“யாழ்ப்பாண மண் கற்பாறைகள் நிரம்பிய நிலை அமைப்பை கொண்டிருந்த போதும், நிலத்தடி இன்னும் ஓடிக்கொண்டு தான் இருக்கிறது.”
இவ்வாறு எழுவோம், நிமிர்வோம், திரள்வோம் என்ற நூலினுடைய ஆசிரியர் ஆரம்பிக்கிறார். எழுவோம் நிமிர்வோம் திரள்வோம் என்பது காலத்தின் கட்டாயமாக பிரசுரிக்கப்பட்டுள்ளதை மகிழ்வுடன் பார்க்கிறேன்.
மிகவும் இறுக்கமான யாழ்மேட்டுக்குடி வெள்ளாள மேட்டிமையையும் வர்க்கசாதியுடைய பலகட்டமைப்பும் ஏற்றதாழ்களையும் கொண்டு வடிவமைக்கப்பட்டதுடன் யாழ்ச்சமூகம் 30 வருடங்களாக நீண்டதொரு யுத்தம், குடா நாடு புணரமைப்பு, மக்கள் புலம்பெயர்தல், இந்தியாவின் கைகளில் அடைக்கலம் புகுதல்….. பெருந்தொகை மக்கள் போரில் மாண்ட அத்தனை துயரும் புரையோடிய நிலையில் இதுவரை மாறாததும், மாற்றுவதற்கு மிகவும் கடினமானதும், என்று இருந்ததே இன்று வரை அச்சுக்குலையாமல் இருப்பது யாழ்சாதி அடிப்படைவாதமே.
அதனை அந்த மண்ணிலிருந்து மிக நீண்டகாலமாக அவதானித்துவரும் மனிதனின் மானுட வாழ்வியலை மனிதம் மட்டுமே ஒருவனுக்கு இருக்கவேண்டும் சாதி என்ற ஒரு கண்ணுக்குத் தெரியாத அக்கினியால் எத்தனையோ சம்பவங்கள் எரிந்து போய்க்கொண்டிருக்கின்றது. என்பது எழுவோம், நிமிர்வோம். திரள்வோம் என்ற கிட்டத்தட்ட கலந்தாய்வு கள ஆய்வு, எதிர்கூறல் இப்படி பல கோணத்திலும் சிந்தித்து எழுதியிருக்கும் இவ் எழுத்து காலத்தால் வரவேற்கக்கூடியது.
சமத்துவம்
இது இந்த நூலெங்கும் ஒரு சேலையின் நூலென இழையோடுகிறது. உயர்சாதிமான்கள் என்ன செய்கிறார்கள் என இந்நூல் நீதிப்போதனைகளை நடத்தாது சமத்துவத்தையும் அந்த மேலாதிக்க கருத்தியலை தாண்டி அதாவது பாறைக்குக் கீழே இருக்கும் அலைபோலன்று வேகமாக வந்து அந்தப்பாறையை முட்டிமோதி மேலெழுந்து சிதறும் நிலையைப் பேசுகிறது. சமூக சமத்துவத்துக்கான அடுத்த கட்ட நகர்வு குறித்த வெள்ளோட்டம் எனலாம்.
இந்த நூலை வாசிக்கும் போது மிகவும் அலுப்படித்தது. ஆனாலும் தொடர்ச்சியான வாசிப்பு அனுபவம் ஒரு நதியென நகரும் போது எனக்கு வானத்தின் பல கதவுகள் திறந்தது. என்னுடைய பின்புலம் யாழ்ப்பாணம் அல்ல ஆனாலும் யாழ் உயர் சாதியத்தாலும் சாதிய மனதாலும் அந்த இறுகிப்போன மனமானது எப்படியெல்லாம் மற்றவர்களை கொண்டு நடத்தியது என்பதற்கு எத்தனையோ கோடிக்கணக்கான சம்பவங்களை உலகறியும்.
இந்த நூலாசிரியரும் அறிவார் ஆகவே மறைமுகமாக, வெளிப்படையாக யாழ் சாதித்துவ மனநிலையை ஒரு மண்பானையென போட்டுடைக்கின்றார். எப்படி சாதியம் அரசியலானது அந்த அரசியல் என்ன செய்தது என்பதை ஒரு மலையை குடைவது போல் குடைந்துள்ளார். குடைந்து குடைந்து அங்கே காணப்படும் சாதியத்துக்கு எதிரான செயற்பாடுகளை அவர் முன்வைக்கும் போது மலையை குடைந்து பருகும் குளிர்ந்த நீரை அவரவர் மனத் தாகம் தீர அள்ளிப் பருகிச் செல்ல வைக்கிறார் என்பேன்.
யாழ்ப்பாணச் சமூகத்தில் இந்த சாதியம் என்ற விடயம் நிரூபித்து சாதிக்கு எதிர்ப்பாகவே இருக்கும் சாதியே இல்லாதவர் போல் பலர் தங்களை அடையாளம் காட்டுவர். ஆனால் ஒரு கல்யாணம் காட்சி என்று வருமிடத்து அது ஒரு நாக பாம்பென படம் எடுத்து ஆடும். அப்போது தான் தெரியும் சாதியின் விஷமும் கொந்தளிப்பும் எத்தகையது என ஆசிரியர் இந்நூலில் 94 தலைப்புகளுக்கூடாக தனது கருத்தினை தெளிவாக பதிவு செய்துள்ளார்.
இதில் எனக்கு மிகவும் பிடித்த தலைப்பாக சமுக சமத்துவத்தை நோக்கிய பயணத்தில் சாதியத்தின் குறுக்கீடு எனும் கட்டுரையால் தமிழ்ச்சமூகம் ஒரு சாதியச்சமூகமாகத்தான் இருக்கிறது மேலதிகமாக வீட்டுக்கு ஒரு கோயில் கட்டி பூசை போட்டு தானும் தன் கடவுளும் தண்ட கடவுளை தானும் தன் சார்ந்த சாதிமான்களுமே கும்பிட வேண்டும் அதுக்கு முன் குளத்தில் மூழ்கி பாவத்தை போக்க வேண்டும் என்கிற எண்ணமே கொள்வர்.
கடவுள் தான் மனிதனை படைத்து அவனை தனது சுவாசத்தைக் கொடுத்து வாழவைக்கின்றான். நீங்கள் சாதியம் கொண்டவர்கள் எப்படி உங்களுக்கு என சக்தி வாய்ந்த சாதிக் கடவுள்களை உருவாக்க முடியும்? ஆயுத போராட்டம் வரலாறு தீண்டாமைக்கு எதிரான தீவர போக்கும் வரலாம் ஆனால் சாதி புரையோடிப்போன கேன்சர் மனங்களை எந்த வரலாறும் மாற்றவே இயலாது என்பேன். பிரபாகரன் தலைமையிலான கடந்த முப்பது வருடகால யுத்தம் போராட்டம் என்ற போர்வையால் சாதிய சமூக வேறுபாடுகள் களைந்து நின்றதாக நூலாசிரியர் கூறுகின்றார். ஆனால் அந்த யுத்தம் முடிவுற்றதும் பழைய குருடி கதவை திறடி என்பது போல் புலத்திலும், உள்ளத்திலும் சாதிய மனங்கள் தெருவில் இறங்கி நடக்கத் தொடங்கிவிட்டன
கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாகத் தொடர்ந்த யுத்தம் போராட்டத்தை அடுத்து சாதியம் தன்னுடைய வடிவத்தை மாற்றிக் கொண்டு மீறுகிறது மிக நுண்மையமாக தனது நேரடித்தோற்றத்தை வெளிக்காட்டாத வண்ணம், புதிய பொது முறைகளுக்கூடாக விழிப்புணர்வைச் சமூகங்களின் மீது வேறு வகையான தாக்கங்களைத் திணிக்கும் வகையில்
- சாதியம் ஒழிந்துவிட்டது போன்ற ஒரு மாயத் தோற்றம்
- யாழ்ப்பாணமானது பின் நிலைச் சமூகம் அதிகாரத்துவ மையங்களில் இருந்து கொண்டு இன்னொரு அரசாக தொழிற்படுதல் இதன் மூலம் சாதிய அதிகாரத்துவமிக்க மிக நுண்மையாக (Micro Level) திட்டமிட்டு கட்டிக்காக்கப்படும் நிலைமை……
இந்நிலையில் அன்றும் யாழ்குடா நாட்டுக்குள் 126 கோவில்கள் சமதர்ம கொள்கையில் இல்லை என்பதும் ஒரு சில கோவில்களில் சமதர்மம் என்று கருப்பு மேகத்தால் (பூசைபண்ணி பூசைபண்ணி) சூழ்ந்திருப்பது நேரடி சாட்சியமே!
எனக்கு தெரிந்த ஒரு அதிபர் இருக்கிறார் அவர் திருகோணமலையில் மிகவும் பின்தங்கிய பாடசாலையில் நகருக்கு வெளியே 40km தூரம் பயணம் செய்கிறார். அவர் அதிபர் தரம் 01 இல் இருக்கிறார். நகரில் இயங்கும் பல பிரபலமான ஆண்கள் பாடசாலைக்கு அவர் அதிபராகும் சகல தகுதியும், திறமையும் மற்றும் உடல் பலமும் உள்ளது. ஆனால் அவரை அந்த பிரபல தமிழ் பாடசாலைகளில் அதிபராக முடியாமைக்கு ஆற்றின் நடுவே கிடக்கும் கனத்த பாறையென சாதி மட்டுமே முன் நிற்கிறது. அவர் சகல தேர்வுகளிலும் சித்தியடைந்து விட்டார். கடைசியில் சாதியில் தோற்றுவிட்டார். அவர் ஒரு கத்தோலிக்க கிறிஸ்தவர் சாதிகுறைந்தவன் ஒரு வேதக்காரன் எப்படி கோணேசர் பூமியின் உயர்பண்பாடு மான்மியம் மிக்க பாடசாலைக்கு அதிபராவது?? அங்கே சாதிக்கு முன்னாள் சகலதும் தோற்று போயுள்ளது. இந்தக் கவலையோடு அவர் ஒவ்வொரு நாளும் 50km பயணம் செய்து கொண்டு வருகிறார். ஒரு மனிதனின் கல்வித்தகுதி திறமை ஆளுமை ஏன் பணம் கூட இருந்தாலும் தமிழ் சமூகக்கட்டமைப்புக்குள் ஒரு அதிகார நிலைக்கு வருவதற்கு சாதி என்பது தீர்மானிக்கும் சக்தியாகிறது. வட கிழக்கில் ஒரு புரையோடித்தனமான நிறுத்த இயலாத நிழல் யுத்தமே.
இந்த நிலைமையில் மலையக பின்புலம் மிக்க நான் மலையக சாதியம் சமூகசமத்துவம் அடுத்தகட்ட நகர்வு என்ற ஏ. ஜி. யோகராஜன் அவர்களின் கட்டுரையின்படி மலையகத்தின் நிலையை பார்த்து தோட்டக்காட்டான் கள்ளத்தோணி பறத்தமிழன் என்ற கருத்தியல் மூலமே அடையாளப்படுத்துகின்றார்கள். யாழ்ப்பாண சாதிய வாதம் மலையக மக்களை ஒரு அடிமைகளாக கறுப்பர்களை அடிமையாக்கியது போல இவர்கள் மலையகத் தமிழர்களை தங்களின் வீடுகளில் வேலைக்கும் அதுவும் சிறுவர் சிறுமியர்களை தங்கள் தோப்புகளில் தேங்காய் பறிக்க விட்டு வேலை செய்ய தோட்டங்களில் பாடுபட என தென்னிந்தியாவில் இருந்து கங்காணிமார்களைப் போன்று இவர்கள் உள்ளூரில் தங்கள் நிலங்களுக்கு அழைத்துச் செல்கின்றனர்.
அங்கே அவர்களை கூலிகளாகவும் பல சமயம் கூலியற்ற நிலையிலும் நடத்தியுள்ளார்கள். அப்பா ஒரு கதை சொன்னார் 70-களில் தான் யாழ்ப்பணத்தில் ஒரு வீட்டில் வேலை செய்ததாகவும் அந்த வீட்டில் உள்ள பெண் அவரை விரும்பியதாகவும் அது தன்னோடு வருவேன் அழைத்துச் செல்லவும் என மிகவும் காதலோடும் உருக்கமாக கேட்ட போது அப்பா அந்த முதலாளிக்கு விசுவாசமாக இருக்க வேண்டும், அதையும் கடந்து தனது உயிரை காப்பாற்றிக் கொள்ள இரவோடு இரவாக ஹட்டனுக்கு வந்து சேர்ந்த கதையைச் சொன்னார். தங்கள் பிள்ளைகளை சாதி மாறிக் காதலிக்கும் ஆண்களை கடலில் கொண்டு போய் கொன்ற சம்பவங்களை தான் அறிந்த நிலையே இப்படித்தான் ஓடி வந்ததாகச் சொன்னார். இது முழுக்க முழுக்க உண்மைச் சம்பவமே. ஆக சமத்துவம் நீதிப் புரட்சி என்ற நீண்டதொரு சிந்தனை மனிதனை உடலளவில் அல்ல மனதளவில் மாற்ற வேண்டும்.
இந்த மேற்படி சம்பவத்தை நூலாசிரியர் மிக நுணுக்கமாக அழகாகக் கூறுகின்றார்.
…… சமூக பாகுபாடகளை நேரடியாக வெளிப்படுத்த முனைப்படாத பின் நிலைச் சமூகத்தின் ஆளுமை சக்திகள் மிகவும் ஆபத்தான சாதிய ஒடுக்குமுறைகளை மேற்கொள்வதில் முனைப்பாக இருக்கிறார்கள். மிகவும் நுணுக்கமாகவும் புதிய பொறிமுறைகளைக் கையாள்வதன் மூலமாகவும் தமக்கேயுரிய விவேகம் மிக்க கூட்டுளவியல் முறைமைகளுக்கூடாகவும் ஒடுக்குமுறை நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். எடுத்துக்காட்டாக கல்வி ரீதியில் சிறிய மாற்றம் மத்திய பாடசாலைகளிலிருந்து பல்கலைக்கழகம் வரை இதன் தொடர்ச்சியை கீழ்வரும் நடைமுறை உதாரணங்களின் மூலம் அறியலாம்.
- பூரணத்துவமான தகுதியைப் பெற்று வருடங்கள் பல கடந்த நிலையிலும் பேராசிரியர் அந்தஸ்தை அடைய முடியாத நிலை!
- உயர் கல்லூரிகளுக்கு அதிபராவதை தடுத்தல்!
- புரந்த சமூகத்தின் மத்தியில்; ஓர் உயர் கல்லூரிக்கு அதிபர் அந்தஸ்துடன் அமர்வதைத் தவிர்க்கும் பொருட்டு, கோட்டக்கல்வி அதிகாரி என்று பதவி உயர்வை வழங்கி குறுகிய வட்டத்துக்குள் அமர்த்திவிடும் தந்திரோபாயம் மிக்க புதிய பொறிமுறை!
- விளிம்புநிலைச் சமூகங்களின் ஆசிரியர்களை அச்சமூகப் பள்ளிகளுக்கே ஆசிரியராக நியமித்தல் அல்லது தூர அல்லது கஷ்டப்பட்ட பிரதேசங்களுக்கு இடமாற அனுப்பி விடுதல்!
அரசாங்க அதிபர், உதவி அரசாங்க அதிபர் போன்ற உயர் அதிகார மையங்களில் பின்நிலைச் சமூகம் அதிகாரத்தில் இருப்பது தெளிவு. கிராம சேவகர் வகைப்பட்ட உப அதிகார விளிம்பு நிலைச் சமூகத்தில் இருந்து நியமனமாகும் கிராம சேவகர் ஒருவர், சமூக வேறுபாடுகளைக் கடந்து அனைத்துக் கிராமங்களுக்குமான கிராம சேவகராக நியமிக்கப்படுவதில்லை. விளிம்பு நிலைச் சமூகத்தில் இரந்து தெரிவாகும் அவர், அதே சமூகத்தைச் சேர்ந்த கிராமங்களுக்கே கிராம சேவகராக நியமிக்கப்படுகின்ற பொறிமுறை ஓர் எழுதாச் சட்டமாக இங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந் நடைமுறையினால்; ஒன்று, விளிம்பநிலைச் சமூகங்களில் இரந்து நியமனமாகும் கிராம சேவகர்களிற்கான எண்ணிக்கை இயல்பாகவே மட்டுப்படுத்தப்படுகின்றது. அதே வேளை, தகுதி அடிப்படையில் விளிம்புநிலைச் சமூகங்களுக்குக் கிடைக்கக் கூடிய வேலை வாய்ப்புக்களையும் மட்டுப்படுத்துகின்ற அல்லது இல்லாமல் செய்கின்ற ஒருவித ஒடுக்குமுறையும் இங்கு கையாளப்படுகிறது
மேலும், மிக முக்கியமான விடயம் சனத்தொகை விகிதாச்சாரம். போர்க்களத்தை அடுத்த இன்றைய சூழலில் விளிம்ப நிலைசட சமூகங்களின் எண்ணிக்கைக்கு சமனாக அல்லது அதற்கு குறைவாகவே பின்நிலைச் சமூகத்தின் எண்ணிக்கை இருக்கின்றது. ஆனால் வேலை வாய்ப்புகளிலும் மாகாணசபை, பிரதேச சபை போன்ற சமூக நிறுவனங்களுக்கான நியமனங்களிலும் முந்தைய அளவிலான நடைமுறைகளைக் கையாள்வதும் சமூக ஒடுக்குமுறையின் வெளிப்பாடாகவே கருத இடமுண்டு.
அதாவது மாகாண சபை, பிரதேச சபைகள் போன்ற சபைகளில் மட்டுமன்றி பனையேறும் சமூகங்களுக்கே உரித்தான பனை அபிவிருத்திச் சபையிலும் கூட பின்நிலைச் சமூகமே அதிகாரத்தில் இருக்கிறது. இன்றைய யாழ்ப்பாணத்தின் இச் சூழலில் விளிம்பு நிலைச் சமூகங்களின் எண்ணிக்கை 50 விழுக்காட்டுக்கு மேல் கிட்டத்தட்ட 60 விழுக்காடு என்று கணிக்கப்படுகிறது. இந்நடை முறைகள், மண்டேலாவுக்கு முந்தைய தென்னாபிரிக்காவையே நினைவுபடுத்தகிறது.
இன்றைய சமூக சனத்தொகை விகிதாசாரத்துக்கு ஏற்ப அனைத்து வகையான நியமனங்களும் மாற்றியமைக்கப்படுவதற்கான சூழலை உருவாக்க வேண்டியதும் யாழ்ப்பாணச் சமூகங்களின் தார்மீகக் கடமையாகும்.
நூலாசிரியர் பற்றி
எனது முகநூலில் இணைந்த நண்பர் யோகராஜா 30 ஆண்டுகளாக புலத்தில் வாழ்கிறார். யுத்தம் தின்று கொண்டிருந்த பூமியிலிருந்து பிடுங்கி வீசப்பட்டவர்களில் இவரும் ஒருவர். புலம்பெயர்ந்த தமிழர்களால் “மனிதம்” இதழில் இவரும் பங்காற்றியவர். மேடை நாடக நடிப்பு, வாசிப்பு என பல திறமை கொண்டவர்.
சுவிஸ் தமிழ் மாணவர் மன்ற நாடக கலைஞர்களோடு இவர் நாடகம் ஆற்றி களித்துக்கொண்டிருந்தவர். இவர் சாதியம் தீண்டாமை முதலான நாடக இயக்குனர்களோடு இணைந்துப் பணியாற்றியவர்.
சாதி தீண்டாமை என்பது ஒரு வர்த்தக துன்பமாக மட்டும் பார்க்காமல் தனித்துவமாக அவற்றை அணுகவேண்டிய அவசியம் 1950களில் தான் உலகளவில் உருவானது. ஏற்கனவே A.J. Daniel அவர்கள் மூலமாக ஈழத்தில் சாதியத்தின் கொடுமைகள் வெளிவந்தது. மலையக கிராமங்களின் பெண்களை வீட்டு வேலைக்கும் பாலியல் வறட்சியை போக்கவும் வைத்திருந்த ஆதிக்க சாதிமான்களின் அட்டகாசங்களும் நிர்வாணப்படுத்தப்பட்டது திரு டேனியலின் எழுத்துகளில் தான்.
இன்று போர் ஓய்ந்து புகை ஓய்ந்து 10-வருடங்களாக எட்டும் போது எழுவோம், நிமிர்வோம், திரள்வோம் என்ற சமூக தத்துவம் ஒரு மைல் கல்லை நோக்கிய பயணம் முக்கியமானது. 80-களில் புறப்பட்ட ஒரு தலைமுறை ஈழத்தில் இல்லை. ஆனாலும் இந்த தீண்டாமை சிறப்புமிக்க போராட்டங்களை புதியவர்கள் அறிய வாய்ப்பில்லை. இப்போது தான் போரில்லையே மகிந்த ராஜபக்ச நல்ல கார்பேர்ட் ரோட் போட்டுள்ளார் யாழ்ப்பாணத்தில் நல்லாட்சி அரசாங்கம் விமான நிலையம் அமைத்துள்ளது லண்டனிலிருந்து நாங்கள் யாழில் போய் இறங்கலாம் என்ற மாயத்தில் இன்று மக்கள் பழைய சாதியமான்களை மனதுக்குள் கொண்டு வந்து பழம் பெருமைகளைப் பேசி பேசி அதனை மீண்டும் நீருற்றி வளர்த்து தங்களது இரத்தங்களுக்கு சொல்லிக் கொடுக்க பாடுபடுவதை நூலாசிரியரின் இந்நூல் பேசுகிறது.
எனக்கு மிகவும் பிடித்த இன்னுமெரு விடயம் நூலாசிரியர் யோகராஜா அவர்கள் இந்த சாதியத்துக்கு எதிரான செயற்பாட்டை சொற்களிலிருந்து தொடர வேண்டும் என்கிறார். பஞ்சமா தாழ்த்தப்பட்டவர், ஆதிக்க சாதி, வெள்ளாளர் சாதி, நிலமரபு முதலான சொற்கள் தமிழிலிருந்தே அகற்றப்படவேண்டும். ஏற்றத்தாழ்வுகள் வெளிப்படுத்தாத மொழித்தனம் இங்கு தேவை. அவை இருப்பதனால் தானே அதையே மீண்டும் மீண்டும் சொல்லி சொல்லி மக்கள் தங்களை அடையாளப்படுத்தகின்றனர் என்கிறார். அருமை வாழ்த்துக்கள்! அதற்கு பதிலாக சாதி ஆதிக்கத்துக்கு ஆட்பட்ட சமூகங்களை “விளிம்பு நிலைச் சமூகம்” எனவும். சாதி ஆதிக்க சக்திகள் சமூக நகர்வுகளைப் பின்னோக்கித தள்ளுவதால் அவற்றை ‘பினநிலைச்சமூகம்” எனவும் அடையாளப்பட்டிருக்க வேண்டும் என்கிறார். நூல் முழுக்கவும் அவர் இவ்வாறே இந்தச் சொல்லாக்கங்களைப் பயன்படுத்தவும் செய்கிறார்.
சொற்களுக்கு இயற்கையான அர்த்தம் கிடையாது எல்லாம் சொல்லும் பொருள் “குறித்தனவே” என்பதே தொல்காப்பியம் சொல்வதும் அந்த வகையில் சொற்கள் குறித்து இருக்க வேண்டும் என்பதே உண்மையாகும்.
அதனால் சொற்களை மட்டும் மாற்றி விட்டால் போதுமா? மாற்றம் வந்துவிடுமா? முடியவே முடியாது இப்போது உயர்சாதி தாழ்ந்த சாதி என முகநூலிலேயோ தமிழ் மக்களிடையோ புழக்கத்தில் இல்லை. தலித் மக்கள் அருந்ததியினர், ஆதிக்சாதியினர் என்ற வார்த்தைகளையே பேசுகின்றனர்.
நான் எனது நூல் வெளியீட்டு விழாவுக்கு மதுரைக்கும் போயிருந்தேன். அப்போது என்னை நூல் விழாவுக்கு அழைப்பித்தவர் நன்றாக கவனித்தார் ஒரு குறையும் வராது பார்த்துக்கொண்டார். என்னிடம் கதைக்கும் போது தனது குலச்சாமிக்கோயில் நாங்கள் நாகர்கள் நாகர் தெய்வ வழி வந்தவர்கள் எங்களுக்கு குலச்சாமி கோயில் உள்ளது. என தனது சாதியத்தையும் பரம்பரையும் மிக நூதனமாக என்னிடம் விவரித்துக் கொண்டேயிருந்தார்.
பின் நான் எனது அம்மாவின் உறவினரின் வீட்டுக்குச் செல்ல வேண்டுமென சொன்னேன். அவர் அந்த உறவினரைப்பற்றி நன்றாக என்னிடம் விசாரித்தார். அப்போது நான் விலாசம் ஊர் பெயரை சொன்னதும் உடனே ஒரு விடயத்தைச் சொன்னார். தமிழ் நாட்டில் பிரபல சாதி கவிஞரின் பெயரைச் சொல்லி நீங்கள் அவருடைய சாதி அவருடைய வழி வந்த மக்கள் கூட்டத்தை சேர்ந்தவர் என்றார், ஆனாலும் இவர் ஒரு எழுத்தாளர். அதையும் தாண்டி கவிஞர் சாதியினை ஆட்களை ஊர்கள் வைத்து மட்டுமல்ல எந்த கவிஞன் எந்த சாதி என்று மிக தெளிவாக அறிந்து வைத்தும் தமிழ்நாட்டு கவிஞர்கள் இருக்கிறார்கள். ஆனாலும் அவர்களுக்கு எந்த சாதியிலும் பெண்களின் தேவைகளை அடைவதற்கு சாதி தேவையில்லை என்பதையும் இலங்கை திரும்பியதும் பல நண்பர்களின் கதை மூலம் அறிந்தேன். சாதி எழுத்தாளனையும் விட்டுவைக்கவில்லை அது கடவுளையே விட்டு வைக்காது காருக்கு ஒரு கோயில் வீட்டுக்கு ஒரு குலச்சாமியென சாதியத்தால் கீழத்தெரு மேலதெரு என்ற பாகுபாட்டை மிக துல்லியமாகவும் வெகு கௌரவத்துடனும் சாதி வகுத்து வைத்துள்ளதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தேன்.
ஏ.ஜி யோகராஜா அவர்களின் இந்த நூல் காலத்தின் கட்டாயமே! மலையகத்தில் சாதி உண்டு பறையர், பள்ளர், குடியானவர் என்ற சாதியினம் உண்டு. இந்தியாவில் இருந்து வந்த இம்மக்களிடத்தில் சாதியினம் இருந்தது. குடியானவர் என்றவர்களின் வீட்டில் பறையர் வேலை செய்தார்கள். அவர்கள் அய்யோ அவர்கள் குடியான சாதி என என காதில் கேட்க கதைத்திருக்கிறார்கள். எனக்கு தெரிந்த குடும்பம் எனது தோட்டத்தில் இருந்தது. அப்போது நாங்கள் சிறுவர்களாக இருக்கும் போது அந்த வீட்டு பெண்பிள்ளைகளோடு விளையாடுவேன் அவர்கள் கொஞ்சம் பணம் வைத்திருந்தர்கள் . பணத்தை சேமிப்பது எவ்வாறு என நாம் அவர்களிடம் கற்க வேண்டும். அவ்வாறு பணம் வைத்திருக்கும் அவர்கள் குடியான சாதி என அம்மா கூறியிருந்தார்.
அவர்கள் வீட்டுக்குள் போகவே பயமாக இருக்கும் ஒரு நாள் அவர்களின் வீட்டில் அந்தப் பெண்பிள்ளைகளோடு விளையாடிய பின்னர், அவர்கள் வீட்டின் கட்டிலில் அமரந்து இருந்த போது அவ்வீட்டு வயதான பெண் என்னை மிகவும் கண்டித்தார். ‘குளிக்காத நீயெல்லாம் கட்டிலில் உட்காராத ஓடு’ என பேசி துரத்திவட்டார். அது எனக்கு அப்போது ஒரு பெரிய விசயமாக தெரியவில்லை. ஆனால் இந்த சாதி ஏற்றத்தாழ்வு முதலான வர்க்க வேறுபாட்டை கற்க ஆரம்பித்த போது மிகவும் கவலையை தந்தது. (ஆனால் குளிரும் பார்க்காமல் ஒவ்வொரு நாளும் குளிக்கும் என்னை குளிக்கவில்லை என்ற பொய் மட்டும் பொறுக்கவில்லை) இப்படி மலையகத்தில் ஆரம்பித்த காலங்களோடு அந்த இந்திய இடப்பெயர்வில் மக்கள் சிவாஜி எம்ஜிஆர், அண்ணாவின் புகைப்படத்தோடு சாதியையும் கொண்டுவர தவறவில்லை . ஆனால் மக்கள் மயம், அகமயம் தோட்டமக்கள் மத்தியில் உருவான தொழிற்சாலைகள் கூட்டு அரசியலில் சாதி என்பது இப்போது மலையகத்தில் இல்லை என்பேன். யார் யாரையும் காதலிக்கலாம் திருமணம் முடிக்க கூடும் ‘நம்ம புள்ளைகள தானே” என்ற மக்களின் மனம் பண்படுத்தப்பட்டதை காண்கிறேன். இது ஒரு நல்ல மாற்றமே.
இலங்கை மண்ணில் உருவான “அடிமை விடுதலைச்சட்டம்” (1344) சுதந்திர இலங்கையில் உருவாக்கப்பட்ட “சமுக குறைபாடுகள் சட்டம்” (1957) சாதி ஒழிப்பில் முன்னேற்றத்தையும் காணவில்லை பிரிட்டிஸ்காரர்கள் உடன்கட்டை ஏறுதலை எப்படி சட்டம் மூலம் தடுத்தார்கள் சாதியை அவர்கள் சட்டம் மூலம் தடுக்க இயலவில்லை என்பேன். சாதி ஆதிக்கத்தை எதைக் கொண்டுமே அசைக்க முடியவில்லை. இலங்கை மண்ணில் M.L. சுப்பிரமணியம் சண்முகதாஸ் முதலான புரட்சி அரசியலில் சாதியத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியது. இலங்கை கம்யுனிசக கட்சி இது ஒரு ஆதாரமே!
சாதி மற்றும் தீண்டாமை என்பன தமிழ்ச் சமூகத்தின் சாபக்கேடு அவை ஒழிக்கப்பட வேண்டும் அதனை துவக்கியுள்ள நூலாசிரியரின் இந்நூல் காலத்தின் மிகத்தேவையே! இந்த நூல் ஆளுமைச் சமூகங்களில் ஆதிக்க சக்திகளின் கைகளிலிருந்து எப்படி வெளியேறுவது என்பதைய பேசுகின்றது. யாழ்ச்சமூகம் நல்ல ஒரு கற்ற பண்பாடுகள் கலாச்சாரம் மிக்க சமூகமாகும். பிரதேசவாதம், சொந்த நார், என்ட காணி, என்ட நிலம், வீடு வளவு என குறுகிப்போய் மற்றைய சமூகங்களிலிருந்து விடுபட்டு இறுதியில் சாதியத்தின் மீது சரணடைகின்றது. பண்பாடு பண்பாடு என்று பெண்களையும் வேலியை விட்டு வெளியேறவிடாமல் மரபு என்ற மாயைக்குள் அவர்களை நெடுகாலம் கட்டிக்காத்தது (இப்போது ஓரளவு தளர்வு) நூலாசிரியர் மிக அருமையான எளிமையான சொல்லாடல்களை பயன்படுத்தியுள்ளார். ஒரு கவிதை நாவல், சிறு கதை அல்ல வாசித்ததும் கடந்து போக இது ஒரு எதிர்கால பயத்தைக் குறித்து பேசுகிறது.
வடக்கு மக்களின் சிந்தனை வேறு கிழக்கு மக்கள் சிந்தனை வேறு மலையக மக்கள் முற்றிலும் வேறுபட்ட சிந்தனை ஆனால் எல்லோரும் தமிழர்கள் இருப்பினும் மிக நுணுக்கமான வேறுபாடுகள் உண்டு. கிழக்கு மாகாணம் ஓரளவு பல்லினம் வாழ்கின்ற மக்கள் இடமாகும். வடக்கு மாகாணம் பெருமளவு தமிழர்கள். மலையக மக்களோ இரண்டும் கெட்டானாக பூகோள ரீதியாக தொடர்பில் இருக்கிறார்கள்.
2010ம் ஆண்டு எழுத்தாளர் மல்லிகை டொமினிக் ஜீவா அவர்கள் லண்டனுக்கு இலக்கிய கூட்டமொன்றில் பங்குபெற அழைந்திருந்தார்கள். அவர் வெளிப்படையாகவே தான் ஒரு முடிதிருத்தும் இனத்தைச் சேர்ந்தவனென பேசும் ஒருவர். இந்நிலையில் அவர் லண்டன் கம்யூனிஸ்ட் உறுப்பினர் கங்கா அவர்களின் வீட்டிலே ஒரு மாதம் தங்கியிருந்துள்ளார். அந்நிலையில் அவர் லண்டன் வந்திருக்கிறார் என அவரை சந்திக்க மலையக, யாழ், கிழக்கு என பலர் வந்து தனியாக சந்தித்து சென்றார்கள். பின்னர் திரு. காங்கா அவர்கள் அவருக்கு ஒரு பாராட்டு விழா வைத்து அவருக்கென கொஞ்சம் நன்கொடைகளை கொடுக்க இந்த விழாவை ஆயத்தப்படுத்தியுள்ளார்.
இந்நிலையில் அந்த விழாவுக்கு கடந்த ஒரு மாதம் அவரை வந்து சந்தித்து வந்த இன சனம் ஒருவரும் நிகழ்வுக்கு வரவில்லை என்ன காரணம் ஏன் அவர்கள் வரவில்லை என தேடிப்பார்த்த போது அம்மக்கள் தங்களின் சாதியை (முடிதிருத்தல் சாதி) மற்றவர்கள் கண்டுபிடித்து விடுவார்களே என்ற பயத்தில் நிகழ்வுக்கு வரவில்லை. இது மிகவும் மனதளவில் ஒரு துக்கத்தை தந்தது என விழா ஏற்பாட்டாளர் விடயத்தை பகிர்ந்துக்கொண்டார். அவரை சந்திக்க தொடர்ச்சியாக வந்தவர்கள் பொது நிகழ்வில் வரமறுத்துவிட்டமை தங்களின் அடையாளம் இங்கே காட்டிக் கொடுத்துவிடும் என்ற மனபயம் சமூக பயமே காரணம். ஆதிக்ககாரர்கள் முன்னால் முன்வர இந்த சாதி விடவில்லை. இந்தியாவை போன்று சாதியின் கொடுமை யாழ்ப்பாணத்தில் வெளிப்படையாக இருக்காது. தமிழ் நாட்டில் ஆணவப் படுகொலைகள் போல் சாதியை எதிர்க்கும் கொடூர மனநிலை இல்லாவிட்டாலும் மிக நூதனமாக சாதியை யாழ் சமூகம கண்டறியும். தாழ்த்தப்பட்ட சாதிக்காரன் தனது தனது பிள்ளையை நல்ல பாடசாலைக்கு அனுப்பியிருந்தால் அவன் எந்த வேலை செய்கிறானோ அவன் ஒரு வீட்டில் பணிபுரியும் போது கூலித்தொழிலாளி எனில் வேலையை நிறுத்துவான். அல்லாவிட்டால் கடினமான வேலைகளை கொடுப்பார். இப்படி மட்டுமல்ல அதிகமாக நூதனமான வேலைகள் செய்வார்.
சாதியமைப்பு என்பது மிகவும் சிக்கலானது அவற்றை சரி செய்ய முடியவே முடியாது. அதற்கு நீண்டதொரு காலம் புரட்சி தேவை என்பேன். அது இரத்தத்தால் பரம்பரைகளுக்கு கடத்தப்படுவது புதிய இரத்தம் அவற்றை சரி செய்யவே வேண்டும்.
ஒரு திருவிழாவுக்கு ஒரு கல்யாண வீட்டுக்கு வருகின்ற பெண்களை, ஆண்களை சாதிமான்கள் உரையாடும் போது நீங்கள் எவ்விடம் எந்த தெரு எந்த ஒழுங்கை வேப்பமரத்துக்கு அந்தப் பக்கமா இந்தப்பக்கமா இல்லை அந்த சந்தியில் திரும்பும் போதா என குடைந்து குடைந்து அவர்களின் சாதியைக் கண்டுபிடிக்கும் நாசா கண்டுபிடிப்பாளர்கள். யாழ்ப்பாண சாதிமான்கள் இதனால் பெருமளவு வைபவங்களில் பெண்கள் திருவிழாவில் புலம்பெயர்ந்த நாடுகளில் கலந்து கொள்வதில்லை. சாதியை உடைத்துக்கொண்டு திருமணம் முடிக்கிறவர்கள் நீங்கள் என்ன சாதி என்று ஆரம்பித்து காதலிக்க முடியாது தானே அதனால் பல காதல் திருமணம் சாதி மட்டும் அல்ல சீதனக் கொடுமைகளையும் தூசிதட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
A.G. யோகராஜின் 94 பக்கங்கள் கொண்ட எழுவோம், நிமிர்வோம், திறள்வோம் என்ற நூல் சாதியக்கட்டமைப்பின் பாதிக்கப்பட்ட ஒருவரால் தான் எழுத முடியும் என்பதல்ல அந்த சாதியக் கொடுமைக்குள் வாழ்பவராலும் அதை நாளாந்தம் கடக்கும் ஒருவராலும் முடியும் என்பேன். வடமராட்சியில் இருந்து வரும் மக்கள் நன்கு கற்றவர்கள் பொருளாதார பணவசதி மிக்கவர்கள் அவர்கள் தெனமராட்சிக்காரனை கண்டுகொள்வது இல்லை. மேலும் மிக அதிகமான கரையார்கள் எனப்படும் மீனவர்கள், வெள்ளாளர் என பல சாதிக்கட்டமைப்பை கொண்ட யாழ் குடா நாடு பெருமளவு மாறியுள்ளது. திருகோணமலையில் இல்லாத கடைகள் யாழில் உள்ளது வங்கி பல் தேசியக் கம்பனிகள் என பல தரப்பட்ட நிறுவனங்கள் யாழில் காலூன்றியுள்ளது
மக்களை புலம்பெயர்ந்தவர்களின் பணம் அரசியலையும் பொருளாதாரத்தையும் நிறைவான உற்பத்தியும் அவர்களை இந்த நாட்களில் பலப்படுத்திக் கொண்டுவருகிறது என்பேன். மாற்று அரசியல் என விக்னேஸ்வரன் தலைமையில் ஒரு அணியும் நிலத்தை மீட்கப்போகின்றேன் என்ற பொன்னம்பலம் வழிவந்த பரம்பரை பணம் படைத்த கஜேந்திரகுமார் அணியும் பாராளுமன்றம் நோக்கி பயணித்துள்ளனர். இவர்கள் நிலத்தை மீட்கிறார்களோ அரசியல் புரட்சி செய்கிறார்களோ ஆண்டவனுக்கே தெரியும் ஆனால் இப்புரையோடிப் போன சாதி தீண்டாமை சீதனம் துன்பங்களை இன்னும் யாழ்ச் சமூகத்தை பின்னோக்கி செல்ல விடாது மனிதம் மட்டுமே உலகில் பிரதானம் அதை கடந்து ஏதுமில்லை என்பதற்கு நீங்களும் இந்த பரம்பரை அவலங்களோடு பாடுபடதல் காலத்தின் கட்டாயம்.
தமிழ் தேசியம் மேடைகளில் எந்த அரசியல் வாதியும் நிச்சயம் தங்களது தேர்தல் பிரச்சாரத்துக்குக் கூட சிறுபான்மை மக்களது உரிமை மற்றும் சாதியொழிப்பை பேசவே மாட்டார்கள். நானும் அதைக் காணவில்லை இனிவரும் காலத்திலாவது கதைப்பார்களோ சாதியின் கதையை முடிப்பார்களா என பொறுத்திருந்து பார்ப்போம்.
– எஸ்தர்
மலையகம் – இலங்கை
நூலிலிருந்து
முன்னுரை
நண்பர் யோகராஜா அவர்களை சுமார் முப்பதாண்டுகளாக அறிவேன். சுவிஸ்சில் உள்ள புலம் பெயர்ந்த தமிழர்களால் நடத்தப்பட்டுக் கொண்டிருந்த "மனிதம்" இதழின் சார்பாக அவர்களின் மாநாடொன்றிற்கு நான் அழைக்கப்பட்டு இருந்த போது சுமார் ஒரு வார காலம் லங்கெந்தால் என்னுமிடத்தில் இருந்த அவரது வீட்டில்தான் தங்கி இருந்தேன். அதற்குச் சுமார் பத்தாண்டுகளுக்குப் பின் மீண்டும் ஒரு முறை சுவிஸ் செல்லும் வாய்ப்பு வந்தபோது அவரை ஒரு அரங்க இயக்குநராகச் சந்திக்க முடிந்தது. "சுவிஸ் தமிழ் மாணவர்மன்ற நாடக இளைஞர்கள் சிலருக்கு அவர் நாடகப் பயிற்சி அளித்துக் கொண்டிருந்தார். சில மணி நேரங்களுக்கு மேல் அங்கு அவருடன் உரையாட அப்போது வாய்க்கவில்லை. சுமார் ஐந்தாண்டுகளுக்கு முன் அவர் சென்னை வந்தபோது நான் குடந்தையில் இருந்தேன். அவரது குறும்படம் ஒன்றை சென்னையில் வெளியிட ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்தபோது அவரது மனைவிக்கு உடல்நிலை மோசமாகவே அவர் அந்தக் குறும்படத்தை இங்கு வெளியிடாமலேயே சுவிஸ் திரும்ப வேண்டியதாயிற்று.
அதற்குப் பின் இந்தக் குறுநூலின் ஊடாகத்தான் இன்று அவரைச் சந்திக்கிறேன். முப்பதாண்டு கால யுத்தத்தின் ஊடாக அவர் சுவிஸ்சுக்கு இடம்பெயருமுன் இலங்கை இடதுசாரி இயக்கங்களுடன்தான் இணைந்து செயல்பட்டுக் கொண்டிருந்துள்ளார். தமிழக இடதுசாரி இயக்கங்களுக்கும் இலங்கை இடதுசாரி இயக்கங்களுக்கும் ஒரு வேறுபாடு உண்டு. தமிழர்கள் மத்தியிலான சாதியக் கொடுமைகள் பற்றிய அரசியல் பிரக்ஞையை ஈழ இடதுசாரி இயக்கங்கள் ஒப்பீட்டளவில் முன்னதாகவே பெற்றி ருந்தன என்பதுதான் அது. குறிப்பாக, தோழர் சண்முக தாசனின் தலைமையிலான இயக்கம், "தீண்டாமை ஒழிப்பு வெகுஜன முன்னணி மூலமாக வீரஞ்செறிந்த பல போராட்டங்களை முன்னெடுத்திருந்தது. தமிழகத்திலும் பெரிய அளவில் ஒடுக்கப் பட்ட மக்கள் இடதுசாரி இயக்கங்களால் திரட்டப்பட்டிருந்த போதிலும் அவர்கள் இங்கே "விவசாயக் கூலித் தொழிலாளிகள் என்பதாகவே வர்க்க ரீதியில் மட்டுமே அடையாளம் காணப் பட்டனர். சாதி, தீண்டாமை ஆகியவற்றை வெறும் வர்க்கப் பிரச்சினையாக மட்டும் பார்க்காமல் தனித்துவத்துடன் அவற்றை அணுக வேண்டிய அவசியம் 1980களின் பிற்பகுதியில் உலகளவில் ஏற்பட்ட மாற்றங்களின் பின்னணியில்தான் இங்கு உருவாகியது.
- அ. மார்க்ஸ்
நூல் : | எழுவோம்! நிமிர்வோம்! திரள்வோம்!
சமூக சமத்துவம்: அடுத்த கட்ட நகர்வு குறித்த முன்வரைவு |
பிரிவு : | கட்டுரைகள் | சமூக ஆய்வு |
ஆசிரியர்: | ஏ.ஜி. யோகராஜா |
வெளியீடு: | சிந்தன் புக்ஸ் |
ஆண்டு : | ஜனவரி 2020 |
பக்கங்கள் : | 105 |
விலை : | ₹ 100 (இந்திய ரூபாய்) |