அன்பாதவனின் “உயிர்மழை பொழிய வா ! “ கவிதைத் தொகுப்பு முன்வைத்து.

காதல், காமம் போன்ற உணர்வுகளும், உணர்ச்சிகளும் ஆண், பெண் இருபாலருக்கும் பொதுவான ஒன்றாக இருந்தாலும், அதனைக் குறித்த உரையாடல்கள் பெரும்பாலானவை ஆணிடமிருந்தே பதிவாகியுள்ளது இலக்கிய உலகில். அதுவும் பெண்ணின் மனநிலை குறித்து, அவளது உணர்ச்சிகளைச் சிறிதும் சிதையாமல், வார்த்தைகளின் ஊடாக உயிரோட்டமாய் உலவவிடுவதென்பது ஒரு தவம்.

இல்லறத்தில் தவம் என்றால் என்ன..? உடலாலும், மனதாலும், வாக்காலும் அன்பை உருக்கி அவன் அவளிடத்திலும், அவள் அவளிடத்திலும் எந்தவித பாகுபாடுமின்றி சரணடைந்து, பிறகு வரும் மௌனத்தில் தங்களைக் கண்டடைவதே இல்லறத்தில் தவம் என்பது எனது கருத்து.

இந்த இல்லறத் தவத்தைத்தான், காதலின் தவத்தைத்தான், காமத்தின் நிறைவான தவத்தைத்தான், பேரன்பின் மூலம் அடைந்த தவத்தைத்தான், உணர்வுகளின் சங்கமத்தின் தவத்தைத்தான், மூன்று விதமாக, அதாவது 1. அத்தகைய தவத்தின் நிமித்தங்களைத் தனது துணையைப் பிரிந்த பொழுதில் அசைப்போடும் உணர்வுகளையும், 2. தவத்தின் சுகங்களை எப்பொழுது உணர முடிந்தது என்றும், 3. தவத்தின் நிறைவு எதில் உள்ளது என்றும் வாசக அனுபவத்தை எனக்கு தனது வரிகளில் கொடுத்திருக்கும் படைப்பாளி,   நாடகம், சிறுகதை, கவிதை, கட்டுரை, தொகுப்பு நூல்கள் எனப் பல துறைகளில் பரிமளிக்கும் அன்பு நண்பர், எழுத்தாளர், கவிஞர் அன்பாதவன் அவர்களின் கவிதைத் தொகுப்பு நறுமுகை பதிப்பகத்தின் வெளியீடாக வந்துள்ள #உயிர்மழை_மழை_பொழிய_வா ஆகும்.

காதலையும் காமத்தையும் கூடவே தாய்மையையும், இறையையும் ஒருங்கே ஆண் மகன் யாரிடம் உணருவான் எனில் அது தகுந்த துணையான, தன் மனைவியிடம் மட்டுமே என்ற அற்புதமான செய்தியைப் பதிவு செய்திருக்கும் “பெருங்கதவுகள்” தலைப்பிட்ட கவிதை வரிகள்..

“காதலின் வாசம் வீசுமொன்றில்

காமத்தின் வேகம் பிறிதொன்றில்

பாசத்தின் பதிவுமுண்டு; மென்னழுத்தத்தில்

அம்மாவின் பரிவுமுண்டு”

 மேலும் “வளையல் துண்டுகளின் காட்சி” கவிதையின் வரிகள்..

“ ‘பசிக்குதுடா’ என்ற கெஞ்சலில்

எட்டிப்பார்க்கும் உன்னுள்ளொறு

குழந்தை

பசியறிந்து ஊட்டிய விரல்களிலிருந்து

வழியுமுன் கடவுளின் மனிதம்” 

மெல்லிய உணர்வுகளைத் துல்லியமாகப்  பிரதிபலிக்கின்றன.. இந்தக் கவிதைகள் இல்லற தவத்தின் சுகங்களை உணர்த்துவதாக உள்ளது.

“சோமபானம்” கவிதையில்..

“என் விருப்பம்

படுக்கையோ தொடுகையோ அல்ல

உன் கையால் கிடைக்குமா

ஒருவேளை உணவு..

ஒருவேளை இதுவுமோர் கனவு..?

ம்ஹூம்..

இன்றிரவு..”

வரிகளும்

“வறண்ட நிலம்

தாக தவிப்பு

உயிர்மழை பொழிய வா!”

மற்றும் 

“பனிப்பொழிவைக் கண்டதில்லை

கடுங்குளிரை உணர்கிறேன்

தூரத் தேசத்தில் நீ” 

குறுங்கவிதைகள், தவத்தின் நிமித்தங்களைப் பிரிதலும் பிரிதல் பொழுதுகளை அசைபோடும் பாலை திணைகளில் அமைந்த நவீன கவிதைகளாகத் தெரிகின்றன.

நிறைவு என்றால் என்ன.. தன்னை முழுமையாக ஓரிடத்தில் அல்லது ஒருவரிடத்தில் ஒப்புக்கொடுத்தல் மட்டுமா நிறைவு..?  ஒப்புக்கொடுத்த பிறகு வரும் மௌன பரிபாலனங்கள், ஒப்புக்கொடுத்த பிறகு விட்டுப்பிரியாமல் இருத்தலின் சுகம், விட்டுப் பிரியும் தருணத்தில் கட்டிப்போடும் மொழி, ஏதோ ஒரு வித்தத்தில் நீயின்றி நானில்லை என உணர்த்தலின் பூரணத்துவம்.. விட்டுப்பிரிந்தாலும் இருளுக்குக் காவு கொடுக்கும் நிழலாய் உன்னையே தொடர்வேன் என்பதிலிருக்கும் நேசம், கிறங்கி கரைந்து இரண்டறக்கலந்து  தொலைந்து தனிமைகளில் நிகழும் சந்திக்காமல் சந்தித்துக்கொள்ளும் சங்கமம், விரல் தொடாமல் உறவாடும் பாஷைகள், புணர்தலும் புணர்தல் நிமித்தமும் நிகழா பேரன்பின் பரிபூரணக் கலத்தல் இவை எல்லாமே நிறைவு தான் என்பது எனது கருத்து.. அத்தகைய தவத்தின் நிறைவு எதில் உள்ளது என்பதைப் பின்வரும் கவிஞரின் வரிகளில் உணர முடிகின்றன.

“கவிதையில் பொருளுணர்”  கவிதையில்..

“அன்பு நிலவும் வரை – உலகில்

தமிழ் உலவும் வரை

வாழ்வோம் நாம்

காலனைக் காணும்போது எட்டு உதைத்து விடாதே

கண்ணம்மாவையும் அழை

எமனுலகிலும் படைப்போம் இலக்கியம்!”

 

“மவுனமொழி – 1” கவிதையில்..

“எதிர்கொள்ள வியலா

திட மவுனத்திலிருந்து

ஏதும் புரியாமல் வெளியேறுபவனின்

கரம் பிடித்து மடிசரித்து

தலைசாய்க்க உடல் நனைக்கும்

கடைக்கண் ஈரம்”..

 “காவு” என்ற தலைப்பிட்ட கவிதையில்..

“என்னைக் கிழிப்பது சுகமெனில்

கிழித்து விட்டு போ!

சந்தோஷமாய்க் காவு கொடுக்கிறேன்

இரண்டாம் தாய்க்கு என்னை!”

 “வியர்வையிலிருந்து பிரசவிக்கும் பிரதியின் மொழியாக்கம்” கவிதையில்..

“சக்தி சாந்தசொரூபி

உன்னோடு உறவுகிற தருணங்களில்

உணர்கிறேன் அர்த்தநாரியாய்!”

இப்படி அடுக்கொண்டே போகலாம் நிறைவை நிறைவாய் உணர வைக்கும் சொற்களையும் வரிகளையும்.. மேலும் மவுன எச்சில், சோகச்சீழ், அகால மவுனம், சிரைக்காத கருவனம், காமதகனம், வயிறு காட்டிய திசை, முத்த பூர்ணிமா போன்ற கவிஞரின் சொல்லாடல்கள் மீண்டும் மீண்டும் கவிதைகளைப் படிக்கத் தூண்டுவதோடு மனதில் நங்கூரமிட்டு அமர்ந்துவிடுகின்றன.

மொத்தத்தில் இன்றைய நாளில், இன்றைய வாசிப்பில், இன்றைய உணர்வுக் கிடங்கில், இன்றைய “காதல்..” உச்சரிப்பில், இன்றைய நேச நினைவுகளின் இரை மீட்டலில், மௌனமாய் ஈரம் காயாத உயிர்மழை பொழிந்து நனைத்தது கவிஞரின் தவ வரிகள் இடம்பெற்றுள்ள #உயிர்மழை_பொழிய_வா கவிதைத் தொகுப்பு.

அன்பு கவிஞர் அன்பாதவன் அவர்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகளும் பேரன்பும் !


நூல் தகவல்:

நூல் :    உயிர்மழை பொழிய வா!

ஆசிரியர் :   அன்பாதவன்

வகை :  ;  கவிதைகள்

வெளியீடு : நறுமுகை

வெளியான ஆண்டு :   2016

பக்கங்கள் :   -

விலை : ₹  70

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *