(தங்கலான் திரைப்படத்தை முன்வைத்து)


பொழுதுபோக்கை முன்னிறுத்துகிற வணிகத் திரைப்படங்கள் ஒரு வகை. இதில் கேளிக்கையே பிரதானம். முழுக்க முழுக்க கலையை கைக்கொள்கிற வகைப் படங்கள் இன்னொரு வகை. இவ்வகைப் படங்கள் பார்வையாளர்களின் விருப்பு வெறுப்புகளை மனதில் வைத்து உருவாக்கப்படாதவை. சொல்ல விரும்புவதை, சொல்ல விரும்புகிற விதத்தில்/வடிவத்தில் சொல்பவை. இவ்வகைப் படங்களுக்கான பார்வையாளர்கள் எப்போதும் குறைவானவர்களே. இந்த இரண்டிற்கும் இடையில் இன்னொரு வகை உண்டு. அது வணிக எல்லைக்குள் நின்று கொண்டு, கலைப்பூர்வத்தையும் அதில் கலப்பவை. இவற்றை Middle Cinema என்று சொல்லலாம். தங்கலான் வணிக சினிமா மற்றும் மிடில் சினிமா என இரண்டின் சாயல்களையும் எடுத்துக் கொள்கிறது. 

கதை முன்வைக்கிற நேரடி மையம் ‘தேடல்’. அது தங்கலான் தலைமையில் வட ஆற்காடு மாவட்டத்தின் வெப்பூரின் பண்ணை அடிமைகளின் துணைகொண்டு ஆங்கில துரை கிளமெண்ட் குழுவினர் தேடுகிற தங்கம். இது ஒரு புறம் இருக்க அசரீரிகளால் அலைக்கழிக்கப்படுகிற, நாகர் குலத்தவளான ஆரத்தி எனும் சூனியக்காரியை (அப்படித்தான் தங்கலான் நம்புகிறான்) முன்வைத்து அவனைச் சுற்றி நிகழுகிற/நிகழ்த்தப்படுகிற, அவனாலேயே விளங்கிக் கொள்ள இயலாத குழப்பங்களுக்கு விடை தேடி முனைகிற தங்கலானின் தனிப்பட்ட தேடல். 

இந்த இரண்டு வகையான தேடல் கதைகளும் நமக்கு மாறி மாறி சொல்லப்படுகிறது. படம் பார்த்த பலரும் தங்களது பார்வையை எழுதி வருகின்றனர். கணிசமானோர் படம் புரியவில்லை என்று பகிர்வதை வாசிக்க முடிகிறது. நமது கதை கேட்கிற மரபு முழுமையான/ திருப்தியளிக்கிற முடிவை நோக்கி நகர்வது. மேலும் கிளைக்கதைகள் என பலவாறாக பிரிந்தாலும், முழுமையான கதையின் ஓர்மையைப் பிடித்தே பின்தொடர்ந்து பழக்கப்பட்டவர்கள் நாம். வாசகராகவும்/ பார்வையாளர்களாகவும் பெரும்பான்மையோர் நம்மில் இதையே எதிர்பார்க்கிறோம். சிதறடிக்கப்பட்ட கதைசொல்லல் நமக்கு கொஞ்சம் அந்நியமானது. தங்கலானின் இரண்டு விதமான தேடல்களையும் ஒரு புள்ளியில் பின்னிப் பிணைந்து ஒற்றை முடிவை நோக்கி நகர வேண்டுமென்ற நமக்குள் இருக்கிற கதை கேட்பவரின் எதிர்பார்ப்பை படத்தின் கதையாடல் முழுமையாக திருப்தியுறச் செய்யாததையே தங்களுக்கு படம் பிடிக்கவில்லை என்று சொல்வதாக நினைக்கிறேன். 

மேலும் இக்கதையின் மாய யதார்த்தக் கூறுமுறை நமக்கு முற்றிலும் அந்நியமானது. மாய யதார்த்த கதை சொல்லலின் பெரிய வசதி அதன் நெகிழ்ச்சித்தன்மை. பார்வையாளர்கள் கதையை அர்த்தப்படுத்திக் கொள்வதற்கு அது பல வாய்ப்புகளை வழங்குகிறது. இது அதன் பார்வை அனுபவத்தை முற்றிலுமாக தனிமனித அனுபவமாக (subjective experience) மாற்றும் திறனுடையது. கதையை அணுகுவதற்கு பல சாத்தியங்களை அது வழங்குவதால், நாம் எவ்விதமாக அர்த்தப்படுத்திக் கொள்கிறோமோ அதைப் பொருத்து அது நல்ல/மோசமான பார்வை அனுபவமாக இருக்கும். இதுவே இவ்வகை கதைசொல்லலின் பலமும் பலவீனமும். 

குறியீடுகள் மூலமாக கதையை வளர்ப்பது, இயல்பிலேயே குறியீடுகளுக்கான அர்த்தமாக ஒருவர் எதனை எடுத்துக் கொள்கிறாரோ அதுவே ‘கதையின் அர்த்தமாக’ ஆகிப்போகும் சாத்தியத்தை உருவாக்குகிறது. அந்த அர்த்தப்படுத்தலுக்கு ஒரு தர்க்கரீதியான நியாயமும், தொடர்ச்சியும் இருக்கின்றபட்சத்தில் அந்த கதையின் பதிப்பு (that version of the story) அவருடைய கதையாக ஆகும். இப்படி ஒவ்வொருவருக்கும் ஒரே கதை பல்வேறு கதைப்பிரதிகளாகும் சுவாரசியமான வாய்ப்புண்டு. 

தொன்மக் கதைகளும், வரலாற்றுத் தரவுகளும், மாய யதார்த்தங்களும் பிசைந்து புனையப்பட்டிருக்கும் தங்கலான் கதையின் ‘எனது பிரதி’ இதுதான். 

நிலமும், வளங்களும் இயற்கையின் மூலக் கொடைகளாக இருப்பினும் அவை வெறும் மூலாதாரங்கள் மட்டுமே. அதில் மனித உழைப்பென்பது கலக்காதை வரை அது வெறுமனே கல்லும் மண்ணும். இவ்வளங்களை பயன்பாட்டிற்கு ஏற்ற விதத்தில் உருவாக இதனோடு சேர்கிற மனித வளமே (அதாவது அதன் உழைப்பே) அடித்தளம். எல்லோரும் பங்களிக்க வேண்டிய இந்த மனித உழைப்பை, இந்திய சமூகத்தின் வர்ணக் கோட்பாட்டின் திணிப்பான படிநிலை உருவாக்கம், ஒட்டு மொத்தமாக குறிப்பிட்ட பகுதியினருக்கு மட்டுமேயானது என்று முழுச்சுமையையும் அவர்களின் மீதே சுமத்துகிறது. 

நிலத்தின் ஆதிக்குடிகளான அவர்களது நிலங்களை இதனை முன்வைத்தே அபகரித்துக் கொண்டு அவர்களது கரங்களில் ‘உழைக்கிற கடமையை’ மட்டும் திணிக்கிறது. இதில் உழைப்பென்பது கூட ஒட்டு மொத்த சமூகக் கடமையில் அவர்களது தரப்புப் பங்களிப்பாகவே இருப்பதனால், அதற்கான கூலி என்பதை உரிமையாகக் கோருவதையும் அது தந்திரமாக மறுக்கிறது. அவர்களிடமிருந்து உழைப்பை மட்டும் உறிஞ்சிக் கொண்டு அதனால் விளைந்த பலனை அவர்கள் அனுபவிப்பதற்கான நியாயமான உரிமை கூட மறுக்கப்படுகிறது. 

ஆரத்தி ‘என் கதையில்’ இந்த ஆதிக்குடியினரின் வளங்களின் ‘காப்பாள்’ மட்டுமல்ல அவள் அவர்களின் மூதாய். அதோடு மட்டுமல்லாமல் அவள் அக்குடியின் ஒட்டுமொத்த வரலாற்று இருப்பின் பிரதிநிதி. துவக்க காட்சிகளில் தங்கலான் தனது மகள்களுக்குச் சொல்கிற கதைகளில் அவனது மூத்தோன் காடையன் சந்திக்கிற ஆரத்தியின் இரத்தம் நிலத்தை நனைத்து பின்புதான் நிலம் தனக்குள் ஒளித்து வைத்திருந்த பெரும் வளத்தை எல்லோர் கண்களுக்கும் புலப்படுத்துகிறது. ‘தங்கம்’ இக்குடிகளின் அயராத உழைப்பால் விளைந்த பலன்களென்பதற்கான குறியீடு.  சுருங்கச் சொன்னால் உழைப்புச் சுரண்டலால் அவளின் குடிகள் ஒடுக்கப்பட்டு வீழ்த்தப்பட்ட கதையே ஆரத்தியின் கதையாக தங்கலான் வழியாக நமக்குச் சொல்லப்படுகிறது. உழைப்பைப் பங்களித்து வளங்களின் மதிப்பைக் கூட்டியவர்கள் ஒரு குழுவினராய் இருக்க அதன் பலன்களை மட்டும் ஆண்டு அனுபவிப்பவர்கள் வேறுவேறு குழுவினராய் இருக்கின்றனர். அடக்கியாள்பவர்கள் காலத்திற்கேற்றார்ப் போல ஆண்டைகளாகவும் ஆங்கிலேயத் துரைமாராகவும் இருக்க அடக்கப்படுபவரின் நிலை வரலாற்றின் காலக் கோடெங்கிலும் கொஞ்சமும் மாறாமல் அப்படியே இருக்கிறது. 

திரைக்கதையில் மாய யதார்த்த அம்சத்தின் பயன்பாடு கொஞ்சம் மிகையாகப் போய்விட்டதாகத் தோன்றியது. இருந்தபோதிலும் இவ்வித கதைசொல்லும் உத்தி தமிழுக்கு ரொம்பவே புதியது. இதற்கு முன்னர் ‘குதிரைவால் (2021)’ திரைப்படத்தில் இதுபோன்ற ஒரு அணுகுமுறை கையாளப்பட்டு இருப்பினும், அது ஒரு தனிமனிதனின் மன உலகத்தை பிரதிபலிப்பதற்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டு இருந்தது. இங்கோ அது ஒரு சமூகத்தின் வலியைப் பேச முற்படுகிறது. மேலும் இது வரலாற்றுப் பூர்வமாகவும் மிக அதிகமான விசயங்களை கதையோட்டத்திற்குள் தொட்டிருப்பதால், கொஞ்சமாக வாங்கி வருவோம் எனும் எண்ணத்தில் கடைவீதிக்கு எடுத்துச் செல்லப்பட்ட துணிப்பை, மிக அதிகமாக வாங்கிவிட்டதால் பிதுங்கிக் கிழியும் அளவிற்கு எடை தாளாமல் தோய்ந்து விடுவது போல திரைக்கதை முன்வைக்கிற எல்லாவற்றையும் பார்வையாளரின் மனதில் பதித்துக் கொள்ள திணறும் விதத்தில் இருக்கிறது. 

நடிகர்களின் பங்களிப்பு நீண்ட காலம் நினைவுகூரத்தக்க ஒரு இறுக்கமான டிராமாவாக இப்படைப்பை மாற்றுவதில் பெரும்பங்கு வகிக்கிறது. முதன்மைப் பாத்திரம் ஏற்றிருக்கும் விக்ரம் அவர்களின் பாத்திரம் கதையின் போக்கில் பெருகிப் பெரிதாகிவிடுவதால், அவருடையதற்கு  அடுத்தபடியான பார்வதி அவர்களின் பாத்திரத்தைத் தவிர்த்து ஏனைய பாத்திரங்கள் சுருங்கிப் போய்விட்டது போன்ற உணர்வைத் தந்து விடுகிறது. 

வணிகத் திரைப்பட எல்லைக்குள் இருந்து கொண்டு இவ்வளவு பெரிய பொருட்செலவில், ஒரு படத்தை இயக்குவதற்கான துணிவு பா.ரஞ்சித் அவர்களுக்கு இருக்கிற அதே அளவிற்கு, படத்தின் தயாரிப்பாளரான ஞானவேல்ராஜா அவர்களுக்கும் இருந்திருப்பதை பாராட்டியே ஆகவேண்டும். ஏனேனில் தொழில்முறை சினிமாவைப் பொருத்தவரை இது மிகப் பெரிய அகலக்கால். 

நவீன நாடகங்களைப் பார்க்கிற பார்வை அனுபவத்திற்கு நிகரானதொரு திரையனுபவத்தை பெரிய திரையில் தங்கலான் நிகழ்த்திக் காட்டியிருப்பது புதிதாய் இருந்தது. படம் எல்லாத் தரப்பினருக்குமானதல்ல என்பது நிச்சயம் படத்தின் இறுதி வடிவத்தைப் பார்க்கிற கலைஞர்களுக்கே தெரிந்திருக்கும். இருப்பினும் இதில் புழங்கியிருக்கிற பெரும் பொருட்செலவு, அவர்களை அது குறித்து வெளிப்படையாகப் பேசிட அனுமதித்திருக்காது என்பதையும் விளங்கிக் கொள்ள முடிகிறது. 

திரைப்படத்தில் நிறைவளிக்கக் கூடிய முடிவுகளையும், முழுமை எய்திய உணர்வைத் தருகிற கதைகளையும் விரும்புகிற ரசிகர்களுக்கு ஏமாற்றைத்தையும், கதை தரத்தக்க நிறைவைத் தாண்டி அது தருகிற பார்வை அனுபவத்திற்காகவும் படம் பார்க்க விரும்புகிற தரப்பு ரசிகர்களுக்கு ஏமாற்றம் தராத ஒரு அனுபவமாகவும் இப்படம் இருக்கும். இந்த இரண்டு தரப்பில் உசத்தி தாழ்ந்தது என்று எதுவுமில்லை. ஒரு பார்வையாளராக நம் தரப்பு எதுவென்று ஒவ்வொருவரும் புரிந்து கொண்டால் அதுவே போதுமானது. சொல்லவந்த கதை திரைக்கதையாக கலைமுழுமையை ஏய்த முடியாமற் போயிருப்பினும், தங்கலான் ஒரு மெச்சத்தக்க முயற்சி. 


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *