நீரை மகேந்திரன், பத்து ஆண்டுகளுக்கு மேலாக ஊடக பணி அனுபவத்துடன் தற்போது தனியாக துருவம் மீடியா என்கிற பெயரில் மின்னணு ஊடக முயற்சிகளில் இறங்கி உள்ளார். அவரது நிறுவனத்தின் சார்பில் துருவம் வெளியீடு என்கிற பதிப்பகம் தொடங்கப்பட்டுள்ளது. இலக்கியம், அரசியல், பண்பாட்டு வெளியில் துருவம் பதிப்பக முயற்சிகள் இருக்கும் என அறிவித்துள்ள நீரை மகேந்திரன், தற்போது, சென்னை புத்தகக் கண்காட்சியையொட்டி 4 நூல்களை கொண்டு வருகிறார். துருவம் வெளியீடு புத்தகக் கண்காட்சியில் விற்பனை அரங்கமும் அமைக்க திட்டமிட்டுள்ளது. பதிப்பக பணியை நிறுவன செயல்பாடுகளில் அங்கமாகக் கொண்டுள்ளதால், ஆண்டு முழுவதும் பதிப்பக பணியும் தொடரும் என துருவம் வெளியீடு அறிவிக்கிறது. முதற்கட்டமாக கொண்டு வர உள்ள நூல்களின் விவரம்.
1
காலத்தை வரைந்த தூரிகைகள்
நேர்காணல் இதழின் நேர்காணல்கள்
சந்திப்பும், தொகுப்பும் – பவுத்த அய்யனார்.
நேர்காணல் என்கிற வடிவம் எப்போதும் அசாத்தியமானது. ஆளுமைகளின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தை படிமமாக்கும் ஒரு செய்நேர்த்தி. அந்த வகையில் 1996 ஆம் ஆண்டு முதல் புதியபார்வை, விண்நாயகன், காலச்சுவடு, உலகத்தமிழ் இணைய இதழ், ஆழி, தீராநதி ஆகிய இதழ்களுக்காக பல ஆளுமைகளுடன் சந்திப்பு நிகழ்த்தியவர் பவுத்த அய்யனார். இவர் எடுத்த நேர்காணல்கள் வெளிவந்த சமயத்திலேயே வாசகர்களிடம் கவனம் பெற்றவை. அதன் தொடர்ச்சியாக தமிழின் முதல் முயற்சி எனச் சொல்லும் முகமாக ” நேர்காணல் “என்ற இதழைத் தொடங்கி 6 இதழ்கள்வரை கொண்டு வந்தார். தமிழ்ச் சூழலில் முக்கிய முயற்சியான அந்த இதழ்களில் இடம்பெற்ற ஆளுமைகள் ந.முத்துசாமி , வண்ணநிலவன், நாசர், வெ.ஶ்ரீராம், பி. கிருஷ்ணமூர்த்தி , தீபச்செல்வன் ஆகியோரின் நேர்காணல்களை மட்டும் தொகுப்பாக துருவம் வெளியிடுகிறது.
2
முள்
முத்து மீனாள் – தன்வரலாற்று நாவல்
விலை: ரூ.120
நோய்மையின் குறியீடாக, முறிந்த நினைவுகளின் அடையாளமாக…
தொழுநோய் வந்த சிறுமியின் மனநிலை, சிகிச்சைக்காக எப்படி அலைக்கழிக்கப்படுகிறாள், சிகிச்சைக்கான மருத்துவமனைகள் எப்படி நடைபெறுகின்றன, அங்கு சிகிச்சை பெறுவோர் யார், அதற்குள் உருவாகும் மதமாற்றம் மற்றும் வெளிநாட்டு நிதி உதவி தரும் வெள்ளைகார புரவலர்கள் பற்றியும், நோய் நீங்கிய பிறகு திருமணத்திற்காக காத்திருந்த நாட்களின் வலிகளையும் ஒன்று சேர்த்துப் பதிவு செய்த நூல் முள்.
தொழுநோய்க்கான சிகிச்சை பெற்று குணமான பிறகும் பெண் இயல்பான வாழ்க்கைக்கு திரும்புவது எவ்வளவு பிரச்சனையாக உள்ளது. குறிப்பாக அவளது திருமணத்திற்கான தடைகளும் அவமானங்களும் அவளை எப்படி வெறுமை கொள்ள வைக்கிறது என்பதை விவரிக்கிறது இந்த நாவல். வெளிவந்த நாட்களிலேயே அதிக கவனம் பெற்ற நூல் முள். இதுவரை 10 பதிப்புகள் வந்திருந்தாலும், நூலுக்கான தேவை இருந்துகொண்டிருப்பதே இதன் சிறப்பு. “இதற்கு முன்பாக தனக்கு எவ்விதமான இலக்கிய பரிச்சயமும் இருந்ததில்லை. தான் எதையும் எழுதியதில்லை” என்று வெளிப்படையாக கூறும் முத்துமீனாள் எல்லாத் தயக்கங்களையும் மீறி தன்னுடைய வாழ்வை அசலாக பதிவு செய்திருக்கிறார்.
3.
உயிர்த்தெழும் பெண்
மகப்பேறு காலம்
ஆசிரியர் – மருத்துவர் அ.ப. ஃப்ரூக் அப்துல்லா
விலை: ரூ.120
பதின்பருவத்தில் வளர்ச்சிதை மாற்றம் கொள்ளும் உறுப்புகள் தொடங்கி, கருமுட்டை நிற்கும் காலம் வரை பெண் உடல் இயக்கத்தில் எத்தனையோ குழப்பங்கள், குளறுபடிகள், கோளாறுகள் நம் சமூகத்தில் நிலைபெற்றுள்ளன. அதை ஆரோக்கிய நோக்கில் அணுகி, களையும் முயற்சிகள் வெகு குறைவே . குறிப்பாக, இந்த காலகட்டத்தில் ஆரோக்கிய வாழ்வியல் நோக்கில், பெண் தன்னைத் தானே செம்மைப் படுத்திக் கொள்வதில் சரியான வழிகாட்டல் போதாமை உள்ளதை மறைக்க முடியாது. அதை களைகிறது இந்த நூல். பதின்பருவம், பேறுகாலம் ஆகிய கட்டங்களில் பெண்களின் ஆரோக்கியத்தை சுயமாக பேணிக் கொள்ளும் ஆலோசனைகளை இந்த நூல் கொண்டுள்ளது. இது சுயமருத்துவ நூலல்ல. பெண்களின் உடல்நலத்தில் அக்கறைக் கொள்ளும் ஆலோசனை அல்லது வழிகாட்டி நூல் என கொள்ளலாம். தாயாய், மனைவியாய், சகோதரியாக, மகளாக வாழும் அனைவருக்கும் இந்த நூல் சேர வேண்டும்.
4.
ஊன் உடம்பு
நமது மருத்துவ நல ஆலோசனைகள்
ஆசிரியர் – மருத்துவர் அ.ப. ஃப்ரூக் அப்துல்லா
விலை : ரூ.120
நவீன மருத்துவத்தின் மிக முக்கிய நம்பத்தன்மைகளில் முதன்மையானது, காலம்தோறும் விரிவடைந்து செல்லும் அதன் வளர்ச்சி. தொழில்நுட்ப மற்றும் மிக நுணுகிப் பார்க்கும் வளர்ச்சி. அதைப்போலவே, வர்த்தக வளர்ச்சியும். இந்த மூன்று புள்ளிகளும் இணையும் இடத்தில், கொரோனா போன்ற திடீர் முடக்கம் வேறொரு வடிவில் மக்களுடன் மருத்துவத்தை இணைத்துள்ளது. மருத்துவருடன் நேரடி தொடர்பில்லாமல், மருத்துவ ஆலோசனைகளை கொண்டு செல்வது இந்த காலகட்டத்தில் அதிகரித்துள்ளது. அதுவும், வர்த்தக வலைபின்னலுக்குள் கொண்டுவரப்பட்டு அந்நியமாகும் காலத்தில்தான், நமது மக்கள் மருத்துவர்கள் எளிய தீர்வுகளை, சமூக ஊடகங்கள் வழி மக்களுக்கு கொண்டு செல்லத் தொடங்கியுள்ளனர். அந்த வகையில், மருத்துவர் ஃபரூக் அப்துல்லா, தனது அறிவை, ஆலோசனைகளை எளிய நடையில், மக்களின் மொழியில் பேசுகிறார். அவசரகால தேவைகள் அல்லாத, இந்த பொதுநல மருத்துவ ஆலோசனைகள் அனைவருக்கும் அவசியம் என அறிந்து இந்த நூலை கொண்டுவருகிறோம்.