கேரள மாநிலத்தில் பிறந்து பெற்றோர்கள் வாயிலாகத் தமிழ்ச்சுவை உணர்ந்து இன்று கேரள அரசு மேநிலைப் பள்ளி, குமுளியில் தமிழ் ஆசிரியையாகப் பணியாற்றுகிறவர் அல்லி பாத்திமா. மக்களின் வாழ்வியலுடன் இரண்டர கலந்து, கண்டு, கேட்டு, உணர்ந்து அறிந்ததின் சிறு பகுதியை புதினமாக்கியிருக்கிறார்.
தேனி தாண்டி கேரள எல்லைக்குள் இருக்கும் பொன்வளக்காடு- தான் கதைக் களம். பல வருடங்களுக்கு முன்பு சோழர்களுக்கும் பாண்டியர்களுக்கும் போர் நடந்தபோது, அதிக உயிர் சேதம் ஏற்படாமல் இருக்கவும் குலம் காக்கவும் மொத்தமாக புலம்பெயர்ந்து குடியேறியவர்கள் இவர்கள்.
“எங்க பழக்கவழக்கங்கள், நம்பிக்கைகள், சடங்குகள் எதுலயும் தேவையில்லாம தலையிடக் கூடாது” என கதை ஓட்டத்திலேயே ஆசிரியர் சொல்லிவிடுவதால், கதையின் உயிருக்குள் அவை ஊடாடும் போது, நாமும் ஒன்றிப்போகிறோம்.
மண்முத்தி (பூமி) மீதான மரியாதை, பெரியவர்கள் மீதான பணிவு, பெண்களுக்கான உரிமை வெளி என பாண்டிச்சி நம்மை அவர்களின் வீட்டுக்குள் ஒருத்தியாக பராமரிக்கிறாள். அங்கே, வாழும் மனிதர்கள் வனத்திற்குள் ஒருவராக நம்மை நடத்துகிறார்கள்.
கணினி, இணையம், அலைபேசி என எல்லாவற்றையும் பயன்படுத்தத் தொடங்கிய பிறகும் மண்ணை நேசிக்கும் மக்களை பாண்டிச்சியில் பார்க்கிறோம்.
வெளியாட்களிடம் இருந்து பெண்களுக்கு ஆபத்து வந்தாலும், போதைப் பொருட்கள் வந்தாலும் சகிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். காவல் நிலையத்தில் சொன்னால், தேடுதல் வேட்டை எனும் பெயரில் தங்கள் இயல்பைக் களைத்துவிடுவார்கள் என அவர்கள் சொல்வதில் அர்த்தம் மிக அதிகம்.
நூலு கட்டு விழா எனப்படும் குழந்தைக்குப் பெயர் வைக்கும் விழாவின் போது, ஈந்தையாளப் பின்னப்பட்ட பாயையும் அருகில் வைத்து, மனிதனின் பிறப்பைக் கொண்டாடும் போதெல்லாம் இறப்பும் மனசுக்குள்ள வரணும் எனச் சொல்லும் இடத்தில் நம்ம ஊரின் அவசகுணங்கள் மண்ணாய்ப் போகின்றன.
அடிமைச் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் தண்டனைக்கு மறுத்து குரல் எழுப்புவதும், அவருடன் சேர்ந்து மக்கள் குரல் எழுப்புவதும் காணிக்காரனை கோபமுற வைக்கிறது. ஆனால், அந்த நொடிப்பொழுதில் மூங்கில் வெடித்துச் சிதறியதும், அடிமைக் குடிகள் அன்று முதலாக மேற்குடியாக மதிக்கப்படுவதும் அலாதியானது.
“இந்த நிலந்தான் எங்கள வாழ வைக்கும் தெய்வம். இங்க இருக்கற ஒரு புல் பூண்டக்கூட மண்ணுட்ட மன்னிப்புக் கேட்ட பிறகுதான் பறிப்போம்” என இயற்கையுடன் வாழ்கிறார்கள்.
மண்ணையும், மக்களையும் காக்க தன்னைத் தயார்படுத்தும், தகவமைக்கும், தனித்து நிற்கும் பாண்டிச்சி பெண்ணின் நுண்ணுனர்வுகளைப் புரிந்து மனத் தீட்டைப் போக்குகிறார். களங்கமில்லா களங்கத்தில் பாண்டிச்சி நிற்கும் போது, பூத்த மூங்கில் மரம் பாண்டிச்சியைக் காக்கிறது.
“என்னதான் இயற்கை தூய்மையாய் வரமென பலதைத் தந்த போதிலும் அதைச் சாபமாய் மாற்ற மனிதனால் மட்டும்தான் முடிகிறது”.
“மரத்தையும் மண்ணையும் காத்தையும் காப்பாத்தற நாங்க நாகரீகம் இல்லாதவங்களா..? இயற்கையோட மகத்துவமும் உறவுகளின் உன்னதமும் புரியாம உணர்வுகளைச் சாகடிக்கிற உங்க உலகம் நாகரீகமானதா..?” பாண்டிச்சி நம் அனைவரையும் நோக்கி ஆவேசமாகப் பேசுகிறாள்.
இன்னும் நிறைய சொல்ல தோன்றுகிறது… இந்த நூலை முகநூலில் அறிமுகப்படுத்திய தோழருக்கும் (யாரென்று நினைவில்லை), நம் மூதாதையரின் மூச்சுக்காற்றில் உயிர்காற்று சுவாசிக்க வைத்த அல்லி பாத்திமா அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
- சூ.ம.ஜெயசீலன்
நூல் : பாண்டிச்சி பிரிவு: நாவல் ஆசிரியர் : அல்லி பாத்திமா வெளியீடு : தமிழ் அலை வெளியான ஆண்டு : 2018 விலை: ₹ 170 Kindle Edition: