ராஜகுமாரியின் வீடு வழியில் இருந்தது என்கிற முதல் சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டிருக்கும் புதுச்சேரியை சேர்ந்த உமா மோகன் கவிதை உலகில் பிரபலமானவர்.
நாம் சந்தித்த, கேள்விப்பட்ட பல பெண்களை இவரின் கதைகளில் பார்க்க முடிகிறது. தன்னைச் சுற்றி இருப்பவர்களை நுண்ணியப் பார்வையால் தரிசித்து, அவற்றை நமக்கு கடத்துகிறார். பொதுவாக பெண்களை மையப்படுத்திய கதைகள் தான் இவை. இதில் ஆதரவற்றோர் இல்லத்திலிருக்கும் பெண்ணிலிருந்து எளிய குடும்பத்திலிருந்து அழகு நிலையம் செல்லும் பெண் வரை எத்தகைய சூழலையும் திறன்பட சமாளிப்பவர்களாக இருக்கிறார்கள். கணவன் மீதான அன்புக்கு இணையாக உள்ள மரியாதையை, விட்டுக்கொடுக்கும் இடத்தில் இருக்கும் இயலாமையை, தன்னை, தன் பிள்ளையைக் காப்பாற்றும் பெண்ணின் சாமர்த்தியத்தை, சீர், செனத்தி என வரும்போது சராசரி வருமானத்தைக் கொண்டுள்ள குடும்பங்களின் சமாளிப்பை, இன்னும் இன்னும் நாம் கடந்து கொண்டிருக்கும் பலரை கதைகளில் பார்க்கலாம். குடும்பம் என்கிற அமைப்பு குலையாமல் சென்று கொண்டிருப்பதில் பெண்களுக்கு பெரும் பங்கு உண்டு.
விருந்தும் மருந்தும் என்ற கதை என்னை ஈர்த்த ஒன்று. விருந்தோ மருந்தோ மூன்று நாட்களுக்கு மேலே சென்றால் வேலைக்கு ஆகாது. ஊரிலிருந்து வந்திருக்கும் சொந்தக்கார பெரியம்மா தனது சிகிச்சைப் பெறும் மகளுடன் வாரம் ஒரு முறை வந்து சரோஜினி வீட்டில் தங்க நேர்கிறது. அளவில் மிகவும் சிறியதான வீட்டில் சரோஜினியின் கணவனுக்கோ அவர்களுடன் வாரத்தில் ஒரு நாள் வீட்டைப் பகிர்வதில் விருப்பமில்லை. மனைவியோ தவிர்க்க முடியாத நிலையில் இருக்கிறாள். சாடை மாடையாக மருத்துவமனையிலேயே தங்கலாம் என சொன்னாலும், புரிந்து கொள்ளாத பெரியம்மா. திட்டமிட்டு அவர்கள் வரும் தினம் சரோஜினி கோவிலில் கூடுதல் நேரம் செலவளித்து வீடு திரும்புகிறாள். முடிவு என்ன என்பதை கதையை வாசித்துத் தெரிந்து கொள்ளுங்கள். கணவனின் சொல்லையும் தட்டமுடியாமல், விருந்தினரையும் உபசரிக்க முடியாமல், இருதலைக் கொள்ளி எறும்பாய் மாறுகிற சூழல் கிட்டத்தட்ட பெண்களின் அன்றாடங்களில் ஒன்று. முடிவைக் கதையைப் படித்தே தெரிந்து கொள்ளுங்கள்.
சிறுவயதில் விளையாடிய கிராமத்து சாலை முதல் நகரத்து ப்யூட்டி பார்லர் வரை நீள்கிற கதைகளில் வரும் பெண்களில் பலரோடும் நட்பு கொள்ள ஆவல் எழுகிறது. சிந்தனை, சொல், மனம் என எல்லாவற்றிலும் உயர்ந்தப் பெண்களை இதில் சந்திக்கலாம்.
கணவன், குழந்தைகளை பார்க்கவே முடியாது என்ற நிலையில் உள்ள சில்லுக்கட்டம் கதையில் வரும் பெண்ணாகட்டும், மனநிலை சரியில்லாத கணவனின் குறைகளை சகித்துக் கொள்ளும் கமலாவின் மகன் என்ற கதையில் வரும் பெண்ணாகட்டும் கண்ணீர் சிந்தாமல் மலர்ச்சியோடு முள் பாதையைக் கடப்பது தேவைப்படுவோருக்கு புதுத் தெம்பை அளிக்கலாம்.
தொழில் நுட்ப வளர்ச்சி, அறிவியில் முன்னேற்றம் என என்ன சொன்னாலும், இன்றும் தன்னுடையக் கருத்தை குடும்பத்தில் உள்ளோரிடம் தெரிவிக்க இயலாத நிலையில் உள்ள மகளிர் நம்மிடையே எண்ணற்றோர் உண்டு. தொகுப்பை வாசித்து முடித்துப் பின் எழும் கேள்வி, மகளிர் தினத்திற்கு மறக்காமல் வாழ்த்து தெரிவிக்கும் ஆண்களே, தினத்திற்கு பதிலாக, மகளிரை எப்போது கொண்டாடப் போகிறீர்கள்?
தீபா நாகராணி
நூல்: | ராஜகுமாரி வீடு வழியில் இருந்தது |
வகை : | சிறுகதைகள் |
ஆசிரியர்: | உமா மோகன் |
வெளியீடு: | டிஸ்கவரி புக் பேலஸ் |
வெளியான ஆண்டு | 2018 |
பக்கங்கள் : | |
விலை : | ₹ 100 |
தொடர்புக்கு : | +91 8754507070 |
அமெசானில் நூலைப் பெற: |
நூலாசிரியர் குறித்து:
உமா மோகன் திருவாரூரில் பிறந்து பாண்டிச்சேரியில் வசிப்பவர். இவரது ’டார்வின் படிக்காத குருவி’ , ‘ஆயி மண்டபத்தின் முன் ஒரு படம்’ , ‘துயரங்களின் பின் வாசல்’ , ‘நீங்கள் உங்களைப் போலில்லை’ , ‘தழையுணர்த்தும் சிறுவாழ்வு’ , ‘கனவு செருகிய எரவாணம்’
முதலிய கவிதைத்தொகுப்புகள் ’வெயில் புராணம்’ என்ற பயணக்கட்டுரை
‘ராஜகுமாரி வீடு வழியில் இருந்தது’ என்ற சிறுகதைத் தொகுப்பு முதலியன இதுவரை வெளிவந்தவை.