கோவையின் மசக்காளிபாளையம் பகுதியில் இருந்த அந்த வீட்டின் ஹாலின் சுவற்றில் பெரிதான மிகப் பெரிதான சேவின் படம் இருக்கும். அங்கிருந்த ஒரு மனிதர் தான் எனக்கு அந்தப் புத்தகத்தை கொடுத்தார். அது தோழர் அமில்கர் கப்ராலின் “விடுதலைப் போராட்டத்தில் பண்பாட்டின் பாத்திரம்”. ஆம் கொடுத்தவர் விடியல் சிவா. “இதைப் படியுங்கள் தோழர்” எனக் கொடுத்தார். இன்னமும் பலருக்கு நானும் அதையே சொல்லி வருகிறேன், அனைவரும் படிக்க மறவாதீர்கள் என்று. அமில்கர் கப்ரால் என கூகுள் செய்து பார்த்த போதுதான் இணையத்தில் தோழர் தாமஸ் சங்காராவை கண்டடைந்தேன். அவர் பெண்களிடம் பேசிய பேச்சுக்கள் கூகுள் புக்ஸில் கிடைத்திட அதைப் படித்தேன். இது நடந்து ஏறக்குறைய 15 வருடங்களுக்கு மேலாக இருக்கும். இத்தனை வருடங்களுக்கு பின் தோழர் தாமஸ் சங்காரா குறித்து ஒரு புத்தகம் வருகிறது என்றவுடன் உடனே வாங்கி வாசித்து விட்டேன்.
இனி வாசித்தவற்றில் இருந்து…
ரொம்ப நாட்களாக பசியோடு இருப்பவர் ஒருவருக்கு திடீரென உணவு கிடைத்தால் என்ன நடக்கும்? அவர் அப்படி சாப்பிடுவார். நாமெல்லாம் விக்கித்துப் போவோம். ஆனால் உண்மையில் அவர் அப்படி சாப்பிட எண்ணலாமே தவிர , சாப்பிட முடியாது. அந்த நிலையில் தான் இருந்தார் தாமஸ் சங்காரா என்னும் மார்க்சிய புரட்சியாளர். அரசின் உயர்ந்த பதவியில் இருந்தது நான்கே வருடங்கள். அதற்குள், அந்நாட்டின் அனைவருக்கும் கல்வி கொடுக்க முனைகிறார், பெண்களுக்கு விடுதலை தர உழைக்கிறார், நிலவுடைமை சமூகமாய் இருந்ததில் இருந்து நிலங்களை பொதுசொத்தாக்குகிறார், அரசின் செலவில் அனைத்து கிராமங்களிலும் ஆரம்ப சுகாதார நிலையம் அரசு செலவில் தடுப்பணைகள், பள்ளிக்கூடங்கள் கட்டுகிறார். ஏன் ராணுவத்தினர் கூட சமூகத்தில் கடமைகளை செய்ய வேண்டும் என ஏராளமாக ஏராளமாக விஷயங்களை செய்துவிட எத்தனித்து அதில் சிலவற்றில் வெற்றியும் கண்ட அவர் சொந்த குழுவினரின் சூதால் நான்கே வருடங்களில் கொல்லப்படுகிறார். இப்படுகொலைக்கு பின்னால் பிரஞ்சு ஏகாதிபத்தியம் இருந்திருக்குமோ என்ற எண்ணம் எழாமல் இல்லை. ஏனெனில் எங்கெல்லாம் பொதுவுடைமை தத்துவத்தின் மேல் நம்பிக்கை கொண்டு ஆட்சியாளர்கள் மக்களுக்கு தேவையானவற்றை தேடிதேடி பிரயாசைப்பட்டு செய்கிறார்களோ அங்கெல்லாம் ஏகாதிபத்தியம் தன்னுடைய கொடுங்கரங்களை நீட்டி கொலைபாதகம் செய்திருப்பதே நெடிய வரலாறு.
ஆப்பிரிக்காவில் சின்னதொரு பகுதியான பர்கினா போசோ என்னும் பகுதியில் இருந்த அந்த மனிதன் இன்று ஒட்டுமொத்த ஆப்பிரிக்காவின் “பிரியமிகு பிரசிடெண்ட்” என போற்றப்படுகிறார், நினைவு கூரப்படுகிறார். ஏன் அவரை ஆப்பிரிக்க சே என்று கூட அழைக்கிறார்கள். அப்படி அழைப்பதில் தவறொன்றும் இருப்பதாக தெரியவில்லை. ஏனெனில் அந்த சிறிய நிலத்திற்கு தோழர் தாமஸ் சங்காரா அவ்வளவு செய்திருக்கிறார். அறியாமையில் பழமையின் பெருமையில் அதொன்றே தீர்வு என எண்ணியிருந்த மக்களை அறிவியலின் துணைகொண்டு அங்கே மலேரியா நோய்க்கு எதிராக தடுப்பூசி போடுவதில் வெற்றியும் கண்டவர் அவர். நான்கே வருடங்களில் மக்களின் அன்பை பெற்று காலங்கள் கடந்து நிற்கிறார் தோழர் தாமஸ் சங்காரா.
ஒரு புரட்சியாளரின் வாழ்வை எப்படி படைப்பது என்பதை இப்புத்தகம் எளிதாக சொல்கிறது. ஏதிலி மூலம் பரவலாக அறியப்பட்ட அ.சி.விஜிதரன் அவர்கள் மொழியாக்கம் வெகு இயல்பாக சிறப்பாக இருக்கிறது. ஒரு பக்கம் தோழர் தாமஸ் சங்காராவின் வாழ்க்கை வரலாறு சொல்லப்பட்டாலும், மறுபாகமாக அவரது பேச்சுக்கள், பேட்டிகள் தொகுக்கப்பட்டு இருப்பதே சிறப்பாக இருக்கிறது. ஏனெனில் சொல் ஒன்றும் செயல் வேறு ஒன்றாக இல்லாமல் சொல்லும் செயலும் சிந்தனையும் ஒன்றாக இருந்த அந்த புரட்சியாளரை வாசகருக்கு அடையாளம் காட்டிட இப்புத்தகம் சிறப்பாக இருக்கிறது. சிந்தன் புக்ஸ் நிறுவனத்திற்கு வாழ்த்துகள் !
இனி மீண்டும் சங்காராவிற்கு வருவோம்.
பிரஞ்சு காலனி நாடாக அவர்களால அப்பர் வோல்டா எனப் பெயரிடப்பட்டு வந்த நாட்டை “தன்மானவர்களின் நிலம்” என பொருள்படும்படி பர்கினோ பாஸோ என மாற்றம் செய்கிறார் தோழர் சங்காரா. எப்படி ஒடுக்கப்பட்டவர்கள் தங்கள் மீது சுமத்தப்பட்ட அழுக்குகளை செயல்களை, ஏன் கலாச்சார குறியீடான பெயர்களை வாய்ப்பு கிடைக்கையில் எப்படி பெயர்த்து எடுத்து தங்களை நிலைநிறுத்துகிறார்கள் என வரலாற்றில் உள்ள பல விஷயங்கள் போலத்தான் தோழர் சங்காராவின் பெயர் மாற்றமும். பெயர் மாற்றம் ஒரு பேரெழுச்சியை, நம்பிக்கையை உண்டாக்குகிறது. அவை புரட்சிக்கு மிக முக்கியமானவை. இன்று கேரளத்தின் சாதனைக்கு decentralisation எனப் பொருள்படும் அதிகார பரவலாக்கல் அதாவது சமூகபொருளாதார படிநிலையில் கடைசியில் வைக்கப்பட்டு இருப்பவர்களுக்கும் அதிகாரத்தின் கைகள் சென்று சேரவேண்டும் என்பதான நிலைபாடு காரணமாக இருக்கிறதோ அது போலவே ஆட்சிக்கு வந்தவுடன் தோழர் தாமஸ் சங்காராவும் தனது அதிகாரத்தை பரவலாக்குகிறார். ராணுவத்தில் பணிபுரிபவர்கள் சித்தாந்தமோ அல்லது அரசியல் புரிதலோ அற்று மக்களிடையே வெகு தள்ளி நின்றுவிட்டால் அவர்கள் கிரிமினல்கள் ஆவார்கள் என கருதி அவர்களையும் புரட்சிகர திட்டத்தில் மக்களுக்கு துணைபுரிய பணிக்கிறார்.
ஆப்பிரிக்காவில், லத்தீன் அமெரிக்காவில் என எங்கெல்லாம் ஏகாதிபத்திய காலனியம் தூக்கியெறியப்பட்டு அந்நாடு விடுதலை அதுவும் பொதுவுடைமை சிந்தனையாளர்கள் மூலமாக கிடைக்கப் பெறுகிறதோ அங்கெல்லாம் அவ்வரசுகள் செய்த முதல் காரியம் என்ன தெரியுமா? எழுத்தறிவித்தல் என்பதுதான். அதுதான் பர்கினா பாஸோவிலும் நடக்கிறது. நிதிப்பிரச்சனைகள் பெரிதும் இருந்தாலும் அவற்றை தடையாக கருதாமல் வளர்ச்சிப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. நாடு ஒரு பெரிய மாற்றத்திற்கு தயாராகிறது என்பது கண்கூடாக தெரிகிறது. அதுவரை இல்லாத செயலாக அரசின் மிக முக்கியத் துறைகளில் குடும்ப நலத்துறை, சுகாதாரத்துறை, கலாச்சாரத்துறை ஆகியவற்றில் பெண்களை நியமிக்கிறார். அதோடு நீதிபதிகளாக, மாகாண உயர் ஆணையர்களாக, அரசின் விமானப் போக்குவரத்து ஊடக நிறுவனம் என பலவற்றின் தலைமை பொறுப்புகளும் பெண்களுக்கே சென்று சேர்ந்தன. இராணுவ பயிற்சி கூட கொடுக்கப்பட்டது.
இப்படியாக அவர் குறித்த வரலாறு மிக சுவாரசியமாக ரசமாக இருக்கிறது. சிக்கன நடவடிக்கை என மக்களிடம் கசக்கி பிழியாமல் தன்னுடைய சொந்த வாகனத்தில் வருகிறார் தாமஸ் சங்காரா. இன்னும் பலப்பல உண்டு, வாசித்து தெரிந்துகொள்ளலாம்.
அடுத்த பகுதி அவரது பேட்டிகள், உரைவீச்சுகள். கியூபாவின் அருமைத் தோழர் பிடல் போல் இவரும் சளைக்காமல் பேசுவார் போல. பொலிவியாவின் முன்னாள் அதிபர் சாவேஸ் அவர்களும் நிறைய நேரம் பேசுவார் என நினைக்கிறேன். இங்கும் தாமஸ் சங்காரா மக்களோடு பலநேரம் பலதும் பேசுகிறார். பிரஞ்சு ஜனாதிபதியை வைத்துக் கொண்டே ஏகாதிபத்தியம் காலனிய நாடுகளை எப்படி சுரண்டுகிறது, எளிய நாட்டை எதற்காக சுரண்டுகிறது அதன் பாசாங்கு குறித்து எல்லாம் அவர் முன்னிலையிலேயே தடையின்றி பேசுகிறார். மகளிர் தினத்தின் அவரது உரை அவசியம் படித்திட வேண்டியது.
நிலவில் கொஞ்சம் காலம் நீங்கள் தங்க வேண்டி வந்தால் நீங்கள் கையுடன் எடுத்து செல்லும் புத்தகம் யார் எழுதியதாக இருக்கும் என்ற கேள்விக்கு, தாமஸ் சங்காரா அவர்கள் உடனே சொல்கிறார், “மாமேதை லெனின் அவர்கள் எழுதியுள்ள புத்தகங்களை”. எப்படி பொதுவுடைமை சிந்தனைக்கு வந்தீர்கள் என்ற கேள்விக்கு, அவர் இயல்பாக சொல்லும் பதில், “விவாதங்கள் வாசிப்பது மூலமாகத்தான்”. கியூபாவை உறவு நாடு கொண்டு மாமேதை லெனின் அவர்களை அடையாளமாக கொண்டு தாமஸ் சங்காரா பர்கினா போசோ நாட்டில் புரட்சிகர திட்டங்களை அமல்படுத்துகிறார்.
இறுதியாக, தோழர் தாமஸ் சங்காராவின் செயல்பாடுகளில் சில போதாமைகள் இருந்தன. அவரது சிந்தனைக்கும் செயல்பாட்டிற்கும் சிலச்சில வேறுபாடுகள் இருந்தன. அதை அவரே கண்டுபிடித்தும் இருக்கிறார். அவரது வேகத்திற்கு அவர் சார்ந்த குழு ஈடுகொடுக்க முடியவில்லை. அவரது பெண்கள் குறித்த சிந்தனைகளிலும் சில சில கேள்விகள் நமக்கு எழுகின்றன. நாம் புரிந்து கொள்ள வேண்டியது ஒன்றுதான், அது பிரெஞ்சு புரட்சி ஏராளமாக பிரச்சனைகளை கொண்டிருந்தது, ஆனால் அதன் முக்கியத்துவம் அளப்பெரிது. அது போலவே நான்கே ஆண்டுகளில் என்னவெல்லாமோ (பெரிய நாடுகள் கொடுக்கும் கடன் குறித்த சூதுகளை கண்டுணர்ந்து கடனை திருப்பி செலுத்த மாட்டோம் என்றும் கடன் கொடுத்திட வைக்கும் கண்டிஷன்கள் நியாயமற்றது, சூது நிறைந்தது எனவும் சொன்னார்) செய்ய முனைந்திட்ட ஒரு புரட்சியாளர் இன்னும் சில வருடங்களாவது கிடைத்திருந்தால் ஆப்பிரிக்க மண்ணில் ஒரு கியூபா சாத்தியமாகி இருக்க வாய்ப்பிருக்கிறது என்பது என் கருத்து. அது போலவே 37 வயதிலேயே அவன் ஆயுளை முடித்தவர்கள் இன்னும் சில காலம் விட்டிருந்தால் தோழர் தாமஸ் சங்காரா அவர்களின் சிந்தனைகளில் சிலவற்றில் மேலும் செழுமை கண்டிருக்கும், மார்க்சிய எங்கெஸ்ல் மற்றும் லெனின் சிந்தனைகளின் மக்களுக்கு மாற்றங்கள் நிகழ்த்திட்ட ஒரு மாபெரும் தலைவராக அவர் இன்னமும் பேசப்பட்டு இருப்பார்.
மீண்டும் சிந்தன் புக்ஸ் நிறுவனத்திற்கும் எளிமையாக அருமையாக மொழியாக்கம் புரிந்திட்ட அ.சி.விஜிதரன் அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றியும் புரட்சிகர வாழ்த்துகளும்.
நூல்: | தாமஸ் சங்காரா வாழ்வும் சிந்தனையும் |
பிரிவு : | வாழ்க்கை வரலாறு |
ஆசிரியர்: | தாமஸ் சங்காரா |
தொகுப்பும் மொழிபெயர்ப்பும் | அ. சி. விஜிதரன் |
வெளியீடு: | சிந்தன் புக்ஸ் |
வெளியான ஆண்டு | 2020 |
பக்கங்கள் : | 432 |
விலை: | ₹ 450 |
ராம் கோபால் பிறந்த ஊர் காஞ்சிபுரம்/ புதுச்சேரியிலுள்ள அகில இந்திய வானொலியில் பணிபுரிகிறார். புனைவு மற்றும் அபுனைவுகள் சார்ந்த நூல்களை தொடர்ச்சியாக வாசிப்பதோடு நூல்கள் குறித்தான அறிமுகக் குறிப்புகள், விமர்சனங்களையும் எழுதி வருகிறார்.