“பெண்-
ஆரம்பம் என்பதற்கு இன்னொரு வார்த்தை

மாற்றம் என்பதற்கு இன்னொரு வார்த்தை

ஆறுதல் என்பதற்கு இன்னொரு வார்த்தை

இருத்தல் என்பதற்கு இன்னொரு வார்த்தை

என்னுடைய என்பதற்கு இன்னொரு வார்த்தை..”

என்று ஒரு மேற்கோள் உண்டு. நவீன தமிழ்க்கவிதையைப் பொறுத்து பெண்- கவிஞர் என்பதற்கு இன்னொரு வார்த்தை என்று மாறி வருகிறது, இன்றைய இலக்கியச் சூழல். ’அந்த வகையில் தென்மேற்குப் பருவக்காற்று தேனிப்பக்கம் வீசும் போது சாரல்..’ என்பது போல சாரலாய் வந்திருக்கிறது அம்மு ராகவ்வின் கவிதைகள்.

பழுத்த முந்திரிகள் இரவை நிறைக்கிறன.

தாழம்பூ மணக்கும் காடுகளில் சர்ப்பங்கள் உலாவுகின்றன.

மகிழம்பூக்கள் மணக்கும் மரங்களில் ஈசன் உலவுவதாக நம்பிக்கைகள்.

மூங்கில் பூக்களுக்கிடையே அணில்கள் கடந்து வருவதைப் பார்த்தேன்.

பூக்கள் குறித்து என் கற்பனைகள் வேறு.

நான் மகிழம்பூக்கள் வாசத்தில் மனம் நெகிழக் கொடுத்திருக்கிறேன்.

என்கிற கவிதை அதை விளக்கக் கூடும். விளக்கம் என்பதை விட உணர்த்தக் கூடும். ஏனெனில் அம்மு ராகவ்வின் கவிதைகள் பலவும் நாம் உணர்ந்து அனுபவிக்கிற மாதிரியே அமைந்திருப்பது இதன் சிறப்பு.

அம்மு ராகவ்வின் தலைமுறை இளையராஜா பாடல் கேட்டு பயணிப்பவை. பயணம் என்றால் வாழ்க்கைப்பயணத்தையே சொல்லலாம் அந்த அளவுக்கு அவர்களது வாழ்க்கையின் பலநிலைகளிலும் ராகதேவனின் ஆளுமை இருக்கிறது. அவர் இசையைப் போற்றுகிற ஒரு நல்ல கவிதை

இந்தச் சாலையில் நான் பயணம் செய்வதற்கு முன்பு

ராகதேவன் எங்கும் போகாமல்

என்னுடனேயே ஒரு நூல் பிடித்துப்

பயணிக்கிறார்

அந்த இசையும் குரலும் என்னைவிட்டு நீங்குவதில்லை

என் பயணங்கள் முழுமையானதல்ல

முழுமையானதெதுவும்

என் நினைவுகளிலும் இல்லை

பயணங்களை நினைவு கூர்கையில்

ராகதேவன் ஒரு தொடரும் கனவு

இப்பொழுதெல்லாம் இரவுகளில்

என் பாரங்களை ராகதேவன் சுமக்கையில்

எஞ்சிய பொழுதுகள் யாவும்

நான் விரும்பாத பொழுதுகள்

ராகதேவன் இசைக்கும் பொழுதெல்லாம்

இந்த உயிரில் மின்னியற்றிகள்

உயிர்த்துக் கொள்வதாகத்தான்

நான் நினைக்கிறேன்.

அவர் வாழும் குறிஞ்சித்திணையின் மலையும் மலைசார்ந்த கருப்பொருளும் உரிப்பொருளும் உயிர்ப்புடன் உலவுகின்றன அம்மு ராகவின் கவிதைகளில். அவரது ’சென்று பற்றும் பார்வை’ கண்டு சொல்லும் அவரது மனதைத் தைத்த காட்சிகள் எண்ணிலடங்காதவை, வனம், மரம், செடிகள், பூக்கள், ஓடைகள், சர்ப்பங்கள், நெடுநல் வாடை சங்கக்கவிதையில் சொல்வது போன்ற குளிர் தரும் ஏக்கம், குளிர் நுழையும் போது நீங்கும் வெப்பம், அப்போது உண்டாகும் தாபத்தினால் தாக்கும் உடலதிர்வு என குறிஞ்சித்திணையின் படிமங்ககளை நிறையவே வழங்கியிருக்கிறார் அம்மு ராகவ். இதில் ஐம்பது கவிதைகளே இருக்கின்றன. இன்னும் இருந்தால் சிறப்பாக இருக்குமே என்று தோன்ற வைக்கிறது.

A woman in harmony with her spirit is like a flowing river- தன் ஆன்மாவுடன் ஒன்றிணைந்த பெண் ஒரு அழகான நதி என்கிறார் ஒரு பஞ்சாபிப் பெண் கவிஞர். அப்படி தன் சுற்றுப் புறங்களுடன் சக மனுஷிகளின் வலிகளுடனும் வாழ்வுடனும் ஒன்றிப் போன ஒரு வஞ்சியாக, குற்றாலக் குறவஞ்சி போல குறிஞ்சித்திணையியினைக் கொண்டாட முயன்றிருக்கிறார். அதில் நல்ல வெற்றியும் பெற்றிருக்கிறார் அம்மு ராகவ். இன்னும் காலம் செல்லும் போது தன் வாசிப்பின் பலத்தோடு பல கவிதைகளைப் படைப்பார் என்ற

நம்பிக்கையோடு வாழ்த்தி மகிழ்கிறேன்.


அன்புடன்

கலாப்ரியா

நூலாசிரியர் குறித்து

தமிழகத்தின் தேனி மாவட்டத்தில் வசிக்கும் அம்மு ராகவ்  ஊடகவியலாளராக உள்ளார். கவிஞர், எழுத்தாளர், நூல் விமர்சகர் என இலக்கியத்தில் இயங்கும் இவரின் கவிதைத் தொகுப்பு ஆதிலா 2022-ம் ஆண்டு வெளியானது.

நூல் தகவல்

நூல் :  ஆதிலா

வகை:  கவிதைகள்

ஆசிரியர் : அம்மு ராகவ்

வெளியீடு : பீ ஃபார் புக்ஸ் (Be4Books)

வெளியான ஆண்டு :  2022

விலை: ₹ 120

நூலைப் பெற :  Be4Books Online Book Shop

குறிப்பு :  இந்தக் கட்டுரை ஆதிலா கவிதைத் தொகுப்பு நூலில் இடம்பெற்ற அணிந்துரை. நூலாசிரியரின் அனுமதியுடன் விமர்சனம் இணையதளத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது.