நூல் விமர்சனம்புனைவு

நகர்துஞ்சும் நள்யாமத்தில் செங்கோட்டு யானைகள் எடுத்துப் படித்த VIII தஸ்தாவேஜ்கள்

கண்ணீர் ததும்பும் கண்களோடும்… கனத்த இதயத்தோடும்…  கதையைப் படித்து முடித்தவுடன், குறைந்தபட்சம் இரண்டு மணி நேரமாவது நம் ஆழ்மனதை அலைக்கழிக்கும் வலியை, அங்கலாய்ப்பை, வருத்தத்தை,  வஞ்சனையில்லா  பட்டாளத்தாரின் வாழ்வை எனக் கதை குறித்து மட்டுமே‌ நம் சிந்தனை முழுமையும் நிரம்பி இருக்கிறது.

எடுத்துப் படிக்கத் துவங்கியதும், கதையை முடித்து விட்டுத்தான் வைக்க வேண்டும் என்ற முடிவுக்கு நம்மை ஒரு சில எழுத்துக்களே தள்ளும், அப்படியொரு எழுத்து, ஆசிரியருடையது… உயிரின் வேர்வரை சென்று உலுக்குகிறது…

வாழ்வின் பசுமைக்கால இன்பங்களையும், வறண்ட கால வலிகளையும், வெறும் வார்த்தைகளாய் நீட்டி முழக்காமல் உணர்வுள்ள காட்சிகளாய் கடத்துகிறது பாவெல் சக்தி ஆசிரியரின் எழுத்துகள். சிறுகதை என்ற பெயரில், மனிதர்களின் ஆழ் மன எண்ணங்களை, பரிதவிப்பை, பரவசத்தை, ஏமாற்றத்தைத் தேர்ந்த உளவியல் மருத்துவரைப் போல விவரிக்கும் வரிகளின் வழியே உணர்வுகளை கிளறி நம்‌ விருப்ப எழுத்துக்குச் சொந்தக்காரராகி மனதில் சிம்மாசனம் இட்டு அமர்ந்து கொள்கிறார்.

வாய்தா, வாய்தா என்ற சொல்லையே வாய்க்கரிசி வரும்வரை கேட்டுக் கேட்டு வாழ்க்கையைத் தொலைத்த பலரைக் கண் கொண்டு பார்த்ததினாலோ என்னவோ….பட்டாளத்தாரின் பரிதாப வாழ்வில் நாமும் கூடவே பயணிப்பதைப் போன்ற மாயையை எழுத்து நடை உண்டு பண்ணுகிறது.

“அது முக்கியமா இல்லையா என்று எவராலும் முடிவு எடுக்க முடியாத ஒரு வேலையை அவன் செய்து கொண்டே இருப்பான்”

“செத்த வீட்டில் ஆளாளுக்கு ஒப்பாரி வைக்காதீங்க”

“செத்த வீட்டில் ஒப்பாரிதானே வைப்பார்கள், இது என்ன புது விளக்கம்”

“அந்த வம்பிழுப்பில் எப்போதும் அன்பைத் தவிர வேறொன்றும் இருக்காது”

“அப்பா இல்லாத நாமே இப்படி வளர்ந்தபோது தன் மகன் தன்னைவிடப் பக்குவம் உள்ளவனாக பின்னால் மாறிவிடுவான் என அவர் முழுதும் நம்பினார்”

“இங்கு போதிய வசதி இல்லையென கிளினிக் வரச் சொல்லும் பணம் விழுங்கிவிடும் பட்டாளத்தாருக்கு அப்படியே நீதிமன்றத்தை ஞாபகப்படுத்தியது”

பல்வேறுபட்ட மனிதர்களின் வாழ்வினை உற்று நோக்கிய, அதன் பரிமாணங்களைக் கூர்ந்து கவனித்து, அறிந்து உணர்ந்தவர்களால் தான் இப்படி ஒரு கதையை வார்த்து எடுக்க முடியும். உணர்வுகளின் ஊசலாட்டத்தை, உயிர் படும் வாதையை வார்த்தைகளில் வடிக்க முடியும்.

“மணியோசை அவனைப் போல இல்லை.சுற்றி இருக்கும் நான்கைந்து தெருக்களைத்தாண்டியும் நான் யாரிலும் கீழானவன் இல்லை என்பதை பறைசாற்றுவதைப் போல”

“புதிதாக காவல்துறையில் சேர்ந்தவன் உயரதிகாரிகள் முன் விறைப்பென்றால் எப்படியிருக்கும் எனப் பாடம் எடுப்பது போல”

“அந்த சூழ்நிலை இதுவரை அனுபவித்து வந்த துயரங்களை நொடியில் தூக்கிச் சாப்பிட்டுவிட்டு ” இனிமேல்தான் நான் யார் என்று உனக்குக் காட்டப் போகிறேன் “ என்று சவால் விடுவதைப் போலிருந்தது”

“அம்மாவின் விரல் ரேகையை, பிறந்த குழந்தையின் பிஞ்சு விரல்கள் தொடுவதைப் போல”

கதைகளின் இடையே வரும் உவமைகள், அவ்வளவு அர்த்தப்பூர்வமானதாக உள்ளது. மேடைப் பேச்சுக்களில் மேற்கோள் காட்டக் கச்சிதமாய் பயன்படும்.

“இப்படித்தான் சட்டப்படிப்பைப் படித்து முடித்த நண்பர்களின் பழக்கத்தால் மகனின் மூளையும் கைகளும் தலைகீழாகச் செயல்படவும் சிந்திக்கவும் ஆரம்பித்து”

“எந்தவித உணர்ச்சியுமின்றி அடுத்த வழக்கைக் கவனிக்கும் நீதிபதிகளும், வழக்கறிஞர்களும்”

“பெருங்குரலெடுத்துக் கைகூப்பிக் கத்தினாலும் கூட தலை தூக்கிப் பார்க்காத நீதிபதிகளும்”

நான் சட்டம் படித்து முடித்து வழக்கறிஞர் தொழிலுக்கு வந்த பின்னர்தான் உணர்ந்தேன், மோசமான வழக்கறிஞர்களிடமிருந்து மக்களைக் காப்பது தான், சமூக அக்கறை கொண்ட நல்ல வழக்கறிஞர்களின் முதல் கடமை. பின்புதான் நீதியை வாங்கித் தருவதெல்லாம் என…அந்த முடிவை இன்னும் வலுவாக்குகிறது இவரின் எழுத்துக்கள். இவரும் சமூக அக்கறை கொண்ட வழக்கறிஞர் என்பதால், எழுத்துக்களில் எதார்த்தங்களை எடுத்தாள்கிறார்.

அத்தனை கடினமான சூழ்நிலைகளையும் தனக்கே உரியத் தனித்தன்மையோடு “அட அவ்வளவுதானா? என அநாயசமாகக் கையாளும், பட்டாளத்தாரின் வாழ்வு அய்யோ பாவம் “அவ்வளவுதானா”…என முடியும்போது நமக்கும் சற்றே மனநிலை பாதிக்கிறது… (அந்த இளம் வழக்கறிஞர், பாவெல் சக்தி தோழரைப் போல, என்னைப்போல, இன்னும் சமூக அக்கறை கொண்ட பல இளம் வழக்கறிஞரைப் போல யாரோ ஒருவராகத்தான் இருக்கும்.)

முதல் தஸ்தாவேஜே இப்படி இருக்க,

மற்ற 7 தஸ்தாவேஜ்களும்,

விஜயன் பழி பாவம் அச்சம் பழியென நான்கும்.

அமீரின்_நாட்குறிப்புகள் கொலைக்களத்து மாலை

பொச்சுக்கிள்ளி இன்முகம் காணும் அளவு

மூன்று_பெண்கள் செய்தக்க செய்யாமை யானும் கெடும்

7_மார்ச்_2007 நிழல் தன்னை அடி விட்டு நீங்காது

சோபியா மறத்தலைவிடக் கொடியது வேறில்லை

நான்கு_பேர்கள்_இரண்டு_சம்பவங்கள் நாடொன்றும் நாடு கெடும்,

என நீள்கிறது.

அனைத்துக் கதைகளும், சராசரி மனிதர்களின் அன்றாட பிரச்சினைகள், வாழ்வியல் சிக்கல்கள், அந்த பிரச்சினைகளுக்குத் தீர்வு நோக்கி நீதிமன்றம் வரும் கதை மாந்தர்கள், வழக்கை நடத்தும் நீதிபதி, வழக்கறிஞர்கள், காவல்துறை அதிகாரிகள் இவர்களின் துறை சார்ந்த நடவடிக்கைகள் என எதார்த்தமான சம்பவங்களை மையமாக வைத்து எழுதப்பட்டுள்ளது.

எல்லாரும் நமக்கென்ன, என ஒதுங்கியபோது , எல்லாருக்காகவும் எதையும் செய்யத் துணியும் ஆச்சரியத்திற்குரிய தியாக உள்ளங்களின் வாழ்வு தோல்வியில் முடிவதை என்னால் எப்பொழுதும் ஏற்றுக் கொள்ளவே முடிவதில்லை. ஆனாலும், அப்படித்தான் பலரின் வாழ்வு நம் முன்னே கொட்டிக்கிடக்கிறது. அப்படிக் கொட்டிக்கிடக்கும் வாழ்க்கைகளை  அருமையான சிறுகதைத் தொகுப்பாக்கிய ஆசிரியர் பாவெல் சக்திக்கு வாழ்த்துகள்.

 

– ராஜ குரு

நூல் தகவல்:
நூல் :நகர்துஞ்சும் நள்யாமத்தில் செங்கோட்டு யானைகள் எடுத்துப் படித்த VIII தஸ்தாவேஜ்கள்.

பிரிவு : சிறுகதைத் தொகுப்பு

ஆசிரியர்: பாவெல் சக்தி

பதிப்பகம்: எதிர் வெளியீடு

வெளியிட்ட ஆண்டு : 2020

விலை: ரூ 399

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *