இப்புத்தகம் தமிழ் வரலாற்றெழுத்தில் ஒரு மைல் கல் என்றே சொல்லலாம். அயோத்திதாசரை மையமாகக் கொண்டு உ.வே.சா, பாரதி, இரட்டைமலை சீனிவாசன் முதலானோர் பரஸ்பரம் ஒருவரையொருவர் பெயர் குறிப்பிடாமல் எதிர்வினையாற்றியதை வைத்து வெகு நேர்த்தியாக ஊடும் பாவுமாய் ஸ்டாலின் வரலாற்றை நெய்த்திருக்கிறார்.
சீவக சிந்தாமணியை பதிப்பித்த உ.வே.சா அக்காப்பியத்துக்கு உரை எழுத சம காலத்தில் வாழ்ந்த சமணர்களை சந்தித்து கற்றுக் கொண்டார். ஆனால் மணிமேகலைக்கு உரை எழுத சம காலத்தில் “அழிந்தது” என கருதப்பட்ட பௌத்தத்திற்கு அவர் மேற்குலக பௌத்தர் அல்லாத ஆசிரியர்க்களின் நூல்களை, நேரடியாகக் கூட அல்ல, நண்பர் மூலம் கேட்டறிந்து (ஏனெனில் அவை ஆங்கிலத்தில் இருந்ததால்), அதன் மூலம் அறிந்த பௌத்தத்தையும் தன் பாரம்பர்யம் சார்ந்த புரிதலையும் சேர்த்து காப்பியத்துக்கு துணை நூலாக “பௌத்த மும்மணி” ஒன்றை எழுதினார், அது புத்தரின் வரலாற்றையும் அடக்கியது.
பௌத்தம் அழிந்தது என்று கொள்வது சரியா? என்ற கேள்வியில் தொடங்கி அயோத்திதாசர் அத்தகைய நூலினை, உ.வே.சா. பெயர் குறிப்பிடாமல் எதிர்வினையாற்றுகிறார். பௌத்தம் அறியாத மேற்குலகின் ஆசிரியர்களின் புரிதலையும் உ.வே.சா.வின் புரிதலையும் அயோத்திதாசர் கேள்விக்குட்படுத்துகிறார்.
மேற்கத்திய ஆய்வாளர்களும் வாயிலாகப் பௌத்தத்தை அறிந்த உ.வே.சா எழுதிய பௌத்தம் பற்றிய துணை நூல் வாசகனுக்குக் காப்பியத்திற்குள் ஒரு நுழை வாயில் மட்டுமல்ல காப்பியத்தில் இருக்கக் கூடிய பௌத்தத்தை கூட வாசகன் உ.வே.சா அளித்த சட்டகத்தின் வழியாகவே புரிந்து கொள்ளக் கூடும். அது முழுமையான புரிதலா?
அயோத்திதாசரின் எழுத்தின் நோக்கம் இரண்டு.
1)சாதி பேதம் நீண்ட காலத்தவை அல்ல.
2) ஒன்றைக் காலத்தால் பழமையாக்கிக் காட்டுவதால் ஏற்படும் நிரந்தரத் தன்மையின் பிரச்சினை.
“அவரின் வரலாற்று துல்லியத்தை விட இவ்வாறு காலத்தால் பழமையாக்குவதால் சாதியமைப்புக்குக் கிடைக்கும் சமூக ஏற்பைப் பற்றிப் பேசியிருப்பது கவனிக்க வேண்டியதாகிறது”
“பிராமணர்களுக்கு அளிக்கப்படும் தொன்மை என்பது அவர்கள் பௌத்தத்திடமிருந்து இடையிலே ‘போலச் செய்து’ பலவற்றை தங்களவையாக உருமாற்றி ஏற்றம் பெற்றுக் கொண்டதை மறைக்கிறது என்று கருதினார். இவ்வாறு அவர்களுக்கு தரப்படும் தொன்மை என்பது சாதியமைப்புக்குத் தரப்படும் தொன்மையாக ஆகிவிடுகிறது என்றும் யோசித்தார்”.
இவ்விடத்தில் யொஹானஸ் பிராங்க்ஹர்ஸ்ஸ்ட் (Johannes Bronkhorst) எழுதிய “பிராமணியத்தின் நிழலில் பௌத்தம்” (Buddhism in the shadow of Brahminism) நூலில் சொல்வது கவனிக்க வேண்டியது, “The rule of the Mauryas, it appears, was remembered in various ways, by Brahmins and Buddhists alike….This shared memory, it appears, could be moulded by Brahmins in a manner that suited their purposes. Such colonization of the past became all the easier in later days when the influence of Brahmins at the court had become a fact….. Buddhists of the sub continent came to reformulate their own past in Brahminical terms”.
மௌர்ய ராஜ்யம், பௌத்தம் பற்றிய நினைவுகள் பிற்காலத்தில் அரச சபையில் கோலோச்சிய பிராமணர்களால் எந்தளவு கட்டமைக்கப்பட்டதென்றால் காலப் போக்கில் பௌத்தர்களே பிராமணவயமான சொல்லாடல்களையும் கதையாடல்களையும் ஸ்வீகரித்தார்கள் என்கிறார் பிராங்க்ஹர்ஸ்ட். அவர் முக்கியமாக சுட்டிக் காட்டுவது சாணக்கியனால் சந்திரகுப்தன் சாம்ராஜ்யம் உருவானதென்கிற தொன்மம் கட்டமைக்கப்பட்ட விதம். பௌத்தம் செழித்த காந்தாரத்தில் பிராமணியம் அரச கொள்கையாக இல்லாததை சுட்டிக் காட்டும் பிராங்க்ஹர்ஸ்ட் சாதியம் எப்படி பிராமணர் அதிகாரம் செலுத்தாத காலங்களிலும் இடங்களிலும் நிலைப் பெறவில்லை என்கிறார். இப்போது மீண்டும் ஸ்டாலின் அயோத்திதாசர் பற்றிச் சொல்வதை படித்துப் பாருங்கள்.
இந்நூலின் பலம் என்பது ஸ்டாலின் கையாளும் ஜாக்கிரதையுணர்வு. நிறைய யூகங்களின் அடிப்படையில் நெய்யப்படும் வரலாற்றில் அடிப்படையல்லாத யூகங்களை தவிர்ப்பதோடு தன் யூகங்களுக்கான குறைந்தப் பட்ச முகாந்திரங்களை ஸ்டாலின் அளிக்கிறார். அதை விட முக்கியம் தன் யூகத்தையோ கருத்தையோ, தரவுகளைக் கூட, வாசகன் எப்படி புரிந்துக் கொள்ளக் கூடாதென்று தெளிவாகச் சொல்கிறார். உதாரணத்துக்கு இரட்டமலை சீனிவாசன் தரப்புக்கும் அயோத்தி தாசர தரப்புக்குமான பெயர் குறிப்பிடாத வாக்குவாதங்களை தெளிவாக ஒவ்வொரு தரப்பின் மனச் சாய்வுகளை அடையாளப் படுத்தி வாசகன் தன்னையறியாமல் ஏதேனும் ஒரு பக்கம் சாய்வதை தடுக்கிறார்.
“வரலாறு என்றால் என்ன, தரவுகள் என்பவை எவை, வரலாற்றை எவ்வாறு புரிந்து கொண்டிருக்கிறோம், எவ்வாறு எழுதுகிறோம் என்பதான கேள்விகளினூடாகவும் விவாதித்தப் படியே நகர்ந்துள்ளது. வரலாறு தரவுகள் சார்ந்தது மட்டுமல்ல, தரவுகளை எவ்வாறு பொருள்கொள்கிறோம் என்பதையும் சார்ந்தது தான்”
- அரவிந்தன் கண்ணையன்
நூல்: | பெயரழிந்த வரலாறு - அயோத்திதாசரும் அவர் கால ஆளுமைகளும் |
வகை : | கட்டுரைகள் |
ஆசிரியர்: | ஸ்டாலின் ராஜாங்கம் |
வெளியீடு: | காலச்சுவடு பதிப்பகம் |
வெளியான ஆண்டு | 2020 |
பக்கங்கள் : | 339 |
விலை : | ₹ 300 |
கிண்டிப் பதிப்பு: |