சிறுபிராயத்தில் அப்பா, பெரியப்பா, சித்தப்பா, தாத்தா நிறைந்திருக்கும் கூட்டுக் குடும்பத்திற்கே சவரம் செய்து விட அய்யப்பன் நாவிதர் வருவார்‌. வர்மம் கூட தெரிந்திருக்குமோ என்று ஐயப்படும் அளவுக்கு மசாஜ் செய்து புத்துணர்வு ஏற்படுத்திவிட்டு, வீட்டு ஆண்மகன்களை எல்லாம் அழகுபடுத்திவிட்டு, உடலில் ஏற்பட்டிருக்கும் அசூசைகளுக்கு பண்டுவம் சொல்லிவிட்டுப்போவார். சவரக்கத்தி, சாணை பிடிக்க  வைத்திருக்கும் தோல் என்று அவரின் பெட்டிக்குள் எட்டி பார்ப்பதே ஆர்வமாய் இருக்கும்.

அந்த நினைவுகளைக் கிளறி அய்யப்பன் மற்றும் வீட்டுற்கு வந்து துணி எடுத்துப் போகும் வண்ணான் அண்ணன் போன்றோரை நினைவுகூற காரணமாக இருந்தது சுளுந்தீ நாவல்.

குறிப்பிட்ட சமூகத்திற்கு மட்டும்  நாவிதம் செய்ய ஏன் குறிப்பிட்டக் குழுவினர் தனியே இருந்தனர்?, சமூகத்தில் மருத்துவச்சி மற்றும் நாவிதர்களின் இன்றியமையாத பங்களிப்பு என்ன?, குலநீக்கம் என்ற பெயரில் பின்பற்றப்பட்ட வன்முறைகள் என்ன? அதிகார துஷ்பிரயோகங்களால் விளைந்த கொடுமைகள் என்ன?

இறந்தவர்களுக்குளுக்கு ஏன் சவரம் செய்யப்படுகின்றது? இறந்தவுடன் பின்பற்றப்பட்ட வழக்கங்களுக்கான தேவை என்ன?, இன்றும் மருத்துவக் குறிப்புகளை பின்பற்றுவது சாத்தியமா?,

காது வளர்க்கும் முறை, இட்லி, பிரியாணியின் அறிமுகம், பட்டிவீரன்பட்டி ஊரின்‌பெயர்காரணம், வெள்ளாவி வைத்து எடுப்பதில் கடைபிடிக்கப்பட்ட சாதிய கட்டமைப்பு,  பூசாரிகள் சொல்லும் பரிகாரங்களால் குறிப்பிட்ட இனக்குழுக்கு ஏற்படும் ஆதாயங்கள், குலதொழில் அல்லாத பணியை சிந்தித்து பார்ப்பதில் இருக்கும் சிக்கல் போன்ற பல கேள்விகளுக்கு விடை சொல்லப்பட்டு இருக்கின்றது.

ஊரில் சர்வசாதாரணமாக பிரயோகிக்கும் வார்த்தைகளான வெங்கப்பயலுக்கு, ஈத்தரப்பயலுக்குமான பெயர்காரணத்தை அறிந்த போது கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் இருந்தது. இறந்த கன்னிப்பெண்ணுடனான புணர்தல் வழக்கத்தை,  உணர்வுபொங்க கதைசொல்லி பவா கூறிய  தெரிசை சிவா அவர்களின் கதையுடன் பொறுத்திப்பார்க்க முடிந்தது.

உயிர் பிரிந்தபின்னும் எப்படி சவரம் செய்து அழகு பார்க்க முடிகின்றது என்று அப்பா கேட்டதற்கு அதில் மூச்சு இருக்கும். இதில் இருக்காது. அவ்வளவு தான் என்று சாதாரணமாக கூறி நகர்ந்து சென்ற அய்யப்பனையே இந்த நாவலில் வரும் ராமனும், மாடனும் ஞாபகப்படுத்திச் செல்கின்றனர்.

குறிப்பிட்ட சில நூல்களைத்தான் பாதுகாத்து மீள்வாசிப்பு செய்ய, ஆழ்ந்து வாசிக்க, வாய்ப்பு கிடைக்கும் இடங்களில் எங்காவது  பேச, எழுத , அந்த எழுத்தாளருடன் உரையாட, அவரிடம் கேள்விகள் எழுப்பி தெளிவுபெற, மேலும் பல விஷயங்களை தெரிந்துகொள்ள வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். நெருப்பை மட்டும் கடத்தாமல் அப்படி ஒரு தூண்டுதலையும் ஏற்படுத்தி உள்ளது சுளுந்தீ… !

  – அபிநயா ஸ்ரீகாந்த் 

 

நூல் தகவல்:
நூல் : சுளுந்தீ
வகை : நாவல்
ஆசிரியர்: இரா.முத்துநாகு
வெளியீடு: ஆதி பதிப்பகம்
வெளியான ஆண்டு : 2019
பக்கங்கள் :  472
விலை : 450
Buy on Amazon :