The growth of Soil நட்ஹாம்சன் ஆங்கிலத்தில் எழுதி நோபல் பரிசு பெற்ற நாவல். தமிழில் க.நா.சு. நிலவளம் என்ற பெயரில் மொழி பெயர்த்திருக்கிறார்.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இயற்கையை ஒட்டி வாழ்ந்த மனிதர்களின் கதை. காட்டை சீர்படுத்தி கொஞ்சம் கொஞ்சமாக விளைநிலமாக்கி மனிதன் மிருகங்களுடனும் பருவ காலங்களுடனும் வாழ்க்கையை எப்படி வாழ்ந்தான். என்ன விளைவித்தான். காட்டை ஒரே நாளில் சீராக்கிவிட முடியாது. பல ஆண்டுகள் கடின உழைப்பு தேவை. அதற்கு பக்க பலமாக இருக்கும் பெண் வரும்போது அவன் வாழ்க்கை எப்படி மலர்கிறது, அப்போதைய வாழ்க்கை முறை (பெண்களுக்கு ஓட்டுரிமை எல்லாம் இல்லாத காலகட்டம்) அப்போது ஆண் பெண் உறவு நிலை, அவர்களின் உணர்வுகள் எல்லாம் இன்றைய காலகட்டத்துடன் பொருந்தி போவதாகவே இருக்கிறது.

காட்டை செப்பனிட்டு விளைச்சல் ஆரம்பித்து மெல்ல மெல்ல பண்ணையாக தனி ஒரு மனிதன் உருவாக்குவதும் அவன் எதிர்கொள்ளும் பிரச்சனைகளும் அவனுக்கு சக மனிதர்களின் உதவியும், பிரச்சனையும் கடினமாக உழைக்கும் ஒருவனின் மனநிலையும் இயற்கையை இறை நம்பிக்கை எப்படி வருகிறது என்று எல்லாம் இந்த நாவல் பயணிக்கும் இடங்களுக்கு நம்மையும் ஆசிரியர் இட்டு செல்கிறார்.

ஐசக் என்ற அந்த அவ்வளவு நாகரீகமில்லாத காட்டாள் கிராமத்தை விட்டு பல மைல் தள்ளி இருக்கும் காட்டில் முதலில் ஒரு குடிசை போட்டு கொஞ்சம் கொஞ்சமாக மரங்களை வெட்டி கிராமத்துக்கு சுமந்து சென்று விற்று பொருட்கள் ஆடு வாங்குவதும் கூட ஒரு பெண் வேலைக்கு இருந்தால் நன்றாக இருக்கும் என்று விசாரிக்க அவனின் உருவம் பார்த்து எந்த பெண்ணும் வர மறுக்க உதடு பிளவின் காரணமாக கிராமத்தில் புறக்கணிக்கப்பட்ட இங்கர் வந்து ஐசக்குடன் காட்டில் சேர இருவருமாக உழைத்து காட்டை சீராக்கி ஆடு மாடுகளை பெருக்கி உருளை பயிரிட்டு வைக்கோல் போர் அடித்து குடிசையை மரவீடாக்கி அவர்கள் இடத்துக்கு sசெஸ்ஸன்ரா எனற பெயரையும் இடுகிறார்கள. அவர்களின் காதல் அவர்களுக்கு குழந்தைகள் என்று குடும்பம் விரிகிறது. இங்கரை மிகபெரும் பொக்கிசமாக கருத்தும் ஐசக் அவளை அசத்த செய்யும் செயல்கள் வார்த்தைகள் இல்லாமல் ஆதி மனிதன் காதலை வெளிப்படுத்தி இருக்கும் விதம் என்று வியப்படைய செய்கிறது.

கடின உழைப்பால் மட்டும் செழிக்கும் அழகிய இவள் குடும்பத்தை கண்டு ஓலைன் என்ற கிராமத்தை சேர்ந்த கிழவி பொறாமை கொள்கிறாள். இதற்கிடையில் காட்டில் தனியே இரு பிள்ளைகள் பிரசவிக்கும் இங்கர் மூன்றாவதாக உதடு பிளந்து பிறந்த குழந்தையை கொன்று புதைத்து விடுகிறாள் யாருக்கும் தெரியாமல். காட்டில் சுற்றும் லாப் என்னும் நாடோடி மூலம் ஒலைன் விஷயம் அறிந்து இங்கரை சட்டத்தின் கைகளில் ஒப்படைத்துவிடுகிறாள். இங்கர சென்றவுடன் சொத்தை அபகரிக்கலாம் என்று ஐசக் வீட்டில் நுழையும் அவளின் எண்ணம் ஐசக்கால் நிறைவேறாமல் போகிறது ஆனால் ஒலைன் ஐசக்கின் இரண்டு குழந்தைகளையும் கவனித்து காட்டு வேலைகளை செய்வதால் அவள் செய்யும் சில்லரைதனங்களை பொருத்து கொள்கிறான்.
.
இங்கர் சிறைக்கு செல்கிறாள். வயிற்றில் குழந்தையை சுமந்து கொண்டு. சிறையில் தையல் உள்ளிட்ட பல வேலைகளை கற்கிறாள். அவள் உதட்டு பிளவையும் அறுவை சிகிச்சை மூலம் சரி செய்து கொள்கிறாள். எழுத படிக்க கற்கிறாள். நூல் நூற்க, நகரத்து பெண்மணிகள் போல ஆடை அணிகலன் அணிந்து கொள்ள என்று நாகரீகமானவளாக மாறுகிறாள்.

பழைய கிராம அதிகாரி கெய்சர் என்பவரின் உதவியால் இங்கரின் தண்டனை காலம் எட்டு ஆண்டுகளில் இருந்து ஐந்து ஆண்டுகளாக குறைக்கப்பட தண்டனை முடிந்து காட்டுக்கு மீண்டும் ஐந்து வயது குழந்தையுடன் வருகிறாள். ஐசக்குடன் அவள் குடும்பம் செய்து பழைய மாதிரி வேலைகள் செய்தாலும் நாகரீக வாழ்க்கைக்கு ஏக்கம் கொள்கிறாள். அதன் பின் சில வருடம் சென்று மனம் மாறி இறைப்பணியில் தன்னை எப்படி ஐக்கியபடுத்துகிறாள். அவளின் தடுமாற்றங்கள் அவள் பிள்ளைக்கு எழுத படிக்க கற்று கொடுக்க அவள் பிள்ளைகளில் ஒருவன் பலமில்லாமல் போவதும் படிக்காத ஒருவன் அப்பாவுக்கு துணையாக கைகொடுப்பதும். இவன் பண்ணை விரிவை பார்த்து மெல்ல மெல்ல பண்ணைகள் உருவாவதும் அங்கிருக்கும் மனிதர்கள் அவர்கள் வாழ்க்கை என்று கதை பயணிக்கும் இடமெல்லாம் நாமும் பயணிக்கிறோம் சுகமாக.

இந்த புத்தகத்தை முழுதாக வாசித்து முடித்த போது ஆயிரம் வருடங்களுக்கு முன் இருந்த மக்களின் எளிய வாழ்க்கை முறை, கடின உடல் உழைப்பு இருப்பவர்கள் பிரச்சனைகளை எப்படி எதிர்கொள்கிறார்கள்,   இயற்கையோடு எப்படி இணைந்து வாழ்கிறார்கள் கொஞ்ச நாள் நகரம் கிராமம் சென்று வந்தவர்கள் பண்ணையில் இருக்க முடியாமல் எப்படி பரபரப்பில் (restlessness) சிக்கி தவிக்கிறார்கள் என்று ஆசிரியர் சொல்லி இருக்கிறார்.

கெயிஸ்ஸர், பார்ப்பாரா, ஆகஸ்டேல், பிரட்ரிக், எல்யூஸ் , ஸிவெர்ட், ரிபெக்கா, ஜென்சன், லெபலட்டின் என்று கதை மாந்த்தர்களின் பெயர்கள் தான் அந்நியம், ஆனால் உணர்வுகள் எல்லாம் எல்லா மனித்ரக்ளுக்கும் ஆதி காலம் தொட்டு இப்போது வரை வித்தியாசமில்லை என்பதை இப்புத்தகம் வாசித்து முடிக்கும் போது உணர முடியும்.

காலசக்கரத்தில் பின்னோக்கி சுகமாக பயணித்த ஒரு அழகிய உணர்வு இந்த புத்தகம் வாசிக்கும் போது…..!

 

-கமலி

 

நூல் தகவல்:

நூல் : நிலவளம்

பிரிவு:  நாவல் (மொழிபெயர்ப்பு)

ஆசிரியர் :  நட் ஹாம்சன்

தமிழில்: க.நா.சுப்ரமண்யம்

வெளியீடு :காவ்யா பதிப்பகம்

வெளியான ஆண்டு :  2017

விலை: ₹450

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *