ழுத்தாளர் சாருநிவேதிதா அவர்கள் எழுதிய ‘தீராக்காதலி’ என்ற கட்டுரை நூலைச் சமீபத்தில் வாசிக்க நேர்ந்தது. இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழிலும் அடங்கக்கூடிய ஒரு நூலினை வாசித்த மகிழ்வு. அவருடைய நாவல்கள் சிறுகதைகள் இதுவரை நான் வாசித்ததில்லை.

ஆனால் அவர் கட்டுரையில் நாவல் வாசிப்பதைப் போல, சிறுகதை வாசிப்பது போல எழுதியுள்ளார். அறிவார்ந்த கருத்துக்களை , ஆய்வு நோக்கங்களை, எளிய நடையில் எல்லோருக்கும் புரியும் வகையில் சுவாரசியமான நகைச்சுவை கலந்து, எள்ளல் சுவையோடு சமூக பகடிச் செய்து அற்புதமாக அவர் எழுதியிருக்கிறார்.

இந்த கட்டுரை நூல் ஒரு ஆவணம் பல்வேறு தகவல்கள் பல்வேறு நூல் நிலையங்களுக்குச் சென்று பல நாளாகக் கடுமையாக உழைத்து அந்த கட்டுரைகளை அவர் தயார் செய்து இருப்பார்.

ஆய்வு நூல்கள் ஒருவகை சுவாரசியம் தரும். சுவை நூல்கள் ஒருவகை ஆனால் ஆய்வு நூலைச் சுவையாக எழுதக்கூடிய வித்தகம் அவருக்குக் கைவந்திருக்கிறது.

இந்த நூலில் எம்.கே.தியாகராஜ பாகவதர், பி.யூ.சின்னப்பா, எல. ஜி.கிட்டப்பா, கே.பி.சுந்தராம்பாள், எம்ஜிஆர், எம்.ஆர்.ராதா. இவர்களின் வாழ்க்கையில் அடைந்த துயரம், பெற்ற வெற்றி; இவர்களின் கலை திறமை, இவர்கள் கலைகளை வளர்த்த விதம். தனிநபர் சிறப்புப் பண்பு சறுக்கிய இடம்., மோசமான குணம் என அத்தனையும் பதிவு செய்துள்ளார். பல்வேறு அறிஞர்களின் கருத்துக்களை உள்வாங்கி உள்ளதை உள்ளவாறு கொஞ்சமும் சுவாரஸ்யம் குறையாதவாறு விறுவிறுப்பான நடையில் இந்த பெருமக்களின் மேன்மைகளையும் சில சில கீழ்மைகளையும் தெரிந்து கொள்வதற்கான வாய்ப்பை இந்நூல் உருவாக்குகிறது.

இவர்கள் எல்லோரும் நாடகக் கலையில், இசைத்துறையில் புகழின் உச்சத்தைத் தொட்டவர்கள் மட்டுமல்லாது; தமிழ் சினிமாவிலும் கால்பதித்து பல்வேறு விதமான திறமைகளை வெளிக்காட்டி மக்களை எல்லாம் கட்டிப் போட்டவர்கள்.

இந்த நூலின் வழியே தமிழ்நாட்டு, தமிழ் இசை, மரபு நாடக கலை மரபு, வசன உச்சரிப்பு அத்தனையும் தெரிந்து கொள்ளக்கூடிய வாய்ப்பும் இந்த சிறிய நூலைப் படிக்கும் போது கிடைக்கிறது.

இந்த நூலின் முதல் கட்டுரையான எம்.கே.தியாகராஜ பாகவதர் எப்படி இசைத் திறமையை வளர்த்துக்கொண்டார். அவரை மக்கள் எப்படி கொண்டாடினார்கள்? அவரின் ரசிகர் கூட்டம் குறித்த எழுதப்பட்ட கட்டுரையாகும். பத்தாயிரம் பேருக்கும் மேற்பட்ட ரசிகர் கூட்டம் ஒரு ரயிலை நிறுத்தி விட்டு ‘எம்கேடி வெளியில் வந்து கை காட்டினால் தான் ரயிலை விடுவோம்’ என்று சொல்லுகின்ற அளவுக்கு ரசிகர் கூட்டம் அவர் மேல் உள்ள மரியாதையையும் பாசமும் வைத்திருந்த எல்லாம் பார்க்க முடிகிறது. அது தகுதியானது நேர்மையானது.

பி.யூசின்னப்பா தமிழ்த் திரையில் உச்ச நட்சத்திரமாக இருந்த காலத்தில்., உண்மையிலேயே சூப்பர் ஸ்டார் என்றால் முதலில் அவரை தான் சொல்லவேண்டும். முதலில் டபுள் ஆக்சன் செய்தவர் அவர்தான். டப்பிங் கொடுக்கின்ற தன்மையை உருவாக்கியதும் அவரே படத்தில்10 வேடத்தில் தோன்றுகிறார் பி.யூ.சின்னப்பா.

எல்.ஜி கிட்டப்பா அற்புதமான சாரிமும் சரீரமும் உடையவர் அவர் பாடலை கேட்டு எண்ணற்ற இசை மேதைகள் அவரைப்புகழ்ந்து சொல்லுகின்ற பொழுது அப்படி ஒரு மனிதனுடைய பாடல் எல்லாம் கேட்கக் கூடிய வாய்ப்பு நமக்குக் கிடைக்கவில்லையே என்று ஏங்கும் அளவிற்கு ஆசிரியர் இந்த கட்டுரையில் அவருடைய பாடல்களைப் பற்றியும் நடிப்புத் திறமையைப் பற்றியும் சொல்லி விவரித்து இருப்பார்.

இலங்கை முதலிய வெளிநாடுகளுக்குச் சென்று நாடகம் நடத்திவிட்டு வந்தார் என்பதைப் பற்றியெல்லாம் விலாவாரியாக எடுத்துரைக்கிறார். குடிபோதையில் கள்ளச்சாராயம். அடித்து 28 வயதில் சீரழிந்த ஒரு கலைஞனின் வாழ்வை அவர் பதிவு செய்த விதம் அலாதியானது

இந்த புத்தகத்தின் தலைப்பு தீராக்காதலி . அதற்குக் காரணம் சுந்தராம்பாளும் கிட்டப்பாவும் நடந்த காதல் திருமணம் . 7 ஆண்டுகள் திருமணத்திற்குப் பின்பு கிட்டப்பா வாழ்கிறார். அதிலும் நான்காண்டுகள் கிட்டப்பாவிற்கும் கே.பி.சுந்தராம்பாளுக்கும் தொடர்பே இல்லை. ஆக மூன்று ஆண்டுகள் மட்டுமே கணவனாக வாழ்ந்த கிட்டப்பாவின் மேல் தீராத காதல் கொண்டு நாற்பது ஆண்டுக் காலம் விதவையாக வாழ்ந்தவர் கே.பி.சுந்தராம்பாள். தன் கணவன் தன்னை வெறுத்து ஒதுக்கினாலும் அவர் மீது தீராத காதல் கொண்ட பெண்மணியாக இருந்தார்.

இத்தனைக்கும் அவர் முறையாகத் திருமணம் செய்துகொள்ளவில்லை. ஒரு குழந்தை பிறந்து அந்த குழந்தையும் இறந்து போனாலும் கூட, கணவனை ஆயிரம் முறை வெறுத்து ஒதுக்கினாலும் அந்த மனிதர் மேல் இந்த பெண்மணி வைத்துள்ள காதல்தான் எவ்வளவு மகத்தானது. அது மாத்திரமல்லாமல் அவர் கடன் சுமையில் இறக்கும் தறுவாயில் இருக்கின்ற பொழுது 18 ரூபாய் பணத்தை எடுத்துக் கொண்டு வந்து தன் கணவன் கடன் காரனாகச் சாகக்கூடாது என எல்லா கடனையும் அடைத்த பெண்மணி கே.பி.சுந்தராம்பாள். காதலின் மேன்மையைச் சொல்லுகின்ற பெண்மணியாக கே பி சுந்தராம்பாள் இருந்தார் என்பதைப் படிக்கும்போது தீராக்காதலி என்ற தலைப்பை மீண்டும் ஒரு முறை ரசிக்கத் தோன்றியது.

மருதூர் கோபாலமேனன் இராமச்சந்திரன் பற்றிய பல்வேறு அபூர்வமான தகவல்கள் எல்லாம் இந்த புத்தகத்தில் பார்க்க முடிகிறது. எம்ஜிஆரின் தாத்தா மிகப்பெரிய பணக்காரராக கேரளாவிலிருந்து இருக்கிறார்.

அவர் தந்தை நீதிபதியாக இருந்து இருக்கிறார். பின்னர் இலங்கைக்குச் செல்கிறார்கள். இரண்டரை வயதில் தந்தை இறக்கிறார். 40 வயது வரை எம்ஜிஆர் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி., நடிப்பில் பெரிய அளவுக்கு முன்னுக்கு வந்து., அரசியலையும் சாதித்து இருந்தபோதும் கூட சொந்த வாழ்க்கையில் அவர் மூன்று திருமணம் செய்தது., ஜானகி அம்மாளுக்கு ஏற்கனவே ஒருவருடன் திருமணம் நடந்தது பின்னர் விவாகரத்து ஆகி ஒரு குழந்தை இருந்தது., அதன் பிறகுதான் எம்ஜிஆர் ஜானகியை கரம்பிடிக்கிறார் என்பது போன்ற என்ற அரிய தகவல்கள் இந்நூலில் இருக்கிறது.

எம்.ஆர்.ராதா என்ற ஒப்பற்ற கலைஞன் கொள்கைப் பிடிப்புள்ள திராவிட இயக்கச் சிந்தனையாளர். பெரியாரைப் பின்பற்றுகிறவர் தன் வாழ்நாள் முழுவதும் எந்த விதமான சமரசம் செய்யாமல் கொள்கைக்காக வாழ்ந்தவர் பல்வேறு உதவிகளைச் செய்தவர்.

பெரியாரின் சீடராகப் பெரியாரின் கொள்கைப்படி வாழ்ந்தவர்., எம்ஜிஆரை எதிர்த்துத் தேர்தலுக்கு நிற்கச் சொன்னபொழுது தேர்தலில் எதிர்த்து நிற்க மாட்டேன் என்று பெரியாரின் சீடனாக இருந்தவர்.

சிவாஜி கணேசன் ஒருமுறை இம்பலா கார் வாங்கி அதைப் பற்றி மிகவும் பெருமைப்பட்ட நேரத்தில்., இவர் இம்பலா கார் வாங்கி அதில் மாட்டுக்கு வைக்கோல் வைத்துக்கொண்டிருந்தார். ஏன் என்று கேட்டபோது ‘இது தகரத்தால் ஆன பொருள். இதற்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் என்பதற்காகத்தான் நான் செய்தேன்.’

நியாயமான முறையில் எதைப் பற்றியும் அலட்டிக் கொள்ளாமல் யதார்த்தமாக இருந்தவர்களுக்குப் பாட்டுப் பாடக்கூடியவராக இருந்தபோதும் நாடகங்களில் பாடல்கள் அதிகமானால் மக்கள் கருத்துக்களைக் கேட்க மாட்டார்கள் என்று பாடலை தவிர்த்து கருத்துக்களை அதிகமாகச் சேர்த்த பெருமை இவரையே சேரும்

இப்படியாக 130 பக்கமே கொண்ட இந்த விறுவிறுப்பான நூலில் தமிழ்நாட்டினுடைய அரசியல் கலைகளின் மேதைமை, பெரிய மனிதர்களுடைய பலவீனங்கள், பலம் என எல்லாவற்றையும் ஒரு ஆவணப்படுத்தும் நோக்கோடு அதனுடைய அரசியல், அக்கால மக்களின் நிலை, உண்மையில் கலைஞர்கள் யார் எப்படிப்பட்டவர்கள், தமிழ் சினிமாவில் அரசியலில் எப்படி எல்லாம் இருந்து இருக்கிறார்கள், என்பன போன்ற விஷயங்களை எல்லாம் தனக்கே உரியப் பாணியில் பதிவு செய்திருக்கிறார். இன்னும் நிறைய எழுதக் கூடாதா ? , இன்னும் பல தகவல் படிக்கக் கூடாதா? என்று படித்த பின்பும் ஆவலைத் தூண்டக்கூடிய நூல்.


யாழ் ராகவன்

நூல் தகவல்:
நூல் : தீராக்காதலி
பிரிவு :  கட்டுரைத் தொகுப்பு
ஆசிரியர் : சாரு நிவேதிதா
வெளியீடு: எழுத்து பிரசுரம் (Zero Degree)
வெளியான ஆண்டு :  2008  , 2018 ( எழுத்து பிரசுரம்)
பக்கங்கள் :
விலை : 230
மின்னூல் பதிப்பு

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *