வழியேதான் அதன் தீவிரத்தன்மை வெளிப்படவேண்டியிருக்கிறது.
நான் பெண்- (பக் 43)
ஒரு காட்டாறு
ஒரு பேரருவி
ஓர் ஆழக் கடல்
ஓர் அடை மழை
நீர் நான்
கரும் பாறை மலை
பசும் வயல் வெளி
ஒரு விதை
ஒரு காடு
நிலம் நான்
உடல் காலம்
உள்ளம் காற்று
கண்கள் நெருப்பு
நானே ஆகாயம்
நானே அகண்டம்
எனக்கென்ன எல்லைகள்
நான் இயற்கை
நான் பெண்.
இயற்கையின் பேருருக்கள் அனைத்தும் பெண்ணில் சொற்களாகவே நிரம்பியுள்ளன. அந்த இயற்கையின் மொழியை தனதாக்குபவள் பெண். பெண் கடலாவதும், காற்றாவதும், நெருப்பாவதும், நீராவதும் அவளது சுயத்தை நினைவுபடுத்துவதாகவே உள்ளன.
பெண் தன்னை இயற்கையின் அடையாளங்களாக உணரத்தொடங்கும்போதுதான் தன்னை பெண் என முழுமையாக நம்புகிறாள். அதை நிரூபிக்கும் வழியாகவே கவிதையின் இயங்கியலை அதன் பொருளாகவும், வடிவமாகவும் கட்டமைத்திருப்பது கவனிக்கத் தக்கது.
நிழலின் அலறல்- (பக் 48)
.........
................
இழந்து விட்ட சொர்க்கத்தின்
சாபம் படிந்த மணல் திட்டுக்களில்
சபிக்கப்பட்ட தீர்ப்புக்களாய்
எனதற்ற நீ
உனதற்ற நான்
ஒப்பிட முடியாத சோகத்தை நிரப்பி வைத்திருக்கும் இறுதி வரிகளில் எப்போதும் நிழலாடிக் கொண்டிருக்கும் ஒரு மௌனத்தின் துடிப்பை, அளவற்ற பதற்றத்தை, இருண்மைக்குள் படிந்து கிடக்கும் ஒளி வரிகளால் தனிமையின் துயரத்தை கவிதைச் சித்திரமாக தீட்டுகிறார்.
அனாரின் இந்த ஒரு தொகுப்பை மட்டுமே வைத்து இவரது மொழியின் முழுப் பரிமாணங்களை அறிய முடியாது போகினும், எனக்கு கிட்டிய ஒரு நல் வாய்ப்பாக நானறியும் இவரது மொழி என்பது எளிமையும் இருண்மையும் அடர்ந்த சொற் சித்திரங்களாகவே காணக் கிடைக்கிறது. மேலும் இவரது மொழி தன்னுணர்ச்சிகள் பீறிடும் lyrical poet என்ற வகையை சேர்ந்தவை.
என்ற போதிலும், பெண்களின் துயர க் குரலாக ஒலித்துக்கொண்டேயிருக்கும் தன்னுணர்வுச் சித்திரங்களின் துணையோடு இவரது நிலப்பரப்பின் துயரார்ந்த அரசியல் சித்திரங்களையும் தனது அனுபவப் பரபிற்கேற்ப விரித்து வைத்துள்ளார். இதற்கு சான்றாக, “மேலும் சில ரத்தக் குறிப்புகள் “என்ற கவிதையை எடுத்துக் காட்டலாம்.
இறுக்கமான சமூகக் கட்டமைப்பிலிருந்து வெளிவரும் இவரது கவிதைக்கான மொழி வாசிப்பவருக்கு சவால் விடும் தொனியில் குரலற்ற குரல் போல் தொகுப்பெங்கும் ஒலித்துக் கொண்டேயிருக்கிறது.
முன்னுரையில் கவிஞர் சேரன் குறிப்பிடுவது போல் சொல்லின் வெளியில் மிதந்து வரும் கவிதைப் படிமம். மேலும், இது புதியதோர் உத்தி.
- கவிஞர் மஞ்சுளா
நூலாசிரியர் குறித்து :
அனார் (1974) கிழக்கிலங்கையின் சாய்ந்தமருதுவில் பிறந்தவர். இவரது இயற்பெயர் இஸ்ஸத் ரீஹானா முஹம்மட் அஸீம். 'ஓவியம் வரையாத தூரிகை' என்ற இவரது முதலாவது கவிதைத் தொகுதிக்கு, 2005ஆம் ஆண்டு இலங்கை அரசின் சாகித்திய விருதும், வட-கிழக்கு மாகாண அமைச்சின் சாகித்திய விருதும் கிடைக்கப்பெற்றன. இது இவரது இரண்டாவது கவிதைத் தொகுதி.
தொடர்புக்கு:
542பி. கபூர் வீதி
சாய்ந்தமருது - 16
32280
இலங்கை .
மின்னஞ்சல் : [email protected]
நூல் : | எனக்குக் கவிதை முகம் |
பகுப்பு : | கவிதைகள் |
ஆசிரியர்: | அனார் |
வெளியீடு: | காலச்சுவடு பதிப்பகம் |
ஆண்டு : | முதற் பதிப்பு : செப்டம்பர் 2007
திருத்தப்பட்ட பதிப்பு : டிசம்பர் 2010 |
பக்கங்கள் : | 56 |
விலை : | ₹ 40 |
கிண்டில் பதிப்பு : |
கவிஞர் மஞ்சுளா மதுரையை சேர்ந்தவர். கடந்த பதினைந்து ஆண்டுகளாக பல இலக்கிய சிற்றிதழ்களில் கவிதைகள் எழுதி வருகிறார்.
இதுவரை ஐந்து கவிதை தொகுதிகள் வெளிவந்துள்ளன.
மொழியின் வழியாக வாழ்வின் போதாமைகளை மாயங்களை, ரகசியங்களை, உடைத்து வெளிவரும் சொற்களையே தன் கவிதை வெளியில் மிதக்க விடுகிறார்.
“மொழியின் கதவு ” நூலுக்காக திருப்பூர் அரிமா சங்கத்தின் சக்தி விருது (2012), தமிழ் நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடை( தேனி)
வழங்கிய அசோக மித்திரன் நினைவு படைப்பூக்க விருது (2019) உள்ளிட்ட விருதுகளைத் தனது கவிதைகளுக்காக பெற்றுள்ளார். நவீன கவிதை குறித்த நூல் விமர்சனங்கள் செய்து வருகிறார்.