சிங்கம், புலி, யானை ,குரங்கு என பல்மிருகங்களும் குழந்தைகளுக்கான நன்னெறிக் கதைகளில் வரிசை கட்டி நிற்கும். இதே கதைகளை அப்படியே நடை மாறாமல் பெரியவர்களுக்கு சொல்ல வேண்டுமானால் சாத்தியமாகுமா? அது அவரவர் மனப்பக்குவம் பொருத்தது. குழந்தை தனம் மிகுந்த சிலர் அக்கதைகளை இயல்பாக கேட்டு ரசிக்கலாம். லாஜிக் பார்க்கும் மற்றவர்களுக்கு அது போர் அடிப்பதாகவே இருக்கும். ஆனால் நம் பெருமாள் முருகனால் விதவிதமான கதைகளில் விலங்குகளை வைத்து எப்பேற்பட்ட மனிதரையும் சலிக்க விடாமல் கதை சொல்ல முடியும் என்பதை நான் பூனாச்சி அல்லது ஒரு வெள்ளாட்டின் கதை நூலில் தான் அறிந்தேன்.
ஒரு ஆடு என்ன செய்யும்? புல் மேயும், உறங்கும், கத்தும், கலவி செய்யும், குட்டி போடும் ,பால் கொடுக்கும், இலையில் விருந்தாகும். இதற்கும் மேல் ஒரு ஆடு என்ன செய்யும் என்ற கேள்வி இருந்தால் இந்த நூலை புரட்டி பார்க்கலாம். ஆமாம். ஆடு தாய்ப்பாசத்திற்கு ஏங்கும். ஆடு தாழ்வுமனப்பான்மைக் கொள்ளும். ஆடு காதல் வயப்படும்.ஆடு ருதுவாகும். ஆடு சுதந்திர போக்குடன் செயல்பட விரும்பும். ஆடு தான் எந்த கிடாயால் சினையாக வேண்டும் என்று தேர்ந்தெடுக்க (திருமணம் என்றேக் கொள்ளலாம்) விரும்பும். ஆடு பிரசவ காலத்தில் ஆறுதல் தேடும். ஆடு தாய்மை உணர்வுகளை கடந்து நிற்கும். பஞ்ச காலத்தில் ஆடும் மனிதர்களுடன் பட்டினி கிடக்கும். அந்த ஆடு மரணித்தால் நமக்கும் கண்ணீர் வரும். இதுபோல சில ஆடுகளும் அதுசார்ந்த மனிதர்களை சுற்றி நடக்கும் வாழ்க்கையே பூனாச்சி நாவல்.
கிழவன் கிழவியின் பேச்சு வழக்கு முழுக்க முழுக்க கிராமத்து சாயலில் இருப்பது கதையை அழகாக்குகிறது. (சில வார்த்தைகளுக்கு அர்த்தம் புரியாமல் கூகிளிடம் கேட்க ‘அது கடல்லயே இல்லை’ என்று கூறிவிட்டது. நானாக யூகித்துதான் படித்தேன்). தெம்பில்லாத ஆட்டுக்குட்டியை எப்படியாவது வளர்த்து விடவேண்டும் என்று கிழவி அரும்பாடுபடுகிறாள்.தாயில்லாத அக்குட்டிக்கு மற்ற வெள்ளாட்டின் மூலம் பாலூட்டுதல் என்பது சிரமமாகவே அவளும் எதையாவது கொடுத்து ஆளாக்குகிறாள். தனக்கு சொந்தமில்லாத அதுவும் சாகக்கிடக்கும் ஆட்டுக்குட்டியை தங்களுக்கு உணவற்ற நிலையிலும் ஊட்டமாக வளர்த்து விட போராடுவது ஏன் என்ற கேள்விக்கும் விடை உண்டு.
அரசாங்க பட்டியலில் ஆடுமாடுகளைக்கூட அடுக்க வேண்டும் என்று சட்டம். அதற்காக வரிசையில் காத்திருக்கும் போது கிழவியின் புரட்சி பேச்சு அருமையாக இருக்கிறது.
“வாயிருப்பது மூடிக்கொள்ளதான்.கையிருப்பது கும்பிடு போடத்தான். காலிருப்பது மண்டியிடத்தான்.முதுகிருப்பது குனியத்தான்.உடலிருப்பது ஒடுங்கத்தான். ராசாங்கத்திடம் எப்படி நடந்துக்கொள்ள வேண்டும் என்று எல்லாரும் நன்றாகவே கற்றிருந்தார்கள்”. (யாராவது நினைவில் வந்தால் நான் பொறுப்பல்ல😊)
வரிசைப்பழகுதலுக்கு ஒரு விளக்கம் தருகிறாள். “இன்னைக்கு இருக்குற நெலம நாளைக்கும் இருக்குமா?கஞ்சிக்கில்லாத அலயறப்ப ஒருத்தர ஒருத்தரு அடிச்சிக்கிட்டுச் சாவக்கூடாது பாரு. இப்பருந்தே வரிசைக்கு பழகிக்கிட்டா அப்பப் பிரச்சினை வராதில்ல.”
எக்காலத்திற்கும் பொருந்தும் வாக்கியம் அல்லவா?
பூனாச்சி, அழகு மூக்கி, ஊத்தன், உழும்பன், கடுவாயன், பீத்தன், பூவன் இவையனைத்தும் ஆடுகளுக்கு அவரிட்ட அழகுப்பெயர்கள். பூனாச்சி பருவமடையும் போது பூவனுடன் ஒருமுறையாவது கூடிவிடமாட்டோமா என்ற அவளுடைய ஏக்கம் நம்மையும் தாக்கும் .
எங்குமே சுவாரசியத்துக்கு பஞ்சம் இல்லை. அந்த ஆட்டின் காதல் கூட கைகூடவில்லையே என்ற எண்ணம் மேலோங்கும் போதும் ஒரு கிழ ஆட்டுடன் கட்டாயமாக அவளை புணரச் செய்யும்போதும் மனித இனத்தின் மேல் கோபம் வரதான் செய்கிறது.
இறுதியாக பெண் வெள்ளாடான பூனாச்சியின் சிறப்பம்சமே அவளுக்கும் அவளை வளர்ப்பவர்களுக்கும் வேதனையாக இருப்பது கொடுமைதான். பஞ்சக்காலத்தில் மக்கள் படும்பாட்டுடன் வாயில்லா ஜீவன்கள் படும்பாடும் கண்ணீர் மல்க செய்கிறது. நூலில் இருந்து கற்கும் பாடமாக எனக்கு உரைத்தது ஆடுகள் அளவற்று மூட்டுடன் கலவிக்கொள்ள விளையும்போது அவற்றை ஒடக்காரனைக் கொண்டு அதன் விரையை சேதப்படுத்தி இனி அதன் வாழ்நாள் முழுவதும் புணராமல் இருக்கச்செய்து விடமுடியும் என்பதுதான். இதையே ஏன் அரசு வன்புணர்வு செய்யும் கயவர்களுக்கு செய்யக்கூடாது என்று தோன்றியது. நிச்சயம் நாவலை படிப்பவருக்கு பூனாச்சி பாடமாக இருப்பாள் என்பது உறுதி.
– சாய்வைஷ்ணவி
நூல் : பூனாச்சி அல்லது ஒரு வெள்ளாட்டின் கதை
பிரிவு: நாவல்
ஆசிரியர் : பெருமாள்முருகன்
வெளியீடு :காலச்சுவடு பதிப்பகம்
வெளியான ஆண்டு : 2016
விலை: ₹175
Kindle Edition:
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் பிறந்த சாய்வைஷ்ணவி திருச்செங்கோடு விவேகானந்தா கல்லூரியில் உயிர்தொழில் நுட்பவியலில் பட்டப்படிப்பு முடித்தவர். திருச்சி, சென்னை, பெங்களூரு பெருநகரங்களின் மேநாட்டு நிறுவனங்களில் மெடிக்கல் கோடிங் துறையில் பணிபுரிந்தவர். இரண்டு குழந்தைகளுக்குத் தாயாக முழுநேர குடும்பத் தலைவியாகப் பொறுப்பேற்றுக்கொண்ட பின், புத்தகங்கள் படித்தும் அதற்கு விமர்சனங்கள் எழுதி முகநூலில் பதிவிட்டும் வருகிறார்.
பல்வேறு அச்சு மற்றும் இணைய இதழ்களில் இவர் எழுதிய கவிதைகள் வெளியாகி உள்ளது. இவரின் முதல் கவிதைத் தொகுப்பு “வலசை போகும் விமானங்கள் “ (கடல் பதிப்பகம் வெளியீடு)