நாம் சொல்ல நினைப்பதையே சொற்கள் பொதியெனச் சுமக்கின்றன. சமயங்களில் சொல்லாதவையுங்கூட கேட்பவர் அல்லது வாசிப்பவர் உபயத்தில் இதில் ஏறிக் கொள்கிறதும் நடப்பதுதான். சொல்வதைச் சொல்ல சொல்பவர் தேரும் சொற்கள் எப்படிப்பட்டவை என்பதில் நாம் கவனங்கொள்கையில் அது அந்த எழுத்தாளுமை குறித்தும் நிறையவே சொல்லத் துவங்குகிறது. புத்தம் வீடு புதினத்தில் ஹெப்ஸிபா ஜேசுதாசன் அவர்கள் கையாண்டிருக்கும் எழுத்தை அப்படியாக அணுகுவது புதினத்தின் வாசிப்புச்சுவையை இன்னும் கூட்டுகிறது.
வாழ்ந்து கெட்ட ‘பெரிய’ குடும்பங்களின் கதையை – சரிவின் விளிம்பிலிருந்து மெதுவாக புதைமணலில் இறங்கிக் கொண்டிருக்கும் அதன் சித்திரங்களை – நாம் பலவிதங்களில் வாசித்திருக்கலாம். மிகை சோகமும், கடந்த காலம் குறித்த நினைவுகளில் மட்டுமே படிந்திருக்கும், உருகியழிந்துவிட்ட, மீண்டும் உயிர்ப்பிக்கவியலாத அவர்களின் கனவுகளும் பகட்டுகளும் நம் முன்னால் வரிசைகட்டும். அதிகாரத்தின் கொம்புத்தேனை சுவைத்துப் பழகிய அக்குடும்பங்களின் ஆண்களினுடைய நாவுகள் இன்னும் அதனை அசைபோடுகிற, அதற்கு ஏங்கியே காலம் கழிக்கிற கதைகளும் அதனுள் நிறைந்திருக்கும்.
அதிகாரச் சண்டை பெரும்பான்மையாக ஆணுலகிற்குள் இருக்கிற ஒரு சிறுபான்மை விகிதத்தினரின் வஸ்து. அதனைக் கைக்கொள்வதற்கான பிரயத்தனங்களிலும், கிடைத்ததைத் தக்கவைத்துக் கொள்வதற்கான பெருமுயற்சிகளிலுமே அவர்களுடைய வாழ்காலத்தின் பெரும்பகுதி கரைந்துவிடுகிறது. காலவோட்டத்தில் நீர்த்துப் போய்விட்ட தமது அதிகாரத்தின் ஈரம் இன்னும் காயவில்லை என்று தத்தமது ஆணவங்களை நம்பச் செய்திடும் பொருட்டு அதனை தம் வீட்டுப் பெண்களிடமே பிரயோகித்து, அவர்களை உழற்றியெடுக்கிற ஒரு கோட்டுச் சித்திரம் இக்கதைக்குள் இருக்கிறது.
பனைவிளை கிராமத்தின் புத்தம் வீட்டின் தலைவராக இருக்கிற கண்ணப்பச்சி, முடிந்த தலைமுறையின் மீதம். புத்தம் வீட்டின் அடிச்சுக் கூட்டில்தான் அவரது அரசவை. ஒரு காலத்தில் ஊர் கோவிலின் டீக்கனராக இருந்தவரின் அதிகார எல்லை நாளடைவில் அவ்வீட்டோடு சுருங்கிப் போகிறது. இரண்டு புதல்வர்களின் குடும்பசகிதமாக அங்கு வாழும் கூட்டுக் குடும்பமே அவரது பிரஜைகள். மூத்தவர் பொன்னுமுத்து கள்ளுக்கடையில் குடித்தனம் நடத்துவது வீட்டின் துருவேறி ‘அழிந்து கொண்டிருக்கிற’ பெருமையின் குறியீடு போல துருத்திக் கொண்டிருக்க அவரது மகள் லிஸியை மையமிட்டே கதைப்பின்னல் இருக்கிறது. முன்னோரின் சொத்துகளில் குளிர்காயும் அவர்களது வீட்டின் ஒரே உத்தியோகஸ்த புத்திரன் இளையபிள்ளை பொன்னுத்தம்பி. அவரது மகள் லில்லியுடன் சேர்த்து அவ்வீட்டில் லிஸியின் பாட்டி கண்ணம்மை, லிசியின் தாயார், அவளது சித்தி என ஐந்து பெண்கள்.
நாவலின் மையச்சரடு முன்சொன்னது போல மதிப்புமிக்க ஒரு குடும்பத்தின் வீழ்ச்சியையே தீட்டிச் செல்கிறது எனினும், அதனாழத்தில் ஒரு பெண் பார்வை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. நிகழுகிற அத்தனையையும் அது தனது கண்கள் வழியே பார்த்து மிகச் சிக்கனமான மொழியில் அதனை விரித்துக் காட்டுகிறது.
உலகையையே ஒரு விளையாட்டுப் பொருளென கையாண்ட ஒரு சிறுமிக்கு, பூப்பெய்திய பின்னர் தலைகீழாகும் வாழ்க்கையில் கசப்பின் முதல் மிடறை அருந்துகையில் எப்படி இருக்குமவளுக்கு என்பதாகட்டும், சடுதியில் அவளைச் சூழ்ந்து கொள்கிற கடைபிடிக்க வேண்டியவைகள் அடங்கிய பெரும்பட்டியலை அவள் எதிர்கொள்ள நேர்கையில் அவளுள் எழுகிற குழப்பங்களாகட்டும், படிப்போ பள்ளிக்கூடமோ கனவத்தனையும் துடைத்தெறிந்துவிட்டு, அவளின் கரங்களுக்குக் கைமாற்றப்படும் குலப்பெருமை காக்கும் பொறுப்பு தருகிற அயற்சியாகட்டும், அத்தனையும் மிகச் சிக்கனமான மொழியிலேயே வெளிப்படுகிறது. எந்த இடத்திலும் எச்சொல்லும் எரிவதில்லை; ஒரு மெல்லிய பெருமூச்சோடு அயர்ந்து உதிர்கிறது.
“…கதவு மறைவில் பாதி முகம் வெளியில் தெரியும்படி குற்றவாளிபோல் எட்டிப்பார்க்கிற பரிதாபத்துக்கு இத்தனை சடுதியில் வந்துவிடுகிறதே, இந்த வாழ்க்கைத் திருவிளையாடலை என்னவென்று சொல்வது!” [பக்:34]
“… அவள் பெரிய வீட்டுப் பெண். பனைவிளை புத்தம் வீட்டுக் குலவிளக்கு. ஆகையால் அவள் பலர் காண வெளியில் வருவது கொஞ்சக்கூடத்தகாது…” எனச்சொல்லிச் செல்கிற எழுத்து தொடர்ந்து “அது அவள் விலையைக் குறைப்பதாகும்…” [ப: 35] என நமுட்டுச் சிரிப்பும் சிரிக்கிறது. இப்படியான சிறிய விசயங்களுக்குள் ஆசிரியர் நுட்பாக பகடியை வைக்கிறார்.
எல்லா அத்தியாயங்களும் தனித்தலைப்புகளிடப்பட்டுள்ளன. மேற்சொன்ன யாவும் வருகிற ஐந்தாவது அத்தியாயத்தின் பெயர் சிறைவாசம். வெளியேற வழியற்ற ஒரு சிலந்தி வலைக்குள் சிக்கிக் கொண்ட கதாபாத்திரங்கள் பகடியின் நிழலில் ஒதுங்குகின்றன. ஒரு வகையில் பார்த்தால் விரக்தியின் உச்சிக்கு அப்பாலிருக்கும் மறுபக்கத்தின் சரிவு தான் அப்பகடி.
பொதுவாக கதை சமைத்தலின் இலக்கணங்களில் உச்ச தருணங்களை ஒத்த திருப்பங்கள் அவ்வப்போது நிகழ்ந்து கதையோட்டத்தின் சுழிப்பு மாறும் போதெல்லாம் எழுத்தின் வன்மையும் அதிகரிப்பது வழமையான எழுத்து முறைமை. ஆனால் ஹெப்சிபாவின் நடை நாடகியமான தருணங்களைக் கூட அலைகள் அடித்தெழாது அமைதிகாக்கிற நீர்ப்பரப்பின் குணம் கொள்கிறது. புத்தம்வீட்டின் பனைகளில் ஏற வருகிற பனையேறியின் மகன் தங்கராசு துணிந்து லிஸியின் மீதான தனது காதலைத் தெரிவிக்கையில், அதனை உள்ளூற விரும்பி மனந்துள்ளும் லிஸியின் எதிர்வினைகள் அவிழும் தருணங்களில், ஒரு கட்டத்தில் இதனை அறிந்து கொள்ளும் சித்தப்பாவின் மகள் லில்லியின் சாடல் லிஸியைத் துளைக்கும் தருணமென எதுவும் – ஏன் கதையோட்டத்தில் ஒரு பெரிய திருப்புமுனையாக நிகழுகிற ஒரு கொலையும் கூட – ஆர்ப்பாட்டமற்ற மிகை மொழி துறந்த எளிமையோடேதான் மொழிப்படுகிறது.
காலச்சுவடு கிளாசிக் வரிசையில் வெளிவந்த இப்பதிப்பிற்கு (மூன்றாம் பதிப்பு, 2014) அம்பை அவர்கள் மிகச் சிறப்பாக எழுதியுள்ள முன்னுரையில் சுட்டியிருப்பதைப் போல இதனை ஒரு பனையேறிகளின் வாழ்வியல் குறித்த புதினம் என்றோ, இன்னுமொரு காதல் கதை மட்டுமென்றோ சுருக்கிவிட இயலாது. மாறாக ஹெப்சிபாவின் எழுத்தாழம், அதிகார ஆண்களின் புடைசூழ பெண்ணடிமைத்தனத்தின் நுண்ணிய வலைப்பின்னலுக்குள் இருந்து சன்னமான முணங்கலாய் வெளிப்படும் பெண் குரல்கள் பேசுகிற மிகக் குறைவான, மிக எளிய சொற்களின் வழியாகவே நயமாய் நமக்கு அவர்தம் வலியைக் கடத்திவிடுகிறது. ஒரு வாசகராய், படைப்பை வாசித்து முடித்து அசைபோடுகையில், ஏதோ ஒரு வகையில், அந்த எளிமைதான் நம்மை மிகவும் தொந்தரவு செய்கிறது. வெளியாகி அறுபது ஆண்டுகளாகியும், இன்றைய காலகட்டத்திற்கும் பொருந்திப் போகிற ஆக்கமாகவே புத்தம் வீடு புதினத்தின் கதை இருக்கிறது. அதன் கூறுமுறையும் புத்திளமையுடன் மிளிர்கிறது.
நூல் : புத்தம் வீடு
வகை : நாவல்
ஆசிரியர் : ஹெப்ஸிபா ஜேசுதாசன்
வெளியீடு : காலச்சுவடு பதிப்பகம்
வெளியான ஆண்டு: 2014
பக்கங்கள் : 160
விலை: ₹ 200
இயற்பெயர் லா.மா.ஜோ அந்தோணி. தூத்துக்குடியில் வசிக்கிறார். இயற்பியல் ஆசிரியராக பணிபுரியும் இவர்; சினிமா மற்றும் இலக்கியத்தின் மீது தீராக் காதல் கொண்டவர். சினிமா சார்ந்த கட்டுரைகள் படச்சுருள், வாசகசாலை இணைய இதழ், புரவி, பேசாமொழி இணைய இதழ் ஆகியவற்றில் வெளிவந்துள்ளன. கவிதைகளும் அவ்வப்போது இணைய இதழ்களில் வெளியாகி வருகின்றன.
இவரது ‘கனவைத் துரத்தும் கலைஞன்’ என்ற சினிமா சார்ந்த திறனாய்வுக் கட்டுரைகளின் தொகுதி வாசகசாலை பதிப்பக வெளியீடாக 2020இல் வெளிவந்துள்ளது.