கவிஞனுக்குச் சொற்கள் கூட்டி கவிதை எழுதுதல் ஒரு தவம். சிறு சொல் பிசகினாலும் பொருள் மாறி, நடை மாறி அது கவிதை போல ஏதோவொன்றாக வந்து நிற்கும். சிறு மலரின் மகரந்தத்தில் இருந்து தேன் உறிஞ்சி வரும் தேனீக்கள் தங்கள் எச்சில் சேர்த்து இரைப்பையில் சேமித்துக் கொள்ளும். கூடு திரும்பியதும் இரைப்பையில் இருந்து தேனைக் கக்கி அடையில் சேமிக்கும். ஒருவகையில் கவிஞர்கள்கூட மேம்பட்ட ஹைப்ரிட் தேனீக்கள்தானே?. எது எப்படியோ இரண்டின் சுவையும் அலாதியானது. தேனீக்கள் பற்றிய அறிவியல் பூர்வ தர்க்கங்களை விட்டு நவீன இலக்கியத்தின் ஹைக்கூ கதவைத் தட்டுவோமேயானால் அங்கு ஒரு கவித்தேனீ ஃ வரைந்து கொண்டிருக்கும். அதனுள் நுழைந்து அதன் சொற்சுவையைப் பருக பருக தெவிட்டாத தெள்ளமுதம் நிச்சயம் கவிரசிகர்களின் மனங்களை உள்ளிழுத்துக் கொள்ளும்.

மரபுக்கவிதை, புதுக்கவிதை, நவீனக்கவிதைகளோடு இலக்கிய பரிணாமத்தில் ஹைக்கூ கவிதைகள் மனதிற்குப் புத்துணர்வு தரக்கூடியனவாக இருக்கின்றன. படிக்க எளிதாக மூன்றே வரிகளில் அமைந்திருந்தாலும் செரித்துக் கொள்ள இயலாத அதன் உட்கருத்துக்கள் சமயத்தில் உயிரை ஊசியால் குத்திச்செல்லும் தன்மை வாய்ந்தவை. மு.முருகேஷ், பிருந்தா சாரதி எனப் பல கவிஞர்கள் வழியில் கவிஞர் சிவநேசனும் ” ஃ வரைகிறது தேனீ ” கவிதை நூலின் வழி வாசக மனங்களைப் பக்கத்திற்குப் பக்கம் மடை மாற்றிக் கொண்டே இருக்கிறார். அவருக்குள் இருக்கும் திறமைகளை பறைசாற்றுவதாகவே இந்நூல் இருக்கும். ஏனெனில் வெறும் ஹைக்கூக்களோடு மட்டும் இல்லாமல் அவரே தன் கைப்படக் கவிதைகளுக்கேற்ற கோட்டோவியங்கள் வரைந்திருக்கிறார். ஒவ்வொன்றும் அடி மாறாத கவிதையைப் போலவே இருக்கும்.ஒவ்வொரு ஹைக்கூவும் பிசகு இல்லாத ஓவியங்கள் போலவே பேசும். என் மனம் நுகர்ந்து மயங்கிய சில கவிதைகளை இங்குப் பகிர்ந்து கொள்கிறேன்.

அடிபட்டு இறந்த எலிக்கு

வற்றிய வயிறு

வாய்நிறைய நெல்மணி

இதைப் படிக்கும் போது ஏதேதோ சம்பவங்கள் நினைவுக்கு வருவதைத் தடுக்க இயலாது. வயிற்றுப் பசிக்காக எத்தகைய தடைகளையும் தாண்டி இறுதியில் உயிரைவிடத்தூண்டும் இதுபோன்ற நிகழ்வுகள் சிலநேரங்களில் மனிதர்களுக்கும் பொருந்தும் அல்லவா?

உணர்வுகளைப் போலவே காட்சிகளையும் கவிதையில் வார்த்தல் அத்தனை எளிதல்ல. பொதுவாகப் பேருந்தில் பயணம் செய்யப் பிடிக்கும் அனைவருக்கும் முக்கிய குறிக்கோளாக இருப்பது ஜன்னலோர இருக்கை. அதற்காக எத்தனையோ அடிதடிகளை வரலாறு கண்டிருக்கும். ஆனால் மழை, வெயில் போன்ற இயற்கை காரணிகள் அந்த எண்ணத்தை வீணாக்கிவிடும். இங்குக் கொஞ்சம் வித்தியாசமான ஒருவர் நமக்கு ஜன்னலோரத்தில் இடம் பிடித்துத் தருகிறார்.

சன்னலில் நுழைந்து

ஓரத்து இருக்கையை

பிடித்துத் தருகிறது வெயில்

அடடா! என்ன சொற்கட்டு? காட்சி கண்முன்னே விரிகிறது அல்லவா?

சாதியையும் அரசியலையும் பேசாமல் கவிதைத் தொகுப்பு எப்படி? அதோ மேலே பாருங்கள். கொடி ஒன்று பறக்கிறதா? அது எந்த சாதியுடையது? அது கிடக்கிறது. அதை யாருடைய எச்சிலில் கோர்த்துத் தைத்தது தெரியுமா? இப்படியாக இக்கவிதை எதையும் நேரடியாகச் சொல்லாமல்; ஆனால் தொட்டதையெல்லாம் சுட்டெரித்துச் செல்லும்.

உயரே பறக்கிறது

எச்சில் நூல் கோர்த்து

தைத்த சாதிக்கொடி

த்தனை பிரம்மாண்டமான மாளிகைகள் கட்டினாலும் அதைக் கட்டியவர்கள் ஒருபோதும் அதனுள் உறங்கப்போவதில்லை. உருகி உருகி எத்தனை அதிபக்தியோடு கோவில் கட்டினாலும் கருவறைக்குள் சிலரைத் தவிர யாராலும் நுழைய முடிவதில்லை. யாரோ வாழ யாரோ உழைக்கிறார்கள். இதை இந்த ஹைக்கூ எத்தனை அழகாகச் சொல்கிறது,

கோபுரத்தின் நிழல்

சாய்கிறது

கட்டியவன் குடிசையில்

குறைந்தபட்சம் அவன் குடிசையை அந்த கோபுர நிழலாவது காக்கட்டுமே என்று மகிழ்ந்து கொள்ளலாம்.

கவிதைகள் கண்களுக்கும் மனதிற்கும் மட்டும் விருந்து தருவன அல்ல. சில நேரங்களில் கவிதைகளை வாசிக்கச் சொல்லிக் கேட்பது இன்பத்திலும் இன்பம். அதிலும் அதன் பொருள் உணர்வைத் தொடக்கூடியதாக இருந்துவிட்டால் வேறென்ன வேண்டும்? இந்த ஹைக்கூவைப்போல,

புடைத்த அரிசியில்

வண்டு

பசியில் பங்கு

காலமெல்லாம் வான் பார்த்தும் , மண் பார்த்தும் கிடக்கிறான் விவசாயி. வாழ்வைப் போலவே அவன் முதுகும் கேள்விக் குறியைப் போல வளைந்து கிடக்கிறது என்று உவமை சொல்வதுண்டு. ஆனால் இங்கு கவிஞர் விளைந்து முற்றிய நெற்பயிரோடு ஒப்பிடுகிறார் இவ்வாறு,

வளைந்தே இருக்கிறது

விளைந்த நெற்பயிரோடு

விவசாயியின் முதுகு

அம்மா சொல்வாள். எங்களுக்குப் பசிக்கும் போதெல்லாம் ஈரத் துணியை வயிற்றில் கட்டிக்கொள்வோம் என்று. அதன் அர்த்தம் புரியக் காலமானது. பசித்த வயிறு வெப்பம் உண்டாக்கும் என்பது புரிந்தவர்களுக்கு இக்கவிதையின் அருமை புரியும்.

குளிருக்கு இதம்

பசித்த வயிற்றின்

வெப்பம்

படிக்கும் காலத்தில் மட்டுமல்ல. இப்போதும் கூட பலருக்கும் புத்தகத்தை எடுத்து வைத்தால் அத்தனை சுகமாக உறக்கம் வரும். எந்த இடமானால் என்ன ? உட்கார்ந்த வண்ணம் உறங்கிப்போவது எத்தனை இதமானது? இந்த ஹைக்கூவில் சிறுமி ஒருத்தி உறங்கிவிட யார் புத்தகம் புரட்டுகிறார் என்று பாருங்கள்.

உறங்கிய சிறுமி

புத்தகம் புரட்டுகிறது

மின்விசிறி

சிலகவிதைகள் புலன்வழி ரசித்தல் தாண்டி மனதிற்குள் ஆழப் புதையும் வரை அதன் பொருளைத் திரும்பத் திரும்ப வாசித்து நுகரச்செய்யும். அத்தகைய கவிதைகள் மனதிற்குள் ஆறாத வடுபோல நிலைத்துவிடும். சிவநேசன் கவிதைகளில் பல அத்தகைய தன்மை வாய்ந்தவையாக இருக்கின்றன.

புத்தனுக்கு காது வந்தப்பின்

மெதுவாக கொத்தத்

தொடங்குகிறான் சிற்பி

இந்தக்கவிதையும் அந்த பிரிவில் அடங்கும் அல்லவா?

 

பாவாடை சட்டை தைப்பதற்கெனவே அம்மாக்களின் பல சேலைகளைத் தையல் இயந்திரம் கண்டிருக்கும். ஆனால் இங்கு ஒரு ஏழைப்பெண்ணுக்குத் தாவணி ஆசை வந்துவிட்டது. கிழிப்பதற்குப் புதிதாக ஒன்றும் இல்லை. மகளின் தாவணிக்காகவே ஏற்கனவே கிழிந்திருக்கிறது வறியவளின் சேலை.

மகளுக்கு தாவணி ஆசை

கிழிந்தே இருக்கிறது

அம்மாவின் சேலை

காய்ந்து உதிர்ந்த புல்லின் நுனியில் காரணமின்றி ஒரு பட்டாம்பூச்சி அமர்ந்திருக்கிறது. இக்காட்சியே அழகான கவிதைதான். ஆனால் கவிஞரின் பார்வையில் அந்த பட்டாம்பூச்சி ஒரு மலர் போலத் தோன்றியிருக்கிறது இவ்வாறு,

காய்ந்த புல்லின் நுனியில்

புதிய மலர்

வண்ணத்துப்பூச்சி

ஃ வரையும் தேனீக்கு இதுபோன்றக் கவிதை எழுதுதல் ஒரு பெரும்பாடல்லவே,

மூன்று புள்ளி

மின் இணைப்பானைச் செருகியதும்

ஃ சொல்கிறது ஸ்விட்ச்

பிராயத்தில் இருந்து எத்தனை வருடங்களாக ஸ்விட்ச் போட்டு விளக்கை ஏற்ற தெரிந்த நமக்கு இந்த ஸ்விட்சுகள் ஃ சொல்வதைக் கேட்கத்தான் பொறுமை இல்லை. இக்கவிதையைப் படித்து விட்டு வீட்டில் உள்ள எல்லா ஸ்விட்ச்களும் ஃ சொல்வதைக் கேட்டுப்பாருங்கள்.

வீணையிலிருந்து வழியும் தேனோடு அட்டைப்படம் மிக அழகாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. மனோஹரி அவர்களின் பின்னட்டைக் குறிப்பும், முன்னும் பின்னும் பக்ககுறிக்கென்றிருக்கும் சிறு அட்டைகளிலும் சில கவிதைகள் மேற்கோள் காட்டப்படுவது சிறப்பு. மொத்தத்தில் இந்த ஃ வரையும் தேனீயின் 140 ஹைக்கூ தெறிப்புகள் மனதைத் திசையெல்லாம் தெறிக்கச்செய்கின்றன.


நூல் பின்னட்டையில்

கவிஞர் ந.சிவநேசன் 140 ஹைக்கூக்கள் கொண்ட கவிதைத் தொகுப்பை மலர் தேடி சிறகடிக்கும் தேனீ துளித் துளியாய் சேகரிக்கும் தேனைப் போல சிறப்பான ஓவியங்களோடு கோர்த்திருக்கின்றார்.

ஹைக்கூவின் இலக்கணம் மீறப்படாமல் அத்தனையும் ஒன்று போலவே நுட்ப வெளிக்கு நம்மை அழைத்துச் செல்கின்றன.

அன்றாட வாழ்வின் இரசனை சார்ந்த பல்வேறு பரிமாணங்கள் இவரது பார்வையில் ஆழமும் சுவையுமாய் மூன்றே வரிகளில் பூத்துக் குலுங்குகின்றன.

இயற்கை குறித்த அழகியலையும் தவறவிடக் கூடாத மனித வாழ்வின் காட்சிப் படிமங்களையும் பேசியிருக்கும் இந்த ஹைக்கூக்கள் வாழ்வியலின் சிறுசிறு அபூர்வத் தருணங்களை நோக்கி நம்மை ஈர்க்கின்றன.

-மனோஹரி 

நூல் தகவல்:

நூல் :  ஃ வரைகிறது தேனீ  - (140 ஹைக்கூ தெறிப்புகள்)

ஆசிரியர் :  ந.சிவநேசன்

வகை : கவிதைகள் - ஹைக்கூ

வெளியீடு :  கடல் பதிப்பகம்

வெளியான ஆண்டு :   2022

பக்கங்கள் :   96

விலை : ₹  100

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *