முதல் அத்தியாயத்தில் அறிமுகமாகிறார்கள் சாம்பமூர்த்தி ஐயர், சிவனான்டித் தேவர் மற்றும் சிதம்பரம்.
புளியந்தோப்பின் முகப்பில் நின்று ஊடுருவி நோக்கினான் சிதமபரம். இது தான் கதையின் துவக்கம். இந்த ஊடுருவி நோக்கல் என்கிற வார்த்தைகளை வாசிக்கும் போதே ஏதோ ஒரு நிகழ்வு நடந்தேறப் போகிறது என மனதில் பட்டு விடுகிறது.
சிதம்பரம் சீமை காட்டாமணக்கை வெட்ட ஆரம்பிப்பதில் தொடங்கி, எருக்கு,நொச்சி, காரைப் புதர், மூங்கில் குத்துகள் எலந்தை என ஒவ்வொன்றாக வெட்டும் போது அவைகள் முறிகிற சப்தத்தை உணரும் போது அந்தத் தோப்பின் அடர்த்தி மனதில் கவிகிறது.
“மரமும் செடியும் கொடியும் மனிதனோடு நடத்தும் ஒரு போராட்டம். ஒவ்வொரு அடியும் பலமான தோல்வி தான்” இதை வாசித்து முடிக்கும் போது உங்கள் கண்ணெதிரில் சாயக்கப்பட்ட புளியனோ, வேம்போ அல்லது புங்கனோ மனக்கண்ணில் வந்து போக நேரிடும்.
சிதம்பரம் தொரட்டி வைத்து இழுத்த வேகத்தில் உதிர்ந்த மலர்களோடு குருவிக் கூடொன்று சரிந்து விழுகிறது. ஒரு சின்னஞ்சிறு குருவியின் பரிதாபக் குரல் கேட்டுக் கொண்டேயிருக்கிறது.
நான்கு பக்கமும் தேடுகிறான் சிதம்பரம். அந்தக் குருவிக் குஞ்சு வெட்டுண்ட கிளையின் நுனியில் செருகிக் கிடந்தது. இங்கே தன்னால் ஏற்பட்ட மரணத்திற்கு குற்றவாளியாகி தலைகுனிகிற தருணம் நெகிழ்வைத் தருகிறது.
நுணா, எருக்கு, நெட்டிலிங்க மரங்கள், 52 இலுப்பை மரங்கள் பல தரப்பட்ட கொடிகள் என ஒவ்வொன்றாய் அழிகிறது சிதம்பரத்தால்.
ஒரு குறுங்காடழித்தலை (தோப்பு என அழைக்கப்பட்டாலும் காட்டின் இன்னொரு வடிவமாகவேப் படுகிறது) துவக்கமாக கொண்ட கதையை கனத்த இதயத்தோடு தான் வாசிக்க வேண்டியிருக்கிறது. வளர்ச்சிக்கு வேண்டி இயற்கை இழப்புகளை மனிதன் சந்தித்து சாதித்துத் தான் வருகிறான் என்பது அப்பட்டமான உண்மை.
வெட்ட இயலாமல் இருக்கிற பகுதிகள் தீயிட்டுக் கொளுத்தப்படுகிறது. தோப்பு என்கிற வனம் பற்றி எறிய பற்றி எறிய ஒரு பதைபதைப்பு உண்டாவதை தவிர்க்க இயலவில்லை. பன்னிரெண்டு நாட்கள் கழித்து பெருமழையில் தீ அணைகிறது. அந்தத் தோப்பு அழிந்து போய் வெறிச்சோடிய தோற்றத்தை தருகிறது.
ஒவ்வொரு முறை தோற்பது போலத் தெரிந்தாலும் எழுந்து மெல்ல மெல்ல வெற்றி இலக்கான கரும்பாலை அமைத்தலை நோக்கி நகர்கிறான் சிதம்பரம்.
நெருப்பாலழிந்த வனத்தை மெல்ல சீர் படுத்த ஆட்களை ஏற்பாடு செய்யப்பட்ட அதே வேளையில் தேவரின் குடும்பத் திருமண நிகழ்வால் சற்றே திசை திரும்புகிறது கதை.
ஆலைக்குத் தேவையான கட்டிடப் பணிகள் நடந்தவாறிருக்க இயந்திரங்களும் வந்து சேர ஒரு வெள்ளிக்கிழமை ஆலை ஓடத் தொடங்குகிறது.
முடிவில் சாயாவனத்தை விட்டு வெளியே வருகிறபோது விஞ்ஞானத்தை ஏற்று அடுத்த கட்ட முன்னேற்றத்திற்கு மனிதன் நகர்வதற்காக இயற்கையை எவ்வளவு சேதாரப்படுத்தி வருகிறான் என்கிற எண்ணம் தோன்றாமலில்லை.
அருமையான கதைத் தளம். இயல்பான கதைப் போக்கு. அற்புதமான கிராமியப் பேச்சு வழக்கு ஒன்றிற்கொன்று தொடர்பாகும் நிகழ்வுகள் என்று சாயாவனத்தைச் சுற்றி சுற்றியே உழல வைத்துவிடுகிறது கதை.
ஒரு ஒற்றை மனிதன் முயற்சியில் உண்டாகும் சிறு தொழிலமைப்புகளை அழுத்தி முன்னேறும் கார்ப்பரேட்டுகளின் வளர்ச்சியையும் நினைக்கவைத்து விடுகிறது சாயாவனம்
வாசித்து முடித்ததும் வெட்டப்பட்ட மரங்களின் ஓலத்தை, தீக்கிரையான செடிகொடிகளின் கடைசி நேரக் கதறலை, வெந்து கருகிய காகத்தை, அணிலை, மாட்டை மற்றும் பயந்து ஓடிய வானரக் கூட்டத்தின் பதட்டத்தை யோசித்தவாறே கடைசிப் பக்கத்தை மூட வைத்து விடுகிறது சாயாவனம் என்கிற அற்புதப் படைப்பு.
– மதுசூதன்நூல் : சாயாவனம்
பிரிவு : நாவல்
ஆசிரியர்: சா.கந்தசாமி
பதிப்பகம் : முதல் பதிப்பு : வாசகர் வட்டம் | மறுபதிப்பு : காலச்சுவடு பதிப்பகம்
பக்கங்கள் : 200
வெளியான ஆண்டு : 1968 (முதல் பதிப்பு)
விலை : ₹ 225
அமெசானில் நூலைப் பெற: