ஐந்து வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் வெளிவந்த ஒரு பயண நூலின் தமிழ் மொழிபெயர்ப்பு இந்நூல். பத்திரிகையாளரான அருண் எழுத்தச்சன், தினசரி ஞாயிறு பதிப்புக்கான சிறப்புக் கட்டுரையை நோக்கமாகக் கொண்டு ஆரம்பித்த பயணம் தான் இப்புத்தகத்துக்கான அடித் தளம். 2014ம் ஆண்டு மலையாள மனோரமா நாளிதழ் பதிப்பில் பிரசுரித்த
“தேவதாசியாவதற்கு என்ன தவறு செய்தேன்?” எனும் கட்டுரை, உச்ச நீதிமன்றம் வரை ஏற்படுத்திய மிகப்பெரும் விளைவு என்ன அதன் தாக்கம் என்ன என்பதையும் உள்ளடக்கியுள்ளது இந்நூல்.
மங்கலாபுரம், உச்சங்கிமலை, ஹர்ப்பனஹள்ளி, கூட்லிகி, ராஜமுந்திரி, பெத்தாபுரம், புரி, சொனாகச்சி, காளிகட், ஜலாங்கி , பிருந்தாவனம், காமத்திபுரா, சௌந்தத்தி, உஜ்ஜயினி என இந்தியாவின் பல பகுதிகளில் பயணம் சென்று அங்குப் புதைந்து கிடக்கும் சாதியம், மதங்களின் அரசியல், மறுக்கப்படும், பறிக்கப்படும் உரிமைகள், எனப் பெண்களின் வாழ்வியல் ஊடான ஒரு பயணத்தில் கண்ணீர் கதைகள் ஆயிரமாயிரம்.
மதரீதியான ஆசாரங்களைத் தொடர்ந்து பெண்கள் பாலியல் தொழிலாளர்களாக மாற்றப்படுகிறார்கள் என்ற கனத்த உண்மையை, சமீப காலம் வரை நடைபெற்ற ஆசாரங்களின் வழி ஆதாரமாகக் காட்டுகின்றது இந்நூல்.
வறுமையின் காரணமாகச் சிறு வயதிலேயே, மதத்தின் பெயரால், குடும்பத்தினராலேயே தேவதாசியாக்கப்படும் பெண்களைத் தொடர்ந்து, கணவனை இழந்து விதவையாகியதால் இச்சமூகத்தால் விரட்டப்பட்டு தேவதாசியாக்கப்படும், சாதியின் பெயரால் தேவதாசியாக்கப்படும் பல பெண்களின் இரத்தமும், சதையும் கலந்த வாழ்க்கையை வாசிக்கையில் கண்ணீர் மேகத்தின் கொடும் காற்று உணர்வுகளைப் புரட்டிப்போடுகின்றது.
வருடிச் செல்லாமல்,மனதினை உலுக்கிய படைப்பு இது. தேவதாசி என்று சமூகத்தால் கற்பிக்கப்பட்டு, கோயிலுக்குள் தள்ளப்படுகின்ற நூற்றுக்கணக்கான இளம்பெண்களின் துயரம் நிறைந்த முகங்கள் நிறம் மங்கிய ஓவியங்கள் என மனதில் நிழலாடுகின்றன.
மலர்ந்த மஞ்சள் பூக்களின் பெருங்கடல் எனச் சூரியகாந்தி வயல்களுக்கு இடையில் பெண் பிள்ளைகளின் வாழ்வை வாசனையற்றுப் போகச் செய்யும் உச்சங்கிமலை பௌர்ணமியின் நிறம், கருப்பு.
1982ம் ஆண்டு சட்டத்தால் தடை செய்யப்பட்ட தேவதாசி முறையை மீறியும் மதத்தின் போர்வையில், இலை மறை காயாக நிகழும் அவலங்களின் கூக்குரலை கேளாமல் அடுத்த பக்கத்துக்கு நகர இயலவில்லை.
கர்நாடகாவில் பட்டியல் இன பெண்கள் அதிகளவு தேவதாசியாக்கப்படுகின்ற நிலையும், இது இந்துக்களாகிய நமது கோவில் இல்லை, எஸ்ஸி,எஸ்டிகாரர்களின் கோவில் என்றும், பட்டியல் சாதிகார்கள் இப்போதும் கூட இந்துக்களாகவில்லை எனவும், அவர்களைத் தேவதாசியாக்க, கோவில்களுடன் பிணைக்க இங்குள்ள மேல்சாதியினர் விரும்பாத, “புரியில்” நிலவும் தீண்டாமையும் வெவ்வேறானவை.
கர்நாடக, ஆந்திர மாநிலங்களில் நிலவும் தேவதாசி முறையும், புரியில் நிலவும் தேவதாசி முறையும் ஆயிரம் கேள்விகளை எழுப்புகின்றன.
கர்நாடகாவில் பின்தங்கிய சமூகத்திலிருந்து தான் தேவதாசிகளைக் கண்டுபிடித்தார்கள் என்றால், புரியில் நேர்மாறாக பிராமண சமூகத்திலிருந்தும், பெண்களைத் தேவதாசியாக்குகின்றார்கள்.
பட்டியல் வகுப்பினரை மனிதர்களாகக் கூட பரிசீலிக்க மனமற்ற ஒரிசாவில், தேவதாசியாக்கினால் அவர்களைக் கோவிலுக்குள் அனுமதிக்க பிராமணர்கள் விரும்பாத சூழ்நிலையில், தகுதியான பெண்கள் கிடைக்காத காலத்தில், ஆண்களுக்குக் கூட பெண் வேடமிட்டு தேவதாசிகளாக மாற்றினர் என்ற உண்மையை அறிய, பதைபதைக்கிறது மனது. சாதியின் வேர்களுக்கு சமூகம் செய்யும் சேவைகளின் ஒரு துளி இது.
நூறு வருடங்களுக்கு மேலாக இந்தியாவின் தலைநகராக இருந்த கொல்கத்தாவின் அரசியல் முக்கியத்துவம், பக்தி இயக்கம் ஆகியவற்றைப் பற்றி அறிந்த நாம் அறியாத சோனாகட்ச் ஆபத்தானது.
மூன்று வேளையும் அங்கே சாப்பாடு கிடைக்கும் என்பதே சோனாக்ட்சின் சொர்கலோகத் தோற்றத்தின் காரணம்.
நல்ல வேலை, மூன்று வேளை சாப்பாடு என்று விலை கொடுத்து அழைத்து வரப்படும் வறுமைக்கொடியில் சிக்குண்ட பெண்கள் தேவாசியாக்கப்பட்டு பின்னர், பாலியல் தொழிலாளியாவதை அறிந்தும் திடமாக நிற்கும் நீண்ட நெடிய கட்டிடங்களில் உட்புகும் காற்றும் கூட கண் கலங்கும் கதைகளின் தொகுப்பு இந்நூல்.
எட்டுக்திக்கும் ராதே ராதே என்ற குரல் ஒலிக்கும் “ராதைகள்” நிரம்பிய பிருந்தாவனத்தில், “ கிருஷ்ணன் தான் எங்களை ராதையாக அழைத்தார். அவரை நேசித்து இங்கேயே இறந்து விழ வேண்டும் என நாங்கள் ஆசைப் படுகிறோம்” எனச் சொல்லும் பெண்களும், “பெண் பிள்ளைகள், நடனமும், பாட்டும் கற்றுக் கொள்வது எதற்கு? தங்கள் கணவரை மகிழ்ச்சிப் படுத்தத் தான். பகவான் ஜெகன்நாதர் தான் எங்கள் கணவர். நான் அவரை மகிழ்ச்சிப் படுத்தியிருக்கிறேன், 7 முதல் 70 வயது வரை” என மெலிந்து வறண்ட உடலில் ஒரு பழைய புடவை சுற்றப் பட்டு கீழே பாயில் படுத்திருக்கும் சிரிமணி எனும் மூதாட்டியின் வறுமையில், முதுமை நோவில் உடன் இருக்க எந்த பகவானும் வரவில்லை என்பதே நிதர்சனம்.
இப்படி நூல் முழுதும் நிறைந்திருக்கும் பெண்களின் வாழ்வியல், அழகியல் அல்ல, துன்பியல்.
இந்தியா முழுவதும் பரவிக் கிடக்கும் சாதிய விடமும், அநீதிகளின் துர்நாற்றமும் நூலின் வழி வெளி வந்து நம்மைக் கவ்விக் கொள்கின்றன.
“அம்மா வேலைக்குப் போகும் வீட்டில் ஒரு மோதிரம் தொலைந்து விட்டது. அன்று எனக்கு ஆறு அல்லது ஏழு வயது இருக்கும். மோதிரம், கழிவறையில் தான் தொலைந்து போயிற்று என்று, மோதிரம் அணிந்திருந்த பையனின் சந்தேகம். பையன் இதை வீட்டில் சொன்னவுடன், அவர்கள் என்னை அழைத்து வரும்படி அம்மாவிடம் சொன்னார்கள். நான் அங்கே சென்ற போது, அவர்கள் என்னைக் கழிப்பிடத்தில் கைவிட்டுத் தேடும்படிச் சொன்னார்கள். நான் அப்படிச் செய்ய வேண்டி வந்தது. அந்த வீட்டில் என் வயதுடைய ஒருவன் இருந்தும், நான் ஏன் இப்படிச் செய்ய வேண்டி வந்தது என்று நான் அம்மாவிடம் கேட்டேன். நாம் தாழ்த்தப்பட்டவர்கள் அல்லவா என்று அம்மா சொன்னார். அன்று தான் சாதியைக் குறித்துச் சிந்தித்தேன். அறிந்தேன். என்னைப் போன்று ஒவ்வொரு பட்டியல் இனத்தவருக்கும் சொல்வதற்கு ஒரு கதை இருக்கும்” என்று சொல்லும் பிரசாத் எனும் முதுகலை பட்டதாரி இளைஞரின் சொற்களில் வீசிக் கொடிய சாதிய நெடி.
ஒவ்வொரு பக்கமும், ஒவ்வொரு மனித வாழ்வின் ஏற்றத் தாழ்வுகளும், அரசியல் அமைப்புக்களின் ராஜ தந்திரங்களும் என , இந்தியாவின் கதையாக உருமாறி உள்ளது இப்புத்தகம்.
கோபமும், கண்ணீரும், உள்ளத்தை நெருக்கும் இந்த மனிதர்களின் வலி, கதை அல்ல… புதைக்கப்பட்ட வரலாறும், புதைக்கப்படும் வரலாறும் மட்டுமல்ல. மாறாக, குரலின்றி வாழும் வரலாறு. வெற்றுடலின் மீதியைத் தேடி, தேசம் எங்கும் பயணம் போகும் இந்நூல், பலர் பேச மறுக்கும் அரசியலைப் பேசி, வலி மிகுந்த வாழ்க்கைகளுக்கு வார்த்தை வடிவம் அளிக்கின்றது. சட்டம் அல்ல, சோறு தான் அவசியம் என்று சொல்லாமல் சொல்லும் ஊர்களில் பயணப்படுகின்றது இந்தியாவின் உண்மை வரலாறு.
எல்லா இந்தியர்களும் என் சகோதர சகோதரிகளே என்று உறுதி மொழி எடுத்துக்கொள்ளும் நாம், அறிந்தும் அறியாமலும், தெரிந்தும், தெரியாமலும் பல பெண்களின் வாழ்வை, கனவை, இளமையை, சாதியின், மதத்தின், வர்க்கத்தின், வரலாற்றின் பெயரால் கொலை செய்யும் பெருமை மிக்க இந்தியர்கள் என்று உரக்கச் சொல்லி, உறக்கத்தைக் கெடுத்த கதைகளின் தொகுப்பு இந்நூல்.
உண்மை வீச்சின் சுற்றளவில் நொறுங்கிப் போனது உள்ளம்.தேவதாசி ஒழிப்பு சட்டம் பற்றியும், தென், வட இந்திய நகரங்களின் அரசியல் பற்றியும்,மதத்தின் பெயரால் இங்கே எழுப்பட்ட பிரமாண்ட வட இந்தியக் கோவில்களைப் பற்றியும், அங்கே நிகழும் ஆசாரங்கள் பற்றியும், அவற்றின் வழி ஒடுக்கப்படும் மக்கள் பற்றியும்,ஒட்டுமொத்த இந்தியாவின் வரலாற்றைப் பற்றியும், தேடிச் செல்ல வைத்தது இந்நூல்.
இருளின் பிடியில் சிக்கிய மறைக்கப்பட்ட கதைகளும், மறுக்கப்பட்ட பெண் உரிமைகளும், மாற்றப்பட்ட வரலாறும், மனதின் அமைதியைக் குலைத்து, உலுக்கியது.
உணர்வுகளின் வழி ஒரு உரையாடல் நிகழ்த்தும் இந்நூலின் மனிதர்களைத் தேடி நாம் வாசிக்க வேண்டும்.
சட்டத்தின் ஆற்றலும், அரசியலின் வலிமையும், சரி வர நம்மால் அறியப் பட வேண்டும்.
விடியாத இரவுகளைத் தேடும் பல பெண்களின் கதைகளைப் படித்த எனது தூக்கம் தொலைத்த கண்களின் விளிம்பில் ததும்பும் கண்ணீர்,“புனித பாவங்களின் இந்தியா”வில் மழையாய் பொழிந்து, கேள்விக் கணைகளால், வெள்ளமெனப் பாய்கின்றது.
வடிகாலையும், விடியலையும் தேடி…
நூல் : புனிதப் பாவங்களின் இந்தியா ஆசிரியர் : அருண் எழுத்தச்சன் மலையாளத்திலிருந்து தமிழில் : யூமா வாசுகி வெளியீடு : காலச்சுவடு பதிப்பகம் வெளியான ஆண்டு : ஜனவரி 2022 பக்கங்கள் : - விலை : ₹ 325 Kindle Edition :
பயிரியல் மற்றும் பயிர் தொழில்நுட்பவியல் துறையில் இளங்கலை பட்டம் முடித்து, தமிழ் இலக்கியத்தில் முதுகலைப் பயின்று வரும் மாணவர். அறிவியல், கலை, இலக்கியம், இசை, மானுடவியல் குறித்து தீவிர ஆர்வம் கொண்டவர். பேச்சு, எழுத்து, கவிதை என்று தமிழ் இலக்கிய வெளியில் சிறு வயது முதல் இயங்கி வரும் இவர் சிறுகதைகள், இலக்கிய நூல்கள் குறித்தான விமர்சனங்களை தொடர்ந்து அளித்து வருகிறார்.