"நான் பறந்து கொண்டிருக்கிறேன்

எப்போதும் நீலத்துடன் இருக்கும் என் வானம்

திசைகள் தொலைத்து தொடரும் என் பயணம்

உதிரும் எனது இறகுகளால் பெரும்புயல் வீசுகிறது

வீழ்கின்ற எச்சத்தால் பெருங்காடு வளர்கிறது

எனது அலகினால் பூமியை ஆழ்துளையிடுகிறேன்

தனிமை உறைந்து கிடக்கும் எனது கூடு

நானிட்ட முட்டைகளை எனது குஞ்சுகளே

புசிக்கின்றன

ஏழு மலைதாண்டி ஏழு கடல் தாண்டி

மரப்பொந்தொன்றில்

வசிக்கும் என் நெஞ்சுக்கூட்டிலிருக்கிறதாம்

அந்த மந்திரவாதியின் உயிர்''.

ஆம், இந்த இடத்தில் உயிர் என்பது கவிதையாகிறது. அந்த உயிரை பிடித்து வைத்திருக்கும் மந்திரவாதி கவிஞன். கவிஞனைவிட வித்தை செய்பவன் இந்த உலகில் எவரும் இலர். எழுத்து வித்தைக்காரனிடம் ஏழு மலைதாண்டி…. ஏழு கடல்தாண்டி வசிக்கும் அந்த உயிரைப் (பி) படிப்பதென்பது எவ்வளவு சிரமம்?

ஆனால், ஒரு சிறந்த வாசகர் அதையும் எளிதாக்கிக் கொள்ள முடியும். அந்த நம்பிக்கையோடுதான் கவிஞர் செந்தியின் ‘தனித்தலையும் செம்போத்துக்குள்’ நுழைகிறேன்.

வாசிக்கத் தொடங்கிய கணத்தில் என்னைச் சுற்றியிருக்கும் உரையாடல்கள் கரைந்து என்னை தனிமைக்குள் செலுத்துகின்றன. ஒவ்வொரு கவிதையும் நிகழ்வின் ஏதோ ஒரு புள்ளியில் தொடங்குகிறது. பின்பும் சொற்கள் நிகழ்வில் நகர்ந்து கொண்டிருந்தாலும், அச்சமும் கவலையுமாக பிரஞ்ஞையற்று இருக்கும் ஒருவனாக இவன் (கவிஞன்) மாறி விடுவதில் நமக்குள் ஒரு பதற்றத்தை ஏற்படுத்திவிடுகிறார். தொகுப்பில் உள்ள ‘பைத்தியமாதல்’ (பக்.23) என்ற ஒரு கவிதையின் மூலம் இந்த நூதனம் நிகழ்கிறது. நாம் சற்றுப் பொறுமையுடன் கவனிக்கவும் வேண்டியிருக்கிறது. கவிதையின் இறுதி வரியில்

"முன்னெப்போதுமில்லாத பிரியத்துடன்

பேருந்து நிலைய

மரத்தடியில் கிழிந்த உடையிலிருப்பவளை

நெருங்குகிறேன்"

என்று முடிக்கும் போது சூழலின் யதார்த்தம் புரிந்துவிடுகிறது. சமூகத்தில் நிகழும் இது போன்ற அவலத்தின் ஒரு காட்சியை திரையிட்டுக் காட்டும் செந்தியின் தொழில்நுட்பம் நம்மை வியக்க வைக்கிறது. அது மட்டுமல்லாமல், வாழ்வில் நாம் கவனியாது விடுகின்ற பல விசயங்களை நமது புலன்களை நோக்கி காட்சியோடு இழுத்து வரும் செயல்நுட்பத்துடன் ஒரு பேரதிர்வையும் நமக்குள் இட்டுச் செல்கிறார்.

யதார்த்தத்துடன் அழகியலையும் இணைத்துக் கொள்ளும் கவிமனம் கோலங்கள் சுமந்து செல்லும் சடைச்சியாக (பக்.24) கவிஞனுக்குள் உருப்பெறுகிறாள். ‘ராகவன் என்றொரு குடிகார நண்பன்’ (பக்.26) வாசித்த பொழுது செந்தி நமக்கு ஒரு கதை சொல்லியாக மாறுகிறார். சில நேரங்களில் கவிதைக்காரர்களும் கதை சொல்லிகளாக மாற வேண்டியிருக்கும் போது வேறு என்னதான் செய்ய முடியும்? செந்தியுடன் நாமும் அந்தக் கதையை கவிதை என்று நம்பத்தான் வேண்டுமா? மடிப்புக் கலையாத அழகிய உடைகளை நான் தேடி எடுக்கும் வேளையில் களைந்த உடுப்பொன்று அலமாரிக்குள் துருத்திக் கொண்டிருக்குமே அது போலத்தான் இதுவும் என்று எண்ணி அடுத்த கவிதைக்குள் நகர்ந்து விட்டேன். ஒரு கதை தன்னை கவிதையாக்கிக் கொள்ளும் ஆசையை செந்தி போன்ற கவிஞர்கள் தீர்த்து வைப்பார்களாக.

மதுரை தூங்காநகரம் என்ற பெருமையுடையது. அது மட்டுமல்ல. அதன் முக்கியத் தெருக்களோடு தனக்குள்ள உறவை தன் பார்வையால் கொத்தி எடுக்கும் ஒரு பறவையாக மதுரையை சுற்றி சுற்றி வருகிறார். தூங்காநகரத்தின் அழகிய சந்தடிகளைப் பற்றிக் கூறி வரும் போது, மதுரைக்காரியான எனக்கும் என் ஊரின் மீது தனி பிரியம் பீறிடுகிறது. இப்படிப் பிரியத்தோடு வாசிக்கும் போதுதான் ஒரு இடத்தில் செந்தி, இப்படி எழுதிச் செல்கிறார்.

"அஃகுவாவைக் கையில் பிடித்தபடி

முலைகள் குலுங்க

மேலப்பெருமாள் மேஸ்திரி வீதியில்

விரைந்து கொண்டிருந்தாள்

மேலை நாட்டுக் கன்னியொருத்தி”

(பக்.42)  என்று எழுதுகிறார்.

ஒரு பெண்ணைப் பார்க்கும் ஆணின் பார்வை அவளது கழுத்துக்குக் கீழான பகுதிகளை பார்த்துவிட்டுத்தான் அவளை பெண் என ஒப்புக் கொள்ளுமா? ஆண், பெண் என்ற இயல்பான வேறுபாடுகளில் உறுப்புக்களில் மட்டும் கவனம் சென்று மனித மனம் உறுத்தல்களோடு திரிகிறது. இயல்பான கவிதையொன்றில் கவிஞரின் பார்வை துண்டித்து கவிதையின் இயல்பும் குன்றிப் போகிறது. ஒரு கவிஞராக செந்தி தன்னை நிலைநிறுத்திக் கொண்டுவிட்ட பிறகு, இது போன்று வலிந்து செல்லும் வார்த்தைகளை விட்டுவிடுவதற்கும் துணிவு வேண்டும். கவிதை மொழிக்குள் வெற்றுச் சொற்கள் கபடமாக புகுந்து விடுவதை யாரும் அனுமதிக்கக் கூடாது. வாசகர்களும் இதில் கவனமாக இருக்க வேண்டும்.

 

"ஞாயிறென்று தெரியாமல்

பெய்து கொண்டிருக்கிறது மழை''

(பக்.66) (மழைக்குறி)

தெரிந்து வந்தாலும் தெரியாமல் வந்தாலும் காதலைத் தெரிந்து வைத்திருக்கிறது. கூடவே, அதற்கான கவிதையையும் தெரிந்தே வைத்திருக்கிறது. மழையிடம் பெறாத காதலையும் கவிதைகளையும் கவிஞன் வேறு எங்கு பெறுவான்?

இயற்கையின் படைப்பில் காதலும் கவிதையும் ஒன்றாகவே பயணிக்கிறது. மழை வரும்போதெல்லாம் களிப்புற்று காதல் செய்யும் கவிஞர்கள் தமிழ்க்கவிதைப் பரப்பில் தேக்கமற நிறைந்து இருக்கிறார்கள். செந்தியும் அவனின் பார்வை வழியாக அந்தக் காதலை மழையில் கரைத்தாலும் துன்புறுத்தும் காதலை வேறு என்னதான் செய்ய முடியும்? ஒரு கற்பனாவாத அழகியலை தொடர்ந்து பெய்விக்கும் ‘மழைக்குறி’ என்ற கவிதை எனக்கும் பிடித்திருக்கிறது என்ற மெய்யை மெய்யாலும் பொய்யாக்கி விடக்கூடாது என்ற கருத்தோடு ‘அறிதல்’ என்ற கவிதையையும் அந்த அழகியலில் ‘ அடக்கமாக்கிக் கொள்கிறேன்.

ஆண்மைத் திமிரோடு அலையும் சில கவிதைகளுக்கு மத்தியில் பெண்மையின் மையத்திற்குள் தன்னைச் சற்றே உள்ளிழுத்துக் கொள்ளும் கவிதை (பக்.50) ‘கன்னி’யாக உருவெடுத்துள்ளது.

தொகுப்பின் குறுக்கும் நெடுக்குமாக அலைந்து திரிந்தபின் சில ஆசுவாசகங்களோடு கவிதைகளை மேலும் அக்கறையோடு அணுகிப் பார்த்ததில், தொகுப்பில் ஆகச் சிறந்த கவிதைகளாக அவர் நெய்து தரும் நூலிழையில் எதைத் தனியாகப் பிரிப்பது என்று தெரியாமல், கவிதையை வாசிக்கும் கணங்களுக்குள் நம்மை முழுதாக ஒப்படைத்துவிட்டு வெளியே வந்தபின், இதுதான் ஆகச்சிறந்த கவிதை என்று நினைத்து முடிப்பதற்குள், அடுத்த நூலிழைக்குள் நம்மை சிக்க வைக்கும் தந்திரம், கவிஞர் செந்தியின் தனித்துவமான கவிதை வெளிக்குள் பயணிக்கும் மொழியின் திறனா? அல்லது அவரே தன் முன்னுரையில் கூறுவது போல அவரது மனநிலையில் தன்னின்பமாக உருப்பெறும் ஒரு ரசாயன மனக்கலவைக்குள் நம்மையும் இழுத்துச் செல்லும் உத்தியா? என்று குழம்பும் வேளையில், ஒரு உண்மை புலப்படுகிறது.

பொதுவாகவே, இன்றைய நவீனத்துவ உத்திகளை சுவீகரித்துக் கொண்ட கவிதைகள் யாவுமே, ஒன்றிலிருந்து பலவாகவும், பல ஒன்றாகவும் மேலும் இருப்பிலிருந்து இன்மைக்கும், இன்மையிலிருந்து இருப்பிற்கும், நம்மிலிருந்து நம்மை பிரித்துப் பார்க்கும் கண்ணாடியாகவும், நம்மிலிருந்து நம்மை வேறொன்றிற்கு இடம் பெயர வைக்கும் திறனுடையதாகவும் இருக்கின்றன என்ற உண்மையை இத்தொகுப்பின் வழியாகவும் அடையாளம் கண்டு கொள்வது எளிதாகிறது.

இத்தொகுப்பின் முன்னுரையில் கவிஞர் சமயவேல் கூறுவதைப் போல், கவிதையின் மேல் மிகுந்த காதல் கொண்ட ஒரு கவிஞனாகவும், இயற்கையின் அழகியலில் தன்னை இழப்பவராகவும், கவிமனம் பெருக்கெடுக்கும் தன் வாழ்வனுபவங்களை கூறிச் செல்பவராகவும் செந்தியை அடையாளம் காண முடிகிறது.

ஆனால், கவிஞன் என்பவன் ஏதோ சில அடையாளங்களுக்குள் சிக்கிக் கொள்பவனல்ல என்பது போன்ற சில தனித்துவ தொனிகளை விஸ்தரிப்பதுமான கவிதைகளை காணும் போது, நேற்றைய, இன்றைய, நாளைய என்ற எடை போடுதல்களுக்குள் தனது கவிதைகளை விட்டு விடாமல், அங்கிருந்து அவற்றை அப்புறப்படுத்தும் முயற்சியும் கவிஞர் செந்தியிடம் உள்ளது.

”தனித்தலையும் செம்போத்து” மூலம் கவிஞர் செந்தி நவீன தமிழ்க் கவிதைப் பரப்பில் தன்னை நிலை நிறுத்திக் கொண்டுவிட்டவர் என்பது இதை வாசிக்கும் அனைவருக்கும் புரியும்.

  • மஞ்சுளா.

 

நூல் தகவல்:
நூல் : தனித்தலையும் செம்போத்து
பிரிவு : கவிதைகள்
ஆசிரியர்: செந்தி
வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம்
வெளியான ஆண்டு : டிசம்பர் 2013 ( முதற் பதிப்பு)
பக்கங்கள் : 72
விலை : 75
Buy on Amazon

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *