நாவலை படிக்க ஆரம்பித்து முடிக்கும் வரையான கால இடைவேளையில், புத்தகத்தின் தலைப்பு மற்றும் அட்டைப்படத்தைப் பார்த்து கிறிஸ்துவ வேத நூல் வாசிக்கின்றேனோ? மதம் மாறப்போகின்றேனோ? என பல கேள்விகள் என்னைச் சுற்றியிருந்தவர்களுக்கு ஏற்பட்டது. கிறித்துவ மதமாற்றம், அதை பின்பற்றுவதில் ஏற்படும் சிக்கல்கள், மதம் நம்மை எப்படி மேம்படுத்த வேண்டும், ஆனால் அது எப்படியாக இருக்கின்றது போன்றவற்றை அலசும் நாவல் என்ற விளக்கம் கொடுத்தவுடன் தான் அவர்களது பதட்டம் தனிந்ததை உணர முடிந்தது.
எந்தச் சூழ்நிலையிலும் ஞாயிற்றுக்கிழமை இறைவனுக்கானது என்று தேர்வுகளுக்கு முந்தைய நாளே ஆனாலும் கூட தீவிர ஜெபம், பிரார்த்தனைகளை மட்டுமே பின்பற்றி, காதல் திருமணத்திற்குப் பின் பின்பற்றிவந்த கட்டுப்பாடுகளனைத்தையும் தளர்த்தியிருந்த தோழி, காதலுக்காக கிறித்துவராக மதம் மாறிய பின் ஒவ்வொரு வாரமும் தவறாது ஊழியங்களை மேற்கொண்டு, பிரசங்கம் செய்யும் அளவு மதமாற்றதத்தில் தீவிரத்தன்மையடைந்திருந்த உறவினர்,
ஒருகாலத்தில் பிள்ளையார் கோவிலுக்கு நன்கொடைகளை அள்ளிக் கொடுத்து, ஒரு கட்டத்தில் ஏசப்பா நம்மை கைவிட மாட்டார் என்று அருள்வாக்குச் சொல்பவராக மாறிய சொந்தக்காரர், நிச்சயக்கப்பட்ட திருமணம் என்றாலும் தனக்கான இனக்குழுவினுள்ளேயே கிறித்துவ மதத்தை தழுவி சூட்டப்பட்ட புதுப்பெயரை ஆத்மார்த்தமாக ஏற்றுக்கொண்டவர் என்று வாழ்வில் மாதமாற்றத்தை மனதால் இயைந்தோ வற்புறத்தலின் பெயரிலோ சுவீகரித்துக் கொண்டு வாழும், நான் சந்தித்த அனைத்து விதமான மனிதர்களையும் நினைவுக்கு கொண்டு வரக்காரணமாக இருந்தவர்கள் இந்நாவலின் ஹரியும், காயத்ரியும்.
இம்மண்ணின் மக்கள் காலந்தொட்டு பின்பற்றி வரும் பல சாதிய சடங்குகளுடன் கிறித்துவ மதம் தன்னைப் பொறுத்திக் கொண்டதாலேயே மக்களால் இம்மதத்துடன் சுலபமாக இணக்கமாக முடிந்திருக்கின்றது. இணக்கமாகவும் இருக்க முடிகின்றது. மலைமேல் இருக்கும் தேவலாயத்திற்கு கிரிவலம், கொடிமரம் சுற்றிவருதல், தேர்பவனி விழா போன்றவை சில உதாரணங்கள். கிறித்துவ மதத்தினராக இருந்தாலும் தங்கள் சாதி அடையாளத்தை உயர்த்திப் பிடிப்பதில் பலரும் ஆர்வம் காட்டுவதை இப்பொழுதும் பார்க்க முடிகின்றது.பாதை வேறு ஆனால் போகும் இடம் ஒன்று என்பது அனைவரும் அறிந்தது தான். எல்லா மதமும் அன்பையும் அறத்தையும் தான் போதிக்கின்றது என்பது மறுப்பதற்கில்லை.
நாவலில் மதமாற்றத்திற்கு என்று எந்த கதாபாத்திரமும் பகிரங்கமாக வற்புறத்தப்படவில்லை என்றாலும் காதல் திருமணம் என்னும் நிலையை அடைகின்றபோது மதம் தனக்கான அரணைச் சரிபார்த்துக்கொள்கின்றது. பெரும்பாலும் மதமாற்றம் பெண்களுக்கு உரியதாகவே இருப்பது அவர்களின் சகிப்புத்தன்மையா ? சாபமா என்பது கேள்வியே.
பாஸ்கர், ரேவதி, நாவலா இடையிலான உறவு காமத்தின் ஈர்ப்பால் ஏற்படும் விளைவுகளை விவரிக்கின்றது. பெருமாளை வழிபடும் ஒரு பெண் கிறித்துவ மதத்தை தழுவும் பொழுது அந்த குடும்பத்துடன் தன்னை இணைத்துக்கொள்வதில் சந்திக்கும் பிரச்சனைகளை காயத்ரி பீட்டர் இடையேயான காதல் கட்டுக்குள் கொண்டு வருகின்றது. மதத்தின் மீதான அதீத ஈடுபாடு வாழ்க்கையை சிதைத்து மனப்பிறழ்வு வரை கொண்டு செல்லும் என்பதற்கு எடுத்துக்காட்டாகின்றான் ஹரி. சைத்தானைக் கொண்டு கிறித்துவின் வாழ்க்கையை நாவலாக எழுதச்செய்திருப்பது, நாவலின் போக்கிலேயே கிளைக்கதையாய் இயேசுவின் வாழ்வு விவரிக்கப்படுவது, கோவிலில் பூசாரியாக இருந்து மதம் மாறினாலும் தேவாலயத்தில் பாஸ்டராக இருக்கவேண்டும் என்ற எண்ணம், ஆடுகள் மேய்ப்பர்களைத் தேர்ந்தெடுக்கும் அவலத்தைச் சுட்டிக்காட்டுதல், செய்யும் தவறில் இருந்து காத்துக்கொள்ள காணிக்கையால் சபையை சரிகட்டுவது,
எளிமையான மக்களிடம் அறஉணர்ச்சியைத் தூண்டும் உண்மை ஊழியக்காரரான ஜீவானந்தம், சபையை நிர்வகிப்பதிலும் வாரிசு அரசியல்,
சாத்தான் என்று அழைக்கப்படும் சாமுவேலை விடிவெள்ளியாய் லூசிபர் என்று அறிமுகம் செய்வது என்று நாவல் பேச விரும்பியதை நம்முடன் உரையாடுகின்றது.
நாவலுக்கு முரணாக trance திரைப்படம் பார்த்துவிட்டு வாசிப்பனுபவத்தை எழுதும் வாய்ப்பு தற்செயல் என்றே நம்புகின்றேன்.
– அபிநயா ஸ்ரீகாந்த்
நூல் : தேவன் மனிதன் லூசிஃபர்
பிரிவு: நாவல்
ஆசிரியர் : சைலபதி
வெளியீடு : யாவரும் பதிப்பகம்
வெளியான ஆண்டு : 2018
விலை: ₹ 225
நூலை வாங்க : Be4Books.com