புகலிடத்து வாழ்வுக்கோலங்களில் எம்மை நாம் சுயவிமர்சனம் செய்துகொள்ளத்தூண்டும் புதினம்.

ருவர் மற்றும் ஒருவருக்கு எழுதிய கடிதம், ஒருவரின் நாட்குறிப்பு ஆகியனவற்றை மற்றவர்கள் பார்ப்பது அநாகரீகம் எனச்சொல்பவர்களுக்கு மத்தியில், சிலரது கடிதங்களும் நாட்குறிப்புகளும் உலகப்பிரசித்தம் பெற்றவை என்பதையும் அறிந்து வைத்திருக்கின்றோம்.

காந்தியடிகளின் நாட்குறிப்பு, நேரு சிறையிலிருந்து தமது மகள் இந்திராவுக்கு எழுதிய கடிதங்கள் என்பன உலகப்பிரசித்தம்.

தினமும் நிகழும் சம்பவங்களை குறித்து வைப்பதற்காக அறிமுகமான Diary ( Daily record of event) தமிழில் மட்டுமன்றி பிறமொழிகளிலும் அவ்வாறு அழைக்கப்படுகிறது.

உலகப்பிரசித்தி பெற்றவர்களின் டயறிகள் பிற்காலத்தில்அதிக விலையில் ஏலம்போயிருப்பதையும் நூதன சாலைகளில் இடம்பெற்றிருப்பதையும் அறிவோம்.

ஏற்கனவே தமிழ் இலக்கிய உலகில் நன்கு அறியப்பட்டிருக்கும் பெர்லினில் வதியும் கருணாகரமூர்த்தியின் மற்றுமொரு வரவு அனந்தியின் டயறி. இதனை அவர் பல ஆண்டுகளுக்கு முன்னரே எழுதத்தொடங்கி , அவரது கணினியில் வைரஸ் ஆதிக்கம் செலுத்தி, அந்தக் குறிப்புகளை இழந்துவிட்ட சோகத்தில் நெடுநாட்கள் இருந்தபொழுது, டயறிக் குறிப்புகளின் பாங்கில் வெளியான சில ஆங்கில தமிழ் நாவல்களைப் படித்ததும் மீண்டும் உற்சாகம் கரைபுரண்டு ஓடவும் இந்த நாவலை எழுதத் தொடங்கியிருக்கிறார்.

காலச்சுவடு பதிப்பகத்தினால் வெளியிடப்பட்டுள்ள இந்நாவலில் காலச்சுவடு ஸ்தாபகர் சுந்தரராமசாமியையும் தமதுரையில் நினைவுபடுத்தியுள்ளார்.

சு.ரா. என இலக்கியப்பரப்பில் நன்கு அறியப்பட்ட சுந்தர ராமசாமியின் ஜே.ஜே. சில குறிப்புகள் மிகவும் முக்கியமான படைப்பு. ஜோசஃப் ஜேம்ஸ் என்ற ஒரு எழுத்தாளனைப் பற்றியது. ஆனால், அவனுடைய எழுத்துக்களை நாம் பார்த்திருக்கவில்லை. “தன் உள்ளொளியை காண எழுத்தை ஆண்டவன் அவன் “ என்றும் – அற்பாயுளிலேயே மறைந்துவிட்டான் எனவும் சொல்லியவாறு சு.ரா.வே கற்பனை செய்துகொண்டு எழுதிய புதினம் ஜே.ஜே. சிலகுறிப்புகள்.

ஜே.ஜே. என்ற பெயரில் மாதவன் நடித்த படத்திலும் இந்த ஜே.ஜே. சில குறிப்புகள் புதினம் முக்கிய அடையாளமாக வருகிறது, அவள் ஒரு தொடர்கதையில் ஜெயகாந்தனின் சில நேரங்களில் சில மனிதர்கள் வருவது போன்று.

கருணாகரமூர்த்தி சிருஷ்டித்துள்ள அனந்தி பதின்மவயது யுவதி. அவளும் ஜோசஃப் ஜேம்ஸ் போன்று ஒரு கற்பனைப்பாத்திரம். சு.ரா., ஜே.ஜே. என்ற பாத்திரம் ஊடாக சமூகத்தை – கலை, இலக்கிய உலகை அங்கதப் பார்வையுடன் பார்த்தவாறே கருணாகரமூர்த்தியும் எமது புலம்பெயர் தமிழ் சமூகத்தை அங்கதப்பார்வையுடன் எள்ளி நகையாடியவாறே பார்க்கின்றார். நாமும் ரசிக்கின்றோம். புகலிடத்தில் எம்மவரையும் அவர்களின் வாழ்க்கைக் கோலங்களையும் அறிகின்றோம்.

தமிழ் இலக்கியத்தில் பாரதி முதல் இன்றைய படைப்பாளிகள் வரையில் இந்த அங்கதம் சமூகம் குறித்து தொடருகின்றது. இந்தப்புதினம் பற்றி கருணாகரமூர்த்தி இரத்தினச்சுருக்கமாக இவ்வாறு சொல்கிறார்:- “நான் வாழும் பெர்லினில் (ஜெர்மனி) எனது வாழ்க்கைச்சூழல் எனைச்சூழவுள்ள உறவு வட்டங்கள், முகநூல், வலைத்தளங்கள், சினிமா, ஊடகங்கள், இலக்கியங்களில் நான் அவதானித்தவற்றின் மனங்கொளக்கூடிய குறிப்புகளே இத்தொகுப்பு. ஒரு நெடிய பயணத்தில் பசுமைக்காட்சிகள் இங்கொன்றும் அங்கொன்றுமாகக் கண்ணில் விழுவது போன்றே நான் பதிவுசெய்திருக்கும் இந்நினைவுகளும் இருக்கும்.”

இந்நாவல் 2012 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை தொடங்கி, அதே வருடம் டிசம்பர் மாதம் 30 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை முடிகிறது.

முடிகிறது என்றும் சொல்ல முடியாது. வாழ்க்கை தொடரும். கதைகளும் முற்றுப்பெறாமல் தொடரும். ஆனால், அனந்தி தனது குறிப்புகளை ஒரு வருடத்தில் வாசகர்களுக்காக முடித்துக்கொள்கிறாள்.

அவள் மிகவும் புத்திசாலிப் பெண். எமக்கும் அப்படி ஒரு பிள்ளை இருக்க வேண்டுமே… என்று வாசகர்கள் மனதிற்குள் கொண்டாடக்கூடியவிதமாக அனந்தி என்ற பாத்திரம் வார்க்கப்பட்டுள்ளது.

அனந்தியின் இந்த நாட்குறிப்புகளின் ஊடாக அவளையும் அவளது குடும்பத்தையும் அவளது சுற்றுச்சூழலையும் தெரிந்துகொள்கின்றோம்.

இந்நாவலுக்கு ” பெர்லினும் தமிழ் இலக்கியத்துள் வந்தாச்சு ” என்ற தலைப்பில் சிறந்த அணியுரை வழங்கியுள்ள மூத்த விமர்சகர் வெங்கட் சாமிநாதன், அனந்தியின் கதையை வாசகர்கள் நாவலுக்குள் பிரவேசிக்கும் முன்னரே தெளிவாக பதிவுசெய்துள்ளார். அதனைப் படிக்காமல் உள்நுழையும் வாசகர்கள் மேலோட்டமாக ” இதென்ன வெறும் நாட்குறிப்புத்தானே ” என்று அலட்சியப்படுத்தவும் சாத்தியமுண்டு.

கருணகரமூர்த்தி புகலிடம் பெற்ற எம்மவர் சமூகத்தையும் அதேசமயம் தாயகத்தையும் நாம் வாழும் புகலிடத்தில் பூர்வீகமாகவே வேர்பிடித்து வாழும் வெள்ளை இனத்தவரையும் சித்திரித்து – தான் பெற்ற அனுபவங்கள், தனக்கு கிடைத்த வரலாற்று ரீதியிலான ஆதாரங்களையெல்லாம் திரட்டிக்கொண்டு அனந்தி என்ற பாத்திரத்தின் ஊடாகப் பதிவு செய்திருக்கிறார்.

மனிதநேயம் மனிதர்களிடம் மாத்திரம் காண்பிக்கப்படுவதல்ல , அந்தக்கருணையை ஜீவராசிகளிடமும் காண்பிக்கலாம் என்பதற்கு ஒரு சம்பவம். அமெரிக்காவில் ஒரு மாநிலத்தில் உணவு விடுதிக்குச்சாப்பிடச்செல்லும் தம்பதி, அங்கு மீன் தொட்டியில் உயிர்வாழும் 17 இறாத்தல் எடையுள்ள அரியவகை சிங்கிறாலை (Lobster) யாரேனும் வந்து அதனை உணவாக்குவதற்கு முன்னர், $360 வெள்ளிகள் கொடுத்து விலைக்கு வாங்கிச் சென்று மீளவும் அதனை கடலுக்கு விட்டுவிடுகிறார்கள். அது மேலும் 80 ஆண்டுகளாவது வாழும் என்பது அவர்கள் நம்பிக்கை.
அந்தத்தம்பதியரின் ஜீவகாருண்யத்தை பதிவுசெய்யும் அனந்தி – அவர்களில் அந்த கணவன் போன்ற கனவானை நிபந்தனையின்றியும் காதலிக்கத்தயார் எனச்சொல்கிறாள்.

அனந்தி பகுதி நேர வேலையாக பராமரிக்கச்செல்லும் முதிய பெண்ணுக்கு சமைத்துக் கொடுத்துவிட்டு வருகிறாள். ” ஏன் இவ்வளவு தாமதம்…?” என்று அம்மா கேட்கிறாள். தான் அந்த மூதாட்டிக்கு அன்று தயாரித்துக்கொடுத்த உணவு பற்றி சொல்கிறாள்.

“உடம்புளைஞ்ச கழுதை உப்பளம் போச்சுதாம்” என்கிறாள் அம்மா.
ஆனால் –  அப்பா, ” அடுத்த தடவை தானும் அனந்திக்கு துணையாக வந்து ஒத்தாசை புரிவதாகச் சொல்கிறார்.
அனந்தி எழுதுகிறாள்: அப்பா என்றாலும் அப்பாதான், பெண் கஷ்டப்பட்டால் எந்த அப்பாவுக்குத்தான் தாங்கும்.
இந்த வரிகளைப் படித்தபொழுது நான் என்னையும் அதில் தேடிக்கொண்டேன்.

பெண்பிள்ளைகள் தமக்கு வரும் கணவர் தந்தையை போல இருக்கவேண்டும் என்றும் ஆண் பிள்ளைகள் தமது தாயைப்போன்று மனைவி அமைய வேண்டும் என்றும் விரும்புவார்களாம் என்று எங்கள் சமூகத்தில் சொல்வார்கள்.

புராணத்தில் வரும் பிள்ளையார்கூட தனக்கு தாயைப்போன்ற ஒரு பெண் மனைவியாக வேண்டும் என்றுதானாம் குளத்தங்கரைகளிலும் அரச மரங்களின் கீழும் காத்திருக்கிறாராம். ஆனால், அவருக்கு இன்னமும் பெண் கிடைக்கவில்லை. ஆனால், பெண்கள் அதிகம் வணங்குவதும் பிள்ளையாரைத்தான்.
அனந்தியின் டயறியில் ஆங்காங்கே சில கவிதைகளும் வந்து பரவசமூட்டுகின்றன. சிந்திக்கத் தூண்டுகின்றன.

அனந்தியின் குடும்பம் முன்பிருந்த அடுக்ககத்தில் அயலவராக வாழ்ந்த பரணீதரன் என்பவரின் மனைவி ஒரு ஜெர்மனியப்பெண். அவளைச் சந்திக்கும் சில தமிழ் ஆடவர்கள் தங்களுடன் படுக்கையை பகிர்ந்துகொள்ள அழைக்கிறார்கள். அவர்கள் அவள் கணவன் பரணீதரனின் நண்பர்கள். ஆனால், ஜெர்மன் சமூகத்தில் நண்பர்கள் வட்டத்தில் அவளுக்கு அப்படி ஒரு அனுபவம் நேர்ந்ததில்லை. அனந்தி கேட்கிறாள்… பரணீதரனின்மனைவி தமிழச்சியாக இருந்திருந்தால் இப்படி தமிழ் ஆடவர்கள் அணுகியிருக்கத்தான் முடியுமா…? இந்தக்கேள்வி சாட்டையாக விழுகிறது.

ஒரு நூல் 10 மனிதர்களுடன் இருப்பதைவிடவும் சந்தோஷத்தையும் அனுபவங்களையும் கற்றுத்தரும் எனத்தொடங்குகிறது. ஏப்ரில் 23 ஆம் திகதி உலக புத்தக தினத்தன்று எழுதப்பட்ட குறிப்பு. அந்தத்தினத்தில் வில்லியம் சேக்ஷ்பியரினதும் Miguel de Cervantes என்ற ஸ்பானிய எழுத்தாளரினதும் நினைவு தினங்கள் வருவதை குறித்துச்சொல்கிறாள் அனந்தி. அன்று மலிவு விற்பனை புத்தகக்கடையில் புத்தகம் வாங்கிவிட்டு கவிதையும் எழுதுகிறாள்.
அனந்தியின் உயிரிலும் உணர்விலும் கலந்திருக்கிறார் கருணாகரமூர்த்தி.

இந்தப் புதினத்திற்கு கருணாகரமூர்த்தியின் டயறி என்று ஏன் அவர் தலைப்பிடவில்லை என்றும் வாசகர்கள் கேள்வி எழுப்பலாம். பதின்ம வயது அனந்தி தனது வயதையும் மீறிச் சிந்திக்கின்றமையால் அவ்வாறு கேள்வி எழுதல் சாத்தியம்தான்.

சமூகம் இப்படித்தான் இருக்கும் – ஆனால் சமூகம் எப்படி இருக்கவேண்டும் என்று சிந்திப்பவன் படைப்பாளி. கருணாகரமூர்த்தி அனந்தியின் ஊடாக சமூகத்திடம் கேள்விக்கணைகளை தொடுக்கின்றார்.

புகலிடத்தில் எம்மவர்கள் நாவன்மைப் போட்டிகள் உட்பட பல நிகழ்ச்சிகளில் தமது குழந்தைகளை குருவித்தலையில் பனங்காய்வைத்ததுபோன்று துன்புறுத்துவதை பார்த்திருப்போம். அப்படி ஒரு நிகழ்ச்சியில் மாற்றுச்சிந்தனையாளரான இலக்கிய விமர்சகர் உரையாற்ற அழைக்கப்படுகிறார்.

அவர் ” உங்கள் பிள்ளைகளுக்கு உங்கள் அன்பைத் தரலாம். ஆனால் உங்கள் கருத்துக்கள், நம்பிக்கைகள், எண்ணங்களை அல்ல. அவர்களிடம் தங்கள் சொந்த எண்ணங்களும் கருத்துக்களும் உள்ளன. ஏனெனில் இன்று கிடைக்கும் தகவல்களும் அறிவும் எங்களுக்கு கிடைத்ததைவிடவும் பரந்தவையும் வித்தியாசமானவையுமாகும். அந்தப்புரிதல் எல்லாப் பெற்றோருக்கும் அவசியம்” என்று உரை நிகழ்த்தி சபையிலிருக்கும் எம்மவர்களுக்கு கடுப்பேற்றுகிறார். அவர்கள் கூச்சலிட்டு அந்த சிந்தனையாளரை மேடையிலிருந்து இறக்கிவிடுகிறார்கள்.

அனந்தி இவ்வாறு எழுதுகிறாள்: ” ரஜனிகாந்த் செய்யும் சேஷ்டைகளை ஸ்டைலென ரசிக்கக்கூடிய எம்மக்களிடையே யோசித்துத்தான் யாரும் பேச வேண்டும், அவர்கள் புரிதல்கள் அப்படி. “செப்டெம்பர் 22 ஆம் திகதிய நாட்குறிப்புபுகலிடத்தமிழர்கள் பற்றிய ஒரு வெட்டு முகத்தோற்றத்தை காண்பிக்கிறது. அனந்தியின் நாட்குறிப்புகளில் இளையோர் பார்வையில் தமிழர்கள் என்ற இந்த அங்கம்தான் சற்று நீண்டது.

புகலிடத்தில் எம்மவரின் தனித்துவங்கள், அடையாளங்கள், யதார்த்தமாகவும் சுவாரஸ்யமாகவும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இரண்டாம் தலைமுறையினரின் பார்வையில் மூத்த தலைமுறையினர் எப்படி இருக்கின்றனர்…? என்பதை பிங்கலை என்ற மாணவி குறிப்பிட்டிருக்கும் 21 விடயங்களை அனந்தி எழுதுகிறாள்.

இன்றைய கணினி யுகத்தில் சர்வதேசப்பார்வையுடன் தான் பெற்றதையும் கற்றதையும் உணர்ந்ததையும்புரிந்துகொண்டதையும் அனந்தியின் ஊடாக காட்சிப்படுத்தியுள்ளார் கருணாகரமூர்த்தி.

அனந்தியின் டயறி தமிழ் நாவலிலக்கியத்தில் புதிய வரவு. கிடைத்தால் படித்துப்பாருங்கள். எம்மை நாம் சுயவிமர்சனம் செய்துகொள்ளவும் தூண்டும் !

–  முருக பூபதி

நூல் தகவல்:

நூல் :அனந்தியின் டயறி

பிரிவு:  நாவல்

ஆசிரியர் : பொ.கருணாகரமூர்த்தி

வெளியீடு : காலச்சுவடு பதிப்பகம்

வெளியான ஆண்டு :   2014

விலை: ₹ 225

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *