நூல் விமர்சனம்புனைவு

வேலு நாச்சியார்: பெண்மையின் பேராண்மை – விமர்சனம்


ரு இனத்தின், மொழியின், நாட்டின் நாட்டு மக்களின், கலை, பண்பாடு, அறிவியல், சமூகம், வாழ்வியல் போன்றவை அன்றிலிருந்து இன்றுவரை வந்த ( வரல்) வழியை ( ஆறு)  கூறுவதுதான் வரலாறு என்பார்கள். ஆனால் இன்று நாம் படிக்கின்ற வரலாறுகள் பல ஆள்பவர்களின் விருப்பத்திற்கு ஏற்பவே இருக்கிறது. எத்தனையோ வரலாறுகள் மறைக்கப்பட்டும் திரிக்கப்பட்டும் இருக்கிறது. இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஜான்சி ராணியை தெரிந்த அளவு,  நம் தமிழ் மண்ணின் பேராண்மை மிக்க வேலு நாச்சியாரைப் பற்றி அதிகம் இருக்கிறதா என்று பார்த்தால், இல்லை என்றே சொல்லலாம்.

எத்தனையோ மறைக்கப்பட்ட நம் மண்ணின் கதைகளைக் கொண்டு வரவேண்டும் என்ற ஆசிரியரின் ஏக்கம்தான் வேலுநாச்சியார் பெண்மையில் பேராண்மை என்ற இந்த நூல் வெளி வரக் காரணம். கிட்டத்தட்ட மூன்றரை வருட உழைப்பைக் கொடுத்து இந்த நூலைப் படைத்திருக்கிறார் ஆசிரியர் சேயோன்.

வேலு நாச்சியாரைப் பற்றி நாம் அறிந்த வரலாறு எல்லாம்,  சிவகங்கைச் சீமையை ஆண்ட முத்துவடுக நாதரின் மனைவி வேலு நாச்சியார்; தன் கணவரின் மறைவிற்குப் பிறகு  மருது சகோதரர்களின் உதவியோடு வெள்ளையனை எதிர்த்துப் போரிட்டார் 7 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியை மீண்டும் பிடித்தார்  என்பதுதான். ஆனால் அது எத்தனை பெரிய நீண்ட வரலாறு என்பதை இந்த நூல் எனக்கு உணர்த்தியது. அந்த வீரமங்கைக்குள்  இருந்த பேராண்மை கண்டு வியந்து போய் நின்றேன். நூலின் தலைப்பும் அட்டைப்படமும் வெகுவாக நம்மை ஈர்க்கும் என்பதே உண்மை.

சேது நாடு என்றும் மறவர் சீமை என்றும் வழங்கப் பெற்ற ராமநாதபுர சீமையிலிருந்து தன் தங்கைக்காக மன்னர் செல்ல முத்து சேதுபதியால்  தனி பாளையமாகப் பிரிக்கப்பட்டு இருந்த பகுதிதான் பருத்திக்குடி. பருத்தி குடி பாளையத்தின் பொறுப்பாளராக இருந்தவர் மாவீரன் மொக்க பழனியப்ப சேர்வை. அவர் மன்னர் சேதுபதியின் நெருங்கிய தோழர். அவர் ஆங்கிலேயரால் கைது செய்யப்பட்ட செய்தியோடு இந்த நூல் தொடங்குகிறது. இந்த பழனியப்ப சேர்வை என்பவர் மருது சகோதரர்களின் தகப்பனார்.

அவரை மீட்க தன் தகப்பனாருக்கு ஆலோசனைகளும்,  மேற்கொள்ள வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் வேலுநாச்சியார் சொல்லச் சொல்ல,  மன்னருக்கு மட்டுமல்ல நமக்கும் வேலுநாச்சியாரின் மதிநுட்பம் மெய்சிலிர்க்க வைக்கும். அப்படி பழனியப்ப சேர்வையைத் தப்பித்துக் கூட்டி வரும் வழியில்தான் சின்ன மருது பிறப்பு நிகழ்ந்தது என்பது வரலாறு.

ஒருமுறை வேலுநாச்சி புறநானூறு படித்துவிட்டு, பெண்கள் படை ஒன்றை ஏற்படுத்தி, விடுதலைக்காகப் போராடுவேன் என்று தன் தோழி வெள்ளச்சியிடம் சொல்லிக் கொண்டிருக்கிறார்.  அப்போது வெள்ளச்சி ஜாதி வெறியும், சமய வெறியும் மக்களை தங்களுக்கே தெரியாமல் அடிமை  தலைமுறைகளை  உருவாக்கிக் கொண்டிருப்பதையும், தீண்டாமை எனும் நஞ்சு மக்களை விழுங்கிக் கொண்டிருக்கிறது. முதலில் ஜாதி என்னும் சகதியிலிருந்து வெளியேற்றி அவர்களுக்குக் கல்வி மூலம் நல்லறிவு புகட்ட வேண்டும் என்பதை தன் தோழியிடம் வலியுறுத்துகிறார். அதனோடு சேர்த்து மறவர் சீமை கோயில்கள் அனைத்திலும் தமிழில் மட்டுமே வழிபாடுகள் செய்திட வேண்டும் என்பதையும் ஒரு சட்ட வரைவாக மாற்றி தன் தந்தையிடம் தந்து அதைச் செயல்படுத்தவும் செய்கிறார். இந்த இடம் வேலுநாச்சியாரின் சமூக சீர்திருத்தச் சிந்தனையை மேலோங்கி காட்டுகிறது.

முத்து வடுகநாதரின் தந்தை ,வேலு நாச்சியாரைப் பெண் கேட்டு மடல் அனுப்பியபோது, ‘ நீங்கள் பார்க்கும் ஆடவன் சுயமரியாதை மிக்கவராகவும் அன்னியனுக்கு அடிபணியாத வீர உணர்வும் தமிழ்ப்பற்றும் கொண்டவராகவும் இருத்தல் வேண்டும்’ என்று சொல்லுகின்ற இடத்தில், அவருடைய தமிழ்ப்பற்றும் சுயமரியாதையும் தெள்ளென விளங்கும்.

வீரபாண்டியனுக்குச் சுந்தர பாண்டியனுக்கும் இடையே ஏற்பட்ட அரியணைப் போட்டிக்குப் பின்புதான் நவாப் ஆட்சி மெல்ல மெல்ல இங்கே பரவியது. வேலுநாச்சியாருக்கும் முத்து வடுகநாதருக்கும்  திருமணம் முடிந்த பிறகு, அரசர்கள் இருவரும் ஓய்விற்குக் கச்சத்தீவு சென்று இருக்கும்பொழுது,  நீண்ட நாட்களாகக் கேட்டும் கப்பம் கட்டாததால் நவாப் முகமதலி,  தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னன் பிரதாப உதவியோடு  படையெடுத்து வருவதாக ஒற்றன் மூலம் தகவல் வருகிறது. அப்போது தான் அமைத்த பெண்கள் படை, மருது சகோதரர்களின் வளரி படை போன்றவற்றின் உதவியோடு அனுமந்தகுடி என்ற இடத்தில் மிகச் சிறப்பான வியூகம் அமைத்து வெற்றிகொண்ட வரலாறு அவரின் வீரத்தைப் பறைசாற்றும் என்பது மிகையில்லை.

அதற்குப் பிறகு சூழ்ச்சியில் நாட்டை இழந்து, விருப்பாச்சி கோபால் நாயக்கர் மற்றும் ஹைதர் அலி துணையோடு,  ஏழு வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றும் வரலாறுதான் இந்த நூலில் ஆசிரியர் நமக்குத் தந்துள்ளார்.

மிகச்சரியாக பெண்மையின் பேராண்மை என்ற தலைப்பை ஆசிரியர் வைத்திருக்கிறார் என்பது மன மகிழ்வைத் தருகிறது. இவ்வளவு சிறப்பான ஒரு வரலாற்று நூலை நூலாசிரியர் சிறப்பான மொழி நடையோடு, ஆங்காங்கே திருக்குறள்,  புறநானூறு வரிகள்,  மகாகவி பாரதியார்,  புரட்சிப் பாவலர் பாரதிதாசன், தமிழ் தேசிய பேராசான் பாவலரேறு பெருஞ்சித்திரனார், தமிழாய்ந்த செம்மல் மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர் , மற்றும் பல தமிழ்ப் பெருந்தகைகளின் வரிகளோடு உணர்ச்சிகரமாக இந்த நூலைத் தந்துள்ளது மிகச்சிறப்பு.

வேலுநாச்சியார் மட்டுமல்லாமல் மேலும் சில பெண் கதாபாத்திரங்கள் நம்மை மெய்சிலிர்க்க வைக்கும். வேலுநாச்சியாரின் தோழி வெள்ளச்சி ; வேலு நாச்சியாருக்குப் புரட்சிகரமான யோசனைகள் சொன்னதோடு அனுமந்தகுடி போரில் வீர மரணம் எய்தியவர். வெள்ளையர்கள் எத்தனை கொடுமைப்படுத்தியும்,  தனது அரசியைக் காட்டிக் கொடுக்காமல் இன்று வெட்டுடை காளியாய் வணங்கப்படும் உடையாள், வெள்ளையன் உடன் சேர்ந்து சூழ்ச்சி செய்து வேலு நாச்சியாரைக் கொல்லத் துடிக்கும் சிலம்ப ஆசிரியர் வெற்றிவேல் அறிந்து சூழ்ச்சிகளைக் கண்டறிந்து,  அவரை வீழ்த்தி, ராஜராஜேஸ்வரி கோயிலில்  இறுதிப் போர் நடைபெற்ற போது , தன்னைத்தானே எரியூட்டி ஆயுதக் கிடங்குகள் பாய்ந்த வீரப்பெண் குயிலி போன்றோர்.

வெள்ளையரிடம் சூழ்ச்சியில் இழந்த நாட்டை மீட்பது வரைதான் இந்நூலில் சொல்லப்பட்டிருக்கிறது. அதற்குப் பிறகான வரலாற்றையும் ஆசிரியர் எழுதியிருக்கலாம் என்ற ஆவலை அவரது எழுத்து நடை தூண்டுகிறது. எனினும் தலைப்பிற்கு ஏற்ற சிறப்பை ஆசிரியர் மிகச் சரியாகச் செய்திருக்கிறார் என்பது பெருமகிழ்வு.


  • பூங்கொடி

 

ஆசிரியர் பற்றி :  சேயோன் கோவையைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரியான இவர் தமிழின் மீதும் தமிழ் இனத்தின் மீதும் உள்ள பற்றினால் எழுத்தாளராக உருவெடுத்து  தனது முதல் தமிழ் புதினத்தை “வேலு நாச்சியார்: பெண்மையின் பேராண்மை” என்ற பெயரில் வெளியிடுகிறார். இதற்கு முன்னர் தமிழின் வரலாற்றை மையமாக வைத்து ஆங்கிலத்தில் ஒரு புத்தகத்தை எழுதி வெளியிட்டுள்ளார். 

 

நூல் தகவல்:

நூல் : வேலு நாச்சியார்: பெண்மையின் பேராண்மை

பிரிவு :  நாவல்

ஆசிரியர்: சேயோன்

வெளியீடு : notionpress.com

வெளியான ஆண்டு :   முதற்பதிப்பு 2020

விலை :  ₹510

Buy on Amazon :  

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *