ஆசிரியர் குறிப்பு : இவர் யாழ்ப்பாணத்தில் ஆவரங்கால் எனும் ஊரில் பிறந்தவர். தற்போது ஃப்ரான்ஸ் பாரிஸ் நகரில் வசித்து வருகிறார். இது இவரது முதல் சிறுகதைத் தொகுப்பு. ஆக்காட்டி எனும் இதழின் தொகுப்பாசிரியர் இவரே. இதுவரை பதினோரு இதழ்களை கொண்டுவந்துள்ளார். மற்றபடி என் ஊருக்கு பக்கத்து ஊர்க்காரர் என்பதை தொகுப்பின் வழி அறிந்துகொள்ள முடிந்தது. 


“சில பத்திரிக்கைகளின் பைண்டு வால்யூம்களைப் புரட்டிப் பார்த்தால் நெஞ்சில் நிலைத்து நிற்கக்கூடிய நல்ல சிரஞ்சீவிக் கதை ஒன்றுகூட அகப்படுவது அரிதாகிறது’. – தொ.மு.சி (இலக்கிய விமர்சனம் பக்கம்:53).

தமிழ்நாட்டில் சிறுகதைகளின் போக்கில் ஏற்பட்ட மாற்றத்தை புதுமைப் பித்தனிலிருந்து சொல்லும் வழக்கம் இப்போது இருந்தாலும், வா.வே.சு. ஐயர், பாரதி காலத்திலிருந்தே சிறுகதையின் தோற்றுவாய் இருப்பதாக விமர்சகர் தொ.மு.சி குறிப்பிடுகிறார். மேலைநாட்டு மாப்பஸான் கதைகளை தமிழில் திருடியவர்களையும் கடிந்து கொள்கிறார். இளையோரிடம் சிறுகதை குறித்த சரியான புரிதல் இல்லையென்றும் சார்ல்ஸ் பிங்கர்ஸ் கூற்றுக் கொண்டு நொந்து கொள்கிறார். 2000 க்குப் பிறகான சிறுகதையின் போக்கின் மாற்றங்களைக் காண அவர் இல்லை. ஒருவேளை இருந்தால் மறுமொழி எழுதியிருப்பார்.

ஈழத்திலும் அன்றைய நாளில் தமிழகத்தினைப் போன்ற ஒரு சூழல் நிலவினாலும் அது 1980களுக்குப் பிறகு வேறொரு பரிமாணத்திற்கு தன்னை நகர்த்தத் துவங்கிவிட்டது. பெண்களின் புகுந்த வீட்டுப் பிரச்சினைகள், மாமனார் மருமகள் சல்லாபம் என்ற போக்கிலிருந்து முற்றாக அது தன்னை விடுவித்துக்கொண்டது. லட்சியத்திற்கான போரினை, அதனால் ஏற்பட்ட ரணங்களை, புலப்பெயர்வுகளை, அதன் வாதைகளை என புதிய பரிமாணத்தில் எழுதிப் பார்க்கையில், அதற்கு எதிர்பிரதிகளாக அல்லது நாம் நம்ப மறுப்பவற்றிற்கு பின்னால் உள்ள கதைகளை எழுதிய சோபாசக்தி போன்றோரின் பிரதிக் கட்டமைப்புகள் வேறான பரிமாணத்திற்கு ஈழச் சிறுகதைகளைக் கொண்டுவந்து நிறுத்தின.

இவ்வாறு ஈழச் சிறுகதைகளின் காலக்கட்டமைவில் தோற்கடிக்கப்பட்ட ஈழப் போருக்குப் பின்பான காலக்கட்டமைவில் சமகாலப் படைப்பில் படைப்பாளனாக, சிறுகதையாளனாக  தர்மு பிரசாத் ஆனைக் கோடரி எனும் முதல் தொகுப்பின் வழி இணைகிறார்.

சொல்முறைகளிலும் கதைக்களன்களின் தேர்விலும் மொழிவசியத்திலும் தனக்கான தனிப்பாணியை அவர் உருவாக்க முயன்றுள்ளார். “பித்தளைத் தீர்வுகள்”, விண்மீன்களின் இரவு”, “மிக மிக இரகசிய இயக்கம்” சிறுகதைகள் சம்பவ விபரிப்புகளாக நான் லீனியர் முறையில் சொல்லப்பட்டவை. கசிப்புக் காய்ச்சும் (ஒருவகை மதுபானம்) சுடலையின் பார்வையில் பித்தளைத் தீர்வுகள் கதையில் இந்திய இராணுவத்தின் அட்டூழியங்கள் மிகைப்படுத்தலின்றிச் சொல்லப்பட்டுள்ளன. பேய்கள் வாழ்ந்த வீடாக காட்சியளிக்கும் பொறுப்பாளர்கள் தங்கும் இல்லங்களை குறியீடாக்கிக் காட்டி “நாய்களின் வேண்டுதல் எலும்பு மழையைத்தான் கொண்டுவரும்” என்ற வாசகம் ஏனோ சரியாகத்தான் பொருந்திப் போகிறது.

உக்கிரேன் தேசத்து டக்மாராவின் அம்மாவின் கூற்றான “செத்த மீன்கள்தான் வெள்ளத்தோடு போகும்” என்ற வரிகள் ஈழத்திற்கு மட்டுமல்ல எல்லாத் தேசங்களுக்கும் பொருத்திப் போகும் ஒன்று. அது தன் இடத்தை விட்டு நீங்குதலின் இறுதிக் கணத்தின் நிலை. போர் தின்று செமித்தவை போக சிதறிப் போனவர்களின் நிலை டக்மாராவின் அம்மாவின் கூற்றொப்பவே இருக்கிறது. பாரிஸ் நகரத்தின் உணவகத்திலிருந்தும், நிலவறைக்குள்ளிருந்தும் தன் நிலத்தை நினைத்துப் பார்க்கும் அகதியின் துர்பாக்கியம் ஒருமாத விடுமுறையை வெறுமையாக்குகிறது. ரஞ்சன் எனும் பெயரைத் தேடி வரும் இராணுவத்தின் நெருக்குவாரத்தினால் பாரிசுக்குப் புலம்பெயரும் தங்கராசுவின் பழைய கதைகள் மர்மமாகவும், தடுக்கி விழுந்தால் கேணல்களின் கால்களில் எழவேண்டும் எனும் அளவிற்கு அதிகப்படியாக பிளவுபட்ட இயக்கங்களின் ஏகபோக செயல்பாடுகளின் காலத்தைச் சுட்டி நகர்கிறது.

பொங்கி வழியும் பித்தம்:

“கண்ணாடிப் புட்டியில் அடைக்கப்பட்ட பானம் திறக்கும் போது பொங்கி வழிவதுபோல் இந்தப் புனைவுகளில் அடைக்கப்பட்ட பித்தம் பொங்கி வழிந்துகொண்டிருக்கிறது.” – முபீன் சாதிகா(முபீன் சாதிகா கட்டுரைகள், பக்கம் 340)

சிவானந்தன் கதிரேசனாக வதிவிடக் கோரிக்கை விசாரணை அறையில் அளிக்கப்படும் வாக்குமூலத்தில் தன் நிலத்தில் தெய்வா என்பவளை புணர்ந்து கொன்றுவிட்டு தப்பித்து வந்ததின் பின்னால் அவளைக் கொல்வது தனக்கு இடப்பட்ட கட்டளை என்கிறார். பாலியல் தொழிலாளியாக சித்தரிக்கப்பட்டவளை கொன்றழிப்பதும், நிலாவரை வாழைத் தோப்பில் அவ்ரோ விமானம் சுட்டு வீழ்தப்பட்ட நிகழ்வினைக் காணச் சென்ற தமக்கை பின்னொரு நாளில் கைமைதுனம் செய்த குற்றத்திற்காக தண்டிக்கப்பட்டாளா? அல்லது பங்கர் வெட்ட வந்தவனோடு ஓடிப்போனதனால் தண்டிக்கப்பட்டாளா? என்பது குழப்பமான முடிவாக இருப்பினும் மாமரத்தில் தொங்கவிடப்பட்டவளை நோக்கிச் சுடப்பட்ட துவக்கு வெடிக்காமல் போனது. தவறான தண்டனைகளும், சந்தேகத்தின் பேரால் கொல்லப்பட்டவர்களின் ஆன்மாக்களின் அங்கலாய்ப்பால் இனி எப்போதைக்கும் அவை வெடிக்காமலே போய்விட்டது. டக்கோயா ஆமைபோல் வெளிறிய புட்டங்களோடு வீழ்ந்து கிடப்பவள் புரட்சியுடனான ஆண் பெண் உறவில் ஏற்பட்ட சடுதியான மாற்றங்களை காமமாகப் புரிந்துகொள்ளும் இளம்பிள்ளை வாதக் காலுடன் உள்ள சிறுவனின் பார்வையில் விரியும் ஆனைக்கோடரி கதை தொன்மக் கதையாடலை நிகழ்த்திப் பார்த்தாலும் அவளுக்கும் புரட்சிக்குமான குடிசைக்குள் நிகழும் உரையாடல்களின் வெம்மை, நீண்ட நேரத் தங்கல் என சிக்கலான உறவுச் சூன்யம் கிழட்டு நாயோ என புரட்சி அவளின் வயோதிகக் கணவனை சாடுவதிலிருந்து அந்த உறவுகளுக்குள்ளான தடுமாற்றத்தை புரிந்துகொள்ள முடிகிறது.

புனிதக் கோட்பாட்டாளனாக தன்னையும் தன் இயக்கத்தையும் நிலைநிறுத்தும் பிரதியாளன், கஞ்சாப் புகைகளுக்கு மத்தியில் மிக மிக இரகசியம் கதையில் ஒரு தமிழ்ப்பெண் நீலப்படம் நடிக்க வந்த பின்னணிகளை வர்ணித்து, பல்வேறு நீலப்பட விபரங்களையும், நடிகைகளையும் அவர்கள் வாழ்வியலையும் கட்டுடைப்புச் செய்கிறார். இது பிரதியாளனின் இதுவரையிலான கலாச்சாரத்தின் கட்டுமானங்களை கலைத்துப் போட்டுப் பார்க்கும் ஒரு சீட்டாட்ட மனோபாவமே. புனைவுப் பித்துநிலையின் உச்சம்.

பிரதி அம்சம்:

ஆல்பர்ட் காம்யூவின் அந்நியன் நாவலுக்கு எதிர்ப்பிரதியாக வெளிவந்த அல்ஜீரியா எழுத்தாளரின் மறுவிசாரணையாகச் செல்லும் கதையில் பெண் கரும்புலியை கதைமாந்தராக்கி புதிய கோணத்தில் எழுதிப் பார்க்கப் பட்டுள்ளது. புனைவு வெளியின் சாத்தியப்பாடுகளுக்கு இந்தக் கதை அதியுச்சமாக உள்ளது. பிற தேசத்தின் பிரதியில் தன் நிலத்தின் நிகழ்வுகளை பிரதியாக்கிப் பார்க்கும் புனைவின் நல்ல உத்தி. இரண்டு யாழ் வெளியேற்றத்தினைச் சுட்டும் தனிமையின் நூற்றாண்டுகள் கதையில் அக்டோபர் 30 எதேச்சையாக நிகழ்ந்ததா தெரியாது. 1995 யாழ் வெளியேற்றம் மிகப்பெரிய பின்னடைவுக்கான முன்னெச்சரிக்கை எனலாம். சிறுகதைக்கான அத்தனை அம்சங்களும் பொருந்திய கதையாக இறுதிக் கதையான “துண்டு நிலம்” கதையைக் குறிப்பிடலாம். நினைவுகளின் மைதானத்தில் கடந்தகால விளையாட்டுகளை நினைத்துப் பார்க்கும் வெப்பியாரமான கதை. இது சமாதான உடன்படிக்கை காலத்திலிருந்து போர் முடிவுற்ற காலத்திற்குப் பிறகான தண்டனைக் காலத்தையும் நினைவுகூரும் விதமாக உள்ளது. “நிலாவரை”, “ஆனைக் கோடரி” மற்றும் “துண்டு நிலம்” ஆகிய மூன்று கதைகளைத் தவிர மற்ற ஆறு கதைகளும் இவற்றிற்கு முன்பு எழுதிப்பார்த்த குறிப்புகளாகவே தென்படுகின்றன.

"வரலாறு எதை உள்வாங்குகிறது என்றால் குறிப்பான சூழ்நிலையில் நிகழும் நிகழ்வுகள் எப்படி வழமையாக்கப்படுகிறது என்ற வழிமுறைகளைத்தான்."-டெல்யூஜ்

இழந்துபோன நிலத்தின் வேட்கைகளை, நினைவின் பரிதவிப்புகளை எழுதிச் செல்லும் பிரதியாளன் சகோதரியைப் புணர்ந்து கொல்லும் கொடுமை, தாயைப் புணரும் புரட்சி என பொலஸ்காக்களின் ஆனை வேட்டையின் விசத்திற்கு சற்றும் குறையாத, ஆனையின் காலில் பிறைவெட்டுத் தழும்பாக வாசிப்பவர் மனங்களுக்குள் படிந்துபோகும் துர்ப்பாக்கிய சம்பவம். மனப்பிறழ்வின் கூறாக நாம் இருத்திப் பார்த்தாலும், புனைவு வெளியின் சாத்தியப்பாடு என பிரதியாளன் தப்பித்துக் கொள்கிறான். டெல்யூஜ் சொல்வதைப் போல் வழமையாக்கப்படுவதன் வழிமுறைகளாக நிகழாதவற்றையும் பிரதி வரலாறாக சூழ்நிலையில் நிகழ்ந்ததாக உருவாக்கிப் பார்க்கிறது. இழந்து போன நிலத்தின் பிறைத் தழும்பாக நினைவுகள் நீலம்பாரித்துக் கிடக்கின்றது.


நூல் தகவல்:

நூல் : ஆனைக் கோடரி

வகை :   சிறுகதைகள்

ஆசிரியர் : தர்மு பிரசாத்

வெளியீடு :  கருப்புப் பிரதிகள்

ஆண்டு :  2021

பக்கங்கள் :  128

விலை:  ₹  130

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *