- பிரசாந்த் வே எழுதிய “காடர்” சிறுகதைத் தொகுப்பு நூலின் இடம்பெற்ற பத்திரிக்கையாளர் மு.குணசேகரனின் அணிந்துரை.
இந்த உலகம் என்பதே பெரும் காட்டில் இருந்து பரிணமித்த ஒன்று தான். வேட்டையாடும் சமூகமாக மனிதன் காடுகளில் அலைந்து திரிந்தபோது அவன் காட்டின் அங்கமாகவே இருந்தான். அப்படித்தான் தன்னை உணர்ந்து கொண்டான். நீண்ட நதிக்கரைகளின் ஓரத்தில் விவசாயத்தைத் தொடங்கிய புள்ளியில் இருந்து தான் காட்டிற்கும் மனிதனுக்குமான தொடர்பு விலகத் தொடங்கியிருக்கும். நாகரிக மனிதனாக வளர்ந்து நிற்கும் நம்மிடமிருந்து காடு முற்றிலுமாக அந்நியப்பட்டிருக்கிறது. இன்று நாம் காட்டைப் பற்றிச் சிந்திப்பதை நிறுத்திவிட்டோம். காட்டின் நலன் மீதோ அல்லது அதன் பாதுகாப்பின் மீதோ நமக்கு அக்கறை அருகிப் போய்விட்டது. ஆனால் இந்தச் சூழ்நிலையிலும் காட்டை முழுமையாகப் புரிந்துகொண்டு மாறிவரும் அதன் தன்மைக்கு ஏற்ப தங்களது வாழ்வாதாரங்களை அமைத்துக்கொண்டு காட்டிற்கும் காட்டுயிர்களுக்கும் பாதுகாப்பாக இருப்பது பழங்குடியின மக்கள் தான். காட்டைப் பாதுகாப்பதாய் சொல்லிக்கொள்ளும் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் இவர்களைக் காட்டிலிருந்து வெளியேற்றுவதையே முதன்மையாகக் கொண்டிருக்கிறது. உண்மையிலேயே காட்டின் நலன் மீதும் அதன் பாதுகாப்பின் மீதும் அக்கறையுடன் இருக்கும் பழங்குடி மக்களை வெளியேற்ற நினைப்பது காட்டின் நலனிற்கு எதிரானது என்பதை ’காடர்’ என்ற தனது முதல் சிறுகதைத் தொகுப்பின் வழியாக அழுத்தமாக சொல்லியிருக்கிறார் நண்பர் பிரசாந்த் வே.
சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட சுற்றுச்சூழல் தாக்கம் மதிப்பீடு (Environmental Impact Assessment – EIA) 2020 சட்ட முன்வரைவு தொடர்பாக சூழலியல் ஆர்வலர்களால் கடும் விமர்சனங்களும், விவாதங்களும் முன்னெடுக்கப்பட்டிருக்கும் காலகட்டத்தில் வெளியாகவிருக்கும் இந்தச் சிறுகதை தொகுப்பு நவீன தொழில்வளர்ச்சியும் அதனை சார்ந்த சட்டங்களும் எப்படி காடுகளுக்கும், அதனை வாழ்வாதாரமாகக் கொண்டிருக்கும் மனிதர்களுக்கும் எதிரானதாக இருக்கின்றன என்பதையும் நமக்கு தெளிவாக விளக்கிச் சொல்கிறது.
ஒரு கதை சொல்லியாக பரிணமித்திருக்கும் பிரசாந்த், அடிப்படையில் ஒரு பத்திரிகையாளர். அதனால் அவரால் சம்பவங்களை மிகத் தெளிவாக முன்வைக்க முடிகிறது. எதைப் பேசுபொருளாக்க வேண்டும், எதை மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும், ஒரு சம்பவத்திற்கு பிறகான மாறுபாடும் ஒவ்வொருவரின் கோணத்தையும் அத்தனை கதைகளின் வழியாகவும் மிக லாவகமாகப் பேசிச் செல்கிறார். பத்து சிறுகதைகள் அடங்கிய இந்த தொகுப்பில் ஒவ்வொரு கதையும் காட்டைச் சார்ந்த வாழ்க்கையின் பல்வேறு பரிணாமங்களை பற்றிப் பேசுகிறது. குறிப்பாக ’அணிநிழற்காடு’ என்ற முதல் கதை காட்டைச் சார்ந்து வாழும் பழங்குடியின மக்களின் அன்றாட வாழ்க்கையை படம்பிடித்து காட்டுகிறது. ஒவ்வொரு பருவத்திலும் மாறுபடும் காட்டின் தன்மைக்கேற்ப அவர்கள் எப்படித் தங்களது வாழ்வாதாரத்தை திட்டமிட்டு கொள்கிறார்கள் என்பதையும் காடு ஒருபோதும் அவர்களின் நம்பிக்கையை குலைப்பதில்லை. மேலும் காட்டிற்கும் அவர்களுக்குமான ஒரு பரஸ்பர புரிதலின் விளைவாகவே அவர்களால் காட்டுடன் மிக அணுக்கமாக இருக்க முடிகிறது என்பதையும் விளக்குகிறது. அதே வேளையில், அதிகார மையங்களாய் செயல்படும் அரசாங்க அதிகாரிகளின் செயல்பாடுகள், இந்த எளிய மக்களின் நலனுக்கு எதிரானதாக இருக்கிறது என்பதையும் இந்தக் கதை மிக அழுத்தமாகப் பதிவு செய்கிறது.
இந்தத் தொகுப்பில் உள்ள அத்தனைக் கதைகளும் வெவ்வேறு கதைக்களங்களின் வாயிலாக காட்டைச் சார்ந்த வாழ்க்கையின் நாம் பார்க்காத பக்கங்களை திறந்து காட்டுகிறது. புலிகள் காப்பகம் அமைப்பதாய் சொல்லி பழங்குடி, ஆதிவாசி மக்கள் காட்டில் இருந்து விரட்டப்படுவது, அப்படி விரட்டப்பட்ட மக்களுக்கு செட்டில்மெண்ட் ஏரியா அமைத்து அதற்கு பட்டா கூடக் கொடுக்காமல் நிரந்தரமாகவே அந்த மக்களை காட்டில் இருந்து விரட்டி விட்டு தொழில்துறை நிறுவனங்களுக்கு காட்டைத் திறந்து விடும் அரசாங்கத்தின் செயல்பாடுகள், ஆபத்து மிக்க சுரங்கங்களில் சுரண்டப்படும் எளிய மக்களின் உழைப்பு, யானைகளின் வழித்தடங்கள் ஆக்கிரமிக்கப்படுவதால் ஊருக்குள் புகும் யானைகள், மலைவாழ் மக்களுக்கு இன்றளவும் போய் சேராத அடிப்படைக் கல்வி, அதையும் மீறி அந்த மக்களின் பால் உண்மையான கரிசனத்துடன் இருக்கும் சில ஆசிரியர்கள் என காட்டை சார்ந்த வாழ்க்கையின் அத்தனை பரிணாமங்களையும், இன்மைகளையும் மிகத் துல்லியமாக தனது கதைகளின் வழியாகப் படம் பிடித்து காட்டுகிறார் பிரசாந்த்.
காட்டின் மீதும் அதனைச் சார்ந்த மக்களின் மீதும், காட்டுயிர்களின் மீதும் பிரசாந்துக்கு இருக்கும் உண்மையான அக்கறையும், கரிசனமுமே இந்த கதைகளை நோக்கி அவரை உந்தித் தள்ளியிருக்கும் என நினைக்கிறேன். இந்தத் தொகுப்பு முழுக்க நாம் பார்ப்பது நண்பர் பிரசாந்தின் காட்டின் மீதான காதலும், ஆர்வமுமே!
மிக எளிமையான மொழி, சரளமான நடை, சிந்திக்க வைக்கும் உரையாடல்கள் என ஒரு தேர்ந்த எழுத்தாளராக தனது முதல் படைப்பிலேயே மிளிர்கிறார் பிரசாந்த். அதிலும் குறிப்பாக “ஆத்துல தண்ணி இறங்குனா விவசாயம், ஏறுனா மீன் பிடிக்கிறது, இது தாங்க எங்க வாழ்க்கை”, அவிங்க உழைப்பு சுரண்டல பத்தி நான் எழுதினேன், என் சுரண்டப்பட்ட உழைப்பை யார் எழுதறது?”,
“புலி, புலினு… ஆடு, மாடு மேய்க்க கூடாது, தேனெடுக்க கூடாது, விறகு பொறுக்க கூடாது, நெல்லிக்கா பறிக்க கூடாது. இப்படி கூடாது கூடாதுனா எங்க போறதாம்?”
“மனுசனும் மிருகங்களும் ஒண்ணா வாழ முடியாது, காடு அழியுதுனு, காலகாலமா காட்டுல வாழுறவங்கள தொரத்துனவீங்க, காசு இருக்கறவனுகளுக்கு ரிசார்ட்டு, எகோ டூரிசம்னு காட்ட தொரந்து விட்டுருக்காங்க” போன்ற வரிகள் கதையின் தீவிரத்தையும், அது சுமந்து கொண்டிருக்கும் அசலான வாழ்க்கையின் ஆழத்தையும் மிகக் கச்சிதமாக எடுத்துச் சொல்வதாய் இருக்கின்றன.
ஒரு சிறந்த எழுத்து என்பது சொல்ல வந்த விஷயத்தை எப்படி மிக எளிமையானதாகவும் அதே நேரத்தில் மிகத் தீவிரமாகவும் உணர்த்தியிருக்கிறது என்பதைக் கொண்டு தான் சொல்ல முடியும். அந்த வகையில் பிரசாந்த் அவர்களின் இந்த காடர் என்ற சிறுகதைத் தொகுப்பு ஒரு புதிய எழுத்தாளரின் வருகையை மிக சிறப்பாகவே நமக்கு அறிவிக்கிறது.
துடிப்பும் அறவுணர்ச்சியும் மிகுந்த செய்தியாளரின் இன்னொரு பரிணாமம் காத்திரமான கதைகளாக வெளிப்பட்டுள்ளது. ஊடகப் பணியை முழு நேரத் தொழிலாகக் கொண்டவர்களுக்கு எழுதுவதற்கான நேரம் அமைவது கடினம் என்ற வாதம் தவறானது என்பதைத் தனது உழைப்பின் மூலம் நிரூபித்திருக்கிறார். தெளிவாகவும் ஆழமாகவும் ஒரு பிரச்னையை சமரசமின்றியும் அணுகும் பத்திரிகையாளராகவே பிரசாந்தை நான் அறிவேன். சமூக அக்கறை கொண்ட செய்தியாளராகத் தன்னை வரித்துக் கொண்ட நண்பர் பிரசாந்தின் அயராத உழைப்பையும், எளிய குடிகளின் மீது கொண்ட அளப்பரிய பற்றையும் அவர் தொலைக்காட்சிக்குத் தரும் செய்திகள், சிறப்புத் தொகுப்புகள் வழியே அறிந்து வந்த நேயர்களுக்கு, இந்த படைப்பு காடு சார்ந்த உலகத்தைப் பற்றிய புதிய தரிசனத்தைத் தரும் என நம்புகிறேன்.
தமிழ்த் தொலைக்காட்சி ஊடகத்துறையின் எதிர்கால நம்பிக்கைக்குரிய செய்தியாளர்களின் ஒருவர் பிரசாந்த். உயிர்ப்புள்ள கதைகளின் மூலம் தலைசிறந்த எழுத்தாளராகவும் மிளிர எனது அன்பான வாழ்த்துகள்
– மு.குணசேகரன்
சென்னை
நூல் : காடர்
பிரிவு : சிறுகதைகள் | சூழலியல்
ஆசிரியர் : பிரசாந்த்.வே
வெளியீடு : எதிர் வெளியீடு
வெளியான ஆண்டு : நவம்பர் 2020
விலை : ₹ 130