மூன்று பகுதிகளில் மூன்று திசைகளை வடிக்கிறார் தி ஜானகிராமன். அப்படியாக அது இருக்கத் திக்கு தெரியாத காட்டில் சிறு பறவையின் கீச்சொலியை தானே உணர்ந்து அலைகிறது நான்காவது திசை. அது அப்படியாகின் அது அது அவரவர் பாடு.

 

அப்பு- இந்து- பவானியம்மாள்

16 வருட வேதம்- கற்றலுக்கு பின் தன் வீட்டுக்குச் செல்ல முடிவெடுத்திருக்கிறான் அப்பு. அவனுக்குத் தெரிந்ததெல்லாம் வேதம்….. பாடசாலை…. பவானியம்மாள்….. அவ்வளவுதான். கூட இருக்கும் இந்துவைக் கூட அவனுக்கு முழுதாக தெரியவில்லை. ஆனாலவன் மாசற்ற தங்கம். அத்தை என்று அழைக்கப்படும் பவானியம்மாளின் சொல்லுக்கு மறு பேச்சு இல்லை அவனிடம். அப்பு ஒரு ஞான தரிசனத்தின் வழி நின்று வாழ்வியலை நோக்கும் ஜுவாலை. வேறு வழியில்லை. தன் வீட்டுக்குச் சென்று தானே ஆக வேண்டும். எத்தனை நாள் தான் படித்துக் கொண்டேயிருப்பது. இனி படித்ததை வைத்து பணம் சம்பாதித்ததுதானே ஆக வேண்டும். அவன் ஊருக்குச் செல்ல முடிவெடுக்கிறான்.

இந்து எனும் வீணை ஒன்று மீட்டப் படாமலே அந்தப் பாடசாலையில் எல்லா வேலைகளையும் செய்து கொண்டிருக்கிறது. அந்த நாளுக்குத் தான் அவள் காத்திருக்கிறாள். தனியாக இருக்கும் அப்புவை அணைத்துக் கொள்கிறாள்.

அப்பு தடுமாறி ஒதுங்குகிறான்.

என்னைத் தாலி அறுத்தவன்னு ஒதுக்கறியா என்று விசும்புகிறாள். அவளுக்கு 15 வயதில் திருமணம். 19 வயதில் கணவன் செத்து விட மீண்டும் பாடசாலைக்கே….அத்தையிடமே வந்து விடுகிறாள். அவள் அத்தையிடம் வரவில்லை. அப்புவிடம் தான் வந்திருக்கிறாள். விவரம் தெரிந்த நாளில் இருந்து ஒரு விடுகதையைப் போல….. விடுபட்ட கதையைப் போல அவள் அப்புவைத்தான் சுமந்து கொண்டிருக்கிறாள்.

இது பற்றி அப்புவிடம் அவள் பேசும் பக்கங்கள்… பெண்ணின் ஆழ் மன விருப்பம் பற்றிய அறிதல் இல்லாமல் வீட்டில் உள்ளோர் செய்யும் அடாவடித்தனம் பாரம்பரியம்….பண்பாடு குடும்ப கவுரவம் என்ற பெயரில் போட்டு சாவடிக்கும் இயல்புகளைத் தோலுரிக்கும் வாக்கியங்கள்.

“என்ன போக சொன்னா போனேன். இந்த உடம்புக்குதான் தாலி கட்டினா…. அப்புறம் இந்த உடம்புல இருந்து தாலிய கழட்டினா…… வந்துட்டேன்” என்கிறாள். ஒரு ஜடத்தின் வாழ்வைப் பெண் மீது திணிக்கும் கட்டமைப்பை இந்து கதாபாத்திரம் போட்டு உடைக்கிறது. “நான் அங்கிருந்த நாளெல்லாம் உன் நினைப்பு தான் துணை” என்கிறாள். “அதனால் தான் அவா போய் சேர்ந்துட்டாரோ… இப்போ கூட மேல இருந்து நான் பண்ணின துரோகத்துக்கு சாபம் விடுவாரோ”ன்னு தன்னையே நொந்து கொள்ளும் அவளுள் அப்பு ஆம்படையானாய் எப்போதோ அமர்ந்து விட்டான்.

எல் ஷேப் ஜடை போட்ட காலத்திலிருந்தே அப்பு தான்.. மன உசரம் அவளுக்கு.

“அயோ.. நீ என் தங்கை மாதிரி அத்தைக்கு நான் எப்படி துரோகம் செய்வேன். என் அம்மா எனக்காகக் காத்திருக்கிறாள், அவளுக்கு என்ன பதில் சொல்வேன்” என்று பிதற்றித் தடுமாறி இருளில் ஒளிந்து கொண்டு வேதம் முணுமுணுக்க உடலில் எல்லாவற்றையும் கட்டுப்படுத்துகிறான் அப்பு.

“நான் எப்படியோ போறேன்.. ஆனா உனக்கு அத்தைகிட்ட நல்ல பேர் எடுக்கணும்… இல்லையா…?” என்று கோபத்தில், இயலாமையில் அழுகிறாள். ஏதேதோ பேசியவள், “போடா போ… உங்கம்மா மட்டும் என்ன யோக்கியமா…?” என்று சுருக்கென்று ஒரு வார்த்தையைக் குத்தீட்டியாக்கி ஒடித்துக் கொள்கிறாள் இந்து.

முள் அழுந்தும் முன் முகத்தோடு பவானியம்மாளிடம் ஆசி பெற்றுக் கொண்டு ஊருக்குச் செல்கிறான் அப்பு.

வண்டிக்காரன் தாந்தோணி.. நானா இருந்தேனுங்கனா சின்னமாவ சாருக்கு கல்யாணம் பண்ணி இங்கேயே இருக்கச் சொல்லிருப்பேன்” என்று பேச்சோடு பேச்சாகச் சொல்கிறான். அத்தைக்கும் முதல் விதை விழுகிறது. இறுதிக் காட்சியில் அவள் எடுக்கும் முடிவுக்கு இந்த உரையாடல் தான் அடித்தளம் போடுகிறது. அப்புவுக்கு இது தெரிந்த விதை தான். ஆனாலும் வண்டிக்காரனாய் அதட்டுகிறான். இரு வேறு தீவிரத்தை நாம் உணரும் இடம். வண்டி ஏற்றி விட்டு மனம் ஒடிந்து பார்க்கிறாள் பவானியம்மாள். ரயிலுக்கு அந்தப் பக்கம் ஒளிந்து நின்று பார்த்துக் கொண்டிருக்கிறாள் இந்து. அவள் அன்பின் உருவத்தைக் காதலின் அரூபத்தைக் கொண்டலையும் விடுகதை..என்பதை நாம் தெளிவாக உணர்கிறோம்.

 

அப்பு- அலங்காரம்- சிவசு

எல்லாருக்கும் எல்லாமே தெரிகிறது. தெரியாத மாதிரி கூட யாரும் நடந்து கொள்வதில்லை.

ஒரு கட்டத்தில் கணவன் தண்டபாணியுடனான எல்லா வகையான நெருக்கத்தையும் அப்புவின் அம்மா அலங்காரத்தம்மாள் நிறுத்திக் கொள்கிறாள். நோ மீன்ஸ் நோ என்பது போல ” போறும்னா போறும்…”

ஊரே ஞானத்தில் உச்சத்தில் வைத்துக் கொண்டாடும் தண்டபாணிக்கு பதில் புரிந்து விடுகிறது. ஆனால் அது மட்டும் அல்ல என்பதும் விளங்கி விடுகிறது. ஆனாலும் அவர் அவள் மீது தான் தன்னை வைத்திருக்கிறார். அவளைக் கட்டி ஆள முடியாத இயலாமை தான் அவரை உயிரோடு வைத்திருக்கிறது. கடைசியாக அவள் மாடிக்கு வந்த போது அதுவரை இல்லாத “அலங்கார”த்தை அவர் கண்டார். அதன் பிறகு தான் அப்பு பிறந்தான். அதன் பிறகு தான் அவள் மாடிக்கு வருவது நின்று போனது. இந்த புள்ளியில் தான் சிவசு-வின் வருகை நாவலின் மையத்துக்கு அழைத்துச் செல்கிறது.

சிவசு, ‘மன்னி மன்னி’ என்று அழைத்துக் கொண்டு எப்போது வேண்டுமானாலும் அலங்காரத்தைப் பார்க்க வந்து விடுகிறார். அலங்காரமும்… எது பற்றியும் கவலையில்லாமல்….(கவலையில்லாமலா….?) எல்லாரிடமும் காட்டும் அதே மிடுக்கோடும் ஆளுமையோடும் தான் சிவசு மீதும் தன்னை நிறுவுகிறாள். குடும்பமே அம்மாவுக்குக் கட்டுப்படுகிறது. சிவசும் பக்தியோடு தான் நடந்து கொள்கிறார். அலங்காரத்தின் பேச்சுக்கு மறு பேச்சு இல்லை.

முதல் காட்சியிலேயே சிவசுவைப் பார்த்து விட்டு, ” என்னடா கோபு மீசையை எடுத்துட்ட” என்று அப்பு கேட்கும் போதே கதை சுழல ஆரம்பித்து விடுகிறது. அப்புவுக்கு பின் பிறந்த கோபு உள்பட மூன்று குழந்தைகளுக்கும் அப்பா சிவசு என்று நாமே புரிந்து கொள்ளும்படி……கணவன் தண்டபாணிக்கும் தெரியும் என்பதோடும் 60 களிலேயே இப்படி ஒரு புள்ளியைத் தொட்டிருக்கிறார் தி. ஜா.

இந்த நாவலுக்காக அவரை ஊருக்குள் விடாதபடி தடை போட்டிருக்கிறார்கள் அப்போதைய ஊர் மக்கள். அவரை பிரஷ்டன் என்றிருக்கிறார்கள்.

“கலை பிரஷ்டர்களிடம் இருந்தே வெளி வரும்” என்றிருக்கிறார் பதிலுக்கு.

அப்பு மீது இனம் புரியாத அதீத அன்பு அவளுக்கிருக்கிறது. அதனால் தான் அப்புவை கடைசி பிள்ளையாக நினைத்து வேதம் படிக்க அனுப்பி இருக்கிறாள். அவன் படித்து முடித்து பெரிய ஆளாக வருகையில்… எல்லா பாவங்களுக்கும் பிராயச்சித்தம் கிடைத்து விடும் என்று அவளுக்கு அவளே சமாதானம் செய்து கொண்டிருக்கிறாள். ஆனால் அலங்காரம் ஒரு புதிர். அதை அப்படி விட்டு விடுவது தான் உத்தமம் என்பது போலத் தான் உணர்ந்து கொள்ள முடிகிறது. ஒரு வகை பிறழ் நிலையை அவள் கொண்டிருக்கிறாள். நன்றாக இருக்கும் கணவனிடம் ஒரு கட்டத்தில் தன்னை நிறுத்திக் கொள்கிறாள். சிவசு வந்த பிறகு கணவனோடு அவள் இல்லை. கடவுள் நிலையில் கணவனைக் கொண்டு விடுகிறாள்.

அன்பில் உச்சம் விடுபடுதலா…?

எல்லாவற்றிலும் கொஞ்சம் அதிகப்படியான உருவம் கொண்ட உள்ளம் கொண்ட அலங்காரம் பேச்சிலும் மவுனத்திலும் தன்னளவில் தனக்கென்று ஒரு உலகம் வகுத்துக் கொள்கிறாள். அது சரி அது தவறு என்றெல்லாம் இங்கு நாம் பேசவில்லை. அது அப்படி இருக்கிறது என்று தண்டபாணி சொல்வது போலத் தான் நாமும் சொல்லிக் கொள்கிறோம்.

வழி தப்பும் ஆடெல்லாம் வழி தப்பிய ஆடல்ல என்பது தான்… சித்தாந்தம்.

மனசோடு அவள் பெத்துகிட்டது அப்புவுக்கு பிறகு பிறந்த அந்த மூன்றும் தான் என்று அப்புவின் அக்கா காவேரி சொல்கையில் வாழ்க்கை சிக்கல் மனதைப் போட்டு பினாத்துகிறது. இந்த விஷயத்துக்காகத்தான் அவள் பிறந்த வீட்டுக்குக் கூட வருவதில்லை என்பது கூடுதல் தகவல். அலங்காரத்துக்கு என்ன தான் தேவை காமத்தின் உச்சமா? காதலின் மிச்சமா?தானென்ற வெளியின் அச்சமா? ஒன்றும் புரிபடுவதில்லை. கணவரை ஒரு ஞான சூரியன்…கருணா மூர்த்தி என்கிறாள். “அது என்னை இத்தனை நாள் சகித்துக் கொண்டிருப்பதே பெரியது” என்று அப்புவிடம் சொல்லிப் புலம்புகையில் அவளின் ஆழ்மன அவஸ்தையை நாம் உணர்கிறோம். எல்லாருக்கும் எல்லாமே தெரிந்திருக்கிறது. தனக்கு மட்டும் தான் ஒன்றுமே தெரியாமல் போய் விட்டது என்று கடற்கரையில் இலைமறைகாயாக அப்பாவிடம் புலம்புகிறான். எல்லாமே தெரியும் என்பதாக அப்பாவும் வேறு மாதிரி புலம்புகிறார். அங்கும் ஒரு விடுகதை விடுகதையாகவே பேசிக் கொள்ளப்படுகிறது. காரணமற்ற புள்ளியில் எதுவுமே நிரம்புவதில்லை. வானத்தின் நீலத்தைப் புள்ளியில் குவிப்பது சாத்தியம் இல்லை போல…… !

சிவசும் அலங்காரமும் தனித்திருக்கும் காட்சி ஒன்று கூட இல்லை. அது தான்… கிளாசிக் தன்மை சேர்க்கிறது நாவலில். ஓரிடத்தில் கூட ஆபாசம் என்ற தத்துவம் இல்லவே இல்லை. எல்லாமே சுற்றி இருக்கும் கண்களின் காதுகளின் வழியாகவே கதையை நகர்த்தி மாஸ்டர் என்பதற்குப் பாத்திரமாகிறார் தி ஜா.

 

அப்பு- பவானியம்மாள் -அலங்காரம்-மற்றும் இந்து

நல்லவேளை பவானியம்மாளுக்கு உடல் நிலை சரி இல்லாமல் போகிறது. இது தான் வழியென்று தப்பித்துக் கொள்ளும் மௌனத்தோடு கிளம்பி மீண்டும் பாடசாலைக்கே வந்து விடுகிறான் அப்பு. அது ஒரு விடுதலையை அவனுள் நிரப்புகிறது. பவானியம்மாள் முடியாமல் இருப்பதால் பாடசாலையை அப்புவின் பேரில் மாற்றி விடுகிறாள். வீட்டை இந்து கவனிக்கட்டும் என்றும் முடிவெடுக்கப்படுகிறது. கிடைக்கும் இடைவெளியில் எல்லாம் இந்து வந்து வந்து அணைத்துக் கொள்கிறாள். அவள் சுயம் திருப்திப் படுகிறது. அப்பு இனி இங்கிருந்து செல்ல மாட்டான் என்ற நம்பிக்கை அவளைத் தோரணையோடு நடமாடச் செய்கிறது.

“சரி அதெப்படி தெரியும்……? சொல்லு…!” என்கிறான் அப்பு.

“எல்லாருக்குமே தெரியும்… அத்தைக்குக் கூட” என்கிறாள் இந்து.

தெரிந்து விடுவது தெரிந்து விடும். மறைந்து விடுவது மறைந்து விடும். எதிர் எதிர் சூட்சுமம் அப்படி நிகழ்த்திப் பார்க்கும் நாடகத்தில் எல்லாரும் நடிக்கிறோம்.

அலங்காரம் வந்து விடுகிறாள். “இது தான் ரெண்டு நாள்ல கடுதாசி போட்றதா…?” என்று அப்புவிடம் அழுகிறாள். பவானியம்மாளை அவளும் அத்தை என்றே அழைக்கிறாள். ஆசீர்வாதம் வாங்குகிறாள்.

“சரி கிளம்பு” என்கிறாள் அப்புவிடம்.

அப்புவுக்கு இந்து தேவைப்படுகிறாள். பவானியம்மாள் வேண்டும். அந்த பாடசாலை வேண்டும். எல்லாவற்றையும் தாண்டி அம்மாவிடம் இருந்து தன்னையும் அறியாமல் கொஞ்சம் விலக வேண்டும். அவன் ஆழ்மனம் அதைத்தான் விரும்பியிருக்கும்.

அங்கேயே இருப்பதாக கூறுகிறான்.

“சரி…என்பவள்….தான் காசிக்குக் கிளம்புவதாகக் கூறுகிறாள். அதை மறைமுகமாகத் தன்னையும் அறியாமல் அப்புவும் விரும்புகிறான் என்று தான் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.

“இவ்ளோ அழகா உங்கம்மா” என்று இந்து கேட்கிறாள். இந்துவும் அம்மாவும் இப்போது தான் முதல் முதலாகச் சந்தித்துக் கொள்கிறார்கள்.

“அழகு தான் ஆபத்து” என்கிறான் அப்பு.

“அப்பா உன்னை விட்டுண்டு இருக்க மாட்டாரேம்மா” என்கிறான் அப்பு.

“எத்தனை நாள் தான் அவரை வதைச்சிண்டே இருக்கிறது….”என்கிறாள் அம்மா.

இந்துவை பக்கவாட்டில் பார்க்கும் அலங்காரம் எல்லாம் புரிந்தவளாக…. இது தான் சரி… என்பது போலக் கிளம்பி விடுகிறாள். அம்மாவை யார் தடுக்க முடியும்.

ஒருத்தி விடுகதை….. ஒருத்தி புதிர்… இடையில் பொருளோடு அப்பு.

எல்லாவற்றையும் விளங்கிக் கொண்டால் மீதம் இருக்கும் வாழ்வுக்கு என்ன தேவை இருக்கிறது.

அம்மா வந்தாள்… அம்மா சென்றாள்… அம்மா சென்றாள்…. அம்மா வந்தாள்….. வந்தாலும் சென்றாலும் அம்மா அம்மா தானே…!

திஜா-வுக்கு நமஸ்காரங்கள்.!


கவிஜி

நூலிலிருந்து : 

ஆசிரியர் குறிப்பு : 

தி. ஜானகிராமன் (1921 - 1983)

தி. ஜானகிராமன் தஞ்சை மாவட்டம் மன்னார்குடியை அடுத்த தேவங்குடியில் பிறந்தவர். பத்து வருடங்கள் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றியவர். பின்பு அகில இந்திய வானொலியில் பணியாற்றி ஓய்வுபெற்றார். கர்நாடக இசை அறிவும் வடமொழிப் புலமையும் பெற்றிருந்தவர்.

1943இல் எழுதத் தொடங்கிய தி. ஜானகிராமன் 'மோகமுள்', 'அம்மா வந்தாள்', 'மரப்பசு' உள்ளிட்ட ஒன்பது நாவல்கள், நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், மூன்று நாடகங்கள், பயண நூல்கள் ஆகியவற்றை எழுதியிருக்கிறார். சிட்டியுடன் இணைந்து இவர் எழுதிய 'நடந்தாய் வாழி காவேரி' பயண இலக்கிய வகையில் முக்கியமான நூலாகக் கருதப்படுகிறது.

'மோகமுள்', 'நாலு வேலி நிலம்' ஆகிய படைப்புகள் திரைப்படமாக்கப்பட்டுள்ளன. 'மோகமுள்', 'மரப்பசு', 'அம்மா வந்தாள்' ஆகிய நாவல்களும் பல சிறுகதைகளும் இந்திய, ஐரோப்பிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன.

1979இல் 'சக்தி வைத்தியம்' சிறுகதைத் தொகுப்பிற்கு சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது.

நூல் தகவல்:
நூல் : அம்மா வந்தாள்
பிரிவு : நாவல்
ஆசிரியர்:

தி.ஜானகிராமன்

வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம்
வெளியான ஆண்டு : 1966
பக்கங்கள் : 184
விலை : 200
கிண்டில் பதிப்பு :

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *