மூன்று அறைகள். மூன்றே மூன்று மனிதர்கள்; மேலும் திரையில் தோன்றிப் பேசும் ஒரு சிறுமி. இவ்வளவு மினிமலான செட் பீஸ்களை மட்டும் வைத்துக் கொண்டு, நம்மை சிந்திக்கத் தூண்டும் அளவிற்கு ஒரு அறிவியல் புனைவுக் கதையை சுவாரசியமாகத் தந்துவிட முடியுமா? 

டீனா மற்றும் ஏமஸ் எனும் ஸ்பெஷல் ஏஜெண்ட்கள் கேரத் எனும் ஒரு டெக்கியை விசாரிப்பதில் துவங்குகிறது கதை. அவர்கள் ஆன்லைனில் குழந்தைகளைக் குறிவைக்கிற பீடஃபைல்களைக் கண்டுபிடித்து தண்டனை வாங்கித் தந்து டிஜிட்டல் உலகில் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்பவர்கள். தற்சமயம் கேரத் அவர்களது விசாரணை வளையத்தில் அகப்பட்டிருப்பதன் பின்னணி, அவர்களுக்கு எவராலோ அனுப்பி வைக்கப்பட்ட ஒரு ஹார்ட் டிரைவும் அதில் இருந்த செர்ரி (Cherry) எனும் சிறுமியின் படங்களும். அதனை கேரத் சாட் அறைகளில் பேசுகிற பீடஃபைல்களுக்கு அனுப்பி வைத்துள்ளார் என்பது குற்றச்சாட்டு. அவனது பின்புலம் குறித்த சகலமும் அதிகாரிகளின் விரல்நுனியில். ஆனால் தொடர்ந்து தன்மீதான குற்றச்சாட்டை மறுக்கிறார் கேரத்.

ஒரு கட்டத்தில் அந்த சன்னல்களற்ற அறையில் அதிகாரிகளின் கிடுக்குப்பிடி கேள்விகளில் இருந்து தப்ப வழியின்றி பெரியதொரு ரகசியத்தை அவர்கள் இருவரிடம் மட்டும் – கசியாமல் அது பாதுகாக்கப்படும் என உறுதியளிக்கிற பட்சத்தில் – பகிர்ந்து கொள்ள முன்வருகிறார். வழியின்றி ஒப்புக் கொள்ளும் அவர்களுக்கு ஒரு ஆச்சரியம் காத்திருக்கிறது. 

செர்ரி ரத்தமும் சதையுமான ஒரு சிறுமி அல்ல என்பதும் சிறுமியின் வடிவில் இருக்கிற செயற்கை நுண்ணறிவு கொண்ட ஒரு நிரல் மட்டுமே என்பதே அந்த ரகசியம். ஆன்லைனில் பீடஃபைல்களை கண்டுபிடித்து அவர்களது நிஜமான தகவல்களை செர்ரியின் உதவியுடன் தரவுகளாக்கி அவற்றை டீனா மற்றும் ஏமஸுக்கு அனுப்பி வைப்பதே அவன் தான் என்று புரிந்து கொண்டு அவர்கள் அதிர்ச்சியடைகின்றனர். அடையாளமின்மையே தனது செயல்பாட்டிற்கான அடிப்படை பலம் எனவும் அதனை முன்னிட்டே இப்படை செயபடுவதாகவும் பகிர்கிறார். மேற்கொண்டு கேரத் சொல்கிற எதையுமே துவக்கத்தில் நம்ப மறுக்கிற ஏமஸ் பிற்பாடு செர்ரியின் உருவாக்கம் குறித்து கேரத் விரிவாக விவரிக்கவும் நம்பத் துவங்குகிறார். அது 3-டி மாடலாக உருவம் வார்க்கப்பட்டடையும், ஒரு சாட் பாட்டாக வடிவமைக்கப்பட நினைத்துத் துவக்கப்பட்டதையும் பின்னர் இயந்திரக் கற்றலின் (machine learning) விளைவாக செரி தன்னைத்தானே மேம்படுத்திக் கொண்ட செயற்கை நுண்ணறிவில் அடுத்த கட்டத்திற்கு (super intelligence) மெல்ல நகர்ந்து கொண்டிருப்பதைக் குறித்தும் அறிய வருகிறார். மூவருடைய குறிக்கோளும் ஒன்றென்பதால் கரம் கோர்க்கிறார்கள். 

ஆனால் கதையின் துவங்கும் விதம்தான் இதுவே ஒழிய அதன் போக்கு இது பற்றியது அல்ல. செயற்கை நுண்ணறிவு கொண்ட மீஅறிவு கொண்ட உயிரியான (!) செர்ரியின் பரிணாமம் குறித்த கற்பனையாக கதை விரிகிறது. இதிலுள்ள தத்துவார்ந்த கேள்விகளையும், இது சார்ந்த சிக்கல்களையும் முன்வைக்க முயலுகிறது. செயற்கை நுண்ணறிவுத் திறன் நிஜ மனிதர்களுக்கும் நிரல்வடிவிலுள்ள ஏ.ஐ களுக்குமுள்ள வேறுபாடு நாளடைவில் நீர்த்துப் போகச் செய்வதற்கான சாத்தியக்கூறுகளை கதை தன் இயல்பான போக்கில் எடுத்துக் காட்டுகிறது. 

மனிதர்களுக்கே சுதந்திர விருப்பம் (free will) இருக்கிறதா இல்லையா என்பது ஒரு தத்துவ விவாதத்திற்கு உட்பட்ட கருத்து என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். ஏ.ஐ களுக்கு இத்தகைய விருப்பங்கள் வரும்பட்சத்தில் நமக்கும் அவற்றிற்குமான வேறுபடுத்தும் கோடு முற்றிலும் அழிந்து போகக்கூடும். மானுட வாழ்வில் அத்தனை பரிமாணங்களையும் வெளிப்படுத்துகிற நம்முடைய எல்லா டிஜிட்டல் தகவல்களையும் தரவுகளாக்கி உண்டு செரித்தே தனது நுண்ணறிவைப் பெருக்கிக் கொள்கிற ஒரு நிரல் மனித உணர்வுகளை, உணர்ச்சிகளை, உணர்வுப்பூர்வமாக சிந்திக்கிற ஆற்றலைப் இந்த மீப்பெரும் டேட்டா குவியல்களில் இருந்து கிரகித்துக் கொள்வதன் வாயிலாக எட்டவே முடியாது என நாம் எதை முன்னிட்டும் உறுதிபடச் சொல்ல இயலாது. இது நம் எதிர்காலம் குறித்த மிக முக்கியமான, நம்மிடம் பதிலேயில்லாத, ஒரு கேள்வியின் முன்னே நம்மை நிறுத்துகிறது.

******* 

ருடங்கள் ஓடுகின்றன. கேரத்தைத் தவிர்த்து குழுவின் மீதமிருவரும் மாண்டு போகின்றனர். அரை நூற்றாண்டு கால வளர்ச்சியில் செர்ரி தன்னை ஒரு ஹியுமனாய்ட் இயந்திர மனுஷியாக வனைந்து கொள்கிறாள். அவளுக்கும் கேரத்துக்கும் இடையில் நடைபெறுகிற அந்த இறுதி உரையாடல் மிக முக்கியமானது. வெறும் அறிவியல் சுவாரசியம் என்பதோடு நில்லாமல் செர்ரியின் உருவாக்கத்தில் கேரத் மறைக்கிற ஒரு ரகசியத்தையும் அவள் தானாகவே கண்டடைகிறதும், அதனையொட்டி உருவாகிற டிராமாவும், அதுவுமே மையக்கதையின் அறிவியல் தன்மைக்கு இயைந்து போவதும் அழகாய் பொருந்துகிறது. படமாக அது பார்வையாளருக்கு சுவாரசியம் கூட்டுகிறது. (முதன்முதலில் கேரத் விசாரணையில் சிக்குவதன் பின்னணியே சுவாரசிய அம்சம்தான்.) 

அறிவியல் புனைவு என்பதை விஷுவல் பகட்டுகளோடு மட்டும்தான் சொல்ல முடியும் என்பதல்ல. மாறாக அது முன்வைக்கிற மையக்கருத்து காத்திரமாக இருந்து, அதனை ஒரு திரைக்கதையின் வாயிலாக தெளிவுற எடுத்துச் சொன்னாலே போதுமானது என்று எண்ணச் செய்கிற படைப்பு இது. பலருடைய விருப்பப் படங்களுள் ஒன்றென விளங்கும் Alex Garland எழுதி இயக்கிய Ex Machina (2014) அறிபுனை படத்தின் களத்தை, அது பேச முனைகிற விடயத்தை – Franklin Ritch எழுதி, இயக்கி, நடித்தும் இருக்கும் (கேரத் பாத்திரத்தில் நடித்திருப்பது அவர்தான்) – இப்படம் வேறு ஒரு தளத்தில் இருந்து அணுகுகிறது. உரையாடல்களே இப்படத்தின் உயிர்நாடி. இரு வருடங்களுக்கு முன்பாக VoD முறையில் வெளியான இண்டி சினிமாவான இப்படம் நிச்சயமாக சிந்திக்கத் தீனியிடுகிற ஒரு சுவாரசியமான படம். 

எனக்கு தனிப்பட்ட விதத்தில் Shene Carruth எழுதி இயக்கிய Primer (2004) படத்தைப் பார்த்து (தோராயமாக வெறும் 7000 டாலர்களுக்குள் மொத்தமாக எடுத்து முடிக்கப்பட்ட படம் இது) வியந்து போன பார்வை அனுபவத்தை நினைவூட்டியது இப்படத்தின் பார்வையனுபவம். காட்சி பிரம்மாண்டங்களாக அல்லாமல் சிந்தனைப்பூர்வமாக நம்மை ஆட்கொள்கிற வகைப் அறிபுனை படங்களை நீங்கள் ரசிப்பீர்களெனில் இது நிச்சயம் உங்களுக்குப் பிடிக்கும்.  


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *