டுக்கப்பட்ட /அடித்தள மக்களைப்பற்றிய திரைப்படங்கள், இயக்குனர் .கே.சுப்பிரமணியம் காலத்திலிருந்து இந்தியாவில் எடுக்கப்பட்டு வருகின்றன; ஆனால் முதலில் ,காந்திய அணுகு முறையில் அடித்தள மக்கள் உணர்வோட்டம், மேல்தட்டினரின் பார்வையுடன் முரண் கொண்டு மோத  விடாமல் சரிக்கட்டப் பட்டதாக இருந்தது; பின்னர் பாலசந்தர் முதலியவர்களின் அணுகுமுறையில் ,அடித்தட்டு மக்கசேர்ந்து இயங்கி வரும் ள் தம்மை தம் கோபத்தை /எதிர்ப்பை வெளிக்காட்டிக்கொள்ளாமல் சமரசம் செய்து கொள்வது விவரிக்கப்பட்டது. சமீபத்தில்தான் முழுமையான அரசியல் பிரக்ஞயுடன் இப்பிரச்சனைகள் முன்வைக்கப்படுகின்றன.

இதனை அடையாளம் கண்டு, ‘தலித் சினிமா ‘என்று சுட்டிக்காட்டுவதாக உள்ள திரைப்படங்களை தமிழ் மட்டுமின்றி ,மலையாளம் ,இந்தி,மராத்தி ,கன்னடம் ,வங்காளி  என இந்திய அளவில் பரிசீலித்து,ஒரு ஆய்வினை இந்நூலில் முன் வைக்கிறார் விமர்சகர் ஜமாலன். சமகால முயற்சிகளை/அக்கறைகளை அடையாளம் கண்டு, உடனுக்குடன் விவாத வெளியில் கொண்டுவரும் ஜமாலனின் எழுத்தும் நிழல் திருநாவுக்கரசின் வெளியீட்டு ஆர்வமும் குறிப்பிடத்தக்கவை .

தமிழ் நாட்டில் கணிசமாக தலித் மக்கள் வாழ்ந்த போதும், அவர்தம் நிலவரத்தைச் சரிவர சுட்டிக்காட்டி விடாமல் தடுப்பது எது ?ஜமாலன் ஒரு குறிப்பைத் தருகிறார் : ”பெரும்பான்மை கருத்தியலாக பிராமணியக் கருத்தியல் இருக்கக் காரணம், அது அரசோடு சேர்ந்து இயங்கி வரும் ஒரு ஆதிக்க கருத்தியலாக இருப்பதால்தான்.மாறாக, பிராமணிய ஆதிக்க கருத்தியல் ஆளும் வர்க்கத்திற்கு ஏற்புடைய ஆளுகை தொழில் நுட்பமாக இருப்பதால் அதையே மக்களிடம் பொதுப்பண்பாடாக பொதுக்கருத்தியலாக பன்னெடுங்காலமாக இந்திய துணைக்கண்டத்தில் ஆளும்  வர்க்க அமைப்புகள் கட்டி காத்து வருகிறது” [பக்கம் 33-34]

உலக மயமாக்கல் பொதுவாக எதிர்மறையாகப் பார்க்கப்பட, அதன் தாராளமயப் பொருளாதாரமும் சிந்தனைகளும் தலித் எழுச்சிக்கு ஒரு அடிப்படையை வித்திட்டது. அதன்பின் தலித் அரசியல் பேசு பொருளாக மாறியது என்கிறார். இப்பின்னணியில்தான் பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் போன்ற இயக்குனர்களின் வருகையைக் காண வேண்டியுள்ளது .

அதே வேளையில், இக்காலக்கட்டத்திற்கு முன்னர், அடித்தள மக்கள் மீதான அக்கறை என்பதாக எடுக்கப்பட்ட ‘இந்திரா ‘ [1995]போன்ற படங்கள் தலித் விரோதமானவை என்றே ஜமாலனால் அடையாளங்கட்டப்படுகின்றன. ஏன் ? ”போலியானதொரு சாதிய அரசியலை வெளிப்படுத்திய திரைப்படம். பிராமண சாயல் கொண்ட தலித் குடும்பத்தை காட்டிய போலியான படம் …… அடிப்படையில் அத்திரைப்படங்கள் தலித் விரோதமானவை மட்டுமல்ல மிக மோசமான அரசியலை முன்வைப்பவை. ”

பா .ரஞ்சித் குறிப்பிடத்தக்க திரை ஆளுமையாக உருக்கொண்டதற்கான பின்புலம் , அவரது அரசியல் பார்வையிலிருந்து பார்க்கப் பட வேண்டியதுள்ளது . ”டாக்டர் அம்பேத்கர் சொன்னதுபோல், சமூக சீர்திருத்தம் இல்லாமல் எந்தவொரு அரசியல் சீர்திருத்தத்தையும் கொண்டுவர முடியாது .சமூக சீர்திருத்தத்தை நோக்கி சமூகத்தை தள்ளி ச் செல்ல கலையை பயன்படுத்த நாங்கள் முயற்சிக்கிறோம் ”என்னும் ரஞ்சித்தின் பார்வையே, உலகமயத்திற்கு பிந்தைய அம்பேத்கரியஅரசியலை முன்வைத்து தலித் நோக்குடன் வெளிவந்த தமிழ் திரைப்படம் ‘அட்டகத்தி’ என்று ஜமாலனை பேச வைக்கிறது. இப்பார்வையுடன் மைய நீரோட்டத்திலேயே ரஞ்சித் இயங்க விரும்புவதன் அவசியமும் நூலில் விவாதிக்கப்படுகிறது. ”ஒரு சமூகம் என்ற வகையில் நான் எனது அடையாளத்தை வெளிப்படையாக சொல்வதற்கும் அதை சமத்துவமாக சமூகம் ஏற்றுக்கொள்வதற்குமான நிலைக்கு சமூகம் செல்லவேண்டும்” என்கிறார் ரஞ்சித்.

தமிழில் ரஞ்சித்தின் முயற்சிகள் போல, பிற மொழிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள அக்கறைகளும் ஆர்வங்களும் இந்நூலில் பேசப்படுகின்றன. மலையாளத்தில் வெளிவந்த ‘பாப்லியோ புத்தா’ [2013] திரைப்படம் ஓர் எடுத்துக்காட்டு. மலபார் காடுகளில் காணப்படும் அரியவகை பட்டம் பூச்சிகளில் ஒன்றுக்கு ஜப்பானிய ஆய்வாளர் இட்ட பெயரே ‘பாப்லியோ புத்தா’. இப்பெயரில் ஜெயன் கே.செரியனால் இயக்கப்பட்டுள்ள திரைப்படம். ஒரு காலகட்ட வரலாற்றின் பின்புலத்தில், சித்தரிக்கப்பட்டுள்ள அறிய திரைக்காவியமாகியுள்ளது.

”அம்பேத்கரியத்திற்கும்  காந்தியத்திற்கும் உள்ள முரண் ,தலித் பெண் உடல் மீதான வன்முறை ,தலித் மலைவாழ் மக்களின் நிலப்பிரச்சனை ,கம்யூனிச இயக்கத்தின் தலித் ஒருங்கிணைப்பில் ஏற்பட்ட பிறழ்வு ,கேரளா தலித் தலைவர் அய்யன்காளியின் அரசியல் மீளாக்கம் என ஆழமானஅரசியல் பிரச்சினைகளை முன்வைத்து தீர்க்கமான அரசியல் உள்ளோட்டதுடன் வெளிவந்துள்ள திரைப்படம் ”.

ஷியாம் பேனகளின் ‘அங்கூர்’ [1974], தலித்துகளை நாற்றுகளாகவும் பிராமணர்களை களைகளாகவும் குறியீட்டு தளத்தில் காட்சிப்படுத்துவதும், கன்னடத்தில் ‘சோமனதுடி’ [1975]”நிலவுடமை, காலனியம், மதம் மூன்றும் தலித்துகள் மீது நிகழ்த்தும் அடக்கு முறையும் வன்முறையும் தலைவிதி என இணைக்கப்படுதலும் அதனால் உருவாகும் வாழ்க்கைச் சிதைவும் எப்படி உடைமை வர்க்கமாக அவர்கள் இருப்பதால் நிகழ்கிறது ”என்பதை விவரிப்பதும் விரிவாக நூலில் அலசப்படுகின்றன. வங்க மொழியின் ‘அந்தர்ஜாலி ஜாத்ரா ‘மற்றும் கன்னடத்தின்

‘சம்ஸ்கார’வும் விரிவாக ஆராயப்படுகின்றன. ஆனால் இவை பிராமணிய சீர்கேட்டினை விமர்சிப்பவை மட்டுமே.

சா.தேவதாஸ்

 

நூல் தகவல்:

 நூல் : தலித் சினிமா :  அழகியல் | அரசியல் | அறவியல்

 பிரிவு:  கட்டுரைகள் | திரைப்படம்

 ஆசிரியர் : ஜமாலன்

 வெளியீடு :  நிழல் பதிப்பகம்

 வெளியான ஆண்டு :   2019

  விலை: ₹  200

தொடர்புக்கு :

நிழல்,

31/48,ராணி அண்ணா நகர்,

கே .கே.நகர் ,

சென்னை-78

அலைப்பேசி: 9003144868

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *