விஜய் மகேந்திரனின் “கைவிடப்பட்டவர்களின் கூடாரம்” நாவல் விரைவில் வெளியாக  இருக்கிறது. 

இந்நாவல் குறித்து எழுத்தாளர் விஜய் மகேந்திரன் எழுதிய பதிவு: 

“சிறுகதை என்று ஆரம்பித்து எழுத ஆரம்பித்தேன். படிப்படியாக வளர்ந்து நாவல் வடிவத்திற்கு வந்துவிட்டது. சில சமயங்களில் புனைவு என்னும் மாயப்புதிர் நம்மை மிக அந்தரங்கமான இடத்திற்கு அதுவாகவே இழுத்துச் சென்று நிறுத்தி விடுகிறது. அப்படித்தான் இந்த. “கைவிடப்பட்டவர்களின் கூடாரம்” நாவல் உருவானது. வாழ்க்கையில் பல்வேறு சூழ்நிலைகளில் ஜெயிக்கும் வாய்ப்பிருந்தும்  பல்வேறு சூழ்ச்சிகளால் தோற்கடிக்கப்பட்ட நாற்பது வயதை நெருங்கிய மூவர் வாழவே வழியில்லாத நிலையில் சிதிலமடைந்த பழைய மேன்சன் ஒன்றில் சந்தித்து கொள்கிறார்கள். வாழ்வின் நம்பிக்கைக்கான சிறு கீற்று கூட  தென்படாத நிலையில் வாழ முற்படுகிறார்கள். அந்த மனிதர்களின் நம்பிக்கைகள், அவ நம்பிக்கைகள், ஒழுக்க மீறல்கள், குற்ற உணர்வுகள், அனைத்தையும்  தாண்டி மிச்சமிருக்கும் மனிதம் இப்படி  எல்லாவற்றையும் அப்பட்டமாக எழுத முயன்று இருக்கிறேன். எனது எழுத்துக்களில் துயர சுவை அதிகம் கூடியது ”கைவிடப்பட்டவர்களின் கூடாரம்”  தான் என்பதை துணிந்து சொல்வேன்.”

நூல் தகவல்:
நூல் : கைவிடப்பட்டவர்களின் கூடாரம்
பிரிவு : நாவல்
ஆசிரியர்: விஜய் மகேந்திரன்
வெளியீடு: கடல் பதிப்பகம்
ஆண்டு : 2021
பக்கங்கள் : 150
விலை : ₹ 160

நூலாசிரியர் குறித்து:

விஜய் மகேந்திரன்

நகரம் சார்ந்த உதிரி இளைஞர்களின் வாழ்வியலை தனது கதைகளில் மையப்படுத்தும் விஜய் மகேந்திரன் ,1978ஆம் ஆண்டு மதுரையில் பிறந்தவர். 2006ஆம் ஆண்டிலிருந்து சிற்றிதழ்களில் கதைகள் எழுதிவருகிறார். இளம் படைப்பாளிகளை மையமாகக் கொண்டு ”இருள் விலகும் கதைகள்” என்ற தொகுப்பினை தொகுப்பாசிரியராக இருந்து உருவாக்கியிருக்கிறார். பிஸியோதெரபி துறையில் பணியாற்றி வந்த இவர், இப்போது ஊடகத் துறையில் பணியாற்றி வருகிறார்.

அயர்லாந்து நாட்டின் பிஸியோதெரபி கவுன்சிலில் உறுப்பினராகவும் உள்ளார். இப்போது சென்னையில் வசித்து வருகிறார். ”நகரத்திற்கு வெளியே” இவரது சிறுகதை தொகுப்பு. 2011 ஆண்டுக்கான ஜெயந்தன் படைப்பிலக்கிய விருதை சிறந்த சிறுகதை தொகுப்புக்காக ”நகரத்திற்கு வெளியே” பெற்றுள்ளது. இந்த தொகுப்பிலுள்ள சில கதைகள் உயிர் எழுத்து கதைகள் , சிக்கிமுக்கி கதைகள் , மதுரை சிறுகதைகள் ஆகிய தொகுப்புகளிலும் இடம் பெற்றுள்ளது. 2015 ஆம் ஆண்டின் சிறந்த விமர்சகருக்கான ”படி”அமைப்பின் விருதையும் பெற்றுள்ளார். . இவரது ”ஏ.ஆர்.ரஹ்மான் – நவீன இந்திய திரையிசையின் அடையாளம் ”புத்தகத்தை மின்னம்பலம் பதிப்பகம் பதிப்பித்துள்ளது. இதுவரை இந்த நூல் நான்கு பதிப்புகளை கண்டுள்ளது. இவரது கட்டுரை தொகுப்பு ”சாமானிய மனிதனின் எதிர்குரல்” இவரது நாவல் ”ஊடுருவல்” ஆகியனவும் வெளிவந்துள்ளது.

இணையத்திலும், இதழ்களிலும் நூல் விமர்சன கட்டுரைகளும் எழுதி வருகிறார். இவரது தொடர் இலக்கிய பங்களிப்பை பாராட்டும் விதமாக தமிழ்நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடை அமைப்பு 2019 ஆம் ஆண்டுக்கான ”அசோகமித்திரன் படைப்பூக்க விருது ”கொடுத்துள்ளது.