துய்ப்ளெக்ஸ் என்பவனிடம் துபாஷ் உத்தியோகம் பார்த்த ஆனந்த ரங்கப்பிள்ளை, பிரெஞ்சு – இந்திய சரித்திரத்தின் மகோன்னத பருவத்தில் அதன் மகோன்னத புருஷனுக்கு விளக்குப் போலவும், ஊன்றுகோல் போலவும், சதா நாள் தவறாமல், ஒவ்வொரு காரியத்துக்கும் பக்க உதவியாக நின்றது மட்டுமேயன்றி, அந்தக் காலத்தில் நடந்த செய்திகளையெல்லாம் முக்கியமானது, முக்கியமில்லாதது என்றுகூடக் கவனிக்காமல், ஒன்று தவறாமல் சித்திரகுப்தன் எழுதி வரும் பதிவைப்போல, நல்ல பாஷையில் அன்றாடம் விஸ்தாரமாக எழுதி வைத்திருக்கிறார்.– மகாகவி பாரதியார்

 


தென்னிந்தியாவில் பிரெஞ்சு ஆதிக்கம் உச்சத்தில் இருந்தபோது, புதுச்சேரியின் ஆளுநர்கள் 4 பேரிடம் துபாஷியாக இருந்தவர் ஆனந்த ரங்கப்பிள்ளை . குறிப்பாக 12 ஆண்டுகள் ஆளுநராக இருந்த துயூப்ளேக்சின் காலத்தில் ஆனந்த ரங்கப்பிள்ளை தலைமை துபாஷியாகப் புகழின் உச்சத்தில் இருந்தவர். 

1736 செப்டம்பர் 6 -ஆம் நாள் தன்னுடைய கைப்பட தினப்படி செய்திக் குறிப்புகளை எழுதத் தொடங்கியிருக்கிறார். தொடர்ந்து 25 ஆண்டுகள் அவருடைய கடைசி நாள் வரை (ஜனவரி 12, 1761) தொடர்ந்து தினம்தோறும் எழுதி வந்திருக்கிறார். 

இதை 18 ஆம் நூற்றாண்டின் முதல் உரை நடை இலக்கியம் என்று சொல்லலாம். அன்றாடம் நடந்த செய்திகளுக்கு ஊடே ரங்கப்பிள்ளை ஐரோப்பிய , டெல்லி, ஹைதராபாத் அரசியலை எழுதியிருக்கிறார். ஆட்சியாளர்கள் ஒருவரை ஒருவர் வீழ்த்த எடுக்கும் நடவடிக்கைகள், உள்ளூர் ஆட்சியாளர்கள் ஐரோப்பியர்களின் கைப்பாவையாக இருந்த அவலம், போர்க்காலங்களில் மக்கள் சந்தித்த துயரங்கள், கடல் வாணிகம், துணி வர்த்தகம், எளிய குற்றங்களுக்காகக் கொடுக்கப்பட்ட தண்டனைகள், பெய்த பெரும் மழைகள், மூக்குக் கண்ணாடி கேட்டு காகிதம் எழுதும் நவாபு என ரங்கப்பிள்ளை எழுதும் செய்திகள், தீர்மானிக்கவே முடியாத திசைகளிலெல்லாம் சுவாரசியங்களோடு விரிந்து செல்கின்றன. 

இது தமிழுக்கு அரிய பல சொற்களை அள்ளிக் கொடுக்கும் சொற்களின் சுரங்கம். மக்களின் வாழ்க்கை முறை, சாதி அடுக்குகள், நிர்வாக முறைமை, அறம், அரசியல் என அள்ள அள்ளக் குறையாத வரலாற்றுச் செய்திகளும், உரைநடையின் சுவாரசியமும் கொண்ட பொக்கிஷம்.

வாசிப்புக்கு லகுவாக, கடினமான சொற்களுக்கான விளக்கங்களுடன் ஆங்காங்கே வரலாற்றுக் குறிப்புகளுடன் செம்பதிப்பாகக் கொண்டு வந்திருக்கிறார்கள்.

– நன்றி : தினமணி 

 

நூல் தகவல்:

நூல் :  ஆனந்த ரங்கப்பிள்ளை அவர்களின் தினப்படி சேதிக் குறிப்பு (12 தொகுதிகள்)

பிரிவு :  நாட்குறிப்பு / நினைவுக்குறிப்பு

பதிப்பாசிரியர்கள் :  முனைவர் மு. ராஜேந்திரன் இ.ஆ.ப., |  முனைவர். அ.வெண்ணிலா

பதிப்பகம் :  அகநி வெளியீடு

வெளியான ஆண்டு :  2020

பக்கங்கள்: 5190

விலை :  8,400

தொடர்புக்கு: 9842637637 

அமெசானில் நூலைப் பெற

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *