மனிதன் தோன்றிய காலத்தில் இருந்தே கதைகள் இருக்கின்றன. கதைகளின் வழியே வாழ கற்றுக் கொண்டவன் மனிதன்.
கதை சொல்வதும், கதை கேட்பதும் எல்லா தரப்பு மக்களிடையேயும் வாய்மொழி மரபாக இருந்து வந்திருக்கிறது என்பதை நாம் அறிவோம்.
நாகரிகம் தோன்றுவதற்கு முன்பே மக்கள் இன குழுக்களாக இயங்கிய போது ஓய்வு நேரங்களில் சக மனிதர்களிடம் தொடர்பு கொள்வதற்கும் குடும்ப உறவினர்களுடன் பொழுதைக் கழிக்கவும் கதை கூறும் மரபைக் கொண்டிருந்தார்கள் என்பதை தெரிந்து கொள்கையில்….. கதைகளின் வலிமையை நாம் உணர முடிகிறது. கதைகளின் வழியாக ஒழுக்கநெறிகள் அறிவுறுத்தப்பட்டிருக்கின்றன. கதைகள் அறத்தின் வலிமையை எடுத்தியம்புகின்றன என்றால் மறுப்பதற்கில்லை.
19ம் நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்து தமிழ் இலக்கியத்தின் பரப்பிலும் வடிவத்திலும் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு வந்துள்ளதை சிறுகதையின் வளர்ச்சி பற்றி படிக்கையில் நாம் தெரிந்து கொள்கிறோம். அச்சுப்பொறியின் பயன்பாட்டினாலும் ஆங்கில மொழியின் செல்வாக்கினாலும் தமிழ் சிறுகதை சூழலில் ஒரு பெரும் மாற்றம் ஏற்பட்டது. அதன் பிறகு தான் வாய்மொழியாக சொல்லி வந்த பெரும்பாலைய கதைகள் நூல் வடிவில் அச்சு பெற்று வெளியிடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
வ வே சுவாமிநாதன் அவர்களை சிறுகதை உலகின் முன்னோடி என்று சொல்வார்கள். அவரின் “குளத்தங்கரை அரசமரம்” ஒரு பெரிய விருட்சத்தின் முதல் விதை என அறியப்படுகிறோம். அதுவும் தாகூரின் Ghater Katha கதையின் தழுவலில் எழுதப்பட்டது என்பது செய்தி. எழுதிய சின்ன சங்கரன் கதை தான் முதல் சிறுகதை என்றும் கூற்றிருக்கிறது. அதைத் தொடர்ந்து பாரதி, தாகூரின் 11 சிறுகதைகளை மொழிபெயர்த்தார் என்பது சிறுகதை பற்றிய தேடலில் அடுத்தடுத்து நாம் தெரிந்து கொள்ளும் சுவாரஷ்யம்.
அதன் பிறகு 1930 களில் மணிக்கொடி கால கட்டத்தில் சொ.விருத்தாச்சலம் என்ற இயற்பெயர் கொண்ட புதுமைப்பித்தன் அவர்களின் நுழைவு சிறுகதை உலகத்தில் முக்கியமான திருப்பமாக இருப்பதை பார்க்கிறோம். சிறுகதையை புதுமைப்பித்தனுக்கு முன் புதுமைப்பித்தனுக்கு பின் என்று கூட வகைப்படுத்தலாம். ஆண்டன் செக்காவ் ரஷ்யாவின் சிறுகதை மன்னன் என்றால் தமிழகத்தின் சிறுகதை மன்னன் புதுமைப்பித்தன் என்பது தகராறு வந்தாலும் தகும்.
கேலியும் கிண்டலும் நையாண்டியும் சட்டையர்த்தனமும் கலந்த சமூக சாடல் இவரைத் தமிழ் சிறுகதை உலகத்தில் உச்சாணியில் அமர வைத்தது.
சிறுகதை செல்வர் என்றும் தமிழ்நாட்டின் மாப்பஸான் என்றும் போற்றப்பட்டார்.
சிறுகதை வடிவத்தின் இன்றைய வடிவ மாற்றத்துக்கு அன்றே முதல் புள்ளி இட்டவர் புதுமைப்பித்தன். ஆனால் அதே நேரம் பிரெஞ்சு எழுத்தாளர் மாப்பஸான் படைப்புகளின் தழுவல்களும் புதுமைப்பித்தனின் படைப்புகளில் இருக்கின்றன என்று அவரது சம காலத்து எழுத்தாளர்களான பெ. கோ. சுந்தரராஜன் மற்றும் சோ. சிவபாதசுந்தரம் குற்றம் சாட்டியுள்ளனர். இலக்கிய ஆய்வாளர் காரை கிருஷ்ணமூர்த்தியும் பின்னர் இதே கருத்தினைக் கூறினார். புதுமைப்பித்தனின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய தொ. மு. சிதம்பர ரகுநாதன் “சமாதி”, “நொண்டி”, “பயம்”, “கொலைகாரன் கதை”, “நல்ல வேலைக்காரன்”, “அந்த முட்டாள் வேணு” ஆகிய கதைகள் மாப்பஸான் கதைகளின் தழுவல்கள் என குறிப்பிட்டுள்ளதாக புதுமைப்பித்தனின் விக்கிப்பீடியா வெளிப்படுத்துகிறது.
எப்படி இருப்பினும்., புதுமைப்பித்தன் சிறுகதை என்ற களத்தை மிக தெளிவாக எடுத்துக்கொண்டு விளையாடி பார்த்திருக்கிறார் என்பது உண்மை. 42 வயது வரை தான் வாழ்ந்திருக்கிறார். 400 வருடங்கள் சிறுகதை சார்ந்து செய்ய வேண்டிய வேலையை 40 வருடத்தில் செய்து விட்டு சென்ற புதுமைப்பித்தனை காலம் இன்னும் கொஞ்சம் நாள் வைத்திருக்க வேண்டும் என்று தான் எண்ண வைக்கிறது. ஒவ்வொரு கதையின் வழியாகவும் இந்த சமூகத்தின் நொண்டிச்சாக்குகளை, சமூக கசடுகளை, அறியாமையை, இயலாமையை, இன்மையை, உண்மையை போட்டு தாக்கிக் கொண்டே செல்வதில் இன்றும் புதுமைப்பித்தன் பிரம்மாண்டமாய் உயர்ந்து நிற்பதை ஆச்சரியத்தோடு காண்கிறோம்.
சொல்லாடல்கள் நச் நச்சென்று வந்தமர்வதை புதுமைப்பித்தன் மிகு நேர்த்தியாய் கதைக்குள் வரிசைப்படுத்துகிறார். படிக்க படிக்க உற்சாக கொம்பில் அமர்ந்து விடுகிறோம் நாம். ஒவ்வொரு கதைகளிலும் அந்தந்த கால கட்ட சமூக வாழ்வியல் சூழலை வெகு அழகாக, தேவையாக, காரண காரியமாக .பொருத்தி பார்க்கும் பக்குவத்தை அந்த கால கட்டத்திலேயே எப்படி பெற்றார் என்பது ஆச்சரியம். அதனால் தான் அவர் புதுமைப்பித்தன். அப்போது புதிய சொல்லாடல்களாக இருப்பது இப்போதும் புதிய சொல்லாடல்களாகவே இருப்பதுதான் புதுமைப்பித்தன் டச். நெல்லை மொழியில் ஒவ்வொரு சொல்லும் கொள்ளை கொள்ளும்.
புதுமைப்பித்தனின் மாஸ்டர் பீஸ் “கடவுளும் கந்தசாமியும்” கதையில் கடவுளின் வருகை மிக சாதாரணமாக நிகழ்கிறது. வறுமையில் வாடும் பத்திரிக்கைகாரனும் வைத்தியனுமான கந்தசாமியை காண உதவ கடவுள் வருவது போன்ற கற்பனை அந்த கால கட்டத்தில் கற்பனைக்கு எட்டாதது. அதுவும் வந்த கடவுளை திருவல்லிக்கேணி போகும் வரை போன பின் என வார்த்தைக்கு வார்த்தை வாரி எடுப்பதில் ஒரு அஃமார்க் சமூக எழுத்தாளன் விடாப்பிடியாக போட்டு தாக்குவது சிரிப்பு மூட்டி சிந்தனை மூட்டுகிறது.
கடவுளுக்கே உண்டான தோரணையில் காட்சி அளித்து பக்தா என்று ஓரிடத்தில் கடவுள் தன் இயல்பை காட்டுவார்.
‘இந்தா பிடி வரத்தை’ போன்ற வித்தையெல்லாம் இங்க வேண்டாம் கடவுளே. எதோ பூலோகம் பார்க்க வந்தீர். என் வீட்டில் விருந்தாளியாய் இருக்கிறீர். அப்போ எங்களை மாதிரி மனுஷனா தான் நடந்து கொள்ள வேண்டும் என்று சொல்லி கொண்டே இந்த பூலோகத்தில் வரம் வாங்கி உருப்பட்ட மனுஷன் யாரு என்று தன் நையாண்டியை போகிற போக்கில் போட்டு போகும் புதுமைப்பித்தனை கண்கள் விரிய ரசிக்காமல் எப்படி இருக்க முடியும்.
அதுவும் கடவுளின் வாழ்வாதாரத்துக்காக திவான் பகதூர் பங்களாவில் நடனம் ஆட சான்ஸ் கேட்பதெல்லாம் அதிரி புதிரி ஸீன்ஸ்.
கடவுள் எனும் ஆதி நம்பிக்கையை மறுபரிசீலனை செய்ய வைக்கும் அறிவார்ந்த பார்வையை கதை முழுக்க தன் எள்ளல் மொழியில் துள்ள விட்டிருப்பார்.
கதையில் ஓரிடத்தில் “என்ன கொண்டாந்த என்று தன் குழந்தை கேட்கையில் “என்னைத்தான் கொண்டாந்தேன்” என்பார்.
அதற்கு குழந்தை ” தினமும் தான் உன்னை கொண்டார்ற., இன்னைக்கு பொறி கடலை கொண்டார கூடாதா……” என்று கேட்கும்.
எழுதுபவனின் வாழ்க்கை நிலை எல்லா காலத்திலும் சிரிப்பாய் சிரிப்பதை சுய எள்ளலின் வழியே இந்த சமூகத்துக்கு சூடு போடுவதை புதுமைப்பித்தன் ஷாட் எனலாம்.
புதுமைப்பித்தனின் பெரும்பாலைய கதைகள் டைலாக் ஓரியன்டட்.
வசனத்தின் வழியே கதையை நகர்த்தும் யுக்தியில் சொலவடைகளும், சொந்த நடைகளும், தமிழின் சந்த நடைகளும் பத்தி பத்தியாய் பாத்தி கட்டி நிற்பதை படிக்க படிக்க இன்னும் படிக்க தூண்டும் பக்கங்களாகின்றன. சிறுபிள்ளை கையில் வகை வகையான இனிப்புகளை கொடுத்தால் அது எப்படி திணருமோ எதை முதலில் தின்பது என்று திக்குமுக்காடுமோ அப்படித்தான்…. புதுமைப்பித்தனின் கதைகளைப் பற்றி பேசுவது என்பது. எல்லாமே சுவை தான். எந்த கதையை முதலில் சொல்வது., எந்த கதையை முடிவில் சொல்வது என்று எந்த திட்டமிடுதலும்… புதுமைப்பித்தனிடம் நடக்காது. புதுமைப்பித்தன் ஒரு நூலகம். தன் கதைகளின் வழியே அவர் நிகழ்த்திக் காட்டியிருக்கும் காலம் அது முழுக்க முழுக்க புதுமைப்பித்தன் காலம்.
“செல்லம்மா” கதையில் உடம்புக்கு முடியாத மனைவியின் கடைசி கால கட்ட நாட்களோடு போராடும் ஒரு எளிய மனிதனின் பாடு சொற்களில் நிரம்பிட முடியாதவை. மனைவி சாவதற்கு முன் காலை மாலை இரவு என பார்த்து பார்த்து செய்யும் பணிவிடையில்.. உள்ளே ஆழமாக ஒளிந்திருக்கும் அற்புத பேரொளியை எங்குமே மேல்பூச்சாக புதுமைப்பித்தன் படைக்கவில்லை.
மனைவி பாசத்தை வழக்கம் போலான கிளிஷேவாகவும் எங்கும் பதியவில்லை. பட்டென்று கண்களை அவள் மூடி விட்ட பிறகு நிதானத்தோடு அவளை குளிக்க வைத்து தான் வேலை செய்யும் ஜவுளிக்கடையில் இருந்து தீபாவளிக்காக வாங்கி வைத்திருந்த பச்சை புடவையை சுற்றி.. நெற்றியில் விபூதியும் குங்குமம் இட்டு… படுக்க வைத்து தலைமேட்டில் குத்துவிளக்கு ஏற்றி வைத்து பிறகு மனைவியின் உயிரற்ற உடலையே பார்த்துக் கொண்டு நிற்பது என்று அது ஒரு வாழ்வியல் சாட்சியாக நிகழ்த்தி இருப்பார் புதுமைப்பித்தன்.
மனைவி முகத்தில் ஈக்களை உட்கார விடாமல் விசிறி கொண்டு வீசிக் கொண்டே இருக்கும் கதையின் முடிவில் ஒரு பெரும் சுமை இறங்கி கொண்டிருக்கும். அதே நேரம் ஒரு பெரும் சுமை ஏறிக் கொண்டிருக்கும்.
கணவனுக்கும் மனைவிக்கும் இடையே நடக்கும் இயல்பான சம்பாஷனைகள், வேடிக்கையான பேச்சுக்கள் ஒருவரையொருவர் புரிந்து கொண்டு அதற்கு தகுந்தாற் போல நடந்து கொள்ளும் நாட்களின் நகர்வுகள் ஒருவர் திட்டும் போது ஒருவர் அடங்கி செல்லும் தன்மை என்று “செல்லம்மா” கதையில்… பிரமநாயகம் வாழ்ந்தும் செத்திருப்பார் செல்லம்மா செத்தும் வாழ்ந்திருப்பார்.
முடியாத மனைவியின் இறுதி கால கட்டத்தை இதயத்தில் சுமக்கும் ஒரு கணவனின் சேவையும் செம்மையும் வெகு நுட்பமாக வெளிப்பட்டிருக்கும்.
என்ன ஆகும் என்று தெரிந்த பின்னும் ஒன்னும் ஆகாது என்று சொல்லும் தைரியம் அந்த கணவனை கனவானாக மாற்றி விடுகிறது.
அத்தனை முடியாத போதும் தன் பாத்திரத்தை விட்டு இறங்காத வீ ட்டு தலைவியின் கனத்தை செல்லம்மாக்கள் ஒரு போதும் விட்டு தருவதில்லை. தோசையை ஊத்தி கருக்கி தடுமாறி.. மயங்கி கிடப்பதாகட்டும் கம்பீரமாய் வாழ்ந்த தோற்றம் சுருங்கி நோய்க்குள் சிக்கி சின்னாபின்னாமாகும் காலமாகட்டும் ஒவ்வொரு மனிதனும் கடந்தாக வேண்டிய வாழ்க்கை வளைவுகள் அவை.
கதை முடிகையில் கண்களின் கால்கள் நிலை கொள்ளாமல் தவிப்பதை எதிர் கொண்டே ஆக வேண்டும் நாம்.
தான் ஒரு அறிவார்ந்த எழுத்தாளன். ஆனால் இன்னும் இந்த உலகம் புரிந்து கொள்ளாமல் இருக்கிறதே என்று புலம்புவதை கண்ட எழுத்தாளரின் நண்பரே எழுத்தாளரைப் பாராட்டி வாசகன் போல கடிதம் போட்டு விட முதலில் அதை நிஜம் என்று நம்பி… பயங்கரமாக புளகாங்கிதம் அடைந்து ஒரு கட்டத்தில் அது தன்னை நெருக்கமாக உணர்ந்தோர் செய்த வேலை என்று புரிந்து “ஏன் இப்படியெல்லாம் பண்றாங்க… என் மேல கொண்ட அன்புக்காக இப்டி செய்யறது நியாயமில்லை “என பேசி…. புலம்புவது… என்று அது ஓர் அதி தீவிரமான எழுத்தாளனின் ஆழ் மன பேரிரைச்சல்.
“கடிதம்” என்ற சிறுகதை நமக்கு சொல்வது எழுதுபவனின் மனம் எப்போதும் ஏங்குவது நாலு பாராட்டுக்கும் ரெண்டு கை தட்டலுக்கும் தான். ‘இதை படிச்சு பாருங்க நான் எழுதியது’ என்று அவன் சொல்லுகையில் அதை படித்து விட்டு நல்லா இருக்கு, இல்ல நல்லா இல்லை என்று ஏதாவது சொல்ல வேண்டும் என்று தான் அவன் எதிர் பார்க்கிறான். ஆனால் எந்த ஒரு எதிர்வினையும் ஆற்றாமல்… மௌனித்துக் கிடக்கும் சமூகத்தை எழுதுபவன் வேறு வழியின்றி சாடுகிறான். எழுதுபவனை கண்டு கொள்ளாத சமூகத்தில் சூனியம் தவிர வேறன்ன இருக்க முடியும் என்று புரிய நேர்கையில்.. “கடிதம்” கதை ஒவ்வொரு எழுத்தாளனுக்குமான வாழ்வியல் சோகம்.
வறுமையை நுணுக்கி நுணுக்கி எடுத்து பார்க்கும் தத்ரூபம் தொடர் வறுமை சூழலால் புதுமைப்பித்தனுக்கு வயப்பட்டிருக்கும். இந்த அதிவேக உலகத்தின் மீது தீரா கோபம் இருந்திருக்கிறது. அதன் நீட்சி தான் “மகாமாசானம்” கதையில் சாக கிடக்கும் பிச்சைக்காரனுக்கு அருகே நிற்கும் மாம்பழத்துக்கு காத்திருக்கும் சிறுமியின் பாத்திரம்.
சாயந்திரம் ஆகி விட்டால்… இடித்துக் கொண்டு இடிபாடுகளுக்கிடையே நாகரிகம் அலைகிறது நகரத்தில் என்று ஆரம்பிக்கும் புதுமைப்பித்தன் தொடர்ந்து இந்த உலகத்தை உற்று பார்த்துக் கொண்டே இருந்திருக்கிறார். ஒருவகை அமைதியின்மை அவரை அலைக்கழித்திருக்கிறது. தினமும் எளிய மக்கள் படும் வேதனையும் போராட்டமும் என்று அது குறித்தான சிந்தனையையே கொண்ட ஏழை பங்காளனாகவே தன்னை ஆக்கிக் கொண்டிருந்திருக்கிறார்.
எல்லா கதைகளுமே எளிய மனிதன் கூடுகளில் ஒரு வேளை பசியை சுமந்து கொண்டே தான் இருந்திருக்கிறது. குழந்தையின் பார்வையில் புதுமைப்பித்தன் பேசுவது…. உலகத்தரம். அதுவும் உடம்பு சரி இல்லாதவர்களுக்கு எதையாவது கொடுத்து சரி செய்ய வேண்டும் என்று செல்லும் கதையின் ஓட்டத்தில்… தனக்கு தெரிந்த “பட்டாணியை வாங்கி குடேன்” என்று சொல்லும் போது குழந்தைகளின் உலகம் எப்போதும் பெரியவர்களின் உலகத்தோடு ஒட்டுவதில்லை….என்று புரிகிறது. விளிம்புநிலை மனிதர்கள் இங்கே கிடக்கும் பொருள்களோடு ஒரு பொருள் அவ்வளவு தான்….என்ற உண்மையை தயவு தாட்சணியமின்றி போட்டு உடைக்கிறார். நாம் சிதறுகிறோம்.
இன்றைய காலகட்டத்தை ஒப்பிட்டால் கிட்டத்தட்ட 80 ஆண்டுகளுக்கு முன்பே, சமூக சூழலை தனது அரசியல் பார்வையை… தனது புதிய சிந்தனைகளின் வாயிலாக கேள்விக்குள்ளாக்கியவர் புதுமைப்பித்தன். சமூகம் சார்ந்து அவர் எழுதிய கருத்தாக்கங்கள் இன்றைய கால கட்டத்துக்கும் தேவையாய் இருப்பதை அவரின் வெற்றி என்று சொல்வதா? சமூகத்தின் அடுத்த கட்ட நவீனத்துவ சிந்தனையின் தோல்வி என்று சொல்வதா .என்ற பெரிய சந்தேகத்தை நம் முன் வைக்கிறது.
கண்ணாடியில் தெரியும் பிசாசு நேராக பார்க்கையில் சாதாரண மனுஷி போல தெரிவது பேயின் வருகையை கெட்ட வாசனையின் மூலம் உணர்த்துவது தரையை விட்டு அரை அடிக்கு மேலே கால்கள் மிதப்பது போலவே நடப்பது…. சேமக்கலம் போன்ற கருவியின் மூலம் எழுப்பும் சத்தத்தின் வழியே உணர்த்தும் குறியீடு தொடர்பற்ற காலத்தின் அகால கூக்குரல் என்று இன்று நாம் பார்க்கும் பேய் படங்களுக்கு முப்பதுகளிலேயே முதல் புள்ளி வைத்திருக்கிறார் புதுமைப்பித்தன்.
பேய்க்கதையில் கூட நவீனத்துவம் செய்து படிப்பவனை இன்றும் மிரட்டும் மொழி புதுமைப்பித்தனின் இருள் தேசத்தை உயிர் நடுங்க எடுத்து வைத்திருக்கிறது.
“காஞ்சனை” என்ற மேற்சொன்ன கதையில் மிரட்டி துவம்சம் செய்யும் புதுமைப்பித்தனின் ஒவ்வொரு வரிகளிலும் பிசாசுகளின் அட்டூழியம் பிரம்மாண்டம் செய்யும்.
மனிதர்களிடையே மிக சாதாரணமாக நிகழும் கதைகளின் தருணத்தை மிக துல்லியமாக கண்டறிவதில் கிட்டதட்ட நிபுணராகவே இருந்திருக்கிறார் புதுமைப்பித்தன். எல்லா கதைகளிலும் அவரின் இருத்தல் அவரின் அனுபவமாகவே கண் முன் விரிகிறது. அவரின் கதைகளில் பெரும்பாலும் அவர் தான் நாயகனாகவும் இருக்கிறார் என்று தெரிகிறது. மானுட பரிணாமத்தை உளவியல் வழியே கண்டறியும் நுட்பத்தையும் புதுமைப்பித்தன் பெற்றிருந்தார் என்றால் மறுப்பு இல்லை. ஒரு கதையின் உள்ளே இருக்கும் மெய்ப்பொருளை வெளிக்கொணரும் மொழி ஆளுமை மிக வடிவாக புதுமைப்பித்தனுக்கு வாய்த்திருக்கிறது.
எழுதுபவன் மீது வெளிச்சம் படுவது இருக்கட்டும். ஆனால் எழுதுபவனுக்கு இருட்டு தான் அதிகம் பிடிக்கும் என்பது எழுதுபவன் விதி போல. அது தான் புதுமைப்பித்தனுக்கும்.
“காஞ்சனை” யில் கூட ஒரு வரி இருக்கும்.
“எனக்கு எப்போதும் இருட்டில் உட்கார்ந்து கொண்டிருப்பதில் ஒரு நிம்மதி” என்கிறார். இருள் என்பது கொஞ்ச வெளிச்சம் என்று பாரதி சொன்னது நினைவுக்கு வருகிறது. இருள் என்பது இன்னும் கொஞ்சம் வெளிச்சம் என்று பாரதி வெளிச்சம் பட்டவன் சொல்லலாம் தானே.
புல்லின் தலையில் இருக்கும் நுட்பத்தில் இருந்து பிரம்மாண்டமாய் விரியும் வானத்தைக் காண்பது போல புதுமைப்பித்தனின் கதைகளில்… மிக சாதாரண சம்பவங்கள் கூட காலத்தால் அழியாத சுடர்களாய் எரிகிறது. செவ்விலக்கிய தகுதிகளை அவரின் எழுத்துக்கள் பெரும்பாலான கதைகளில் நிகழ்த்தி இருக்கிறது. அவருள் நிகழ்ந்த கலை எழுச்சியை, மனவெளிச்சியை தன்னளவிலான புலம்பலில் இருந்து இன்னொருவரிடமான உரையாடல்களின் வழியாக மடை மாற்றி சிறுகதைகளாக்கி பொதுவெளியில் வைத்திருக்கிறார். பொதுவான கோபம், குறைகள், வருத்தங்கள் இந்த சமூகத்தின்பால் அவருக்கு பெருமளவு இருந்திருக்கிறது என்பதை நாம் அவரின் கதைகளின் வாயிலாக அறிகிறோம். பெரும்பாலையை கதைகள் உரையாடல்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதாகவே இருக்கிறது. கிராம சொலவடைகள் நிரம்பிய சக மனிதனின் மொழி நிரம்பிய பக்கங்கள் தான் அதிகம். சிக்கலான விஷயங்களை கையாளும் நேரத்தில் நையாண்டி என்ற பதத்தில் அந்த காட்சியை நகர்த்தி விடும் நுட்பத்தை மிக தெளிவாக பயன் படுத்தினார் என்றே சொல்லலாம். பெரும்பாலும் இவரது கதாபாத்திரங்கள் நெல்லைத் தமிழில் பேசின என்பது செய்தி. புதுமைப்பித்தனின் ஒவ்வொரு சொல்லும்…நெல்லை தமிழில்…. வெல்லமென இனித்தது என்பது கூடுதல் செய்தி.
இருள், அமானுஷ்யம், சாகசம் இதன் மீதெல்லாம் புதுமைப்பித்தனுக்கு உள்ளே ஒரு வகை ஈர்ப்பு இருந்திருக்க வேண்டும். அவரின் “காலனும் கிழவியும்” கதையில் சிறுகீறலில் தொடுவானத்தை வரைந்து விடுவது போல இருளையும். அதன் முதுகையும் தொட்டு செல்கிறார். கிழவியை தூக்கி போக வந்துருக்கும் எமனை நைய புடைத்து நையாண்டி செய்து… சூட்சுமமான கேள்வியில் போட்டு கவிழ்த்து விடும் கிழவி… பலே கில்லாடி. கிழவிக்குள் கூடு விட்டு கூடு பாய்ந்து பேச வேண்டியதையெல்லாம் பேசி விட்ட புதுமைப்பித்தன்… புதுமைகளின் புத்திசாலி என்பதற்கு வேறு என்ன சான்று வேண்டும்.
ஒன்று சொல்ல வருகையில் இன்னொன்றையும் சொல்வது அவரின் பாணி என்று கூட சொல்லலாம்.
புதுமைப்பித்தனின் கதைகள் பெரும்பாலும் நக்கல் நையாண்டியை மைய சரடாக கொண்டு முன்னும் பின்னும் நிஜத்தில் கண்ட பாத்திரங்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்டிருக்கிறது. சில கதைகள்… படபடவென ஆரம்பித்து ஏதோ சிந்தனையில் விட்டேத்தியாக முடித்திருப்பது கூட நிகழ்கிறது. அவரின் வாழ்க்கை சூழல் பெரும்பாலும் அவரை தன்னளவில் இறுக்கிக் கொண்டே தான் இருந்திருக்கிறது என்று உணர முடிகிறது.
எல்லாம் தாண்டி அவரின் ஒவ்வொரு கதையிலும் இலக்கிய நயம் கெடாமல் இருப்பது அவரை எழுத வந்த ஆரம்ப கட்டத்திலேயே ஒரு முழு வடிவ எழுத்தாளனாக நம்ப வைத்து விடுகிறது. பிறகு அது தான் உண்மை என்று அவர் நிரூபிக்கவும் செய்கிறார்.
புதுமைப்பித்தன் 15 ஆண்டுகளுக்கும் குறைவான காலம் தான் முழு வீச்சில் எழுதி இருக்கிறார். நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கட்டுரைகள், புத்தக விமர்சனங்கள் என எழுதி குவித்திருக்கிறார். புதுமைப்பித்தன் புதுமை எழுத்தாளர் மட்டும் அல்ல… புரட்சி எழுத்தாளரும் கூட. அவர் எடுத்தியம்பிய பாத்திரங்களும்…. விஷயங்களும் அந்த கால கட்டத்தில் தமிழ் புனைவு உலகுக்கு புதிது.
தமிழ் இலக்கிய உலகம் இப்போதும் போல அப்போதும் சில எழுதப்படாத விதிகளால் முடக்கப்பட்டிருப்பதாக அவர் கருதினார். தன் கட்டுரை ஒன்றில் அது குறித்து பின்வருமாறு கூறுகிறார்.
இலக்கியத்தில் இன்னதுதான் சொல்ல வேண்டும்., இன்னது சொல்லக்கூடாது என ஒரு தத்துவம் இருப்பதாகவும்., அதை பெரும்பாலோனோர் ஆதரிப்பதாகவும் பொதுவாக ஒரு தோற்றம் இருக்கலாம். ஆனால் நிஜம் அது அல்ல. சுமார் இருநூறு வருஷங்களாக ஒருவிதமான சீலைப்பேன் வாழ்வு நடத்திவிட்டோம். சில விஷயங்களை நேர் நோக்கி பார்க்கவும் நமக்கு கூச்சம் இருக்கிறது. அதனால் தான் இப்படி சக்கரவட்டமாக சுற்றி வளைத்து சப்பைக்கட்டு கட்டிக் கொண்டிருக்கிறோம். குரூரமே அவதாரமான ராவணனையும், ரத்தக்களறியையும், மன குரூரங்களையும், .விகற்பங்களையும் உண்டாக்க இடம் இருக்குமேயானால்., ஏழை விபசாரியின் ஜீவனோபாயத்தை வர்ணிப்பதாலா சமூகத்தின் தெம்பு இற்றுப்போய் விடப்போகிறது.
இற்றுப்போனது எப்படிப் பாதுகாத்தாலும் நிற்கப் போகிறதா?
மேலும் இலக்கியம் என்பது மன அவஸ்தையின் எழுச்சிதானே?
நாலு பக்கமும் ஸ்டோர் குமாஸ்தா ராமன், சினிமா நடிகை சீத்தம்மாள், பேரம் பேசும் பிரமநாயகம்….. இன்னும் இவர்கள் போன்ற நபர்களை நாள் தவறாமல் பார்த்துக் கொண்டிருந்து விட்டு., இவர்களது வாழ்வுக்கு இடமளிக்காமல் காதல் கத்தரிக்காய் பண்ணிக் கொண்டிருப்பது போன்ற அனுபவத்துக்கு நேர் முரணான விவகாரம் வேறு ஒன்றும் இல்லை.
நடைமுறை விவகாரங்களைப் பற்றி எழுதுவதில் கௌரவக் குறைச்சல் எதுவும் இல்லை என்று தீர்மானமாக சொல்லி இருக்கிறார். அதன் தீர்க்கத்தில்தான் அவரின் கதைகளும் அமைந்திருக்கின்றன.
தனது சமகால எழுத்தாளர்களின் எதிர் விமர்சனங்களுக்கு புதுமைப்பித்தன் இப்படி பதில் கூறுகிறார்.
“வேதாந்திகள் கைக்குள் சிக்காத கடவுள் மாதிரிதான் நான் பிறப்பித்து விட்டவைகளும். அவை உங்கள் அளவுகோல்களுக்குள் அடைபடாதிருந்தால் நானும் பொறுப்பாளியல்ல…….நான் பிறப்பித்து விளையாடவிட்ட ஜீவராசிகளும் பொறுப்பாளிகளல்ல. உங்கள் அளவு கோல்களைத்தான் என் கதைகளின் அருகில் வைத்து அளந்து பார்த்துக்கொள்கிறீர்கள் என்று உங்களுக்குச் சொல்லிவிட விரும்புகிறேன்”
அவர் எழுதியதாக கணிக்கப்படும் 108 சிறுகதைகளில் 48 மட்டுமே அவர் காலத்திலேயே வெளியாகின என்ற தகவல் அதிர்ச்சியாக இருந்தாலும்…. இலக்கிய உலகத்தின் இன்னொரு முகம் நாம் அறிந்ததால்… செய்தியாக எடுத்துக் கொள்ளலாம்.
மாக்சிம் கார்க்கி, ஆன்டன் செக்கோவ், காஃப்கா., ஷேக்ஸ்பியர், எட்கர் ஆலன் போ போன்றவர்களின் பிற மொழி சிறுகதைகள் கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்டவைகளை புதுமைப்பித்தன் மொழிபெயர்த்துள்ளார் என்று தெரிய வருகிறது.
காற்றின் வேகம் ஒரு பக்கம் இருக்கும் போது எதிரே ஒருவன் போனால்…. அதுதான் கால சாட்சியாக மாறும் தருணம். அப்படித்தான் எல்லாரும் ஒரு பக்கம் சென்று கொண்டிருக்கையில்…. சொ. விருத்தாச்சலம் என்றொரு படைப்பாளி எதிர் திசையில் போனார். அதனால் தான் அவர் புதுமைப்பித்தன் ஆனார்.
கவிஜி
புதுமைப்பித்தன்
இயற்பெயர் : சொ.விருத்தாசலம்
பிறப்பு : ஏப்ரல் 25 - 1906 (திருப்பாதிரிப்புலியூர் - கடலூர் மாவட்டம்)
இறப்பு : ஜூன் 30 - 1948 (திருவனந்தப்புரம்)
கல்வி : இளங்கலை (பி.ஏ) - (நெல்லை இந்து கல்லூரி)
துணைவி : கமலா
மகள் : தினகரி
எழுதிய காலம் : 1933 - 1948
மணிக்கொடி இயக்கத்தில் செயல்பட்ட முக்கிய எழுத்தாளர்
புதுமைப்பித்தன் சிறுகதைகள் கிண்டில் பதிப்பாக வாசிக்க :
கவிஜி கோவைச் சார்ந்தவர் B.com. MBA, PG Dip in Advertising ஆகிய கல்வித் தகுதியுடன் கோவையிலுள்ள ஒரு பிரபல நிறுவனத்தில் மனித வள மேலதிகாரியாக பணி புரிந்து வருகிறார். ”பிழைப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. வாழ்வதில்தான் எனக்கு விருப்பம். அவைகள் எழுதுவதால் எனக்கு கிடைக்கிறது.” என கூறும் கவிஜியின் இயற்பெயர் விஜயகுமார்.
4000-க்கும் மேற்பட்ட கவிதைகள். 250-க்கும் மேற்பட்ட சிறுகதைகள். 400-க்கும் மேற்பட்ட கட்டுரைகள் 50-க்கும் மேற்பட்ட குறுங்கதைகளோடு மூன்று நாவல்களையும் மூன்று திரைப்படத்திற்கான ஸ்கிரிப்ட்கள் எழுதி இருக்கிறார். குறும்பட இயக்குநராகவும் செயல்பட்டு இதுவரை 12 குறும்படங்களையும் எடுத்திருக்கும் கவிஜி பன்முகத் திறன் வாய்ந்த படைப்பாளியாக மிளிர்கிறார்.
|
ஆனந்த விகடன், குமுதம், பாக்யா, கல்கி, தாமரை, கணையாழி, ஜன்னல், காக்கை சிறகினிலே, தினை, புதுப்புனல், மாலைமதி, காமதேனு, இனிய உதயம், அச்சாரம், அத்திப்பூ, காற்றுவெளி உள்ளிட்ட அச்சு இதழ்களிலும் பல மின்னிதழ், இணைய இதழ்களிலும் இவரின் படைப்புகள் வெளியாகி உள்ளன. பல்வேறு இலக்கிய அமைப்புகளிடமிருந்து பலவேறு இலக்கிய விருதுகளையும் பெற்றிருக்கிறார்.
சிறு கதைகளின் மன்னன் புதுமைப்பித்தன் என்ற கவிஜி அவர்களுடைய திறனாய்வுக் கட்டுரை மிகச் சிறப்பாக உள்ளது.என்னிடம் உள்ள புதுமைப்பித்தனின் சிறுகதைப்புத்தகத்தை மீள் வாசிக்க உள்ளேன்.